under review

சகஜானந்தர்

From Tamil Wiki
Revision as of 17:18, 25 January 2026 by Jeyamohan (talk | contribs)
சகஜானந்தர்
சகஜானந்தர்
சகஜானந்தர் சட்டமன்ற உரைகள்

சகஜானந்தர் (சுவாமி சகஜானந்தர்; சுவாமி சகஜானந்தா; சஹஜானந்தர்; முனுசாமி; சிகாமணி) (ஜனவரி 27, 1890 - மே 01, 1969),துறவி, சமூகசீர்த்திருத்தவாதி, அரசியல்செயல்பாட்டாளர். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து அம்மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகப் போராடினார். சட்டமன்ற உறுப்பினராகி பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டார். ஆன்மிக, இலக்கிய நூல்களை எழுதினார். இதழாளராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

சகஜானந்தர் நூல்

முனுசாமி என்னும் இயற்பெயர் கொண்ட சகஜானந்தர், ஜனவரி 27, 1890-ல், ஆரணி அருகிலுள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை - அலமேலு தம்பதியருக்குப் பிறந்தார். மாசிலாமணி என்ற மூத்த சகோதரரும், எட்டியம்மாள், பாக்கியம் அம்மாள், கமலம் அம்மாள் என மூன்று சகோதரிகளும் இவர் உடன் பிறந்தவர்கள்.

புதுப்பாக்கத்தில் உள்ள பிராட்டஸ்டண்டு கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த அமெரிக்கன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். திண்டிவனம் நகரில் உள்ள அமெரிக்கன் ஆர்க்காடு சமயப்பரப்பு ஊழியர்கள் நடத்திய உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் கல்வி பயின்றார். பள்ளியில் இவரது பெயர் முனுசாமி என்பதிலிருந்து 'சிகாமணி' என்பதாக மாற்றம் செய்யப்பட்டது.

கிறித்தவப் பாதிரிமார்கள் சிகாமணியைக் கிறித்தவச் சமயத்திற்கு மதம் மாற்ற முற்பட்டனர். மத மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டால் எதிர்காலத்தில் அவர் விரும்பும் மேல்படிப்பைப் படிக்க உதவுவதாக வாக்களித்தனர். மதம் மாற மறுத்தமையால் எட்டாம் வகுப்போடு சிகாமணியின் கல்வி முற்றுப்பெற்றது என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆன்மிக வாழ்க்கை

சமய ஆர்வம்
சகஜானந்தர் சிலை

சிகாமணி தன் பெற்றோர்கள் வேலை பார்த்த கோலார் தங்கவயலுக்குச் சென்று மேற்கல்விக்கு முயன்றாலும் அதற்கு வாய்ப்பு அமையவில்லை. அங்கே நிகழ்ந்த ஆன்மிகச் சொற்பொழிவுகள் வழியாக இந்து மத ஈடுபாட்டை அடைந்தார். 1905-ல், சிகாமணியின் பெற்றோர் கோலாரைவிட்டுத் தங்கள் ஊராகிய மேல்புதுப்பாக்கத்தில் குடியேறினர். நிலக்கிழார் ஒருவரது பண்ணையில் கமலை ஓட்டும் பணியை புரிந்தார். ஆன்மிகப்பயணங்கள், ஆலயத் தரிசனங்களில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அவருடைய சாதியின் காரணமாக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.மேல்புதுப்பாக்கத்துக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முனுகப்பட்டு என்ற ஊரில் மடம் அமைத்து தங்கியிருந்த நீலமேக சுவாமிகள் என்னும் துறவியின் அழைப்பின் பேரில் சகஜானந்தர் அவருடன் சென்று மாணவராக தங்கியிருந்தார்.

துறவுநாட்டம் கொண்டிருந்த சகஜானந்தர் மெய்யியல் கல்விக்காக காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றார். சுயம் கைலாச சுவாமிகள் உள்ளிட்ட பல ஆன்மிகவாதிகளைச் சந்தித்தார். நரசிங்கபுரம் தட்சிணாசாமி சுவாமியிடம் மந்திர உபதேசம் பெற்றார்.

