being created

உடுமலை நாராயண கவி

From Tamil Wiki
Revision as of 13:30, 7 June 2023 by Tamizhkalai (talk | contribs)
நன்றி: தமிழ்ஹிந்து

உடுமலை நாராயணகவி (நாராயணசாமி; செப்டம்பர் 25, 1899 – மே 23, 1981) தமிழ்க்கவிஞர், திரைப் பாடலாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை இயற்றி, கூட்டங்களில் பாடினார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார்.

பிறப்பு, கல்வி

உடுமலை நாராயணகவி அன்றைய கோவை மாவட்டத்தில்(தற்போது திருப்பூர் மாவட்டம்) உடுமலைப்பேட்டைக்கருகில் உள்ள பூவிளைவாடியில் (பூளவாடி) கிருஷ்ணசாமி -முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி.

இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி அண்ணன் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று விற்றார். நான்காம் வகுப்புடன் பள்ளிப்படிப்பு நின்றது. புலவர் பாலசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றார். முத்துசாமிக் கவிராயர் நடத்திய ஆரிய கான சபாவில் இணைந்து நாடகங்களில் நடித்தார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் இசை பயின்றார். சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக்கலை பயின்றார்.

கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்குநாட்டுக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அவற்றைக் கற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தனது 15-ஆவது வயதில் மகாகவி மகாகவி பாரதியைச் சந்தித்தபின் விடுதலைப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டார்

தனிவாழ்க்கை

நாராயணசாமி பேச்சியம்மாளை மணந்தார். நான்கு மகன்கள்.

நாடகம்

நாராயணசாமி பூளைவாடியில் மாரியம்மன் திருவிழாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இராமநாடகத்தில் இலக்குவன் வேடத்தில் நடித்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நண்பரும், ஆரிய நாடக சபாவை நடத்தி வந்தவருமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் அவரது நடிப்பாற்றலைக் கண்டு அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் . பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை முத்துசாமிக் கவிராயரின் சபாவில் நாடகங்களில் நடித்தார். பாடல்கள் பாடுவதிலும், உரையாடல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார்.

இருபத்தைந்தாம் வயதில் ஊர் திரும்பிய கவி தேசிய எழுச்சி மிகுந்திருந்த அக்காலத்தில் கதர்க்கடை ஒன்றைத் தொடங்கினார். கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார்.

வாணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் தொல்லை ஏற்பட்டது. மதுரைக்குச் சென்று சங்கரதாஸ் சுவாமிகளிடம் முறையாக யாப்பிலக்கணம் கற்று பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதினார்.

அரசியல்

என்.எஸ்.கிருஷ்ணன், நாராயணகவி, அண்ணாத்துரை

தேசிய விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலத்தில் பல தேசிய உணர்வுப் பாடல்களை நாடகங்களுக்காக எழுதி, அவற்றைப் பாட வைத்தார்.

திராவிட இயக்கம்

மதுரையில் வாழ்ந்த போது என்.எஸ் கிருஷ்ணனுடன் ஏற்பட்ட நட்பால் பெரியார், அண்ணா, மு. கருணாநிதி, பாரதிதாசன் போன்றோரின் நட்பு கிடைத்தது. திராவிடர் இயக்கத்தின்மீதும், பகுத்தறிவு கொள்கையின்மீதும் ஈடுபாடு ஏற்பட்டது.

திரைத்துறை

இயக்குநர் ஏ.நாராயணன் நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாடல்கள் எழுத அழைத்தார். சென்னையில் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் பாடல்கள் எழுதிய முதல் திரைப்படம் 'சந்திர மோகனா அல்லது சமூகத்தொண்டு'. புதிய உத்திகளுடன் எழுதப்பட்ட கருத்து மிக்க பாடல்களால் விரைவில் பிரபலமடைந்தார். அந்நாட்களில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனை விட அதிகமாகப் பாடல்களை எழுதினார். உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.

என்.எஸ்.கிருஷ்ணனின் `கிந்தனார் கதாகாலட்சேப' த்திற்குப் பாடல்கள் எழுதினார்.

அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்கு அவர் எழுதிய பாடல்கள் பிரபலமடந்தன.

திரைக்கதை

உடுமலை நாராயண கவி 1934-ல் வெளியான 'ஶ்ரீ கிருஷ்ண லீலா' திரைப்படத்திற்கு பாடல்களும் வசனமும் எழுதினார். அவர் எழுதி அரங்கேற்றிய 'தூக்குத் தூக்கி' நாடகம் 1954-ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

இலக்கிய/பண்பாட்டு இடம்

சீர்திருத்தக் கருத்துக்களை எளிமையுடனும், நகைச்சுவையுடனும் தன் பாடல்களில் சொன்னவர். திருக்குறளின் கருத்துக்களையும், நீதிகளையும் தன் பாடல்களில் அதிகம் எடுத்தாணடவர்.

