first review completed

நாஞ்சில் நாடன்

From Tamil Wiki
Revision as of 12:20, 30 April 2022 by Jeyamohan (talk | contribs)
Nanjil nadan3.jpg

நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947) நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டாரவழக்கும் கலந்த நாஞ்சில்நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

பிறப்பு, கல்வி

Nanjil.jpg

க. சுப்பிரமணியம் (ஜி. சுப்பிரமணியப் பிள்ளை) என்னும் இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் டிசம்பர் 31 ,1947 அன்று கன்னியாகுமரி மாவட்டம் வீரநாராயணமங்கலம் என்னும் ஊரில் கணபதியாப்பிள்ளை- சரஸ்வதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். தந்தை ஓரேர் உழவர் என்று நாஞ்சில்நாடன் ஒரு பேட்டியில் சொல்கிறார்(ஓரேருழவர் என்பது ஒரு சங்ககால கவிஞரின் பெயர். ஒரு மாட்டை மட்டும் கட்டி உழும் விவசாயி என்று பொருள்) கணபதியாபிள்ளை நாகர்கோயில் வடிவீஸ்வரம் பகுதியில் வாழ்ந்த பிராமணர்களின் நிலங்களை குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்துவந்தார்.

நாஞ்சில் நாடன் உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரி, ஐந்து சகோதரர்கள். இவரே மூத்தவர். நாஞ்சில்நாடன் இளமையிலேயே பிள்ளைகளில்லாத அவருடைய சித்திக்கு தத்துக்கொடுக்கப்பட்டு வடிவீஸ்வரத்தில் அவர் இல்லத்தில் வளர்ந்தார். சித்திக்கு குழந்தைகள் பிறந்ததும் மீண்டும் வீரநாராயணமங்கலம் வந்தார். சித்தியையும் தன் அன்னையாகவும் சித்தியின் மகன்களையும் மகள்களையும் தன் நேர்க்குடும்பமாகவும் எப்போதும் கருதி வந்திருக்கிறார்.

நாஞ்சில் நாடன் வீரநாராயணமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், இறச்சக்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையும் படித்தார். தாழக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். நாகர்கோவிலில் உள்ள தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் (S.T. Hindu College) இளங்கலை (பி.எஸ்.சி. கணிதம்) பட்டம் பெற்றார். இங்கே இவருக்கு முனைவர் அ.கா. பெருமாள், பேராசிரியர் வேதசகாயகுமார் இருவரும் கல்லூரித் தோழர்களாக இருந்தனர். நாஞ்சில் நாடன் தன் முதுகலைப் பட்டத்தை (எம்.எஸ்.சி. கணிதம்) திருவனந்தபுரம் மகாத்மா காந்தி மெமோரியல் கல்லூரியில் பெற்றார். நாஞ்சில் நாடன் முதுகலை மாணவராக திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவரது கல்லூரிக்கு நேர் எதிரே உள்ள மார் இராணிய கத்தோலிக்கக் கல்லூரியில் நகுலன் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

தனி வாழ்க்கை

Nanjil-nadan1.jpg

நாஞ்சில்நாடன் கணிதத்தில் முதுகலைப் பட்டம்பெற்றும் வேலை கிடைக்காமல் இரண்டு ஆண்டுகள் விவசாயத்தில் தந்தைக்கு உதவியாக இருந்தார். அவர்களுக்கு நிலங்களை குத்தகைக்கு விட்டிருந்த நிலஉடைமையாளர் மும்பையில் இருந்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் மும்பைக்குச் சென்று. மும்பை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொகுப்பூதியத்திலும், தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணி செய்தார். 1973-ஆம் ஆண்டு நெசவு இயந்திரங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டபிள்யூ. ஹெச். ப்ராடி (W.H. Brady) நிறுவனத்தில் உதவியாளர் வேலையில் சேர்ந்து விற்பனையாளராகி விற்பனை மேலாளராக உயர்ந்தார்.

