under review

சிறுத்தொண்ட நாயனார்

From Tamil Wiki
Revision as of 23:06, 21 April 2023 by ASN (talk | contribs) (Para Added and edited; Inter Link & External Link Created: Proof Checked)
சிறுத்தொண்ட நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சிறுத்தொண்ட நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிறுத்தொண்ட நாயனாரின் இயற்பெயர் பரஞ்சோதி. இவர் சோழ நாட்டில் உள்ள திருச்செங்காட்டங்குடியில், பரம்பரை பரம்பரையாக மன்னர்களுக்கு மந்திரியாகவும் சேனாதிபதியாகவும் விளங்கிய குலத்தில் தோன்றினார். போர்த் தொழிலில் தேர்ச்சி பெற்று சிறந்த வீரராக இருந்தாலும் இவர் சிறந்த சிவபக்தராக இருந்தார். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதை விரும்பினார்.

சிவத்தொண்டு

ஒருமுறை போருக்காக வாதாபிக்குச் சென்ற பரஞ்சோதியார், பகை மன்னனைப் போரில் வென்று, அங்கிருந்த பொக்கிஷங்களையும், யானை, குதிரை முதலியவற்றையும் கொணர்ந்து மன்னனிடம் சேர்ப்பித்தார். அதுகண்டு மன்னன் மகிழ்ந்து அவரைப் பாராட்டினான். அவர் சிவபக்தர் என்பதையும், சிவத்தொண்டை எப்போதும் விரும்புகிறவர் என்பதையும் பிறர் மூலம் அப்போதுதான் அறிந்தான். உடனடியாக  பரஞ்சோதியாரை சேனைத் தலைவர் பதவியில் இருந்து விடுவித்தான். பொன்னும் பொருளும் கொடுத்து அவர் விரும்பியவாறு சிவத்தொண்டினைச் செய்து வாழப் பணித்தான்.

பரஞ்சோதியாரும் அவற்றை ஏற்று, தன் இல்லம் சென்றார். தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு சிவத் தொண்டுகளைச் செய்து வந்தார். பரஞ்சோதியார், சிவனடியார்களுக்கு மிகவும் பணிந்து நின்று தம்மை மிகவும் சிறியராய் காட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவராக இருந்ததால் ‘சிறுத்தொண்டர்’ என்று அழைக்கப்பட்டார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

சிறுத்தொண்டர், மகன் சீராளனுடனும் மனைவியுடனும் இணைந்து சிவத்தொண்டுகள் செய்து வந்தார். அவரது பெருமையை உலகுக்குக் காட்ட சிவன் ஆடல் ஒன்றை நிகழ்த்தினார்.

பைரவ சந்நியாசியின் வருகை

ஒருநாள் சிவனடியாரைத் தேடி சிறுத்தொண்டர் வெளியே சென்றிருந்த நேரத்தில், பைரவ சந்நியாசி வேடத்தில் சிவபெருமான் சிறுத்தொண்டர் இல்லத்திற்கு வந்தார். சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும், பணிப்பெண் சந்தனமங்கையும் அவரை உபசரித்து அமர வேண்டினர். ஆனால், சிறுத்தொண்டர் அப்போது வீட்டில் இல்லாததாலும், பெண்கள் மட்டும் தனித்திருந்ததாலும் அங்கு தங்க மறுத்தார் பைரவ சந்நியாசி. சிறுத்தொண்டரின் மனைவியிடம், “அம்மா, நான் இவ்வூர்  திருக்கோயிலில் உள்ள ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்திருப்பேன். உங்கள் கணவர் வந்தால் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

சிவனடியார் பிள்ளைக் கறி கேட்டது

சற்று நேரத்தில் சிவனாடியாரை எங்கு தேடியும் காணாது சோர்ந்த உள்ளத்துடன் இல்லத்திற்கு வந்தார் சிறுத்தொண்டர். மனைவி மூலம் நிகழ்ந்ததை அறிந்து பைரவ சந்நியாசியைத் தேடிச் சென்றார். திருக்கோயில் மரத்தின் கீழ் தங்கியிருக்கும் சந்நியாசியைப் பணிந்து வணங்கினார். தன் இல்லத்திற்கு அமுதுண்ண அழைத்தார். அதற்கு பைரவ சந்நியாசி, “நாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் உண்போம். அதுவும் பசுவையே உண்போம். அதற்கு உரிய நாளும் இந்நாள்தான். அதை உம்மால் சமைத்து அமுது செய்ய முடியுமா என்று தான் சிந்திக்கிறேன்” என்றார்.

