first review completed

வண்ணதாசன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(changed template text)
Line 90: Line 90:
* [https://www.youtube.com/watch?v=IW3OFqJQbXc&ab_channel=AnnaCentenaryLibrary%2CChennai பொன்மாலைப்பொழுது நிகழ்வு: வண்ணதாசன் உரை]
* [https://www.youtube.com/watch?v=IW3OFqJQbXc&ab_channel=AnnaCentenaryLibrary%2CChennai பொன்மாலைப்பொழுது நிகழ்வு: வண்ணதாசன் உரை]
* [https://www.youtube.com/watch?v=XGXhV-8bCtA&ab_channel=ShrutiTV வண்ணதாசன்: விஷ்ணுபுரம் விருது: உரை]
* [https://www.youtube.com/watch?v=XGXhV-8bCtA&ab_channel=ShrutiTV வண்ணதாசன்: விஷ்ணுபுரம் விருது: உரை]
{{first review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:16, 15 November 2022

வண்ணதாசன்
வண்ணதாசன்

வண்ணதாசன் (கல்யாண்ஜி)(சி.கல்யாணசுந்தரம்) (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1946) தமிழின் நவீன கவிஞர், எழுத்தாளர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும், வண்ணதாசன் என்ற பெயரில் புனைவுகளையும் எழுதியவர்.

பிறப்பு, கல்வி

வண்ணதாசனின் இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம். வண்ணதாசன் தி.க.சிவசங்கரன், தெய்வானை இணையருக்கு ஆகஸ்ட் 22, 1946-ல் திருநெல்வேலியில் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. திருநெல்வேலி டவுண், ஷாஃப்டர் உயர் நிலைப் பள்ளியில் உயர்நிலைப்பள்ளி வரை பயின்றார். பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வண்ணதாசன் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து 2006-ல் ஓய்வு பெற்றார். மே 24, 1972-ல் வள்ளியை திருமணம் செய்து கொண்டார். மகள் சிவசங்கரி, மகன் நடராஜ சுப்ரமணியம்.

இலக்கிய வாழ்க்கை

வண்ணதாசன்

வண்ணதாசன் என்பது புனைப்பெயர். வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். பள்ளியில் படிக்கும்போது தி.சு.ஆறுமுகம் என்ற தமிழாசிரியரின் உந்துதலால் சீட்டுக் கவிதைகளை எழுதி அரங்கேற்றம் செய்தார். தந்தை, அவர் உருவாக்கிய வீட்டு நூலகம், எழுத்தாளரான அண்ணன் கணபதி தன் இளவயதில் எழுதுவதற்கு ஊக்கமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். வண்ணதாசன் என்ற பெயர் தன் அண்ணனிடமிருந்து எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார். வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் ஆகியோர் நண்பர்கள். தீபத்தில் வெளிவந்த வேர் கதையைப் படித்துவிட்டு வண்ணதாசனைத் தேடி வந்த முதல் வாசகர் கவிஞர் விக்ரமாதித்யன்.

வண்ணதாசனின் முதல் சிறுகதை ஏப்ரல் 1962-ல் புதுமை இதழில் வெளியானது. 1962 முதல் தீபம் இதழில் எழுதத் துவங்கினார். வண்ணதாசனின் முதல் கதைத் தொகுப்பான `கலைக்க முடியாத ஒப்பனைகள்’ இந்திய அளவிலான சிறந்த நூல் தயாரிப்பிற்கான இரண்டாம் தேசிய விருது பெற்றது. முதல் கவிதைத் தொகுப்பான ’புலரி’, கவிஞர் மீரா அவர்கள் வெளியிட்ட அன்னம் நவகவிதை வரிசையில் வெளிவந்தது. இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. கண்ணதாசன், நடை, தீபம், கணையாழி, மீட்சி, உயிரெழுத்து போன்ற சிற்றிதழ்களில் எழுதினார். கல்யாண்ஜியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய குறுந்தகடு அவரின் குரலில் வாசிக்கப்பட்டு வெளியானது. ‘எல்லோருக்கும் அன்புடன்’ எனும் பெயரில் இவர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன.2000-01-ல் வண்ணதாசன் கதைகளும், கல்யாண்ஜியின் கவிதைகளும் மொத்தத் தொகுப்பாக வெளிவந்தது. வண்ணதாசனின் கவிதைகள், சிறுகதைகள், கடிதங்கள் இலக்கிய இதழ்கள், மின்னிதழ்களில் வளிவருகின்றன.

