under review

ராதுகா பதிப்பகம்

From Tamil Wiki
லெவ் மொய்ஸ்விச் கிளாச்கோ (Lev Moisevich Kliachko)
செம்மணி வளையல் - அலெக்சாந்தா் குப்ரின்.jpg
தொப்பி ஏன் நகர்ந்தது.jpg
ருஷ்யச் சிறுகதைகள்.png
மக்ஸீம் காா்க்கி தோ்ந்தெடுத்த கதைகள்.png
தெலுங்கு.jpg
வங்கம்.jpg

ராதுகா பதிப்பகம் (Raduga, தமிழ் மொழியாக்கம்: 'வானவில்') சோவியத் ரஷ்யாவின் நூல் பதிப்பகம். மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது. ரஷ்ய செவ்வியல் இலக்கியம், சாகச மற்றும் சிறுவர் இலக்கிய நூல்களையும் அறிவியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம் சார்ந்த நூல்களையும் வெளியிட்டது. ரஷ்ய மொழியிலும், ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்கம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் நூல்கள் வெளியிட்டது.

துவக்கம்

பழைய ராதுகா பதிப்பகம்

ரஷ்யாவின் மாநில கவுன்சிலின் இதழாளர் குழு தலைவராக இருந்த ரஷ்ய இதழாளர் லெவ் மொய்ஸ்விச் கிளாச்கோ (Lev Moisevich Kliachko)(1873-1939) என்பவரால் 1922-ம் ஆண்டு ராதுகா பதிப்பகம் தொடங்கப்பட்டது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட் என்ற இடத்தில் போல்ஷோய் கோஸ்ட்னி டோவர் என்ற கட்டிடத்தில் இருந்து செயல்பட்டு வந்தது. முழுவதும் சிறுவர் இலக்கியத்துக்கான பதிப்பகமாக மட்டும் செயல்பட்டது.

கிளாச்கோ துவக்கத்டில் ராதுகா என்ற பெயரில் ஒரு சிறுவர் இதழை நடத்தவே எண்ணியிருந்தார் எனினும் சித்திரக் கதைகளை பதிப்பிக்கத் தொடங்கினார். ராதுகாவின் ஆரம்பகால நூல்களாக, ரஷ்யாவின் புகழ்பெற்ற குழந்தை இலக்கிய கவிஞர் கோர்னெ சுகோவ்ஸ்கி எழுதிய மொய்தோதர் என்ற மாய உயிரினத்தைப் பற்றிய பாடல் கதை, தரகனிஷ்ச்சே என்ற ராட்சத கரப்பான் பூச்சி பற்றிய பாடல் கதை ஆகியவை படங்களுடன் பதிப்பிக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றன. இவை ஐ.அனென்கோவ், செர்கெய் செகோனின் என்ற இரு திறன்மிக்க சித்திர வரைகலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன. கவிதை குறித்த முன்னறிவு ஏதும் இல்லாமலும், முதலீடு இன்றியும் கிளாச்கோவ் இவற்றை பதிப்பிக்க தொடங்கியபோதும் இவை பெரும் வெற்றி பெற்றன. 7000-க்கும் மேற்பட்ட பதிப்புகள் பெற்றன. பள்ளி செல்வதற்கு முந்தைய வயதின் குழந்தைகள் இதன் ரசிகர்களாயினர்.

மாக்சிம் கார்க்கியால் ரஷ்ய சிறுவர் இலக்கியத்தின் ஸ்தாபகர் என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் சாமுயில் மார்ஷாக்கின் (Samuil Marshak) மோரொழேனோ (Morozhenoe - ஐஸ் க்ரீம்), பொழர் (Pozhar - நெருப்பு), சிர்க் (Tsirk - சர்க்கஸ்) ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன. இவற்றின் உருவாக்கத்தில் ஓவியக் கலைஞர் விளாதிமிர் லேபதேவ் (Vladimir Lebedev) உதவினார். இவை சிறார் நூல் வடிவமைப்பில் புதிய தொடக்கமாக அமைந்தன. ரஷ்ய கலைக் கோட்பாட்டாளர் காசிமிர் மேல்விச் (Kazimir Malevich) உருவாக்கிய Suprematism என்ற எளிய ஜியோமிதி வடிவங்களை உள்ளடக்கிய கலை இயக்கத்தின் அடிப்படையில் நூல் "முழுமையான ஒருமை" கொண்ட ஒன்றாக இருப்பதை லேபதேவ் வலியுறுத்தினார்.

