பூ. சோமசுந்தரம்
- சோமசுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சோமசுந்தரம் (பெயர் பட்டியல்)
பூ. சோமசுந்தரம் (பூர்ணம் சோமசுந்தரம்) (1918-1981) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். நேதாஜியின் ஐ.என்.ஏ. நடத்திய ஆசாத் ஹிந்து வானொலியில் ஒலிபரப்பாளராகப் பணியாற்றினார். ரஷ்யாவின் ரேடியோ மாஸ்கோ தமிழ்ப்பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம், ரஷ்ய மொழிகளிலிருந்து மொழியாக்கங்கள் செய்தார். ரஷ்ய எழுத்தாளர்கள் பலரைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
பிறப்பு, கல்வி
பூ. சோமசுந்தரம், 1918-ல், மதுரையில், பூர்ண கிருபேஸ்வர ஐயர் - உமா பார்வதி இணையருக்குப் பிறந்தார். பூர்ணம் ராமச்சந்திரன் என்னும் எழுத்தாளர் உமாசந்திரன் இவரது மூத்த சகோதரர். பூர்ணம் விஸ்வநாதன், பூர்ணம் பாலகிருஷ்ணன் இருவரும் இவரது இளைய சகோதரர்கள். பூ. சோமசுந்தரம் பாளையங்கோட்டையில் கல்வி கற்றார். ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
பூ. சோமசுந்தரம், மணமானவர். ரஷ்யாவில் பணியாற்றுகையில் ரஷ்யப் பெண்மணி ஒருவரைக் காதலித்து மணம் செய்துகொண்டார்.
அரசியல்
இந்திய ராணுவப் பணி
தேசிய அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த பூ. சோமசுந்தரம், இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பூ. சோமசுந்தரத்தின் ராணுவப் பிரிவு போருக்காகச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கே ஜப்பானியர்களால் அவர் தன் குழுவினருடன் சிறைபிடிக்கப்பட்டார். சில காலத்திற்குப் பின் தனது நண்பர்களுடன் சிறையிலிருந்து தப்பிய சோமசுந்தரம், மாறுவேடத்தில் பினாங்குவுக்குச் சென்று வாழ்ந்தார்.
இந்திய தேசியப் படை (ஐ.என்.ஏ.) பணி
பூ. சோமசுந்தரம் நேதாஜியின் ஐ.என்.ஏ. எனப்படும் இந்திய தேசியப் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். இயக்கத்தின் சார்பில் பல பணிகளை முன்னெடுத்தார்.
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி
பூ. சோமசுந்தரம் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சார்பாக ருஷ்யாவுக்கு மொழிபெயர்ப்புக்காக அனுப்பப்பட்டார்.
வானொலி
ஆசாத் ஹிந்து வானொலி
இந்திய தேசியப் படை (ஐ.என்.ஏ) நடத்தும் ஆசாத் ஹிந்து வானொலியில் ஒலிபரப்பாளர்களுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறிந்த சோமசுந்தரம், அப்பணிக்கு விண்ணப்பித்தார். குரல் வளம் மிக்கவராக இருந்த்தால் உடன் பணி கிடைத்தது. பாங்காக்கிலிருந்து செயல்பட்ட ஆசாத் ஹிந்து வானொலியில் ஒலிபரப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பாரத விடுதலைக்குப் பின் இந்தியா திரும்பினார்.
மாஸ்கோ வானொலி
ரஷ்ய மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த பூ. சோமசுந்தரம், மாஸ்கோ வானொலியின் தமிழ்ப் பிரிவில் பணியாற்ற அழைக்கப்பட்டார். ரேடியோ மாஸ்கோ தமிழ்ப்பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தார். தமிழ் நிகழ்ச்சிகள் பலவற்றைத் தொகுத்தளித்தார். ரஷ்ய மாணவர்கள் பலருக்குத் தமிழ் கற்பித்தார். பல தமிழார்வலர்களையும், ஆய்வாளர்களையும் உருவாக்கினார்

இலக்கிய வாழ்க்கை
பூ. சோமசுந்தரம் டில்லியில் வசித்த காலத்தில் சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். தமிழ், ஹிந்தி, ஆங்கில இதழ்கள் சிலவற்றுக்குக் கட்டுரைகள் எழுதினார். 'காவேரி', 'ராமேஸ்வரம்' போன்றவை பற்றி ஹிந்தி இதழ்களில் விரிவான கட்டுரைகளை எழுதினார். திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் எழுதி வெளியிட்டார்.

மொழிபெயர்ப்பு
ஹிந்தி - தமிழ் - ஹிந்தி
பூ. சோமசுந்தரம், ஹிந்தியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஹிந்திக்கும் சில நூல்களை மொழியாக்கம் செய்தார். அவற்றுள் அவர் ஹிந்தியில் மொழிபெயர்த்த ராஜாஜியின் வியாசர் விருந்து, கல்கியின் கள்வனின் காதலி போன்றவை குறிப்பிடத்தகுந்தன.
