being created

தென்மொழி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 23:33, 15 July 2023 by ASN (talk | contribs) (Para Added)
தென்மொழி - நவம்பர், 1963 இதழ்

தென்மொழி (1959), தனித்தமிழ் இயக்கத் திங்களிதழ். ஞா. தேவநேயப் பாவாணர் இதன் சிறப்பாசிரியராகவும், பெருஞ்சித்திரனார் இதன் ஆசிரியராகவும் செயல்பட்டனர். தமிழின் சிறப்பை, பெருமையை, உயர்வை அனைவருக்கும் உணர்த்துதல், தனித் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உழைத்தல், தமிழ் இன உறவை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தென்மொழி இதழ் வெளிவந்தது.

பிரசுரம், வெளியீடு

தனித் தமிழ் இயக்க வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு, பெருஞ்சித்திரனார், நெல்லிக்குப்பத்தில், நவம்பர் 1959-ல், தென்மொழி இதழைத் தொடங்கினார். இதழுக்கு இப்பெயரைச் சூட்டிய ஞா. தேவநேயப் பாவாணர், இதழின் சிறப்பாசிரியராகச் செயல்பட்டார். பெருஞ்சித்திரனார் ஆசிரியர். ம.இலெ. தங்கப்பா, மு. சாத்தையா, செம்பியன் ஆகியோர் உறுப்பாசிரியர்களாகச் செயல்பட்டனர். தாமரை (பெருஞ்சித்திரனாரின் மனைவி) இதழின் உரிமையாளராகவும், உலகமுதல்வி வெளியீட்டாளர்களாகவும் இருந்தனர்.

ஆரம்பத்தில் நெல்லிக்குப்பம் சிறீதரன் அச்சகத்திலும், குரு அச்சகத்திலும், திருப்பாதிரிப் புலியூர் மித்திரா அச்சகத்திலும் தென்மொழி அச்சிடப்பட்டது. பின்னர் கடலூர் தென்மொழி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. இதழ் சென்னைக்கு மாற்றமான பின் திருவல்லிக்கேணி தென்மொழி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. ஆரம்ப கால இதழின் விலை 50 காசுகளாக இருந்தது. பின்னர் கால மாற்றத்திற்கேற்ப விலையில் மாற்றம் செய்யப்பட்டது. தொடக்க காலத்தில் 38 பக்கங்களுடன் வெளிவந்த இதழ் , பின்னர் கால மாற்றத்திற்கேற்றவாறு 72 பக்கங்கள், 64, 56, 48 பக்கங்களில் வெளிவந்தது. அட்டையில் ‘தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழ்’ என்ற குறிப்பு இடம் பெற்றது.

உள்ளடக்கம்

தென்மொழி இதழின் முகப்பில்,

“கெஞ்சுவதில்லை பிறர்பால் அவர் செய் கேட்டினுக்கும்

அஞ்சுவதில்லை மொழியையும் நாட்டையும் ஆளாமல்

துஞ்சுவதில்லை எனவே தமிழர்

எஞ்சுவதில்லை. உலகில் எவரும் எதிர்நின்றே”

- என்ற பாடல் இடம் பெற்றது. இதழின் ஆண்டு எண்ணிக்கையைக் குறிக்க ஆரம்ப காலத்தில் இசை என்பதையும், மாதத்தைக் குறிக்க இயல் என்பதையும் தென்மொழி பயன்படுத்தியது. பின்னர் அது  ‘சுவடி’ என்றும், ‘ஓலை’ என்றும் மாற்றப்பட்டது. முகப்பு அட்டையில் பெருஞ்சித்திரனாரின் பாடல்களும், சமயங்களில் அறிஞர்களின் படங்களும் இடம் பெற்றன.

‘பாட்டரங்கம்’ என்ற பகுதியில் தூய தமிழில் எழுதப்பட்ட பாடல்கள் இடம் பெற்றன. மொழியுணர்வைத் தூண்டும் பாடல்கள் அதிக அளவில் வெளியாகின. பெருஞ்சித்திரனார் கவியரங்கங்களில் தலைமையேற்றுப் பாடிய பாடல்களும் வெளியாகின. ம.இலெ. தங்கப்பாவின் இயற்கையாற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூலும், ஆந்தைப்பாட்டு என்ற பாடல் தொகுதியும் தென்மொழியில் தொடராக வெளியானது. பெருஞ்சித்திரனார் எழுதிய ஐயை, எண்சுவை எண்பது, அறுபருவத்துத் திருக்கூத்து, நூறாசிரியம், நடுகல், வழக்குரைக் காதை போன்ற படைப்புகள் தென்மொழியில் தொடராக வெளிவந்தன.

இலக்கியக் கட்டுரைகளும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியாகின. இலக்கியங்களில் புலால் உணவு, நாலடியார் ஆசிரியர் பலரே, குறிஞ்சிக் கூத்து, வள்ளுவத்தில் தூய்மை, அணங்குகொல்! ஆய்மயில் கொல்லோ!, அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை, திருக்குறள் நல்லுரை ஆய்வு, வள்ளுவர் காட்டும் மனநிலைகள், வள்ளுவர் வகுத்த துறவறம், வள்ளுவர் வகுத்த மனையறம், வள்ளுவர் வகுத்த அரசியல், ஒரு சொல், வஞ்சிக் காண்டத்தின் இன்றியமையாமை போன்றவை அவற்றில் குறிப்பிடத்தகுந்தன. தொல்காப்பியத்தில் தொழிற்பெயர், மார் மான், மாள் ஈற்றுப் பெயர்ச்சொற்கள், ஒடு-உருபு, இக்கு என்பவை சாரியை ஆகுமா?, சின்-ஓர் அசைநிலையா? -என்பது போன்ற தலைப்புகளில் பல இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின. தேவநேயப் பாவாணரின் மொழியியற் கட்டுரைகள் வெளியாகின.

அறிவியல் கட்டுரைகள், மருத்துவக் கட்டுரைகள், வரலாறு, பொறியியல், வேளாண்மை, சட்டம் சார்ந்த பல கட்டுரைகள் வெளியாகின. மாநாடுகள், கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள் பற்றிய செய்திகளும் இதழில் இடம் பெற்றன. தமிழ்நாடு விடுதலை பெற்றால்தான் தமிழ்மொழி சிறப்படையும்; தமிழர் நலம் பெறுவர் என்பது பெருஞ்சித்திரனாரின் எண்ணமாக இருந்தது. ஆகவே அதனை மையப்படுத்தி தலையங்கக் குறிப்புகளை, கட்டுரைகளைத் தென்மொழியில் தொடர்ந்து எழுதினார். இந்தி எதிர்ப்புக் கட்டுரைகள், வடவர், வடமொழி எதிர்ப்புக் கட்டுரைகளும் இடம் பெற்றன.

வாசகர் கடிதங்கள், பிற இதழ்களில் வெளிவந்த முக்கியமான செய்திகள், நிகழ்வுகள், சிறுகதைகள், நாடகங்கள், நூல் திறனாய்வு, வினா-விடை போன்றவற்றுக்கும் தென்மொழி இடமளித்தது. ‘நூற் சுருக்கம்’ என்ற தலைப்பில், ஆசிரியர் முக்கியம் எனக் கருதிய நூல்களின் சுருக்கங்கள் இடம் பெற்றன. திரைப்படக் கண்ணோட்டம், துணுக்குச் செய்திகள் போன்றவையும் தென்மொழியில் அவ்வப்போது இடம் பெற்றன.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.