under review

இரா.முருகன்: Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
No edit summary
Line 89: Line 89:
*[https://pitchaipathiram.blogspot.com/2013/03/blog-post_16.html விஸ்வரூபம் - இரா.முருகன் - நாவல் விமர்சனம், பிச்சைப்பாத்திரம் தளம், மார்ச் 2013]
*[https://pitchaipathiram.blogspot.com/2013/03/blog-post_16.html விஸ்வரூபம் - இரா.முருகன் - நாவல் விமர்சனம், பிச்சைப்பாத்திரம் தளம், மார்ச் 2013]
*[https://www.amazon.in/s?k=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&ref=nb_sb_noss_2 அமேசான் தளத்தில் இரா.முருகன் நூல்கள்]
*[https://www.amazon.in/s?k=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&ref=nb_sb_noss_2 அமேசான் தளத்தில் இரா.முருகன் நூல்கள்]
{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 05:54, 27 July 2022

இரா.முருகன்

எழுத்தாளர்  இரா.முருகன் (1953) நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் என  தமிழ் இலக்கியத்தின் அனைத்து வகைகளிலும் தொடர்ச்சியாகப் பங்காற்றி வருகிறார்.  1977 முதல் தீவிரமாக இயங்கும் இரா.முருகன் கவிதையிலிருந்து சிறுகதை, குறுநாவல் வழியே நாவலுக்கு வந்தவர். மேடை நாடக ஆக்கம், திரைக்கதை உரையாடல் ஆக்கம் என்றும் பங்களித்துள்ளார். அவருடைய அ-புனைகதைப் பரப்பில் பயண-வரலாற்றுக் கட்டுரைகள், இலக்கிய, வெகுஜனப் பத்திரிகை பத்திகள், தமிழில் தொழில்நுட்ப அறிமுகம், மேலாண்மை அறிமுகம், இஸ்லாமிய வங்கியியல் அறிமுகம் ஆகியவையும் அடங்கும். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நாவல், சிறுகதை, கவிதை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். ஆங்கிலத்திலும் கவிதை, பத்திரிகை பத்தி எழுதி வருகிறார்.

பிறப்பு,கல்வி

இரா.முருகன், 1953-ல் தமிழ்நாடு, சிவகங்கையில் இராமசாமி - மீனாட்சி இணையருக்குப்  பிறந்தார். சிவகங்கை அரசர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியும்,   புதுச்சேரியில் உள்ள தாகூர் கலைக்கல்லூரியில் கல்லூரிப் படிப்பும் முடித்தார்.

தனிவாழ்க்கை

இரா.முருகன் வங்கி கிளை அதிகாரியாக எட்டு வருடம் பணியாற்றினார். அங்கிருந்து வங்கி கணினித்துறையில் அடுத்த பதினைந்து வருடம் கணினி மென்பொருள் வடிவமைத்து உருவாக்கும் டெக்னோ பேங்கராக தகவல் தொழில்நுட்பத் துறைக்கு  வந்தார். பிறகு வங்கி கணினித்துறையிலிருந்து தனியார் ஐடி பன்னாட்டு நிறுவனப் பணிக்கு மாறினார். பன்னாட்டு நிறுவனங்களில் வங்கித் தொழில்நுட்பவியல், திட்ட மேலாண்மை துறைகளில் பொது மேலாளராக இந்தியா, பிரிட்டன், தாய்லாந்து, அமெரிக்காவில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வருகிறார்.

1982–ல் திருமணம், மனைவி கிரிஜா. மகள் ஐஸ்வர்யா மற்றும் மகன் அஸ்வின் முருகன். அஸ்வின் முருகன் இந்திய கிரிக்கெட் அணி வீரராக உள்ளார். இரா.முருகனின் மனைவி கிரிஜா 2020 டிசம்பரில் ரத்தப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

இலக்கியவாழ்க்கை

இரா.முருகனின் முதல் படைப்பு தெரு என்கிற கவிதை. 1978ல் கணையாழியில் வெளியானது. 2022 ம் ஆண்டு வரை நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் என 39 புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

இரா.முருகனின் பத்து நாவல்களும், பதினொன்று சிறுகதைத் தொகுதிகளும், மூன்று குறுநாவல் தொகுதிகளும், இரண்டு கணினியியல் நூல்களும், பயண – வரலாற்று நூல் மற்றும் இரு இலக்கியக் கட்டுரைத் தொகுதிகளும், மலையாள நாவல் மொழிபெயர்ப்பாக ஒரு தமிழ் நூலும் (பீரங்கிப் பாடல்கள்) அச்சில் வெளியாகியுள்ளன. இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்ய அகாதமி கோரியபடி எழுத்தாளர் சுஜாதா பற்றி எழுதிய நூலும் வெளியாகியுள்ளது. இவை தவிர, தனி மின் நூல்களாக பதினைந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

இரா.முருகன் எழுதிய தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த புனைவுகள் அந்தத் துறை சார்ந்த தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிப் படைப்புகளாக விளங்குகின்றன. கணினித்துறையின் துவக்க காலத்தில் பொதுவெளியில் அந்தத்துறை குறித்து நிறைய கற்பனை செய்துகொண்டு பலவிதமாக  பேசிக்கொண்டும் இருந்தனர். அதை அவ்வாறே சிலபேர் எழுதவும் செய்தார்கள். அதன் விளைவாக பொதுமக்களிடம் ஒரு தவறான கருத்தே சென்று சேர்ந்தது. அதுவரை அவர் எழுதிய கதைகள் எல்லாமுமே ஐ.டி  வராத கதைகளாக இருந்தன. அவர் எழுத்து தனியாகவும் அவர் பணிபுரியும் துறை தனியாகவும்தான் இருந்தது. அதற்குப் பிறகுதான் ஐ.டி-யைப் பற்றியும் எழுதத் துவங்கினார்.