இலக்கிய இடம்

வண்ணதாசன் விஷ்ணுபுரம் விருது

"இக்கதைகளில் வாழ்வு பற்றி ஒரு மயக்க நிலை ஊடாடி நிற்கிறது. விழிப்புடன் வாழ்வை கவனித்து, அதன் முழு வீச்சை கிரகித்துக் கொள்ளும் உன்னிப்பைத் தூண்டுவதற்கு பதிலாக, மயக்கத்தின் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. சித்திரங்களில் ஊடாடி கதையின் மையத்திற்குப் பிந்திப் போய் சேருகிறார் இவர். பகைப்புலங்களின் படைப்பில் மையம் அமுங்கிப் போகிறது. செய்திகள் வெளிறிப் போகின்றன." என சுந்தரராமசாமி வண்ணதாசனின் ”தோட்டத்துக்கு ”வெளியிலும் சில பூக்கள்” என்ற இரண்டாம் சிறுகதைத்தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். "வண்ணதாசன் மனிதர்களின் இயல்புகளையும் அதன் மெல்லிய பிறழ்வுகளையும் மீண்டு வரும் இயல்புநிலையையும் எவ்வித புகாருமின்றி இயல்பான கரிசனத்தோடு கதையாக்குகிறார். வண்ணதாசன் தாமறிந்த மனிதர்களின், தான் கண்ட வாழ்க்கையின் கூற்றுகளை பதிவாக்கி அம்மனிதர்களின் நினைவுகளை கவுரவம் செய்கிறார். வண்ணதாசனின் கதைகள் வாசிக்க வாசிக்க புலன்களும் மனமும் கூர்மையடைகின்றன. புறத்தையும் அகத்தையும் விழிப்புடன் அவதானிக்க சொல்கின்றன. எங்கோ ஓர் வனாந்தரத்தில் ஓடும் குளிர்ந்த சுனை நீரில் கால் நனைத்தபடி, தனது அந்தரங்களை நம்பிக்கையுடனும் பரிவுடனும் பகிரும் தோழனின் குரல் அவருடைய புனைவுகளில் ஒலிப்பதாக தோன்றும். வண்ணதாசனை தொடர்ந்து வாசிக்கும்போது அவருடைய மொழி நம்மையும் தொற்றி ஏறிகொள்கிறது." என எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

"வண்ணதாசனின் forte என்பது ருசிதான். அந்த ருசியே அவருடைய தர்சனம். அதை அவர் வாழ்க்கையில் உள்ள எல்லா இருட்டுக்கும் அழிவுக்கும் மாற்றாகச் சொல்கிறார். அவர் அன்பையே சொல்கிறார் என்பது அவரது சில கதைகளை வாசிப்பவர்களின் எண்ணம். உண்மையில் அவர் எழுதிய பல கதைகள் கொடூரமான வாழ்க்கைச்சித்திரங்களைச் சொல்கின்றன. ஆனால் அவற்றை அவர் விரித்துச்சொல்வதில்லை. நீங்கள் சொல்வதைப்போல அதையெல்லாம் ஒற்றைவரியில் கடந்துசெல்கிறார். குழந்தைசெத்துப்போன அன்னையின் துக்கம் ரெண்டே வரிதான். ஆனால் ஒரு பூ விழுந்துகிடப்பதற்கு ஒருபக்கம். இது ஒரு தரிசனம். இதை வாசிக்க இங்கே நல்ல வாசகர்கள் வரவேண்டும்" என விமர்சகர் சாரங்கன் குறிப்பிடுகிறார்.