தம்மால் முடியும் என்று பதில் சொன்ன சிறுத்தொண்டரிடம் சந்நியாசி, “அன்பரே, பசுவென்றால், நீர் எண்ணுவது போல் அது விலங்கினத்தைச் சேர்ந்த பசு அல்ல; நாம் சொல்வது நரப் பசுவாகும். அப்பசு ஐந்து வயதுக்குள்ளானதாக இருக்க வேண்டும். அதுவும் இளம் ஆண்பிள்ளையாக இருத்தல் வேண்டும். உடல் உறுப்புக்களில் எவ்விதக் குறைபாடும் அதற்கு இருக்கக்கூடாது. அந்த நரப் பசுவையும் யாம் கூறுவது போன்ற பக்குவத்தில் கறி சமைத்தல் வேண்டும்.” என்று சொன்னார்.

சிறுத்தொண்டரும் அதற்கு உடன்பட்டார். உடன் சந்நியாசி, “ஒரு குடிக்கு ஒரு மகனாய், நல்ல குடியில் பிறந்துள்ள பாலகனின் உடலை, தாயார் பிடித்துக் கொள்ள, தந்தையார் அரிந்து தர, அதனைச் சமைத்தல் வேண்டும். அவ்வாறு அதனைச் சமைக்குபொழுது அம்மனையிலுள்ளோர் யாரும் வருந்தக்கூடாது. எல்லாரும் மனமகிழ்ச்சியுடன் இருத்தல் வேண்டும்.” என்றார்.

சிறுத்தொண்டரும் அதற்கு உடன்பட்டார். சந்நியாசி, “உணவைத் தயார் செய்துவிட்டு என்னை அழையுங்கள். அதுவரை நான் இங்கே காத்திருக்கிறேன்” என்றார். சிறுத்தொண்டரும் பைரவ சந்நியாசியைப் பணிந்து விடைபெற்றுச் சென்றார்.

சிறுத்தொண்டர், தன் மகனை சிவனடியாருக்கு அளித்தது

சிறுத்தொண்டர், வாசலில் காத்திருந்த மனைவியிடம் நிகழ்ந்ததைக் கூறினார். “பெருமளவு நிதியைக் கொடுத்தால் பெற்ற மைந்தனைக் கொடுக்கும் பெற்றோர்கள் கிடைக்கக் கூடும். ஆனால்,  தாம் பெற்ற மைந்தனைத் தாமே தமது கையால் அரியும் பெற்றோர்கள் இவ்வுலகில் எவ்வளவு தேடியும் கிடைக்க மாட்டார்கள்” என்றார் மனைவி. இருவரும் கலந்துபேசி தங்கள் ஒரே மகன் சீராளனை சிவனடியாருக்குக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.

பள்ளியில் இருந்த மகன் சீராளனை சிறுத்தொண்டர் போய் அழைத்து வந்தார். சிறுவனுக்கு நீராடல் முதலியன செய்து கணவரிடம் ஒப்புவித்தார் திருவெண்காட்டு நங்கை. சமையலறையை அடுத்திருந்த ஓர் அறைக்கு மகனை அழைத்துச் சென்றார் தந்தை. தாயும் பாத்திரங்களுடன் உடன் சென்றார். பெற்ற தாயான திருவெண்காட்டு நங்கை, மலர்ந்த முகத்துடன் தன் மகன் சீராளனின் கால்களைத் தனது இரு மடிகளுக்குள் அடக்கி, அவனது கைகளைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டார். தந்தை மாறாத புன்சிரிப்புடன், தன் ஒரு கையால் ஒரு குடிக்கு ஒரு மகனான தன் மகனின் தலையைப் பிடித்தார். பெற்றோர் புன்னகைப்பதைக் கண்டு மகன் சீராளனும் புன்னகைத்தான். ஆயுதத்தைக் கையிலேந்திய சிறுத்தொண்டர், அடுத்துச் செய்ய வேண்டியதைச் செய்து முடித்தார்.

