being created

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை

From Tamil Wiki
மே.வீ. வேணுகோபால பிள்ளை

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை ( 31 ஆகஸ்ட் 1896 - 4 பெப்ருவரி 1985) (மே.வீ.வேணுகோபாலன்) தமிழறிஞர், கல்வியாளர். இலக்கண ஆய்வு, பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதி பதிப்பித்தல், குழந்தை இலக்கியம் என்னும் பல தளங்களில் செயல்பட்டவர்.

பிறப்பு,கல்வி

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சென்னை, சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள மேட்டுப்பாளையம் எனும் ஊரில் வீராசாமி - பாக்கியம் இணையருக்கு ஆகஸ்ட் 31 ஆகஸ்ட் 1896 அன்று பிறந்தார். தொடக்கக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் பயின்றார். வறுமையால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சென்னை, வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகப் பணியாற்றினார். வி.ஆர். அரங்கநாத முதலியார், அருங்கலை விநோதர் கே.மாசிலாமணி முதலியார், பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார், வழக்கறிஞர்களான எம்.தாமோதர நாயுடு, மோகனரங்கம் பிள்ளை ஆகியோர்களிடம் தமிழ்ப் பயின்றார்.கா. ர. கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். கலாநிலையம் சேஷாச்சல ஐயர் நடத்திய இரவுப் பள்ளியில் ஆங்கிலம் கற்றார். அதன்பின் வித்துவான் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (நன்றி: இந்து தமிழ் திசை)

மே.வீ.வேணுகோபாலன் சென்னை வேப்பேரியிலுள்ள எஸ்.பி.ஸி.கே. இல் அச்சகப் பணி புரிந்தார். அஞ்சலகத்தில் உதவியாளராகவும், வழக்கறிஞருக்கு குமாஸ்தாவாகவும், ஒப்பந்த அலுவலகத்தில் எழுத்தராகவும் பணிபுரிந்தார். பின்னர் தமிழாசிரியராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றினார்.

கல்விப்பணி

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சென்னை, முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், புரசைவாக்கம் பெப்ரீசியசு உயர்நிலைப் பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் 1924 முதல் 1938 வரை பணிபுரிந்தார்.1938 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியைத் துறந்து, எழுத்துப் பணியிலும், பதிப்புத் தொழிலிலும் ஈடுபட்டார். ஆசிரியப்பணியை துறந்த பின்னரும் புரசைவாக்கம், குருகுல மதக்கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வித்துவான் தேர்விற்குத் தனிவகுப்புகள் நடத்தியுள்ளார். இப்பயிற்சி வகுப்புகளை இலவசமாகவே அவர் நடத்திவந்தார்.

பதிப்புப் பணி

மே.வீ.வேணுகோபால பிள்ளை அரசாங்க இலக்கிய, இலக்கணப் பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட திருவாய்மொழி ஈடடின் பத்துத் தொகுதிக்கும் பதிப்பாசிரியராக விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கம்பராமாயணப் பதிப்புக் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார்

புதிய தமிழ் வாசகம்

1938- ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து விலகிய மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சொந்தமாகப் புத்தகங்களை எழுதி பதிப்பிக்கத் தொடங்கினார். அவர் எழுதிய நூல்கள் பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்களாகப் பரிந்துரைக்கப்பட்டன. தமிழறிஞர்கள் பலர் தங்களது நூல்களைப் பதிப்பிக்கும் முன்னர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையிடம் அளித்து செப்பம் செய்துகொண்டனர்.

யாப்பருங்கல பழைய விருத்தியுரை பதிப்புகளின் பிழைகளை நீக்கி, விளக்கக் குறிப்புகளையும் சேர்த்து மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அளித்த வடிவம்தான் தமிழக அரசால் 1960-ல் வெளியிடப்பட்டது. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அளித்த நூல்வடிவத்தையும் அரசு வெளியிட்ட நூலையும் இரா. இளங்குமரனார் ஒப்புநோக்கித் திருத்தங்கள் செய்த செம்பதிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தான் செம்மைப்படுத்திய யாப்பருங்கல உரைநூலுக்கு முன்னுரையாக மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை எழுதிய எழுசீர் ஆசிரிய விருத்தத்தில், அவருக்கு முன்பு 1916- ஆம் ஆண்டிலேயே யாப்பருங்கலத்தை நூலாக வெளியிட்ட பதிப்புச்செம்மல் சரவண பவானந்தத்துக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாரி நிலையம் யாப்பருங்கலக்காரிகை நூலை வெளியிட்டது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள் பதிப்பு செய்துள்ளது.