ஓவியம்

வண்ணதாசன் ஓவியங்கள் (நன்றி எஸ். ராமகிருஷ்ணன்)

வண்ணதாசன் கோட்டோவியங்கள் வரைபவர். "அழுத்தமான கோடுகளில் துல்லியமாக உணர்ச்சியை வெளிக்காட்டும் முகங்கள். குறிப்பாகக் கண்களை அவர் வரைந்துள்ள விதம் அபாரமானது. மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தும் பெண் முகங்கள். வண்ணதாசன் தனித்துவமான முக அமைப்புக் கொண்டவர்களை வரைகிறார். பெரும்பாலும் நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் முதியவர்கள்." என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வண்ணதாசனின் ஓவியங்களை மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • 2016 -ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது
  • வண்ணதாசனின் 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக இந்திய அரசின் 2016-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
  • ’ஒளியிலே தெரிவது’ சிறுகதைத்தொகுப்பிற்காக உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டிற்கான சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
  • 2018-ல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியது.
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • இசையமைப்பாளர் இளையராஜா வழங்கிய பாவலர் விருது
  • சிற்பி விருது
  • இலக்கியச் சிந்தனை விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
வண்ணதாசன்

சிறப்புகள்

  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.
  • எழுத்தாளர் வண்ணதாசன் எழுதத் துவங்கி ஐம்பது ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக சந்தியா பதிப்பகமும் மதுரை அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து செப்டம்பர் 7, 2012-ல் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது.

ஆவணப்படம்

  • விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு 2016-ல் வழங்கப்பட்டதை ஒட்டி வண்ணதாசனின் ஆவணப்படம் எழுத்தாளர் செல்வேந்திரன் இயக்கத்தில், சன் கீர்த்தி ஒளிப்பதிவில், அருண் இசையமைப்பில் வெளிவந்தது.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்புகள்
  • புலரி (1981)
  • கல்யாண்ஜி கவிதைகள் (1987)
  • முன்பின் (1994)
  • அந்நியமற்ற நதி (1997)
  • நிலா பார்த்தல் (2000)
  • கல்யாண்ஜி முழுத்தொகுப்பு (2001)
  • உறக்கமற்ற மழைத்துளி (2005)
  • கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள் (2007)
  • இன்னொரு கேளிச்சித்திரம் (2008)
  • மணல் உள்ள ஆறு (2011)
சிறுகதைத் தொகுப்பு
  • கலைக்க முடியாத ஒப்பனைகள் (1976)
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் (1978)
  • சமவெளி (1983)
  • பெயர் தெரியாமல் ஒரு பறவை (1985)
  • மனுஷா மனுஷா (1990)
  • கனிவு (1992)
  • நடுகை (1996)
  • கிருஷ்ணன் வைத்த வீடு (2000)
  • வண்ணதாசன் கதைகள் தொகுப்பு (2001)
  • பெய்தலும் ஓய்தலும் (2007)
  • ஒளியிலே தெரிவது (2010)
  • ஒரு சிறு இசை (2013)
  • நாபிக் கமலம் (2016)
  • கமழ்ச்சி (2017)
  • மதுரம் (2019)
  • தீரா நதி (2020)
நாவல்
  • சின்னு முதல் சின்னு வரை (1991)
  • உயரப்பறத்தல்
சிறார் நூல்கள்
  • ஓர் உல்லாசப் பயணம்
கட்டுரைகள்
  • அகம் புறம் (நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு) (2021)
  • சின்ன விஷயங்களின் மனிதன் (2016)
  • வண்ணதாசன் கடிதங்கள்
கடிதங்கள்
  • எல்லோர்க்கும் அன்புடன் (1995)
  • சில இறகுகள் பறவைகள்

உசாத்துணை

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.