under review

போகன் சங்கர்

From Tamil Wiki
Revision as of 13:38, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
போகன் சங்கர்
போகன் சங்கர்

போகன் சங்கர் (பிறப்பு: மே 19, 1972) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர் நாகர்கோயிலில் வசிக்கிறார். சுயஎள்ளலும், உணர்ச்சிகளை மிதமாக வெளிப்படுத்தும் தன்மையும் அகத்தேடலும் கொண்ட கவிதைகளுக்காகப் புகழ்பெற்றவர்.

பிறப்பு, கல்வி

போகன் சங்கரின் தந்தைவழி பூர்வீகர்கள் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். போகன் சங்கர் திருநெல்வேலி சொ. ராஜரத்தினவேலு, முத்துலட்சுமி இணையருக்கு மே 19, 1972-ல் பிறந்தார். இயற்பெயர் கோமதி சங்கர்.

புனித சவேரியார் மேல் நிலைப்பள்ளி பாளையங்கோட்டையில் பள்ளிக்கல்வி பயின்றார். புனித சவேரியார் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

போகன் சங்கர் சுகாதாரத்துறையில் மருத்துவ ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறார். நாகர்கோயிலில் வசிக்கிறார். போகன் நவம்பர் 7, 2003-ல் கனகாவை மணந்து கொண்டார். சிவகீர்த்தி எனும் மகனும், ஹரிணி என்னும் மகளும் உள்ளனர்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

போகன் சங்கரின் முதல் படைப்பு ’எரிவதும் அணைவதும் ஒன்றே’ என்ற கவிதை. தன் ஆதர்ச எழுத்தாளர்களாக வைக்கம் முகமது பஷீர், வி.கே.என்.(மலையாளம்), புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், தி. ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், டால்ஸ்டாய், எமிலி டிக்கின்சன், டி.எச். லாரன்ஸ், கிரகாம் கிரீன், சாமர்செட் மாம், பால்க்னர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். போகன் சங்கர் தனிவாழ்விலும் இலக்கியத்திலும் பலவகையான தேடல்களும் பயணங்களும் கொண்டவர். ஆவிகள், மாந்திரிகம் ஆகியவற்றை விருப்புடன் கூர்ந்து கவனிப்பவர். ஆவிகள் உலகம் போன்ற இதழ்களில் தொடக்ககாலத்தில் எழுதியிருக்கிறார். ஆலயங்கள், மரபான ஆன்மிகம் சார்ந்த ஆர்வத்துடன் நவீன மாற்று ஆன்மிகம் சார்ந்த தேடல்களும் உண்டு. ஆனால் அவநம்பிக்கை சார்ந்த பார்வையும் கொண்டவர்.

போகன் சற்றுப் பிந்தி நாற்பது வயதுக்குமேல்தான் நவீன இலக்கியத்தைத் தீவிரமாக எழுதத் தொடங்கினார். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். முகநூலில் தொடர்ச்சியாக கவிதைகளும் பகடிக்குறிப்புகளும் எழுதுகிறார்

நூல்கள்

'எரிவதும் அணைவதும் ஒன்றே', 'தடித்த கண்ணாடி போட்ட பூனை', 'நெடுஞ்சாலையை மேயும் புள்', 'சிறிய எண்கள் உறங்கும் அறை', 'வெறுங்கால் பாதை', 'திரிபுகால ஞானி' என்ற தொகுப்புகளில் கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். 'கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்', 'போக புத்தகம்', 'திகிரி', 'மர்ம காரியம்' போன்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

இலக்கியப்பார்வை

’உயிருள்ளவை ஒருபோதும் கச்சிதமானவையோ கறாரானவையோ அல்ல.அவை பிசிறுகளால் நிறைந்தவை.நவ மனிதனின் மிகப் பெரிய துயரமே அவனால் இந்தக் கச்சிதமின்மையைத் தாங்கிக் கொள்ள முடியாததுதான்.ஆகவேதான் அவன் கலையிலும் இலக்கியத்திலும் கச்சிதத்தை உருவாக்கிக் கொண்டே செல்கிறான்’ என்று இலக்கிய அழகியல் பற்றிய தன் புரிதலைக் குறிப்பிடும் போகன் வடிவநேர்த்தி கொண்ட கவிதைகளில் வாழ்வின் பிசிறுகளையும் அபத்தங்களையும் கூறுபவராக இருக்கிறார்

அடிப்படை உருவகங்கள்

போகன் சங்கரின் புனைவுலகில் பூனை எனும் உருவகம் முக்கியமானது. அறிவுஜீவியும் ஆணவம் கொண்டதுமான ஒரு பூனை திரும்பத் திரும்ப வரும் கதாபாத்திரம். பாருக்குட்டி என்னும் நடுவயது பாலியல்தொழிலாளர் அவருடைய புனைவுக்கதாபாத்திரமாக பல குறிப்புகளில் வருகிறார். பாருக்குட்டி விவேகமும் கசப்பு கலந்த விலக்கமும் கொண்டவராக வெளிப்படுகிறார்

திகிரி

இலக்கிய இடம்

போகன் சங்கர் கவிதைகள் சுருக்கமான செறிவான வடிவமும், மெல்லிய அங்கதத்தன்மையும் கொண்டவை. ஆனால் சமூகவிமர்சனம் சார்ந்த அங்கதத்திற்குப் பதிலாக மானுட இருப்பின் பொருள் சார்ந்த தரிசனங்களை வெளிப்படுத்துபவையாக அவை உள்ளன. இயற்கையின் முன் வாழ்க்கை கொள்ளும் அபத்தம், அர்த்தம்கடந்த நிலை ஆகியவற்றை சுட்டிநிற்கும் அவர் கவிதைகள் தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கியச் சாதனைகளாக கருதப்படுகின்றன.

"சுய எள்ளலும், கட்டுக்குள் வைத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும், சமகாலச் சூழலின் நெருக்கடிகள், அபத்தங்களை எதிர்கொள்ளும் விதமும் அவரது புனைவின் சிறப்புகள். விளையாட்டுப்பொருளைப் போல அமானுஷ்யத்தையும் கைக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்" என எஸ். ராமகிருஷ்ணன் போகன் சங்கரின் புனைவுலகத்தை மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • கவிஞர் ராஜமார்த்தாண்டன் விருது
  • சுஜாதா விருது
  • ஆத்மா நாம் விருது (2018)
  • நெய்வேலி இலக்கியச் சிந்தனை விருது
  • கனடா இலக்கியத் தோட்ட விருது
  • கண்ணதாசன் விருது

நூல்கள்

கவிதைத்தொகுப்புகள்
  • எரிவதும் அணைவதும் ஒன்றே
  • தடித்த கண்ணாடி போட்ட பூனை
  • நெடுஞ்சாலையை மேயும் புள்
  • சிறிய எண்கள் உறங்கும் அறை
  • வெறுங்கால் பாதை
  • திரிபுகால ஞானி
சிறுகதைத் தொகுப்புகள்
  • கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்
  • போக புத்தகம்
  • திகிரி
  • மர்ம காரியம்

வெளி இணைப்புகள்

உசாத்துணை


✅Finalised Page