பிராடி நிறுவனத்தின் விற்பனைத்துறை துணைமேலாளராக 1989 ல் கோவைக்கு மாற்றலாகி வந்தார். தென்னகத்தின் உள்ள நான்கு மாநிலங்கள் அடங்கிய சரகத்தின் மேலாளராகப் பணியாற்றி டிசம்பர் 31, 2005 அன்று ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் சிலகாலம் நெசவு இயந்திரங்களின் உதிரிப்பகுதிகளுக்கு விற்பனை முகவராக நாஞ்சில் ஏஜென்ஸீஸ் என்னும் நிறுவனத்தை தனியாக நடத்தி வந்தார். இப்போது கோவையில் வாழ்ந்து வருகிறார்

1979-ல் திருவனந்தபுரத்தில் சந்தியாவுடன் (வீட்டுப்பெயர் பகவதி) திருமணம் நடந்தது. மகள் சங்கீதா மயக்கவியல் துறை மருத்துவர் (MD - Anaesthetist), அவர் கணவர் விவேகானந்தன் எலும்பு முறிவு மருத்துவர். நாஞ்சில்நாடனின் மகன் கணேஷ் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளர், அவர் மனைவி ஶ்ரீலேகா. கணேஷ் கனடாவில் பணியாற்றுகிறார்

இலக்கிய வாழ்க்கை

Nanjil-nadan4.jpg

நாஞ்சில் நாட்டில் மனிதர்கள், விவசாய நிலங்கள், நதிகள், கிராம வாழ்க்கை சூழ வாழ்ந்த நாஞ்சில் நாடனுக்கு பம்பாயில் தனிமையைப் போக்க பம்பாய் தமிழ் சங்கம் உதவியது. அங்குள்ள நூலகத்தில் புத்தகம் வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டார். பம்பாய் தமிழ்ச்சங்க மலரில் அதிகாரபூர்வமற்ற ஆசிரியராக பணியாற்றியபோது அதில் எழுதத்தொடங்கினார். நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் மாத இதழில் ஆகஸ்ட்,1975-ல் வெளிவந்த அவரது முதல் சிறுகதை “விரதம்”. அச்சிறுகதை ப. லட்சுமணச் செட்டியாரும், ப. சிதம்பரமும் சென்னையில் நடத்தி வந்த இலக்கிய சிந்தனை என்னும் அமைப்பின் சிறந்த சிறுகதை பரிசைப் பெற்றது. அகமதாபாத் சென்று கொண்டிருந்த பா. லட்சுமணச் செட்டியார் பம்பாய் வந்து நாஞ்சில் நாடனை நேரில் சந்தித்து பரிசுத் தொகையான ரூ 50/- ஐ வழங்கினார்.

கவிஞர் கலைக்கூத்தனும், எழுத்தாளர் வண்ணதாசனும் இவரை நாவல் எழுதும் படி தூண்டினர். அவரது முதல் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' 1977-ஆம் ஆண்டு அன்னம் பதிப்பக வெளியீடாக வந்தது. ஆ. மாதவன், நகுலன், நீல பத்மநாபன் ஆகியோருடன் தொடர்ச்சியாக நட்பிலும் உரையாடலிலும் இருந்தார். நாஞ்சில்நாடனின் என்பிலதனை வெயில்காயும் என்னும் நாவல் நகுலனால் செம்மை செய்யப்பட்டு வெளிவந்தது. தலைகீழ் விகிதங்கள் நாவலுக்கு சுந்தர ராமசாமி எழுதிய விமர்சனம் இலக்கியத்தை மேலும் தீவிரமாக முன்னெடுக்க உதவியது என்று பதிவுசெய்திருக்கிறார்

