being created

சித்ரன்

From Tamil Wiki
Revision as of 16:22, 14 June 2023 by Ramya (talk | contribs)
சித்ரன்

சித்ரன் (பிறப்பு: 1985) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

பிறப்பு, கல்வி

சித்ரன் புதுக்கோட்டையில் சிவஞானம், மணிமேகலை இணையருக்கு மகனாக அக்டோபர் 27, 1985இல் பிறந்தார். இயற்பெயர் வினோத் கண்ணா. சித்ரனின் பெற்றோர்கள் இருவரும், சிறிமாவோ சாஸ்திரி உடன்படிக்கையின் படி 1974ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள். புதுக்கோட்டை தூயமரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும், புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை மேற்கு தாம்பரம், ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவ கல்லூரியில் சித்த மருத்துவத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

விவசாயத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சாலினியை பெர்ருவரி 12, 2016 அன்று மணந்தார். மகள்கள் எழிலி, கொற்றவை. சித்ரன் தமிழ்நாட்டு அரசின் அறநிலைத்துறையில் தணிக்கை ஆய்வாளராக திருச்சி பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

சித்ரன் கல்குதிரையில் 2013இல் வெளியான ராபர்டோ பொலான்யோவின் Dance card சிறுகதை மொழிபெயர்ப்பு வழியாக இலக்கிய உலகில் அறிமுகம் ஆனார். 2018இல் சித்ரனின் முதல் சிறுகதை தொகுப்பான 'கனாத்திறமுரைத்த காதைகள்' வெளியானது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.

சித்ரனின் முதல் சிறுகதை 'தூண்டில்' 'மணல் வீடு' சிற்றிதழில் 2015இல் வெளியானது. ரமேஷ் பிரேம், ஜெயமோகன், கோணங்கி, கி.ரா, எஸ்.ராமகிருஷ்ணன், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோரை தனது முன்னோடிகளாக கருதுகிறார்.

இலக்கிய இடம்

சித்ரனின் முதல் தொகுப்பில் இடம்பெற்ற ஏழு கதைகளும் வெவ்வேறு தன்மையிலானவை. 'கொனட்டி முத்தன்' ஒரு காதல் கதை என்றால் 'விசும்பின் துளி' அறிவியலும் தொன்மமும் முயங்கும் கதை. 'ஐயனார்புரம்' புதுக்கோட்டைக்கே உண்டான தனித்துவமான விளையாட்டை பேசுகிறது. ஆழ்மனத்தின் அலறல்களை கதையாக்கியிருப்பதாக எழுத்தாளர் கணேச குமாரன் குறிப்பிடுகிறார். [1]

”சித்ரனின் எழுத்தில் வெறுப்பில் தோய்ந்த காமம், உணர்வற்ற காமம், துரோகத்தில் தோய்ந்த காமம் என பல வருகின்றன. இவையெல்லாம் எழுதப்பட வேண்டியவை. காமம் என்னும் வாழ்வுப் பகுதி அக்கறையுடன் பேசப்பட வேண்டும். அதை பயன்படுத்தக்கூடாது. நல்ல இலக்கியம் எதையும் 'பயன்படுத்தாது'. அந்த இடத்தில் சித்ரன் நிற்கிறார். அக்கறையுடன் பேசுகிறார்.” என கல்குதிரை இதழ் 32 ல் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் சித்ரனின் சிறுகதைகள் குறித்து மதிப்பிட்டார்.

விருது

  • க.சீ . சிவகுமார் நினைவு சிறந்த அறிமுக எழுத்தாளர் சிறுகதை தொகுப்புக்கான விருது 2019
  • சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருது - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்

நூல் பட்டியல்

சிறுகதை தொகுப்பு
  • கனாத்திறமுரைத்த காதைகள் (யாவரும் பதிப்பகம், 2018)
  • பொற்பனையான் & பிற கதைகள் (யாவரும் பதிப்பகம், 2023)

இணைப்புகள்

  • சித்ரனின் பொற்பனையான்- நரேன்: ஜெயமோகன் தளம்

அடிக்குறிப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.