சொற்பொழிவாளர்

இரண்டாம் உலகப் போரின்போது சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு இடம்பெயர்ந்த மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சமண சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சீவக சிந்தாமணி குறித்த சொற்பொழிவுகளைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். அந்தச் சொற்பொழிவுகளைத் தொகுத்து நினைவு மலர் ஒன்றையும் வெளியிட்டார். அந்நிகழ்வின்போது, ‘சிந்தாமணிச் செல்வர்’ என்று மே.வீ. வேணுகோபாலப் பிள்ளைக்குப் பட்டம் அளித்துப் பாராட்டினார் திரு.வி.க.

விருதுகள்

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை கீழ்காணும் விருதுகளைப் பெற்றுள்ளார்;

  • திருப்பனந்தாள் காசிமடத்தில் அக்டோபர் 29, 1967 அன்று நடந்த விழாவில் அறிஞர் அண்ணா 'செந்தமிழ்க் களஞ்சியம்' எனும் விருது வழங்கினார்
  • தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கிய 'கலைமாமணி</> விருது
  • 1981 இல் அமெரிக்க உறவுபூண்ட உலகப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் (D.Litt).
  • மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் வழங்கிய, 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருது.

மறைவு

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, பெப்ரவரி 4, 1985 அன்று காலமானார்.

விவாதங்கள்

புகழ்பெற்ற குழந்தைப்பாடலான அம்மா இங்கே வா வா அழ.வள்ளியப்பா எழுதியது என்று பாடநூல்களில் உள்ளது. அது பிழையானது என்றும் அதை எழுதியவர் மே.,வீ.வேணுகோபால பிள்ளையே என்றும் மே.வீ.வேணுகோபால பிள்ளையின் பெயர்த்தி கீதாலட்சுமி ஶ்ரீனிவாசன் குறிப்பிடுகிறார்.

ச.து.சு. யோகியார் உரையெழுதிய கூத்தநூல் மே.வீ.வேணுகோபால பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. அதன் மூலச்சுவடிகள் அழிந்துவிட்டன என்று சொல்லப்பட்டது. அது ஒரு போலிநூல் என அறிஞர்கள் குற்றம்சாட்டினர்.ஆகவே இதை வெளியிட்ட மத்தியமாநில சங்கீத நாடக அக்காடமிகள் இந்நூலை மறுபதிப்பு செய்யவில்லை. இந்நூலின் எஞ்சிய பகுதியையும் வெளியிடவில்லை.

இலக்கிய இடம்

மே.வீ.வேணுகோபால பிள்ளை தமிழின் பதிப்பியக்கத்தில் உ.வே.சாமிநாதையர், தலைமுறைக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர். நாலாயிர திவ்வியப்பிரபந்தம் முதலிய நூல்களை விரிவான உரைகளுடன் பதிப்பித்தார். இலக்கண நூல்களை பிழைநோக்கி பதிப்பித்தவர் என்பதனால் இலக்கணத்தாத்தா என்று பெயர் பெற்றார். சீவக சிந்தாமணியை உரையாற்றியமையால் சிந்தாமணிச் செல்வர் என்றும் அறியப்பட்டார். கல்வியாளர், குழந்தை இலக்கியப் படைப்பாளி ஆகிய முகங்கள் கொண்டவர்.

நூல்கள்

யாப்பருங்கலக் காரிகை
பதிப்பு

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை கீழ்காணும் நூல்களை பதிப்பித்துள்ளார்;

எழுதியவை
தமிழ் அன்றும் இன்றும்

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை கீழ்காணும் நூல்களை எழுதியுள்ளார்;

  • அம்பலவாணன் (நாவல்)
  • அரிச்சந்திர புராணச் சுருக்கம்
  • அராபிக் கதைகள்
  • அற்புத விளக்கு
  • இளங்கோவன் (நாவல்)
  • கம்பராமாயணம் ( பாலகாண்டம் முதல் சுந்தரகாண்டம் வரை வசனங்களாக )
  • குணசாகரர் (அ) இன்சொல் இயல்பு
  • கொதிக்கும்மனம் (காந்தியின் மறைவு பற்றிய கவிதை நூல்) 1948 பிப்ரவரி, திராவிடர் கழகம், காஞ்சிபுரம்.
  • பத்திராயு (அ) ஆட்சிக்குரியோர்
  • தமிழ் அன்றும் இன்றும்
  • திருக்கண்ணபிரானார்
  • துருவன்
  • விமலன்

மேற்கோள்கள்

  • மே. வீ. வேணுகோபால் பிள்ளையின் பதிப்புத் தொழில் தமிழ்வட்டம் - முதல் ஆண்டுவிழா மலர் கட்டுரை, பக்கம்-43.
  • அ. ம. சத்தியமூர்த்தி, "தமிழுலகம் நினைக்க மறந்த தமிழர்கள்" - பக்கம்-140.

உசாத் துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.