சென்னையில் கோ. வடிவேல் செட்டியா ரிடம் மாணவராகி சமய இலக்கியங்களைக் கற்றார். வடிவேல் செட்டியாரின் பரிந்துரைப்படி வியாசார்பாடி செங்கல்வராய நாயகர் தோட்டத்தில் தங்கியிருந்த கரபாத்திரம் சிவப்பிரகாசச் சுவாமிகளிடம் கல்விக்காகச் சென்றார். காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள், வீரசுப்பையா சுவாமிகள், ராஜகோபால் முதலியார், ஆரணி குப்புசாமி முதலியார், அமெரிக்கரான சார்ட்டால் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கரபாத்திர சுவாமிகளின் மாணவர்களாக இருந்தனர்.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் பேசா நோன்பு மேற்கொண்டிருந்த நாளில், சிகாமணி அவரைச் சென்று சந்தித்தார் என்றும் அவரிடம் மாணவராகி அவருடைய ஆசிரமத்திலேயே தங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.மடத்திலிருந்த புலவர் முருகேச முதலியாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். திருவிசைநல்லூர் சின்னைய நாயகர் என்பவரிடமும் தமிழ் கற்றார்.

துறவு ,தீட்சை

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் சிகாமணிக்கு துறவு (தீட்சை) அளித்து 'எப்பொழுதும் ஆனந்தத்தில் திளைத்திருப்பாயாக' என்று வாழ்த்தி, 'சகஜானந்தர்' என்று பெயர் சூட்டினார். கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் சகஜானந்தரை சமூகப்பணியாற்றும் பொருட்டு சிதம்பரதுக்கு அனுப்பி வைத்தார்.

கல்வி, சொற்பொழிவு

1910-ல் சிதம்பரத்திற்கு வந்தார் சகஜானந்தர். கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, 'கல்வியும் அதன் பயனும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். 'சாது மகா சங்கம்'. 'ஆனந்த ஆசிரமம்' போன்ற இடங்களில் சமயச் சொற்பொழிவாற்றினார். 1916 முதல் மலேசியா, பர்மா, சிங்கப்பூர், ரங்கூன் சென்று ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார்.

ஸ்ரீரங்கம் சென்று பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரிடம் வடமொழியை கற்றார். வ.உ.சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்து திருக்குறள் பாடம் கேட்டார். வ.உ.சி.யின் 'அகமே புறம்', 'மெய்யறம்' போன்ற நூல்களுக்குப் பாயிரம் எழுதினார்.

அமைப்புப்பணிகள்

நந்தனார் கல்விக்கழகம்

சுவாமி சகஜானந்தர் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக சிதம்பரம் ஓமக்குளக்கரையில் 'நந்தனார் மடம்' என்பதைத் தொடங்கினார். 1911-ல், நந்தனார் பள்ளியை நிறுவினார். இதுவே 1916-ல், 'நந்தனார் கல்விக் கழகம்' ஆக உயர்ந்தது.

1919-ல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, சிதம்பரம் வந்தபோது நந்தனார் கல்விக் கழகத்திற்காக 51 ஏக்கர் நிலத்தை அளித்தார். 1934-ல் சிதம்பரம் வந்த காந்தி சகஜானந்தரின் நந்தனார் மடத்தில் தங்கினார். அங்கு ஸ்ரீ சிவலோகநாதர், ஸ்ரீ நந்தனார் ஆலயத்திற்கு காந்தி அடிக்கல் நாட்டினார். காந்தி, இந்தியாவில், ஆலயத் திருப்பணிக்காக அடிக்கல் நாட்டிய ஒரே ஆலயமாக இவ்வாலயம் அறியப்படுகிறது.

நந்தனார் மடத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப் பள்ளி, பின்னர் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. தொடர்ந்து நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்தனார் தொழிற்கல்வி நிலையம் எனப் பலவாறாகத் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தது. 1939-ல் நந்தனார் கல்விக் கழகத்தை அரசிடம் ஒப்படைத்தார் சகஜானந்தர்.

அரசியல்

சுவாமி சகஜானந்தர், 1928 தொடங்கி சில ஆண்டுகள் சென்னை மேல்சபை (மாகாண லெஜிஸ்லேடிவ் கவுன்சில் - எம்.எல்.சி) உறுப்பினராகவும், பின்னர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1930-ல் டாக்டர் அம்பேத்கரும் இரட்டை மலை சீனிவாசனும் வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றபோது தனது பூரண ஆதரவை வழங்கினார். பூனா ஒப்பந்தப்படி தனித்தொகுதி முறையை ஆதரித்துப் பிரசாரம் செய்தார்.