துவக்க நூல்களின் வெற்றியின் தொடர்ச்சியாக மேலும் பல ரஷ்ய எழுத்தாளர்களின் பங்களிப்புடன் ராதுகா பதிப்பகம் பெரும் வளர்ச்சி அடைந்தது. அக்காலத்திய திறன்மிக்க ரஷ்ய எழுத்தாளர்கள் அக்னையா பார்டோ (Agnaia Barto), விட்டலி பையன்கி (Vitaly Bianki), எவ்ஜெனி ஸ்சவார்ட்ஸ் (Evgeny Schwartz), போரிஸ் ழிட்கோவ் (Boris Zhitkov) உள்ளிட்ட பலரும் வரைகலைஞர்களும் ஓவியர்களுமான மிஸ்டிஸ்லாவ் டோபுழின்க்ஸ்கி (Mstislav Dobuzhinsky), விளாடிமிர் கொனஷேவிச் (Vladimir Konashevich), போரிஸ் குஸ்டோடியிவ் (Boris Kustodiev) உள்ளிட்ட பலரும் தங்கள் பங்களிப்பை அளித்தனர்.

சோவியத் ரஷ்யா உருவானபின் அதன் புதிய பொருளாதார கொள்கைகளுக்கு ஒத்திசைந்து ராதுகா பதிப்பகம் செயல்பட்டது. ஆரம்ப காலத்தில் கலை இலக்கிய சுதந்திரத்தை அனுமதித்த சோவியத் அரசில் பின்னர் 1925-க்குப் பிறகு ராதுகா பதிப்பகம் நெருக்கடிக்கு உள்ளானது. 'பாட்டாளி வர்க்க இலக்கிய விமர்சகர்கள்' என்று அழைக்கப்பட்ட பலரால் ராதுகா பதிப்பகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர்களுள் ஒருவரான அன்னா க்ரீன்பர்க் என்பவரால் அன்றுள்ள ரஷ்ய குழந்தைகள் வளரும் சூழலை ராதுகாவின் கவர்ச்சியான நூல் அமைப்புமுறை திட்டமிட்டு மறைப்பதாகவும், குழந்தைகள் சரியாக கிரகித்துக் கொள்ளத்தக்க வகையிலும் புதிய சோவியத்தின் அறிவியல் பூர்வமான நோக்கு கொண்டதாகவும் நூல்களின் உள்ளடக்கம் இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. லெனினின் மனைவி நெடெஸ்டா கிருப்ஸ்க்யாவாலும் (Nadezhda Krupskaya) ராதுகா பதிப்பகம் அதே விதமாக விமர்சிக்கப்பட்டது. இவற்றின் தொடர்ச்சியாக ராதுகா பதிப்பகம் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அத்துடன் ராதுகா அச்சகங்கங்களை அணுகுவது தடுக்கப்பட்டது. தனியார் நிறுவனம் என்ற வகையில் சொந்த அச்சகம் கொண்டிருப்பதும் அனுமதிக்கப்படவில்லை. ராதுகாவின் நூலாசிரியர்களும் கலைஞர்களும் சோவியத் அரசின் கலாச்சார அதிகார அமைப்புகளின் சினத்திற்கு அஞ்சி ராதுகாவிற்கு பணியாற்ற தயங்கினர். அத்துடன் குறித்த நேரத்தில் அவர்களுக்குக்கான ஊதியத்தை ராதுகா வழங்காதபோது அவர்கள் ரஷ்ய அரசின் பதிப்பகமான கோசிஸ்ட்டட்டிற்கு (Gosizdat) பணியாற்றத் துவங்கினர்.

