being created

ஆர். வேங்கடாசலம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 11:57, 5 January 2023 by ASN (talk | contribs) (Para Added; Image Added)
ஆர். வேங்கடாசலம் பிள்ளை
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
கரந்தைக் கவியரசு - கரந்தை ஜெயக்குமார் நூல்

ஆர். வேங்கடாசலம் பிள்ளை (அ. வேங்கடாசலம் பிள்ளை; அரங்க வேங்கடாசலம் பிள்ளை; கரந்தைக் கவியரசு அ. வேங்கடாசலம் பிள்ளை) (டிசம்பர் 18, 1886 - டிசம்பர் 6, 1953) தமிழ் அறிஞர். எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், தமிழ்ப் பொழில் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

ஆர். வேங்கடாசலம் பிள்ளை, டிசம்பர் 18, 1886-ல், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மோகனூர் என்ற சிற்றூரில், அரங்கசாமிப் பிள்ளை-தருமாம்பாள் இணையருக்குப் பிறந்தார். தஞ்சாவூரில் இருந்த தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஆசிரியர் சுப்பிரமணிய ஐயரிடம் தமிழ் பயின்றார். தனிக் கல்வியாக தமிழ் இலக்கண, இலக்கியங்களை, மா.ந. சோமசுந்தரம் பிள்ளையிடமும், கரந்தைப் புலவர் வேங்கடராமப் பிள்ளையிடம் கற்றார்.

தனி வாழ்க்கை

ஆர். வேங்கடாசலம் பிள்ளை, தந்தை காலமானதால் குடும்பத் தொழிலான உழவுத் தொழிலில் ஈடுபட்டார். கணக்குப் பிள்ளையாகவும் ஊர் மணியமாகவும் சில காலம் பணியாற்றினார். தமிழ் கற்றவர் என்பதால் கோனாபாட்டில் உள்ள சரஸ்வதி கலாசாலையில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின் தான் பயின்ற தஞ்சை தூய பேதுருப் பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

பள்ளி நண்பர் இராதாகிருட்டினப்பிள்ளை, 1911-ல், கரந்தையில் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார். அவரது அழைப்பின் பேரில் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றார் வேங்கடாசலம் பிள்ளை. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட செந்தமிழ்க் கைத் தொழிற் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1932-ல், திருவையாறு அரசர் கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். 1942-ல் பணி ஓய்வு பெற்றார். பின் கரந்தைப் புலவர் கல்லூரியில் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 1946 முதல் அக்கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார்.

மனைவி மங்களத்தம்மை. அவர் இளம் வயதிலேயே மறைந்ததால் ஜெகதாம்பாள் என்பவரை மணம் செய்துகொண்டார். மகனுக்கு தனது தமிழ் ஆசானின் நினைவாக ‘சுப்பிரமணியம்’ என்று பெயர் சூட்டினார்.

இலக்கிய வாழ்க்கை

ஆர். வேங்கடாசலம் பிள்ளை கோனாபாட்டில் பணியாற்றியபோது, பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரின் அறிமுகம் கிடைத்தது. மேலைச்சிவபுரி ‘சன்மார்க்க சபை’யின் தொடர்பும் ஏற்பட்டது. அங்கு மாதந்தோறும் நிகழ்ந்து வந்த பல இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டார். அதன் மூலம் ரா. ராகவையங்கார், அரசஞ்சண்முகனார், உ.வே. சாமிநாத ஐயர், புலவர் அனந்தராம ஐயர் போன்றோரது நட்பையும், மதிப்பையும் பெற்றார்.

பதிப்பு

ஆர். வேங்கடாசலம் பிள்ளை, திருக்குறளுக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைப் பதிப்புக்கும் பணியை மேற்கொண்டார். உமாமகேஸ்வரம் பிள்ளை, 1929-ல், தமிழ்ச் சங்க வெளியீடாக அந்நூலை வெளியிட்டார்.

இதழியல்

தமிழ்ப் பொழில் இதழில் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் நாடக வடிவில் வெளியிட்டார்.

'தொல்காப்பியம்', 'தொல்காப்பியம்', சொல்லதிகாரம் - பேராசிரியர் (தெய்வச்சிலையார்) உரை', 'ஏறுதழுவுதல்' இளவேனிற் காலத்து இன்ப மாலை' போன்ற ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்.

'நாட்டுப் புறங்களின் கல்வியும் நாட்டாண்மைக் கழகங்களின் கடமையும்', 'நற்றாயும் செவிலித்தாயும்' போன்ற தலைப்புகளில் மொழி உணர்வு சார்ந்த கட்டுரைகளை எழுதினார்.

'மாணவர் பகுதி'யில், கவியரசர் புகழேந்தி, ஒட்டக்கூத்தர், பச்சையப்ப முதலியார் போன்ற நாடகங்களையும் அ. சோமசுந்தரம், அழுமூஞ்சிச் செல்லையா போன்ற கதைகளையும் எழுதினார்.

இலக்கண விளக்கங்கள், கலைச் சொல் விளக்கங்கள் பலவற்றையும் எழுதினார்

விருதுகள்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவின் போது, ஆர். வேங்கடாசலம் பிள்ளை, ‘கரந்தைக் கவியரசு’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆர். வேங்கடாசலம் பிள்ளையை, ‘மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர்’ என்று பாராட்டினார்.

மறைவு

ஆர். வேங்கடாசலம் பிள்ளை டிசம்பர் 6, 1953 அன்று காலமானார்.

                         






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.