under review

கண்ணகனார்

From Tamil Wiki
Revision as of 03:44, 7 May 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

கண்ணகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்களில் முறையே ஒன்று புறநானூறிலும் நற்றிணையிலும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

கண்ணகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

கண்ணகனார் பாடிய பாடல்கள் புறநானூறில் 218 ஆம் பாடலாகவும் நற்றிணையில் 79 ஆம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. புறநானூறு 218 ஆம் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்த பின் அவனுக்காக வருந்தி தானும் வடக்கிருந்து உயிர்நீத்த பிசிராந்தையாரின் நட்பின் சிறப்பை கூறுவதாக பொதுவியல் திணையில் கையறுநிலை துறையில் அமைந்துள்ளது. நற்றிணை 79 ஆம் பாடல் பொருளீட்டும் பொருட்டு மீண்டும் பிரிந்து செல்ல ஆயத்தமாகி விட்ட தலைவனை கண்ட தலைவி தனது துயரை தோழியிடம் உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

புறநானூறு - 218
  • பொன், மணி, பவளம், முத்து, மாணிக்கம் ஆகிய ரத்தினங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டாலும் ஒரே அணிகலனாக அமைந்து அழகு கொள்ளும்.
  • சான்றோர்களும் வெவ்வேறு நிலத்தில் தோன்றினாலும் சான்றோர்களைச் சார்ந்திருப்பர். சான்றாண்மை அற்றவர்கள் தம்மைப் போல் இருப்பவர்களை சார்ந்திருப்பர் என்னும் கருத்து வெளிப்படுகிறது.
நற்றிணை - 79
  • வளம் மிக்க இல்லங்கள் கூரை வேய்ந்தவையாக இருக்கும். அந்த இல்லத்து பெண்கள் கைகளில் வளையல் அணிந்திருப்பர். முற்றத்து மணலில் கழங்கு காய்களை உருட்டி விளையாடுவர்.
  • ஈங்கை பூவின் மலர்கள் கற்பாறைகள் மேல் உதிர்ந்து கிடக்கும். அது கழங்கு காய்களை போல் உள்ளது.

பாடல் நடை

புறநானூறு - 218

  • திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

நற்றிணை - 79

  • திணை: பாலை கூற்று:பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது

 
'சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ,
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம்
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?'
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று-
அம்ம! வாழி, தோழி!-
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே?

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 12:52:15 IST