ஆலய நுழைவுப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களுடன் சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார். 1932-ல் சிதம்பரம் தனித் தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1936 முதல் 1959 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் பட்டியலின மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் போராடினார்

கல்விப் பணிகள்

சுவாமி சகஜானந்தர் நந்தனார் கல்விக்கழகத்தை உருவாக்கி அடித்தள மக்களின் கல்விக்காக உழைத்தார்.சுவாமி சகஜானந்தர், 1929-ல் அண்ணாமலைச் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (மீனாட்சி கல்லூரி) தொடங்க உதவினார். 1940-41-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழறிஞர்களில் ஒருவரானார். தமிழ்ச் சொற்பொழிவாளராகவும் விரிவுரையாளராகவும் செயற்பட்டார். ஆட்சிக் குழு உறுப்பினருள் ஒருவராக இயங்கினார்.

இதழியல்

சுவாமி சகஜானந்தருக்கு சிதம்பரத்தில் 'பரஞ்சோதி அடிகளார்' என்பவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். அவரைப் போற்றும் வகையில், 'பரஞ்சோதி' என்னும் செய்தித் தாளைச் சிலகாலம் நடத்தினார். பரஞ்சோதி அச்சகம் என்பதை ஏற்படுத்தினார். அதன் மூலம் 'ஜோதி' என்ற தமிழ், ஆங்கில இருமொழி வார இதழை 1932-ல் தொடங்கி, 1939 வரை நடத்தினார்.

சகஜானந்தர் உருவச் சிலை (படம் நன்றி: மின்னம்பலம் இணைய இதழ்)

மறைவு

சுவாமி சகஜானந்தர், மே 01, 1969-ல் காலமானார்.

மதிப்பீடுகள்

சி. சுப்ரமணிய பாரதியார் சகஜானந்தரைப் பற்றி பாராட்டி அவருடைய கல்விப்பணிகளுக்கு அனைவரும் உதவவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நினைவு

  • 1969-ல் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி சகஜானந்தரின் முழு உருவச் சிலையை அப்போதைய இந்தியத் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார்.
  • 1990-ல் சகஜானந்தரின் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு நடத்தியது.
  • சுவாமி சகஜானந்தர் வாழ்ந்த சிதம்பரத்தில் உள்ள நந்தனார் ஆண்கள் பள்ளிவாயிலில், தமிழக அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதில் சுவாமிஜியின் மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்பட்டது.
  • சுவாமி சகஜானந்தரின் பிறந்தநாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

மதிப்பீடு

சுவாமி சகஜானந்தர் நான்கு வகைகளில் மதிப்பிடத்தக்கவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய சமூகசீர்திருத்தவாதி, அரசியலாளர், கல்வியாளர் மற்றும் மெய்ஞானி.

  • தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவர்களில் அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகிய முதல் மூவருக்கும் பிறகு வந்த முதன்மையான ஆளுமை சகஜானந்தரே. அரசியல், கல்வி, மெய்யியல் என பல தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.
  • காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து இந்திய விடுதலைப்போரில் பங்கெடுத்த சகஜானந்தர் காந்தியவாதியாகத் திகழ்ந்தார். இந்திய விடுதலைக்குப்பின்னரும் அரசியல்பணிகளில் ஈடுபட்டார். அரசியலை சமூகவிடுதலைக்கான களமாகக் கண்டார்.
  • தமிழகத்தில் கல்வி மிகத்தொடக்கநிலையில் இருந்தபோது அனைவருக்குமான கல்விநிலையத்தை உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி வழியாகவே விடுதலை பெற முடியும் என நம்பி அதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தார். அதற்கான அமைப்புகளை உருவாக்கினார். தமிழகத்தின் தொடக்ககட்ட கல்விமுன்னோடிகளில் ஒருவர்.
  • சகஜானந்தர் வைணவமெய்யியலை அடித்தள மக்களுக்கான விடுதலைக்கான தத்துவமாக விளக்கியவர்.

நூல்கள்

  • தாழ்த்தப்பட்டோர்
  • ஹரிஜனங்கள் தோற்றம்
  • தீண்டாமை
  • நமது தொன்மை
  • பண்ணையாள் பாதுகாப்புச் சட்டமும் சர்க்காரின் கடமையும்
  • வச்சிர சூசிகை உபநிடதம்
  • ஆலயம் என்பது ஹரிஜனங்களுக்கே
  • தீண்டாமை சாஸ்திரியமன்று
  • சிதம்பர ரகசியமும் நடராசர் தாண்டவமும்

மற்றும் பல.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:38:41 IST