ரஷ்ய மொழிபெயர்ப்புகள்
ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்ட நல்லுறவால் ரஷ்ய நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கவும், ரஷ்யர்களுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழ்நாட்டிலிருந்து பலர் சென்றனர். அவர்களில் பூ. சோமசுந்தரமும் ஒருவராக இருந்தார். ஏற்கனவே ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளில் தேர்ந்திருந்த அவர் ரஷ்ய மொழியிலும் தேர்ச்சி பெற்றார்.
சோவியத் ரஷ்யாவின் அயல்மொழிப் பதிப்பகத் துறை, மார்க்சிய நூல்களோடு, ரஷ்ய நாவல்கள், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எண்ணியது. அதற்காக ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகியவற்றைத் தொடங்கியது. அப்பதிப்பகங்களின் மொழிபெயர்ப்புப் பிரிவில் பூ. சோமசுந்தரம் பணியாற்றினார்.
தனது மொழிபெயர்ப்பின் மூலம் அன்டோன் செகாவ், புஷ்கின், மிகயீல் ஷோலகவ், பரீஸ் வஸீலியெவ், சிங்கிஸ் ஐத்மாத்தவ், ரைஸ் வில்லியம்ஸ், பாஸூ அலீயெவா, ஹெர்மன் ஸ்தெபானவிச் தித்தோவ், ஏ. வெல்தீஸ்தவ், எம். பரானவா, பெய்ஷெனாலீயென், மரியா பிரிலெழாயெவா போன்ற பலரது நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தார். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த மாக்ஸிம் கார்க்கி, டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்டோரின் பல படைப்புகளை மொழிபெயர்த்தார். சிறார்களுக்கான பல படைப்புகளையும் மொழிபெயர்த்தார். பல நூல்களுக்குப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார்.
அகராதி
1960-ல், அ. பியாதிகோர்ஸ்கி, செம்யோன் ருதின் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகவும் பூர்ணம் சோமசுந்தரத்தைப் பொறுப்பாசிரியராகவும் கொண்டு தமிழ்-ருஷ்ய அகராதி வெளியிடப்பட்டது. இந்த அகராதியில் ஏறத்தாழ 38 ஆயிரம் சொற்கள் தொகுக்கப்பட்டிருந்தன.
1965-ல், மிஹையில் அந்திரோனவ், அ.இப்ராஹிமோவ், திருமதி நி.யுகனோவா ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகவும் பூர்ணம் சோமசுந்தரத்தைப் பொறுப்பாசிரியராகவும் கொண்டு ருஷ்ய-தமிழ் அகாதி வெளியிடப்பட்டது. சோவியத் கலைக்களஞ்சியப் பதிப்பகம் இதனை வெளியிட்டது. இதில் ஏறக்குறைய 24 ஆயிரம் சொற்கள் இடம்பெற்றிருந்தன.
அமைப்புப் பணிகள்
பூ. சோமசுந்தரம், மொழிபெயர்ப்புப் பணிகளில் மட்டுமன்றிப் பிற தமிழாய்வுப் பணிகளிலும் பெரும் பங்காற்றினார். ரஷ்யத் தமிழ் ஆய்வுகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். அலெக்சாண்டர் பியாடிகோர்ஸ்கி உள்ளிட்ட பலருக்கு ஆசிரியராக இருந்து அவர்களுக்கு முழுமையாகத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார். பியாடிகோர்ஸ்கியை ஒரு தமிழ் அறிஞராக உருவாக்கினார். மாணவர்களுக்குத் தேவாரம், திருவாசகம் பற்றிய அறிமுகங்களை ஏற்படுத்தினார். சங்க இலக்கியம் தொடங்கி பாரதி வரை மாணவர்களுக்குக் கற்பித்தார்.
இதழியல்
பூ. சோமசுந்தரம், சோவியத் நாடு இதழின் ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
மறைவு
பூ. சோமசுந்தரம், 1981-ல் காலமானார்.
ஆவணம்
பூ. சோமசுந்தரம் மொழிபெயர்த்த சில நூல்கள் தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
தமிழின் குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர் பூ. சோமசுந்தரம். கல்கி, ராஜாஜி போன்றோரது நூல்களை ஹிந்திக்குக் கொண்டு சென்றார். ஹிந்தி இலக்கியங்கள் சிலவற்றைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். ரஷ்ய மொழிபெயர்ப்புகளுக்குப் பூ சோமசுந்தரம் ஆற்றியிருக்கும் பணி முதன்மையானதாக மதிப்பிடப்படுகிறது. ரஷ்ய எழுத்தாளர்கள் பலரைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவராகப் பூ. சோமசுந்தரம் அறியப்படுகிறார்.
