under review

சங்கர சோழன் உலா

From Tamil Wiki
Revision as of 03:44, 23 August 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சங்கரர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சங்கரர் (பெயர் பட்டியல்)

சங்கர சோழன் உலா (சங்கர ராசேந்திர சோழன் உலா) (பதிப்பு: 1977) மூன்றாம் குலோத்துங்கனின் தம்பியாகிய சங்கர சோழன் மீது பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

வெளியீடு

சங்கர சோழன் உலா எனப்படும் சங்கர ராசேந்ந்திர சோழன் உலா நூலை, உ.வே.சா. நூலகம், 1977-ல், கி.வா. ஜகந்நாதனின் ஆய்வுரையுடன் பதிப்பித்து வெளியிட்டது.

நூல் அமைப்பு

சங்கர சோழன் உலா உலா என்னும் சிற்றிலக்கிய வகைமையச் சார்ந்த நூல். நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து 389 கண்ணிகளைக் கொண்ட நூல் இடம்பெற்றது.

உள்ளடக்கம்

சங்கர சோழன் உலா, சோழர் குலத்தில் தோன்றிய மூன்றாம் குலோத்துங்கனின் இளைய சகோதரனான சங்கர சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப் பெற்றது. இந்த உலாவில் சங்கர சோழனுடைய முன்னோர்களின் வரலாறும், அவனுக்கு முன்பு ஆண்ட பிற்காலச் சோழர்களின் வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கரசோழனின் தந்தை சங்கமன். இவன் விக்கிரம சோழனுடைய பெண்வயிற்றுப் பேரனாகிய நெறியுடைப் பெருமாளாக இருக்கலாம் என்பது மு. அருணாசலத்தின் கருத்து.

காலைத்துயிலெழுந்த சங்கர சோழன், நித்ய கடமைகளுக்குப் பின் சிவபெருமானை வணங்குகிறான். பின் அரண்மனை வாயிலுக்கு வந்து பட்டத்து யானை மேல் ஏறி வீதி உலா வருகிறான்.

சோழ மன்னன் பெண்கள் வாழும் மாட வீதிக்கு வரும்போது அவனைக் கண்டு ஏழு பருவத்து மங்கையரும் காதல் கொள்கின்றனர். அவன்பால் காதல் கொண்டு உருகி, பேச முடியாமல் தடுமாறி, மேனி நிறம் முதலியவற்றை இழக்கிறார்கள். அதைப் பற்றி விரிவாகக் கூறுவதே சங்கர சோழன் உலா.

திருமால், இராமன், கண்ணன் போன்ற தெய்வங்களின் செயல்களைச் சங்கர சோழன்மேல் ஏற்றி(அச்செயல்களை அவன் செய்ததாக) பாடப்பட்டுள்ளது. சங்கர சோழனின் வீரம், புகழ், கொடை, சிவபக்தி, கருணை ஆகிய சங்கர சோழன் உலாவில் விளக்கப்பட்டுள்ளன.

பாடல் நடை

சங்கர ராசன் பெருமை

தோற்றிய சங்கர ராசன் சுரராசன்
போற்றிய கங்கா புரராசன் - சீற்றத்
துறைப்படு வேலால் ஓழித்தொழி யாது
சிறைப்படு வேந்தர் திறையாய் - நிறைத்த
அரும்பொற் குவாலும் அடித்தளை விட்ட
கரும்பொற் குவாலும் கஞலப் - பரம்பும்
கடைத்தலை மும்முரசம் கண்இரட்ட ஒற்றைக்
குடைத்தலை அண்டமெலாம் கோலத் - தொடைத்தேன்
பலகளிக்கும் திண்டோட் பருப்பதத் தேந்தி
உலகளிக்கும் நாளில் ஒருநாள்

பெதும்பை கூற்று

சினக்கும் மதகளிற்றுச் சென்னிவரச் சேவித்
தெனக்கும் இதுவருங்கொல் என்று - மனத்தில்
வளையாடும் கைத்தோகை வாஞ்சித்தா யத்து
விளையாடும் சோலைப்போம் வேலை - வளவன்
உபய குலோத்தமன் உத்துங்க துங்கன்
அபயன் அக ளங்கன் அபங்கன் - புவிவனிதை
காந்தன் அனந்த கலாகரன் தென் உறந்தை
வேந்தன் உலாப்போத மின்போந்து - சேந்தன்

மதிப்பீடு

ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட மூவருலா வரிசையில் சோழ மன்னர்களின் வரலாற்றைக் கூறும் நூலாக சங்கர சோழன் உலா நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Aug-2025, 08:08:14 IST