தலையின் இறைச்சி திருவமுதுக்கு ஆகாது என்றெண்ணி அதனைக் கழித்துவிட்டு, மற்ற உறுப்புக்களின் இறைச்சியைக் கறி சமைப்பதற்கு ஏற்றபடிச் செய்து மனைவியிடம் அளித்தார் சிறுத்தொண்டர். திருவெண்காட்டு நங்கையும் அவற்றோடு வேறுவேறு கறிகளும் சேர்த்து, சமைக்க வேண்டிய முறைப்படி சமைத்து, உடன் சோறும் சமைத்து, பின் கணவரிடம் உணவு தயாரான தகவலைத் தெரிவித்தாள்.

சிவனடியார் அமுதுண்ண வந்தது

சிறுத்தொண்டர் பைரவ சந்நியாசியைத் தேடிச் சென்று அழைத்து வந்தார்.

கணவனும் மனைவியும் சிவனடியாருக்குத் திருவடி பூஜை செய்து வணங்கினர். பின் தகுந்த ஆசனம் அளித்து அமரச் செய்து, சிவனடியார் முன் ஒரு முக்காலியை இட்டு உணவினைப் படைத்தனர். அப்பொழுது பைரவ சந்நியாசி, “நான் சொன்ன வகையில் தானே சமைத்தீர்கள்? எல்லா உறுப்புக்களையும் படைத்தீர்களோ?” என்று கேட்டார்.

அதற்கு திருவெண்காட்டு நங்கை, “தலை இறைச்சியை மட்டும் அமுதுக்கு உதவாதென்று சமைக்கவில்லை” என்றார்.

பைரவ சந்நியாசி, “அதுவும் நாம் விரும்பி உண்பதே!” என்றார்.

சிறுத்தொண்டர் திகைத்து நிற்க, பணிப்பெண் சந்தன நங்கை, “அடியவர் திருவமுது செய்யும்பொழுது அதனை விரும்பக் கூடும் என்று எண்ணி முன்னமே அதனை நான் தனிக் கறியமுதாகச் சமைத்து வைத்துள்ளேன்” என்று சொல்லி அதனை எடுத்து வந்தார். சிறுத்தொண்டரும் அதனை மகிழ்வுடன் வாங்கி அடியவருக்குப் படைத்தார். உடன் பைரவ சந்நியாசி, “நான் தனித்து உணவுண்ணும் வழக்கமில்லை. சிவனடியார்கள் யாரேனும் இருப்பின் அவர்களை அழைத்து வருக” என்றார்.

சிறுத்தொண்டர் வெளியே சென்று தேடிப் பார்த்தும் சிவனடியார்கள் யாரும் கிடைக்காததால், பைரவ சந்நியாசியின் கட்டளைப்படி சிறுத்தொண்டரே உடன் உணவு உண்ண அமர்ந்தார். அப்போது தங்கள் மகனை அழையுங்கள் என்று சிவனடியார் சொன்னார். சிறுத்தொண்டர் அதற்கு, ’இப்போது அவன் இங்கு உதவான்’ என்றார். உடனே சிவனடியார், “அவன் இங்கு வந்தால்தான் நான் உண்பேன். ஆதலால் அவனை உடன் அழைத்து வாருங்கள்” என்றார்.

செய்வதறியாது திகைத்த சிறுத்தொண்டர், வாசலுக்குச் சென்று, தான் இன்னது செய்தோம் என்ற நினைப்பை மறந்து, எப்படியாவது சிவனடியாரை உணபு உண்ண வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ‘மகனே வா’ என்று அழைத்தார். திருவெண்காட்டு நங்கையும் ‘சீராளா வா’ என்று உடன் அழைத்தார்.