மரபிலக்கியம்

நாஞ்சில்நாடன் ஏழாம் வகுப்பில் எண்கோடி செட்டியார், உயர்நிலைப்பள்ளியில் மகாதேவன் பிள்ளை, கல்லூரியில் பேராசிரியர் அவ்வையார் அழகப்பன் அம்மையார், கே.சி. தாணு, புலவர் அரசு ஆறுமுகம், டாக்டர் எஸ். சுப்பிரமணியம் போன்ற ஆசிரியர்களிடமிருந்து மரபிலக்கிய ஆர்வம் கொண்டார். ராய சொக்கலிங்கம் அவர்களின் மாணவரும் கம்பராமாயண அறிஞருமான கல்லிடைக்குறிச்சி ர.பத்மநாபன் மும்பையில் இருந்தபோது அவரிடம் கம்பராமாயணப் பாடம் கேட்டார். வாழ்நாள் முழுக்க நீளும் ஒரு கல்வியாக கம்பராமாயண ஆய்வை மேற்கொண்ட நாஞ்சில்நாடன் கம்பனின் அம்புறாத்தூளி உட்பட கம்பராமாயண ஆய்வும் ரசனையுமாக பலநூல்களை எழுதியிருக்கிறார். சிற்றிலக்கியங்களிலும் ஆர்வமும் பயிற்சியும் கொண்டவர் விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பின் சார்பில் ஊட்டி குரு நித்யா குருகுலத்தில் நடத்தப்படும் காவிய முகாமில் 2012-ஆம் ஆண்டு முதல் கம்ப ராமாயண வகுப்பு எடுக்கிறார். கனடா இலக்கிய அமைப்பு சார்பில் கொரோனா காலத்தில் மாதத்தின் இரண்டாவது சனியன்று அவர் எடுக்கத் தொடங்கிய கம்பராமாயண வகுப்பு தொடர்கிறது.

நாட்டாரியல்

நாஞ்சில் நாடனை எழுத்தாளர் சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழுக்காகக் கட்டுரை எழுதும் படி கேட்டுக் கொண்டார். காலச்சுவடு சார்பில் நாகர்கோவிலில் நடந்த கருத்தரங்கில் “நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கையில் காலம் நிகழ்த்திய மாற்றங்கள்” என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் பேசினார். இவ்வுரை கட்டுரை வடிவில் காலச்சுவடு இதழில் வெளிவந்தது. பின்னர் புத்தகமாக ”நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை காலம் நிகழ்த்திய மாற்றங்கள்” என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்தது. இன வரைவியல் எழுத்திற்கு தமிழில் இந்நாவல் ஒரு முன்னோடி படைப்பு.

சொற்பொழிவாளர்

நாஞ்சில்நாடன் கம்பராமாயணம் மற்றும் மரபிலக்கியம் சார்ந்து சொற்பொழிவுகள் ஆற்றுபவராக இன்று அறியப்படுகிறார்.

வாழ்க்கை வரலாறுகள், மலர்கள்

  • நாஞ்சில்நாடன் பற்றி ஜெயமோகன் எழுதிய நூல் ‘தாடகைமலை அடிவாரத்தில் ஒருவர்’
  • நாஞ்சில்நாடன் சிறப்பிதழ் பதாகை இணைய இதழ் ( இணைப்பு)

இலக்கிய இடம்

Nanjil-nadan5.jpg

எழுத்தாளர் ஜெயமோகன் நாஞ்சில் நாடனின் புனைவு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “நாஞ்சில்நாடனின் கதைகளில் மிகநம்பகமான ஒரு புறச்சூழல் இருப்பதை நீங்கள் காணலாம். அது நாஞ்சில்நாடாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி, கூர்மையான தகவல்களுடன்கூடிய சித்தரிப்பு நம்மை அந்தச்சூழலை மிகத்தெளிவாக கண்முன் என பார்க்கவைக்கிறது.  ‘அம்பாரிமேல் ஓர் ஆடு’ என்ற ஆரம்பகால கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். மும்பையின் ஓர் உயர்தர சபாவின் மிதப்பான சூழலை எந்த முயற்சியுமில்லாமல் அவர் உருவாக்கி அளிக்கிறார்.

