under review

ப. சிவகாமி

From Tamil Wiki
Revision as of 20:15, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
ப. சிவகாமி

ப. சிவகாமி (பிறப்பு:1957) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். இதழாளர், ஆட்சிப்பணியாளர், அரசியல்வாதி.

வாழ்க்கைக் குறிப்பு

ப. சிவகாமி 1957-ல் திருச்சி பெரம்பலூரில் பழனிமுத்து, தாண்டாயி இணையருக்குப் பிறந்தார். விவசாயக் குடும்பம். தமிழ், ஆங்கிலம், ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்றார். அமெரிக்காவில் 'பெண்களின் அரசியல் பங்களிப்பு’ குறித்து ஒரு வருட ஆய்வுப்படிப்பிற்காகச் சென்றார்.

தனிவாழ்க்கை

ப. சிவகாமி

1980-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் (ஐ.ஏ.எஸ்) தேர்ச்சி பெற்றார். இருபத்தைந்து ஆண்டுகள் பணியில் இருந்தார். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் ஆட்சியாளராகப் பணியாற்றினார். தொழிலாளர் துறை கூடுதல் செயலாளராகவும் சுற்றுலாத்துறை இயக்குநராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராகவும் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

2009 முதல் ப.சிவகாமி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கன்னியாகுமாரியில் போட்டியிட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் போட்டியிட்டுள்ளார். 2009-ல் "சமூக சமத்துவ படை" என்ற கட்சியை நிறுவினார். `தலித் நில உரிமை இயக்க'த்தை இரண்டு ஆண்டுகள் நடத்தி, நில உரிமைக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தினார். `பெண்கள் முன்னணி' என்ற அமைப்பின் மூலம், 2007-ம் ஆண்டு மதுரையில் ஒரு லட்சம் பெண்களைத் திரட்டி, பெண்கள் கலை இரவு' நிகழ்ச்சியை நடத்தினார். 2008-ம் ஆண்டு, இரண்டரை லட்சம் பெண்களைத் திரட்டி, `பெண்களும் அரசியலும்' மாநாட்டை நடத்தினார்.

ப. சிவகாமி

இலக்கிய வாழ்க்கை

ப. சிவகாமியின் முதல் சிறுகதை 1975-ல் 'தினமணிக்கதிரில்’ வெளியானது. நித்யா என்ற புனைபெயரில் 'இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை 1986-இல் வெளியிட்டார். முதல் நாவல் 'பழையன கழிதலும்' 1988-ல் வெளியானது.'ஆனந்தாயி'; (1992),'குறுக்குவெட்டு' (1999) ஆகிய நாவல்கள் வெளிவந்தன. 'கடைசிமாந்தர்' என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதி 1997-லும், "கதைகள்" என்ற மூன்றாவது சிறுகதைத் தொகுதி 2003-லும் வெளிவந்தன. ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் 'ரஹமத்துன்னிஸா' என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.

1995 முதல் தமிழ் இலக்கிய இதழான 'புதிய கோடாங்கி'யில் கட்டுரை, சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார். புதிய கோடங்கி என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அதில் உடல்மொழி என்ற தலைப்பிலும், மெல்லிய துளையிட்ட காகிதத்தின் வழி என்ற தலைப்பிலும் இரு தொடர்களையும் எழுதி வருகிறார். சிவகாமி, சிறுகதை, நாவல், கட்டுரைத் தொடர் என்று பல்வேறு இலக்கியத் தளங்களிலும் இயங்குகிறார்.

சாகித்ய அகாதெமி தேர்ந்தெடுத்த 100 சிறந்த நாவல்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிவகாமியின் 'The Cross section’ என்கிற நாவல்தான் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. 1995-ஆம் ஆண்டு 'குறுக்குவெட்டு’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்த நாவல் இது.

வங்காள எழுத்தாளர் சரத் சந்திரர், ஆண்டன் செக்காவ், டால்ஸ்டாய், காஃப்கா, கேத்ரின் பூ, ருவானா, தமிழைப் பொறுத்தமட்டில் பிரபஞ்சன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, அம்பை, ராஜம் கிருஷ்ணன், இமையம், ஜெயமோகன், சாரு நிவேதிதா, பாமா ஆகியோரை ஆதர்ச எழுத்தாளராகக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

"உண்மைக்கு முன்னும் பின்னும் நாவலின் இலக்கிய முக்கியத்துவம் அது காட்டும் இரண்டு அம்சங்களால் ஆனது. ஒன்று அது அதிகாரவர்க்கம் செயல்படும் விதத்தை நுட்பமாக சித்தரித்துக்காட்டுகிறது. அதன் உள்ளடுக்குகளையும் ஊடுபாவுகளையும் நாம் நம் அனுபவம்போல காணச்செய்கிறது. இரண்டு அதிகார அரசியலின் நேர் எல்லையில் ஒரு பெரும் இலட்சியவாதத்தை சுட்டிக்காட்டி நிற்கிறது. இவ்விரு கூறுகளாலும் அது முக்கியமான நாவல்" என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

ஆவணப்படம்

'ஊடாக' என்ற குறும்படத்தை இயக்கினார். 1995-ல் இப்படம் குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றது.

நூல் பட்டியல்

நாவல்கள்
  • பழையன கழிதல்
  • குறுக்கு வெட்டு
  • நாளும் தொடரும்
  • உண்மைக்கு முன்னும் பின்னும்
சிறுகதைத்தொகுப்பு
  • இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள
  • கடைசி மாந்தர்
  • கதைகள்
கவிதைத் தொகுப்பு
  • கதவடைப்பு
  • பயனற்ற கண்ணீர்
கட்டுரைத் தொகுப்பு
  • இடது கால் நுழைவு
  • உடல் மொழி

இணைப்புகள்

உசாத்துணை


✅Finalised Page