being created

சீவக சிந்தாமணி

From Tamil Wiki
Revision as of 21:27, 2 October 2022 by ASN (talk | contribs) (Para Added; Inter Link Created;)

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முக்கியமான நூலாகக் கருதப்படுவது சீவக சிந்தாமணி. இது ஒரு சமண சமயக் காப்பியம்.தமிழில் முதன் முதலில் விருத்தப்பாவில் பாடப்பட்ட காப்பியம் இதுதான். 'சிந்தாமணியே’ என்ற வரி இந்நூலில் இடம்பெறுவதாலும், சீவகனின் வாழ்க்கையைக் கூறுவதாலும் இதற்குச் 'சீவக சிந்தமணி’ என்ற பெயர் வந்தது. 'மணநூல்’ என்ற பெயரும் இதற்கு உண்டு.

காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் நூலில் கூறப்பட்டுள்ள இலக்கணம் முழுவதுமாகப் பின்பற்றப்பட்ட முதல் தமிழ்க் காப்பியம் சீவகசிந்தாமணிதான். இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்.

பதிப்பு, வெளியீடு

சீவக சிந்தாமணியின் தெளிவான பதிப்பை பல்வேறு ஆராய்ச்சி மற்றும் குறிப்புரைகளுடன் உ.வே.சாமிநாதையர் வெளியிட்டார்.

சீவக சிந்தாமணி பிற பெயர்கள்

நூற்பொருளான அறம், பொருள், இன்பம், வீடுபேறு பற்றி இந்நூல் பேசுவதால் இதனை, ‘முடிபொருள் தொடர்நிலை’ என உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். சீவகன், குணமாலை முதல் இலக்கணை ஈறாக எட்டுப் பெண்களை மணந்ததாலும், மண்மகள் மற்றும் முக்தி மகள் ஆகியோரை அடைந்ததாலும் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு.

காப்பியத்தின் தன்மை

ஐம்பெருங்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன தமிழ் மண்ணில் தோன்றிய பெண் மக்களைக் காப்பியத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டிருக்கின்றன. ஆனால், சீவக சிந்தாமணி வடநாட்டு வேந்தனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டுள்ளது. காப்பியக் கதை, கதை மாந்தர்கள், கதைக்களம் முதலிய யாவையும் தமிழ் மண்ணைச் சேர்ந்தவை அல்ல.

வடநாட்டார் மரபு சார்ந்தது என்றாலும் காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர் தமிழர்; தமிழ் நாட்டைச் சார்ந்தவர். தம் சமயச் சார்பு காரணமாக தன் சமயம் சார்ந்த வடமொழிக் கதையை எடுத்துக் கொண்டுள்ளார். கதைப் போக்கை மாற்றாமல், அதே நேரத்தில் தமிழர் மரபு பிறழாமல் காப்பியத்தைப் புனைந்துள்ளார். இக்காப்பியம், சோழர் காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததை பெரிய புராணம் மூலம் அறிய முடிகிறது. இதன் இலக்கியச் சிறப்பும், தமிழ் இலக்கிய மரபும் புலவர்கள் பலராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும்.

காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர்

சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர், சமண சமயம் சார்ந்தவர். சோழர் குலத்தில் பிறந்தவர். திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர், திருத்தக்க மகாமுனிகள், தேவர் என்ற சிறப்புப் பெயர்களால் சிறப்பிக்கப்பட்டவர். இவர், அகத்தியம், தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான தமிழ் நூல்களைக் கற்றறிந்தவர். வடமொழிyஇல் தேர்ந்தவர். சமண சமய நூல்களை முழுமையாகக் கற்றவர்.

இவர் மதுரையில் தன் ஆசிரியருடன் வாழ்ந்து வந்தார். சங்கப் புலவர்களுடன் ஏற்பட்ட விவாதம் ஒன்றில், புலவர் ஒருவர் ‘சமணர்களுக்குத் துறவை மட்டுமே பாடத் தெரியும்; காமச் சுவைபட இலக்கியம் படைக்க அவர்கள் அறியார்” என்று இழித்துப் பேசினார். அதற்கு திருத்தக்க தேவர் ‘சமணர்கள் காமத்தை வெறுத்தனரே யன்றிப் பாடத் தெரியாதவர்கள் அல்லர்’ என்றார். ‘அப்படி என்றால் காமச் சுவைபட ஒரு நூல் இயற்றுக’ என்றார் புலவர். இதனைத் தேவர் தன் ஆசிரியரிடம் கூற, அவர் தம் மாணாக்கரின் புலமைத் திறத்தை அனைவருக்கும் உணர்த்த, எதிரே ஓடிய நரி ஒன்றைக் காட்டி ‘இது பற்றிப் பாடுக’ என்றார். அவ்வாறே நரிவிருத்தம் என்ற நூலைப் பாடினார் திருத்தக்க தேவர்.

தொடர்ந்து ஆசிரியரின் வேண்டுகோளின்படி சீவகனின் வரலற்றை ‘சீவக சிந்தாமணி’ என்ற நூலாக இயற்றினார். ஆனால், அதில் காமச்சுவை மிக அதிகமாக இருந்தது. சிற்றின்ப அனுபவம் இல்லாத ஒருவரால் இந்த அளவுக்குச் சிற்றின்பத்தைப் பாடமுடியாது என்று புலவர்கள் கருதினர். திருத்தக்க தேவரின் துறவு நெறியின் மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதனை அறிந்த திருத்தக்கத் தேவர், “நான் உண்மையான துறவி என்றால் இந்தப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு என்னைச் சுடாதிருக்கட்டும்” என்று கூறி, பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலைத் தன் கைகளில் தாங்கினார். அதனால் அவருக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படவில்லை. தேவரின் பெருமையை அறிந்த பிற புலவர்கள் அவரிடம் மன்னிப்பு வேண்டினர். திருத்தக்க தேவரும் அவர்களை மன்னித்தார்.

சீவக சிந்தாமணியின் காலம்

சீவக சிந்தாமணி கம்பராமாயணம், பெரிய புராணம் முதலிய நூல்களுக்கு முற்பட்டது. அந்த வகையில் இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. இக்காப்பியத்தின் மொழிநடை, விருத்தப்பா அமைப்பு ஆகியவை கொண்டு, இது பெருங்கதைக் காப்பியத்திற்குப் பின்னர் எழுந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியன நிலைமண்டில ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டன. முதன்முதலாக விருத்தப்பாவில் அமைந்த காப்பியம் சீவக சிந்தாமணிதான். விருத்தப்பாவின் தொடக்கம் சிந்தாமணியே. இதன் செல்வாக்கால் சூளாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றவை விருத்தப்பாவில் இயற்றப்பட்டன.

சீவக காப்பியத்தின் மூலம்

இந்திய மொழிகள் அனைத்திலுமே தொடக்க காலக் காப்பியங்கள் வடமொழிச் சார்புடனேயே அமைந்திருக்கின்றன. சீவகனின் வரலாற்றைக் கூறும் சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஜீவந்தர நாடகம், ஜீவந்தர சம்பு என்ற நான்கு வடமொழி நூல்க ளை அடிப்படையாக வைத்தே சீவகசிந்தாமணி இயற்றப்பட்டுள்ளது. சமண சமயத்தின் வேதாகமமாகக் கருதப்படும் ஸ்ரீபுராணத்திலும், மகாபுராணத்திலும் சீவகனின் கதை இடம் பெற்றுள்ளது.

சீவக சிந்தாமணியின் கதை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.