அவர் எழுதிக்காட்டிய நாஞ்சில்நாடு நாஞ்சில்மண்ணையே ஒருமுறைகூட பார்க்காதவர்களும் கற்பனையில் வந்து வாழ்ந்து சென்ற ஓர் இடமாக உள்ளது. ஓடையில் துணிதுவைக்கும் கல்லில் ஒட்டியிருக்கும் சிவப்பு சோப்பு ஏன் சொல்லப்படவேண்டும்? ஒரு கணத்தில் நம் கற்பனையை சீண்டி அது அந்த ஓடையையே நம் கண்முன் காட்டிவிடுகிறது

நாஞ்சில் நாடன் நியூயார்க்கில்

நாஞ்சில் நாடனின் கதைமாந்தர் அந்த நாஞ்சில்நாட்டிலேயே இயல்பாகக் காணக்கிடைப்பவர்கள். இயல்பான அற்பத்தனமும், அன்பும், பதற்றங்களும் கொண்டவர்கள். அசாதாரண கதாபாத்திரமான ‘பிராந்து’ முதல் சர்வசாதாரணமான கதாபாத்திரமான திரவியம் [தலைகீழ்விகிதங்கள்] வரை. அவர்கள் என்ன எண்ணமுடியுமோ அதையே எண்ணுகிறார்கள். அவர்கள் எதைப்பேசுவார்களோ அதையே பேசுகிறார்கள். அவர்கள் இயல்பாக எப்படி வளர்ச்சியடையமுடியுமோ அப்படி வளர்ச்சி அடைகிறார்கள்

அந்த நம்பகமான சூழலில் நம்பகமான மனிதர்கள் அடையும் உணர்ச்சிகளே அவர் படைப்பில் வருகின்றன. மிகப்பெரும்பாலும் அவர் உணர்ச்சிகளை நேரடியாகக் காட்டுவதில்லை.வாசகனுக்கு உணர்த்திவிட்டுச் செல்கிறார்  கடும்பசியுடன் இரு மகள்களின் வீட்டுக்குச் செல்கிறார் ஒருவர். அவர் சாப்பிட்டுவிட்டு வந்தார் என நினைத்து இருவருமே சாப்பிட அழைக்கவில்லை. பசியுடன் மீண்டும் தன் வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால் அவருடைய உணர்ச்சிகளை அவர் சொல்வதில்லை, வாசகனுக்கே விட்டுவிடுகிறார்.

நாஞ்சில் நாடனின் படைப்புலகில் மிகைநாடகம் இல்லை. மெல்லுணர்ச்சிகளும் இல்லை. உணர்ச்சிநிலைகள் உள்ளன. சாலப்பரிந்து போன்ற சிறுகதைகள் உதாரணம். ஆனால் அவருடைய மிகச்சிறந்த கதைகள் உணர்வெழுச்சித்தன்மை கொண்டவை.  ‘யாம் உண்பேம்’ ஓர் உதாரணம். அப்படிப்பட்ட ஐம்பது கதைகளையாவது சுட்டமுடியும். அங்கே வாசகன் உணர்வது துக்கம்போன்ற உணர்ச்சிகளை அல்ல. ஒரு பெரிய அறத்தை அல்லது வாழ்க்கைமுழுமையை தரிசித்ததன் சிலிர்ப்பை. அவற்றை எழுதியமையால்தான் நாஞ்சில்நாடன் தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவர். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி வரிசையில் வைக்கத்தக்கவர்.

அவருடைய பல கதைகளில் நம்பகமான சூழல், நம்பகமான கதைமாந்தர், உலகியல்சிக்கல் ஒன்று, அதைப்பற்றிய அவருடைய பார்வை ஆகியவை இருக்கும். இவை அவருடைய சாதாரணமான கதைகள். அவருடைய உணர்ச்சிகரமான கதைகளில் நம்பகமான உணர்வெழுச்சி பதிவாகியிருக்கும். அவருடைய சிறந்த கதைகளில் ஒரு மகத்தான மானுடவிழுமியம் வெளிப்பட்டிருக்கும்.” என்கிறார்.

