under review

துயிலெடை நிலை

From Tamil Wiki
Revision as of 16:07, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

துயிலெடை நிலை (பள்ளியெழுச்சி ) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை[1]. தொல்காப்பியம் உறங்கும் அரசனின் புகழ் ஓங்க வேண்டும் என வாழ்த்தி சூதர்கள் பாடுவது

'தாவில் நல்இசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் (தொல்.பொருள்.புறம்-நூ:15)

என்று துயிலெடை நிலையை பாடாண் திணையின் ஒரு துறையாக வகுக்கிறது.

"உறக்கத்திலிருப்பவர்கள் துயிலெழும்போது நல்ல சொற்கள் காதில் விழுமேயானால், மனம், பொறி, புலன் ஆகியவை நற்பணி செய்ய இச்சொற்கள் தூண்டுகோலாக அமையும். அதனாலேயே நம் முன்னேர் சூதர்' என்ற பெயருடைய தனிக்குழுவை ஏற்பாடு செய்து, அரசனைத் துயில் எழுப்ப அவர்களைப் பயன்படுத்தினர். அரசருடைய நற்செயல்கள், அவர்கள் வெற்றி ஆகியவற்றைப்பற்றி அந்த விடியற்காலை நேரத்தில் சூதர்கள் பாடினர். அதனைக் கேட்டுக் கொண்டே எழுகின்ற மன்னர்தம் மனத்தில் நல்ல எண்ணம் தோன்றும். ஆதலால், இதனைப் பழமையான தொல்காப்பியம் 'சூதர் ஏத்திய துயிலெடை நிலை’ (தொல்-பொருள் 88) என்று குறிப்பிடுகிறது" என்று அ.ச. ஞானசம்பந்தன் 'திருவாசகம்-சில சிந்தனைகள்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

பக்தி இயக்கக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்பத் திருப்பள்ளியெழுச்சி பாடும் வழக்கம் ஏற்பட்டபோது அது ஒரு தனித்த இலக்கிய வகைமையாக உருவானது. தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும், மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியும் இதன் முன்னோடிகள். திருப்பள்ளியெழுச்சி இறைவனைக் குறித்துப் பாடப்படுவதால் அடியவர்கள் பாடுவதாக அமைக்கப்பட்டது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம்
    விடியல் எல்லை இயல்புறச் சொல்லி
    தந்த திறையரும் தாராத் திறையரும்
    ஏத்தி நின்மொழி கேட்டுஇனிது இங்க
    வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின்
    அதுவே மன்னர் துயில்எடை நிலையே.

    - பன்னிரு பாட்டியல், பாடல் 324

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jan-2023, 10:28:26 IST