under review

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

From Tamil Wiki
தமிழ் விக்கி

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் : தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த செய்திகளை ஒருங்கிணைக்கும் இணையக் கலைக்களஞ்சியம். விக்கிப்பீடியா போலவே வாசகர்களின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்படும் அமைப்பு கொண்டது.

தொடக்கம்

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் அமைக்கவேண்டும் என்னும் எண்ணம் 1 ஜனவரி 2022 ல் உருவானது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தளத்திற்கான இணைய இடம் வாங்கப்பட்டு 10 பிப்ரவரி 2022ல் பணிகள் தொடங்கப்பட்டன. ஆயிரம் சரிபார்க்கப்பட்ட பக்கங்களுடன் 7 மே 2022 அன்று இணையக் கலைக்களஞ்சியம் தொடங்கப்பட்டது .

அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெற்ற தொடக்கவிழாவில்

பெயர்

விக்கி என்பது இன்று வாசகர் பங்கேற்போடு தொடர்ச்சியாக மேம்படுத்தப்படும் இணையக் கலைக்களஞ்சியம் என்பதைச் சுட்டும் பெயர். கலைக்களஞ்சியங்கள் என்பவை அறிஞர்குழுவால் எழுதி முடிவுசெய்யப்பட்டு வெளியிடுபவை. விக்கி தொடர் உரையாடல் வழியாக மேம்படுத்தப்படும் பதிவுகளாலானது. அதைச்சுட்டவே தமிழ் விக்கி என்னும் பெயர் இந்த இணையக் கலைக்களஞ்சியத்துக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

நோக்கம்

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் இலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த செய்திகளை ஒருங்கிணைக்கிறது. ஆசிரியர் குழுவால் மொழி செம்மை செய்யப்பட்டு, தரவுகள் சரிபார்க்கப்பட்டு இதில் பயன்படுத்தப்படுகின்றன. இச்செய்திகளை விரிவாக்கவும் மேம்படுத்தவும் வாசகர்களின் பங்களிப்பு கோரப்படுகிறது. தமிழ் கலை, இலக்கியம், பண்பாட்டு தரவுகளையும் செயல்பாடுகளையும் பொதுவாக தொகுத்தலே இதன் பணி.

இப்போதைக்கு பண்பாடு, இலக்கியம் மட்டுமே பேசுதளம். பின்னாளில் விரிவாக்கம் செய்யப்படும். அப்போது அத்துறை சார்ந்த அறிஞர்கள் ஆசிரியர் குழுவில் அமைவார்கள். இது லாபநோக்கமற்ற அமைப்பு. ஆகவே விளம்பரங்கள் வெளியிடப்பட மாட்டாது. இதிலுள்ள தரவுகள் பொதுவெளிக்கு உரியவை. தேவையான போது தேவையான அளவுக்கு மட்டும் நன்கொடை பெறப்படும்.

ஆசிரியர் குழு

வாசகர் பங்கேற்புடன் அமைக்கப்படும் இணையக் கலைக்களஞ்சியம் என்றாலும் தமிழ் விக்கி ஆசிரியர் குழு ஒன்றின் பரிசீலனைக்குப் பின்னரே பதிவுகளை வெளியிடும்.

கல்வித்துறை ஆசிரியர்கள்.
படைப்பிலக்கியத் துறை ஆசிரியர்கள்

ஒருங்கிணைப்பாளர்கள்

தமிழ் விக்கி மூன்று ஒருங்கிணைப்பாளர்களால் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு உதவ தொழில்நுட்பக்குழுவும் நண்பர் குழுவும் உள்ளன/

விதிகள்

  • தமிழ் விக்கி அறிவுபொதுச்சொத்து கொள்கைகொண்டது. இதன் உள்ளடக்கத்துக்கு காப்புரிமை இல்லை. இதன் தலைப்புக்கு மட்டுமே காப்புரிமை உள்ளது
  • தமிழ்விக்கி பொதுவான அறிவுச்சூழலின் மொழியில் செயல்படும். இதற்கென்று தனி மொழிக்கொள்கை இல்லை.
  • கலைக்களஞ்சியத்தில் இடம்பெறவேண்டிய தலைப்புகள், தலைப்புகளின் உள்ளடக்கம் ஆகியவை ஆசிரியர் குழுவின் பொதுப்புரிதலின் படி முடிவுசெய்யப்படும்
  • வாசகர்களின் பங்களிப்பு ஏற்கப்படும். கட்டுரைகள் எழுதவும், திருத்தவும் வாசகர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவை சரிபார்க்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும்
  • தமிழ்விக்கி இலக்கியக் களத்தில் நூறாண்டு மரபு கொண்ட நவீனத் தமிழிலக்கிய மரபில் விவாதங்கள் வழியாக பொதுவாக ஏற்கப்பபட்ட மதிப்பீடுகளை முன்வைக்கிறது. எல்லா தரப்புகளுக்கும் இடமளிக்கிறது. விவாதங்களின் எல்லா தரப்புகளையும் பதிவுசெய்கிறது

தமிழ் விக்கி தூரன் விருது

2022 முதல் தமிழ் விக்கி சார்பில் ஆண்டு தோறும் இலக்கியம் -பண்பாட்டு துறைகளில் பங்களிப்பாற்றிய ஐம்பது வயதுக்குக் குறைவானவர்களுக்கு தமிழ் விக்கி தூரன் விருது வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது (பார்க்க தமிழ் விக்கி- தூரன் விருது )

உசாத்துணை



✅Finalised Page