விருதுகள்/பரிசுகள்

மணிமண்டபம்

தமிழக அரசு உடுமலையில் உடுமலை நாராயண கவிக்கு மணிமண்டபம் அமைத்தது. மணிமண்டபத்தில் நாராயணகவியின் மார்பளவு சிலையும் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறுகின்றன.

மறைவு

உடுமலை நாராயணகவி மே 23, 1981 அன்று மறைந்தார்.

பாடல்கள் இடம்பெற்ற சில திரைப்படங்கள்

  • கண்ணகி(1942)
  • தமிழறியும் பெருமாள்(1942)
  • குபேர குசேலா(1943)
  • வித்யாபதி(1946)
  • விகடயோகி(1946)
  • பைத்தியக்காரன்(1947)
  • ராஜகுமாரி (1947)
  • க்ருஷ்ண பக்தி(1949)
  • நல்லதம்பி (1949)
  • பவழக்கொடி (1949)
  • வேலைக்காரி(1949)
  • பாரிஜாதம் (1950)
  • விஜயகுமாரி(1950)
  • மணமகள் (1951)
  • மர்மயோகி(1951)
  • வனசுந்தரி (1951)
  • பணம் (1952)
  • பராசக்தி(1952)
  • தேவதாஸ் (1953)
  • மறுமகள்(1953)
  • பொன்னி(1953)
  • மனோகரா (1954)
  • பெண்(1954)
  • ரத்தக் கண்ணீர்(1954)
  • சொர்க்கவாசல் (1954)
  • தூக்கு தூக்கி(1954)
  • செல்லப்பிள்ளை (1955)
  • டாக்டர் சாவித்ரி(1955)
  • காவேரி(1955)
  • மங்கையர் திலகம் (1955)
  • முதல் தேதி(1955)
  • நீதிபதி(1955)
  • ஆசை (1956)
  • அமர தீபம் (1956)
  • மதுரை வீரன் (1956)
  • மாதர் குல மாணிக்கம் (1956)
  • ரங்கூன் ராதா (1956)
  • எங்கள் வீட்டு மகாலட்சுமி (1957)
  • கற்புக்கரசி(1957)
  • பொம்மை கல்யாணம் (1958)
  • மாங்கல்ய பாக்யம் (1958)
  • அபலை அஞ்சுகம் (1959)
  • அமுதவல்லி (1959)
  • மாமியார் மெச்சிய மருமகள் (1959)
  • மஞ்சள் மகிமை (1959)
  • நல்லதீர்ப்பு (1959)
  • புதுமைப்பெண்P (1959)
  • தாய் மகளுக்குக் கட்டிய தாலி(1959)
  • தங்கப் பதுமைT (1959)
  • சவுக்கடி சந்திரகாந்தா(1960)
  • தெய்வப்பிறவி(1960)
  • பாட்டாளியின் வெற்றி(1960)
  • ராஜா தேசிங்கு (1960)
  • அரசிளங்குமரி (1961)
  • சித்தூர் ராணி பத்மினி(1963)
  • பூம்புகார் (1964)
  • சித்தி(1966)
  • விவசாயி (1967)
  • ஆதி பராசக்தி (1971)
  • குறத்தி மகன்(1972)
  • தசாவதாரம் (1976)

References[edit]

  1. ^ Sundararaj Theodore Baskaran The eye of the serpent: an introduction to Tamil cinema 1996 Page 215 " Udumalai Narayana Kavi ... He entered films and wrote the dialogues and songs for Krishna Leela (1933). ... N.S.Krishnan invited him to work in his film Izhanda Kathal (1941). More of Krishnan's films followed. Narayana Kavi's atheistic and rationalistic ideas came to be expressed through songs. Through N.S. Krishnan, he got to know about C.N. Annadurai."
  2. ^ Memorials of Eminent Personalities

External links[edit]

  • India Post 31 December 2008: A commemorative postage stamp on UDUMALAI NARAYANA KAVI

Categories:

  • 1899 births
  • 1981 deaths
  • 20th-century Indian poets
  • Indian male poets
  • Poets from Tamil Nadu
  • People from Tiruppur district
  • Indian lyricists



  • வேலைக்காரி
  • ஓர் இரவு
  • ராஜகுமாரி
  • நல்லதம்பி
  • பராசக்தி
  • மனோகரா
  • பிரபாவதி
  • காவேரி
  • சொர்க்க வாசல்
  • தூக்குத் தூக்கி
  • தெய்வப்பிறவி
  • மாங்கல்ய பாக்கியம்
  • சித்தி
  • எங்கள் வீட்டு மகாலட்சுமி
  • ரத்தக்கண்ணீர்
  • ஆதி பராசக்தி
  • தேவதாஸ்


உசாத்துணை

தமிழ் அறிஞர்கள் அறிவோம்-உடுமலை நாராயண கவி-தினமணி, ஜனவரி 2014

உடுமலை நாராயணகவி பாடல்கள், தமிழ் இணைய கல்விக்கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.