விருதுகள்

  • 1975 ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த சிறுகதை விரதம், இலக்கிய சிந்தனை, சென்னை
  • 1977 ஜீலை மாதத்தின் சிறந்த சிறுகதை வாய் கசந்தது, இலக்கிய சிந்தனை, சென்னை
  • 1979 நவம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதை முரண்டு, இலக்கிய சிந்தனை, சென்னை
  • 1986-ஆம் ஆண்டின் சிறந்த நாவல் மிதவை, பம்பாய் தமிழ் எழுத்தாளர் சங்கம், பம்பாய்
  • 1986-ஆம் ஆண்டின் சிறந்த நாவல் மிதவை, தெய்வத் தமிழ்மன்றம் பரிசு, மயிலாடுதுறை
  • 1993-ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான (சதுரங்கக்குதிரை) தமிழ் வளர்ச்சித்துறை தமிழக அரசின் விருது, சென்னை
  • 1993 - 1994-ஆம் ஆண்டு சிறந்த நாவல் சதுரங்கக்குதிரை, கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை, கோவை
  • 1993-ன் சிறந்த நாவல் சதுரங்கக்குதிரை, புதிய பார்வை - நீலமலைத் தமிழ்ச்சங்கம் பரிசு, சென்னை
  • 1994-ன் சிறந்த சிறுகதைத் தொகுதி பேய்க்கொட்டு, லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, கோவை
  • 1994-ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதி பேய்க்கொட்டு, திருப்பூர் தமிழ்ச் சங்கம்
  • 1995 தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் சிறுகதை வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, கல்கத்தா தமிழ்மன்றம் பரிசு, கல்கத்தா
  • 1999 வாழ்நாள் இலக்கியச் சாதனை விருது, ஆண்டு, அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு
  • 2007 நதியின் பிழைப்பன்று நறும்புனல் இன்மை, உலகத் தமிழாசிரியர்கள் நினைவுப் பரிசு
  • தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா
  • 2009 - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக இயற்தமிழ் கலைஞர் கலைமாமணி விருது.
  • 2009 - கண்ணதாசன் விருது, கண்ணதாசன் கழகம், கோவை
  • 2010-ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது, சூடிய பூ சூடற்க சிறுகதைத் தொகுதி

நூல்கள்

நாவல்கள்
  • தலைகீழ் விகிதங்கள் (1977, 1983, 1996, 2001, 2008, காலச்சுவடு பதிப்பகம்)
  • என்பிலதனை வெயில் காயும் (1979, 1995, 2007, புஸ்தக டிஜிட்டல் மீடியா)
  • மாமிசப்படைப்பு (1981, 1999, 2006, விஜயா பதிப்பகம்)
  • மிதவை (1986, 2002, 2008, விஜயா பதிப்பகம், நற்றிணை பதிப்பகம்)
  • சதுரங்கக் குதிரை (1993, 1995, 2006, விஜயா பதிப்பகம்)
  • எட்டுத்திக்கும் மதயானை (1998, 1999, 2008)
சிறுகதை தொகுதி
  • தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் (1981)
  • வாக்குப் பொறுக்கிகள் (1985)
  • உப்பு (1990)
  • பேய்க் கொட்டு (1994, 1996)
  • பிராந்து (2002)
  • சூடிய பூ சூடற்க (2007)
  • கான் சாகிப் (2010)
  • தொல்குடி
  • கரங்கு
  • அம்மை பார்த்திருக்கிறாள்
கவிதை தொகுதி
  • மண்ணுள்ளிப் பாம்பு (2001)
  • பச்சை நாயகி (2010)
  • வழுக்குப்பாறை
  • அச்சமேன் மானுடவா
கட்டுரை தொகுதி
  • நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (2003, 2004, 2008 - காலச்சுவடு பதிப்பகம்)
  • நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2003, 2008)
  • நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை (2006)
  • காவலன் காவான் எனின் (2008)
  • தீதும் நன்றும் (2009)
  • திகம்பரம் (2010)
  • கம்பனின் அம்பறாத்துணி (2014)

உசாத்துணை

வெளி இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.