நூல்கள்
ரஷ்ய மொழிபெயர்ப்புகள்
- நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி (மூலம்: ஆ. ரைஸ் வில்லியம்ஸ்)
- இந்தியாவின் வரலாறு - இரண்டு பாகங்கள் (மூலம்: கொ.அ. அந்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின், கி.கி. கத்தோவ்ஸ்கி)
- தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல் (மூலம்: பல ஆசிரியர்கள்)
- சோவியத் இனமொழிச் சிறுகதைகள் (மூலம்: பல ஆசிரியர்கள்)
- அதிகாலையின் அமைதியில் (மூலம்: பரீஸ் வஸீலியென்)
- லெனினின் வாழ்க்கைக் கதை (மூலம்: மரியா பிரிலெழாயெவா)
- ருஷ்ய தமிழ் அகராதி (பொறுப்பாசிரியர்)
- வாழ விருப்பம் முதலிய கதைகள் (மூலம்: வசீலி சீக்ஷின்)
- மனித இனங்கள் (மூலம்: மிஹயீல் நெஸ்தூர்ஹ்))
- கம்யூனிஸ்டு அகிலம் சுருக்கமான வரலாறு (மூலம்: பலர்)
- இவர்தான் லெனின் கட்டுரைகள், கதைகள், குறிப்புகள் (மூலம்: பலர்)
- ஜமீலா: சோவியத் சிறுகதைகள் (மூலம்: சிங்கிஸ் ஜத்மாத்தவ்)
- முதல் ஆசிரியர் (மூலம்: சிங்கிஸ் ஜத்மாத்தவ்)
- அன்னை வயல் (மூலம்: சிங்கிஸ் ஜத்மாத்தவ்)
- ருஷ்ய அமர இலக்கிய ஆசிரியர்கள்: ருஷ்யச் சிறுகதைகள் (மூலம்: பல எழுத்தாளர்கள்)
- நாய் சடைச்சியும் சிறுவன் போரியாவும் ராக்கெட்டும் (மூலம்: ம.பரானவா, யெ. வெல்தீஸ்தவ்)
- போர் இல்லாத இருபது நாட்கள் (மூலம்: கான்ஸ்தான்தீன் ஸிமனவ்)
- கேப்டன் மகள் (மூலம்: அலெக்சாந்தர் புஷ்கின்)
- முறியடிப்பு (மூலம்: அலெக்சாந்தர் ஃபதேயெவ்)
- மூன்று காதல் கதைகள் (மூலம்: இவான் துர்கனேவ்)
- இயற்கை விஞ்ஞானியின் கதைகள் (மூலம்: பி. மன்தேய்ஃபெல்)
- மேல்கோட்டு - ரஷ்யச் சிறுகதைகள் (மூலம்: பல எழுத்தாளர்கள்)
- எனது நீலப் புவிக் கோளம் (ஹெர்மன் தித்தோவ்)
- மதம் மாறியவன் (மூலம்: அந்திரேய் ஊப்பித்)
- சைபீரியா ஓட்டம் - காத்தியா (மூலம்: கியோர்கி மார்க்கவ்)
- மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது (மூலம்: பாஸூ அலீயெவா)
- விஞ்ஞானக் கம்யூனிசத்தின் அடிப்படைகள் (வி.கி. அபானிசியெவ்)
- மிகயீல் ஷோலகவ் கதைகள்
- அந்தோன் செகாவ்: சிறுகதைகளும் குறுநாவல்களும்
- அருமை மகளுக்குச் சொன்ன கதைகள்
ஹிந்தி மொழிபெயர்ப்புகள்
- Mahabharat Katha (1949) (மூலம்: ராஜாஜியின் வியாசர் விருந்து)
- Chor Ki Premika (1953) (மூலம்: கல்கியின் கள்வனின் காதலி)
ஹிந்தி நூல்கள்
- Tamil sahitya ka itihas (தமிழ் சாகித்ய கா இதிகாஸ்) (1954) (தமிழ் இலக்கிய வரலாறு)
- Tiruvalluvar - Life Sketch (1955)
- Kaveri (1955)
- Rameshwaram (1956)
உசாத்துணை
- பூர்ணம் விஸ்வநாதன் நேர்காணல்
- தென்றல் இதழ் நேர்காணல்: ஆர். நட்ராஜ் ஐ.பி.எஸ்., அரவிந்த் சுவாமிநாதன்
- தென்றல் இதழ் எழுத்தாளர் கட்டுரை: உமாசந்திரன், எழுத்தாக்கம்: அரவிந்த்
- அலெக்ஸாந்தர் துபியான்ஸ்கி: அய்யாதுரை சாந்தன் கட்டுரை
- பூ. சோமசுந்தரம் நூல்கள் - 1, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- பூ. சோமசுந்தரம் நூல்கள் - 2, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- பூ. சோமசுந்தரம் புத்தகங்கள்: பனுவல் தளம்
- பூ. சோமசுந்தரம் புத்தகங்கள்: காமன்ஃபோல்க்ஸ் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2024, 18:24:07 IST