தமிழ்ப் பொழில் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 21:15, 6 January 2023 by ASN (talk | contribs) (Para Added and edited; Inter Link and: External Link Created:)
தமிழ்ப் பொழில் இரண்டாவது இதழ்: வைகாசி-1925. (படம் நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளை)
தமிழ்ப் பொழில் இதழ்: 1925 (படம்: தமிழ் இணைய மின்னூலகம்)
தமிழ்ப் பொழில் இதழ் - 1957 (படம்: தமிழ் இணைய மின்னூலகம்)
தமிழ்ப் பொழில் பத்தொன்பதாம் ஆண்டு மலர்: 1943-44
தமிழ்ப்பொழில் இதழ் 1976

தமிழ்ப் பொழில் ( சித்திரை 1, 1925), இலக்கிய ஆய்விதழ். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வெளிவந்தது. ஆர். வேங்கடாசலம் பிள்ளை இதன் ஆசிரியர். மதுரை தமிழ்ச் சங்கத்து இதழான ‘செந்தமிழ்’ இதழை தனக்கான முன் மாதிரியாகக் கொண்டு இவ்விதழ் செயல்பட்டது.

பதிப்பு, வெளியீடு

கரந்தைத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராக இருந்த த. வே. உமாமகேசுவரன் பிள்ளை, சங்கத்தின் சார்பாகத் தனி இதழ் ஒன்றை வெளியிட விரும்பினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கெனச் 'செந்தமிழ்’ இதழ் இருப்பதுபோலக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் ஓர் இதழ் இருக்கவேண்டும் என சங்கத்து உறுப்பினர்கள் எண்ணினர். அதற்காக, இராதாகிருட்டினப் பிள்ளை, ஐ. குமாரசாமிப் பிள்ளை, பெரியசாமிப் பிள்ளை, நா. சீதாராமப் பிள்ளை, சோமநாதராவ் என்னும் ஐவர் குழு நியமிக்கப்பட்டது. ஆயினும் பல ஆண்டு முயற்சிகளுக்குப் பின்னரே தமிழிப் பொழில் இதழ் தோற்றம் பெற்றது.

குரோதன ஆண்டு சித்திரைத் திங்கள் முதல்நாள் (1925 ஏப்ரல்) முதல் ’தமிழ்ப் பொழில்’ இதழ் வெளிவந்தது. ஆர். வேங்கடாசலம் பிள்ளை இதன் ஆசிரியராக இருந்தார்.

நோக்கம்

தமிழ்ப் பொழில் இதழின் நோக்கம் பற்றி, ஆசிரியர் ஆர். வேங்கடாசலம் பிள்ளை, "இவ்விதழ் தமிழ்ச் சங்கத்தின் ஒரு வெளியீடு எனும் தகுதிக்கேற்பத் தமிழ் வளர்ச்சியும் தமிழர் மேம்பாடும் பற்றிய அருமைக் கட்டுரைகளையே தன்னகத்துக் கொண்டு வெளிவரும். சிறந்த கட்டுரைகள் ஆங்கிலம், ஆரியம், தமிழ் மொழிகளில் வல்லார் பலராற் கற்றாரேயன்றிக் கற்பார்க்கும் பயனுறத்தக்க நெறியில் தெள்ளிய (எளிய) இனிய தீந்தமிழ் நடையில் எழுதப்பெறும். ஒருவரை, ஒரு குழுவினரை, ஒரு சமயத்தைச் சுட்டி இகழும் மாறுபாட்டுரைகளும், வேற்றுமையை உண்டாக்கும் உரைகளும் இதன்கண் அறவே காணப்படா. சங்கமே அரசியல் நெறியிற் கலவாத தொன்றாகவே,அதன் சார்பினதாகிய இவ்விதழ்,அரசியல் நெறியிற் சிறிதும் விரவாததொன் றென்பதைக் கூறலும் வேண்டா" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆசிரியர்கள்

தமிழ்ப் பொழில் இதழில் ஆசிரியர்களாக பல்வேறு ஆண்டுகளில் பல்வேறு தமிழ்ச் சான்றோர்கள் செயல்பட்டனர்.

முதல் ஆண்டு: எல். உலகநாத பிள்ளை மற்றும் ஆர். வேங்கடாசலம் பிள்ளை

இரண்டாம் ஆண்டு: ஆர். வேங்கடாசலம் பிள்ளை மற்றும் நீ. கந்தசாமிப் பிள்ளை

ஆண்டு மூன்று முதல் ஒன்பது வரை: எல். உலகநாத பிள்ளை மற்றும் ஆர். வேங்கடாசலம் பிள்ளை