சிவபெருமானின் திருவிளையாடல்

இறைவன் திருவருளால் சீராளன் அப்பொழுதுதான் பள்ளியிலிருந்து வருபவனைப் போல ஓடி வந்தான். தம் கையால் தானே அரிந்த மகன் எப்படி உயிரோடு வந்தான் என்ற எண்ணமோ, சிந்தனையோ இல்லாமல் இருவரும் அவனை அழைத்துக் கொண்டு இல்லத்தின் உள்ளே சென்றனர். அங்கு சிவனடியார் காணப்படவில்லை. கலத்தில் படைத்த உணவுப் பொருட்களும் மாயமாகி விட்டிருந்தன.

இருவரும் நிகழ்ந்தது எதுவெனப் புரியாமல் திகைத்து நின்றனர். பின் சிவனடியார் வெளியில் இருக்கிறாரோ என்றெண்ணி வாசலுக்குச் சென்றனர். உடன் அங்கு பேரொளி சூழ்ந்தது. வானில், இடப வாகனத்தில் சிவபெருமான், உமாதேவியுடனும், முருகப்பெருமானுடனும் காட்சி அளித்தார். தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்.

சிவபெருமானின் அருட்காட்சியைக் கண்டு சிறுத்தொண்டரும், வெண்காட்டு நங்கையும் பரவசப்பட்டனர். மகன் சீராளனுடன் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். சிறுத்தொண்டருக்கும், திருவெண்காட்டு நங்கைக்கும், சீராளனுக்கும், தாதி சந்தன நங்கைக்கும் என்றும் தம்மைப் பிரியாதிருக்கும் வரத்தைத் தந்து, சிவலோகப் பதவியை அளித்தார் சிவபெருமான்.

செங்காட்டங்குடி மெய் சிறுத்தொண்டர்க்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

பரஞ்சோதியாரின் போர் வெற்றி

மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்

தொன் நகரம் துகள் ஆகத் துளைநெடும் கை வரை உகைத்துப்

பன் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்

இன்னை எண் இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்

மன்னன், பரஞ்சோதியாரை படையில் இருந்து விடுவித்து சிவத் தொண்டு செய்யப் பணித்தது

உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்

எம் உடைய மனக் கருத்துக்கு இனிது ஆக இசைந்து உமது

மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச்

செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடை கொடுத்தான்.

பரஞ்சோதியார், சிறுத்தொண்டர் எனப் பெயர் பெற்றது

சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்த

நாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழி பாட்டால்

மே தகையார் அவர் முன்புமிகச் சிறியர் ஆய் அடைந்தார்

ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல்

சிவன் பைரவ சந்நியாசி வேடத்தில் தோன்றுதல்

இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை

அத்தர் திரு அடி இணைக் கீழ்ச் சென்று அணைய அவர் உடைய

மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர் தாம்

சித்தம் மகிழ் வயிரவர் ஆய்த் திருமலையின் நின்று அணைகின்றார்

பைரவ சந்நியாசி பிள்ளைக் கறி கேட்டல்

பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்

நண்பு மிக்கீர்! நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசு ஆம்

உண்பது ஐஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம்

புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார்.


யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும் என

நாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்

தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே

ஏதம் இன்றி அமைத்த கறி ஆம் இட்டு உண்பது என மொழிந்தார்

சிறுத்தொண்டர் சிவனடியாருக்காக மகனின் தலையை அரிந்தது

இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக்

கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்கக் காதலனும்

நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்யத்

தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார்

இறந்த மகன் உயிருடன் வருதல்

வையம் நிகழும் சிறுத் தொண்டர் 'மைந்தா வருவாய்' என அழைத்தார்

தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார்

'செய்ய மணியே! சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம்

உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார்' என்று ஓலம் இட.


பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான் போல் வந்த

தரம் இல் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்து தழுவித் தம்

கரம் முன் அணைத்துக் கணவனார் கையில் கெடுப்பக் களி கூர்ந்தார்

புரம் மூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம் எனும் பொலிவால்

சிவபெருமான், சிறுத்தொண்டர் குடும்பத்தினருக்கு சிவபதம் அளித்தது

கொன்றை வேணியார் தாமும் பாகம் கொண்ட குலக் கொடியும்

வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங் கமலச் சேவடிக் கீழ்

நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்

என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார்

குரு பூஜை

சிறுத்தொண்ட நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், சித்திரை மாதம், பரணி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.