second review completed

நால்வர் நான்மணிமாலை

From Tamil Wiki
Revision as of 09:55, 10 June 2024 by Tamizhkalai (talk | contribs)

நால்வர் நான்மணிமாலை (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) சைவக்குரவர்கள் நால்வரையும் போற்றி சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

நால்வர் நான்மணிமாலையை இயற்றியவர் சிவப்பிரகாச சுவாமிகள். வீரசைவம் வளர்த்தவர்களில் ஒருவர். பல சைவ நூல்களை எழுதியவர்.

நூல் அமைப்பு

நால்வர் நான்மணிமாலை நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த நூல். வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என்னும் நான்கு பாவகைககளால் ஆன பாடல்களால் மாறி மாறி கோர்க்கப்பட்டு வருவது நான்மணிமாலை.

இந்நூல் குறள் யாப்பில் காப்புப்பாடல் தவிர்த்து 40 பாடல்களைக் கொண்டது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் என சைவக் குரவர்கள் ஒவ்வொருவருக்கும் பத்து வீதம் பாடல்கள் மாறி மாறி அமைந்துள்ளன. சம்பந்தரை வெண்பாவிலும், அப்பரை கலித்துறையிலும், சுந்தரரை விருத்தப்பாவிலும், மாணிக்கவாசகரை அகற்பாவிலும் பாடியுள்ளார் சிவப்பிரகாசர். பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.

நால்வர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் கூறப்பட்டுள்ளன. நூல் என்றால் அது திருவாசகமே என்றும் அதன் பொருள் என்றால் அது தில்லைக் கூத்தனே என்றும் கூறுகிறார்.

பாடல் நடை

நேரிசை வெண்பா (ஞானசம்பந்தர்)

இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு
முலைசுரந்த வன்னையோ முன்னின் - நிலைவிளம்பக்
கொங்கை சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா
இங்குயர்ந்தா ளார்சொல் லெனக்கு.

கட்டளைக் கலித்துறை (அப்பர்)

எனக்கன்பு நின்பொருட் டெய்தாத தென்கொல்வெள் ளேறுடையான்
தனக்கன்பு செய்திருத் தாண்டக வேந்தவித் தாரணியில்
நினக்கன்பு செய்கின்ற வப்பூதி யைச்சிவ நேசமுறும்
இனர்க்கன்பு செய்நம்பி யாரூர னேத்து மியல்பறிந்தே.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்(சுந்தரர்)

அறிந்து செல்வ முடையானா மளகைப்
     பதியாற் றோழமைகொண்
டுறழ்ந்த கல்வி யுடையானு மொருவன்
     வேண்டு மெனவிருந்து
துறந்த முனிவர் தொழும்பரவை துணைவா
     நினைத்தோ ழமைகொண்டான்
சிறந்த வறிவு வடிவமாய்த் திகழு
     நுதற்கட் பெருமானே.

நேரிசையாசிரியப்பா (மாணிக்கவாசகர்)

பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே
வாசக மதற்கு வாச்சியந்
தூசக லல்குல்வேய்த் தோளிடத் தவனே.

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.