ஆண்டு பத்து முதல் பதினேழின் முதற் பகுதிவரை: த. வே. உமாமகேசுவரம் பிள்ளை

பதினேழாம் ஆண்டின் பிற்பகுதி: ஐ. குமாரசாமிப் பிள்ளை

ஆண்டு பதினெட்டு: ஆர். வேங்கடாசலம் பிள்ளை

ஆண்டு பத்தொன்பது: ஆர். வேங்கடாசலம் பிள்ளை மற்றும் கோ. சி. பெரியசாமிப் புலவர்

ஆண்டு இருபது மற்றும் இருபத்தொன்று: கோ. சி. பெரியசாமிப் புலவர்

ஆண்டு இருபத்தியிரண்டு: கோ. சி. பெரியசாமிப் புலவர் மற்றும் அ. கணபதிப் பிள்ளை

ஆண்டு 23 முதல் 28 வரை: அ. கணபதிப் பிள்ளை

ஆண்டு 29 முதல் 41 வரை: ச. சுயம்பிரகாசம்

ஆண்டு 42 முதல் 46 வரை: செ. தனக்கோடி

ஆண்டு 47 முதல் 50 வரை: அரங்க. வே. சுப்பிரமணியன்

ஐம்பதாம் ஆண்டு முதல் பதிப்பாசிரியர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. முகப்பு அட்டையின் ஆசிரியரின் பெயராக ’பொழிற்றொண்டர்’ என்ற அடையுடன் ’இராவுசாகேப் எஸ். சுயம்பிரகாசம்’ அவர்களின் பெயர் குறிக்கப்பட்டது.

உள்ளடக்கம்

தமிழ்மொழி வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ்ச் சொல்லாக்கம், தமிழ் நூலாராய்ச்சி, பழந்தமிழ்நூல் வெளியீடு, அரிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ்த் தனிச்செய்யுட்கள் வெளியீடு, தமிழ் நூல் மதிப்புரை, தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் தமிழ்ப் பொழில் இதழில் இடம் பெற்றன.

இதழின் ஆண்டுத் தொடர் வரிசையைக் குறிக்க ‘துணர்’ என்பதையும், மாதத்தைக் குறிக்க ‘மலர்’ என்பதையும் இவ்விதழ் பயன்படுத்தியது. நேரடியாகச் சந்தாதாரர்களுக்கு இவ்விதழ் அனுப்பப்பட்டது.

கட்டுரைகள்

இலக்கியம், வரலாறு, திறனாய்வு என்று பல்வேறு வகையிலான கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றன.

’நாட்டுப்புறங்களின் கல்வியும், நாட்டாண்மைக் கழகங்களின் கடமையும்’, ’நாட்டுப்புறங்களின் கல்வி’, ‘தமிழ் மொழியும் தமிழ் மக்களுயர்வும்’, ’திருவள்ளுவர் நூல் நய ஆராய்ச்சி’, ‘தமிழர் வரன் முறை’, ’கல்வெட்டாராய்ச்சி’, ‘தமிழ்விடு தூதும் மொழிவரலாறும்’, ‘சங்ககால இராமாயண ஓவியங்கள்’, ’தென்னக மேதையும் சீனத்துச் செம்மலும்’, ’விஞ்ஞானமும் தமிழும்’, ‘குறிப்பு வினை’, ‘ஆரிய மொழிகளில் திராவிட மொழிகளின் இயல்பு’, ‘திருவள்ளுவர் கொண்ட மொழியமைப்பு’, ‘அறிவன் கோயில்’, ‘இலக்கியத்தில் அவலம்’, ‘தமிழில் பாயிரம்’, ‘குறளில் வீட்டியல்’, ’அரக்கர் தமிழரா?’, பாரதிதாசனின் ’கதர் இராட்டினப் பாட்டு’ , ‘அடியார்க்கு நல்லார் உரை நுட்பம்’ எனப் பல்வேறு வகையிலான தலைப்புகளில் இவ்விதழில் கட்டுரைகள் வெளியாகின.

இதழில் வெளிவந்த கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு கரந்தைத் தமிழ்ச் சங்கம் மூலம் சிறு நூல்களாக வெளியிடப்பட்டன. இதழின் பகுதிகள் தொகுக்கப்பட்டு ஆண்டு மலர்களாக விற்பனை செய்யப்பட்டன.

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்

ஆவணம்

தமிழ்ப் பொழில் இதழ்கள் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’யால் கூகிள் புத்தக இணைய தளத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக் கழகத்திலும் தமிழ்ப் பொழில் இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

பார்க்க: தமிழ்ப் பொழில் இதழ்கள்: கூகிள் புக்ஸ்

தமிழ்ப் பொழில் இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்

வரலாற்று இடம்

‘செந்தமிழ்’, ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழ்களின் வரிசையில் இலக்கியம் வளர்த்த இதழாக ‘தமிழ்ப் பொழில்’ இதழ் மதிப்பிடப்படுகிறது. அக்காலத்து இலக்கியவாதிகள் பலரும் இவ்விதழில் பங்களித்துள்ளனர். தனித் தமிழ் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு இவ்விதழ் இயங்கியது. தமிழில் புதிய பல கலைச்சொல்லாங்கள் உருவாக இவ்விதழ் துணை நின்றது.

உசாத்துணை