பிரசஸ்தபாதர்

From Tamil Wiki

பிரசஸ்தபாதர் ( प्रशस्तपाद)( பொயு 6) இந்திய தத்துவயியலாள. வைசேஷிகம், நியாயம் ஆகியவற்றை ஒன்றென இணைக்கும் புகழ்பெற்ற பதார்த்ததர்மசம்கிரகம் என்னும் உரைநூலின் ஆசிரியர்.

ஆசிரியர்

பிரசஸ்தபாதர் என்னும் சொல்லுக்கு புகழுக்குரிய அறிஞர் என்று பொருள். பிரசஸ்தபாதரின் காலகட்டம் தோராயமாக பொயு ஆறாம் நூற்றாண்டு என்று ஊகிக்கப்படுகிறது.

நூல்

பிரசஸ்தபாதர் வைசேஷிக தரிசனத்திற்கு கணாதர் எழுதிய மூலநூலான வைசேஷிக சூத்ரத்துக்கு விளக்கவுரையாக பதார்த்த தர்ம சம்கிரகம் (பொருண்மை இயல்புகளின் தொகுப்பு) என்னும் நூலை இயற்றினார். இது பிரசஸ்தபாத பாஷ்யம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நூல் மூலநூலுக்கான வெறும் உரை அல்ல, ஒரு சுதந்திர விரிவாக்கம்.

உரைவிளக்கங்கள்

பிரசஸ்தபாதரின் பதார்த்த தர்ம சங்கிரகத்தின் மீது ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக விவாதங்களும் விரிவாக்கங்களும் நடைபெற்றுள்ளன.

  • வியோமசேகரரின் (வியோமசிவன்) வியோமவாதி
  • ஸ்ரீதரரின் நியாயகுண்டலி
  • உதயணரின் கிரணாவளி
  • ஸ்ரீவத்ஸரின் லீலாவதி

ஆகியவை பிரசஸ்தபாதரின் நூலின் மீதான விளக்கவுரைகள்

மொழியாக்கம்

கங்காநாத் ஜா பதார்த்த தர்ம சம்கிரகம் நூலை ஆங்கிலத்துக்கு 1916 ல் மொழியாக்கம் செய்தார்.

பங்களிப்பு

  • வைசேஷிக தத்துவம் பதினேழு குணங்களை (பொருண்மையியல்பு) பொருட்களுக்கு பட்டியலிடுகிறது. குருத்வம் (எடை ) திரவத (நீர்மை) ஸ்னேகம் (ஒட்டிக்கொள்ளும்தன்மை) தர்மம் (தனியியல்பு) அதர்மம் (எதிரியல்பு) ஆகிய குணங்கள் பிரசஸ்தபாதரால் சேர்க்கப்பட்டன.
  • கணாதர் பொருட்பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு மூலகாரணமாக இறைச்சக்தியைச் சொல்லவில்லை. பிரசஸ்தபாதர் இறைச்சக்தி (ஈஸ்வரன்) படைப்புக்கு மூலகாரணம் என்கிறார்.
  • பிரசஸ்தபாதர் தூயஅகவய அறிதல் (ஆலோசனா) ஒன்றை கூடுதலாக முன்வைக்கிறார். பொருட்கள் பலவாறாகப் பிரிந்து அறியக்கிடைக்கின்றன. ஆனால் தனிப்பொருட்களாகப் பிரிவுபடாத ஒட்டுமொத்தமான பொருள் ஒன்றை மானுடன் தன் அகவய அறிதலால் உணரமுடியும். அதுவே பிளவற்ற பொருள் (அவிபக்தம்). அதை உணர்ந்தால் பொருள் என்பதன் முதன்மை இயலை (ஸ்வரூபம்) அறியமுடியும். ஒட்டுமொத்தப்பொருளை உணர்பவனே உண்மையில் பொருள் என்றால் என்ன என்று உணர்கிறான்
  • நியாயவியலுக்கு உரை எழுதிய திக்நாகர் பொருள்வய உலகுமேல் ஓர் அறியும்தன்னிலை தன்னுள் இருந்து உருவாக்கிக்கொள்ளும் அறிதல் (ஆலோசனா) என்பது முற்றிலும் அகவயமானது என்றும், அது பொருளின் இயல்பை புறவயமாக அறிய உதவாது என்றும் மறுக்கிறார். அதை மறுக்கும் பிரசஸ்தபாதர் அகவயமான அந்த அறிதலானது புறவயமான பொருண்மை உலகை சந்தித்து உருவாக்கிக்கொள்ளும் அறிதலானது வெறும் கற்பனை அல்ல என்றும் அது திட்டவட்டமான அறிதலே என்றும் வாதிடுகிறார். பொருள் என்பதே இப்படி அதன்மேல் ஏற்றப்பட்ட குணங்களின் தொகுப்புதான். பொருளின் இருப்பு என்பது மனிதனைப்பொறுத்தவரை குணங்களால் ஆனது மட்டுமே. பொருளின் பிரபஞ்ச இருப்பு, நம் அறிதலில் அதன் இருப்பு இரண்டும் வேறு வேறு.
  • பிரசஸ்தபாதர் நிலம்,நீர், காற்று, தீ ஆகியவை நான்கும் அணுக்களாலானவை, அவை ஒன்றுடனொன்று கலந்து பிரபஞ்ச உருவாக்கத்தை நிகழ்த்துகின்றன என்றார். ஆனால் வானம் (வெளி) அணுக்களாலானது அல்ல, ஆகவே அது பிறவற்றுடன் இணைவதில்லை. அணுக்களின் இணைவு மற்றும் பிரிவால் பிரபஞ்சம் உருவாகி நிகழ்கிறது, அதற்கு பிரபஞ்சத்துக்கு அதீதமான ஒரு பிரக்ஞை (அல்லது ஆணை) காரணமாகிறது. அணுக்கள் தங்கள் உள்ளியல்புகளாலும், செயல்தொடர்ச்சியாலும் இணைந்தும் பிரிந்தும் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன என்ற வைசேஷிகத்தின் பழைய பார்வையுடன் முரண்படுகிறார்.

குற்றச்சாட்டுகள்

பிரசஸ்தபாதரின் உரை வைசேஷிகசூத்ரங்களை திரித்து மறைத்துவிட்டது என பௌத்த தர்க்கவியலை ஆராய்ந்த ரிச்சர்ட் கார்பே குறிப்பிடுகிறார். இரண்டு மையத்திரிபுகள் நிகழ்ந்தன. ஒன்று வைசேஷிகத்துக்குள் இறை உள்ளே வந்தது. இரண்டு, அகவயமான தூய பிரக்ஞை பிரபஞ்சத்தின் பொருட்களை ஒட்டுமொத்தமாக அறிய உதவும் என்று நிறுவப்பட்டது. பிற்கால உரையாசிரியர்கள் பிரசஸ்தபாதரின் உரையை ஒட்டியே வைசேஷிகத்தை அணுகினர்.

உசாத்துணை