ராதுகா பதிப்பகத்தின் நூல்கள் தரவீழ்ச்சி அடையத் தொடங்கின. 1927-ல் சிறுவர் இலக்கியத்துக்கான அரசின் கமிட்டி ராதுகா பதிப்பகத்தின் பெரும்பாலான நூல்களை "பூர்ஷ்வா கருத்தியலால் மாசடைந்தவை" எனக் கூறி மறுபதிப்பு செய்ய தடை செய்தது. கலை இலக்கியங்களில் அரசின் கொள்கைகளுக்கு ஏற்புடையவை மட்டுமே இருக்க முடியும் என்ற நிலையில், அரசு ஆதரவு பெற்ற பதிப்பகங்களின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் பல நெருக்கடிகளுக்கு உள்ளான ராதுகா பதிப்பகம் 1930-ல் தன் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. தன் குறுகிய ஆயுளில் 400-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை ராதுகா பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

ராதுகா பதிப்பகம்

ராதுகா பதிப்பகம் என்ற பெயரில் புதிய நிறுவனம் மாஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு 1973-ல் தொடங்கப்பட்டது. ரஷ்ய-அமெரிக்க பனிப்போர் காலகட்டத்தில் ரஷ்ய நூல்களை ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து பதிப்பித்தது. அவை ரஷ்யாவின் அண்டை நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ராதுகா பதிப்பக நூல்கள் மாஸ்கோவில் அச்சிடப்பட்டன. ராதுகா பதிப்பகம் இந்தியாவின் சில பதிப்பகங்களை இணை பதிப்பகங்களாக கொண்டு செயல்பட்டது. முந்தைய ராதுகாவைப் போல் முற்றிலும் சிறுவர் இலக்கியத்துக்கான பதிப்பகமாக அல்லாமல் சாகச மற்றும் சிறுவர் கதைகளுடன் செவ்வியல், அறிவியல் அடிப்படைகளை விளக்கும் நூல்கள், மருத்துவம், அரசியல், பொருளாதாரம், வரலாறு, இடதுசாரி கொள்கைகள் சார்ந்த நூல்களை ராதுகா பதிப்பகம் வெளியிட்டது. ஆங்கிலம் மற்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்கம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் நூல்களைப் பதிப்பித்தது.

நிறுத்தம்

1991-ல் சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்கு பிறகு ராதுகா பதிப்பகம் நிறுத்தப்பட்டது.

ராதுகா பதிப்பக தமிழ் நூல்கள்

நேர்த்தியான அச்சமைப்புடன் ஓவியங்களுடன் தரமான காகிதத்தில் உருவாக்கப்பட்டு மலிவு விலையில் விற்கப்பட்ட ராதுகா பதிப்பகத்தின் நூல்கள் தமிழில் கணிசமான வாசகப் பரப்பைக் கொண்டிருந்தன. லியோ தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி, மாக்சிம் கார்க்கி உள்ளிட்ட பல ரஷ்ய எழுத்தாளர்கள் ராதுகா பதிப்பகத்திற்கு முன்பே தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர்கள் என்ற போதும் மேலும் பல ரஷ்ய எழுத்தாளர்களை ராதுகா பதிப்பகம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தது. ரஷ்ய நூல்கள் ரா. கிருஷ்ணையா, நா. தர்மராஜன், பூ. சோமசுந்தரம் போன்றவர்களால் ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன.

ராதுகா பதிப்பக நூல்கள் சில
  • தொலைநோக்கி சொல்லும் கதை - பாவெல் குலுஷன்த்ஸேவ்
  • தான்யா - அலெக்சேய் அர்புஸ்வ்
  • செம்மணி வளையல் - அலெக்சாந்தா் குப்ரின்
  • செந்நிற கடற்பாய்கள் - அலெக்சாந்தர் கிரீன்
  • சோவியத் இலக்கியம் நேற்று இன்று நாளை - யூரி குஸ்மேன்கோ
  • துப்ரோவ்ஸ்கி - அலெக்சாந்தர் பூஷ்கின்
  • ருஷ்யச் சிறுகதைகள்
  • காரின் அழிவுக்கதிர் - அலெக்சேய் தல்ஸ்தோய்
  • குல்சாரி - சிங்கிஸ் ஐத்மாத்தவ்
  • மக்ஸீம் காா்க்கி தோ்ந்தெடுத்த கதைகள்
  • மாஸ்கோச் சண்டை (மாபெரும் தேசபக்தப் போாின் கதைகள் 1941-1945)
  • இரட்டையர்கள் - விளதீமிர் மிஹனோவ்ஸ்கி
  • ஸ்டாலின்கிராடு சண்டை
  • கன்னி நிலம் - மிகயீல் ஷோலகவ்
  • தொப்பி ஏன் நகர்ந்தது - நி. நோஸவ்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jul-2024, 20:26:35 IST