அவர் கதைகளில் சிலிக்கான் வாசலிலும் லாசரஸ் நாற்பது, இளைப்பாறுதல் போன்ற கதைகளிலும் ஐ.டி .யில் நடுத்தர அல்லது இளைய நிலைகளில் பணிபுரிபவர்களை மையமாக வைத்தது எழுதினார். முதல் இரண்டும் இந்தியா டுடே தமிழ் இதழிலும், இளைப்பாறுதல் இலக்கியப் பத்திரிகையான உயிர்மையிலும்  வந்தன. விடுமுறை தராத அந்த விசித்திர  சம்பவங்களை வைத்து 24X7 என்கிற கதையை ஆனந்த விகடன் தொகுப்புக்காக எழுதினார். இவ்வாறு ஐ.டி யில் இருந்தாலும் பத்து வருடங்கள் ஏதும் அது பற்றி எழுதாமல் இருந்தவர் 1990 களில் ஐ.டி பற்றி எழுத துவங்கினார். அடுத்த பத்தாண்டுக் கதைகளில்  ஐந்துக்கு மூன்று ஐ.டி யைப் பற்றியே இருந்தன. அதன்பின் அந்தத் துறையின் துவக்ககால அலைகள் அடங்கிய பின்னர் மூன்றுவிரல் என்கிற ஐ.டி .துறை குறித்த அவரது முதல் நாவலை 2002இல் எழுதினார். இந்தத் துறை குறித்து, முக்கியமாக ஐடி ஊழியர்கள் பற்றி, அவர்களுடைய work-life balance பிரச்சனைகள் பற்றி, ஐ.டி துறையில் இருக்கிறவனாக சரியான புரிதலைத் தருவது அவரது நோக்கமாக இருந்தது என்று அவர் அதுகுறித்த உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இரா.முருகனின் மாய எதார்த்த இலக்கிய முயற்சிகளில் முக்கியமானது ’அரசூர் நாவல்கள்’ என்றழைக்கப் படுகின்ற தொடர் நாவல்கள். 1850 – 1960 காலகட்டத்தில் நிகழும், தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் வேர்விட்டுப் பரவிய ஒரு குடும்பத்தின் புனைவு கலந்த நான்கு நாவல்கள் – அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே என்று நாவல் தொடராக வெளிவந்தன. ஒன்றிலிருந்து நீண்டு மற்றொன்றாகி அதுவும் நீட்சி கொள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்களில்  நிறைந்திருப்பவை இவை.  2022 ல் வெளியான மிளகு நாவலிலும் அரசூர் வம்சம் நாவல் தொடரின் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றனர். இந்த வரிசையின் முதல் நாவலான அரசூர் வம்சம் நாவல் Ghosts of Arasur என ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது

எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, சுஜாதா, காஃப்கா, குந்தர் கிராஸ், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், பிரைமோ லெவி, வைக்கம் முகமது பஷீர், கவிஞர் மீரா ஆகியோரைத் தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் எனக்  குறிப்பிடுகிறார். தனது மாய எதார்த்த புனைவுகளுக்கு தமிழில் புதுமைப்பித்தன் மற்றும் பாரதியார் ஆகியோரை ஆதர்சங்களாக குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

இரா.முருகன் தன் எழுத்து நடையில் சுஜாதா பாணியை அடித்தளமாகக் கொண்டு அதிலிருந்து தனக்கான தனித்துவ எழுத்துநடையைக் கண்டடைந்தார். நுணுக்கமான மாய எதார்த்தம் வழியாக அவர் சுஜாதாவைக் கடந்து வந்தார்.  வரலாற்றை குறுக்கும் நெடுக்குமாக பிளந்து இஷ்டத்துக்கு அடுக்கி விளையாடும் அரசூர் வம்சம், விஸ்வரூபம் நாவல்கள் வழியாக அவர் தன் தனிமொழியையும் தனிநோக்கையும் தமிழிலக்கியத்தில் நிறுவிக்கொண்டார். பொருளற்ற வாழ்க்கைப்பிரவாகமாக, எல்லா தருணங்களிலும் உரிய அபத்தங்களுடன் நிகழும் வரலாற்றை இரா.முருகன் அவருடைய கதைகளினூடாகச் சித்தரிக்கிறார். இரா.முருகனின் இந்தக் கதை சொல்லல் முறையைத் தமிழிலக்கியத்தின் தனிச்சுவைகளில் ஒன்று என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

தொன்மங்களும் முன்னோர்களும் யதார்த்ததில் எவ்வாறு பொருள் கொள்கின்றன என்பதை சித்தரிப்பதில் இவருடைய இடம்  முக்கியமானது என்று எழுத்தாளர் ஆத்மார்த்தி குறிப்பிட்டுள்ளார்

விருதுகள்

இலக்கியச் சிந்தனை ஆண்டிறுதி விருது, கதா விருது, பாரதி பல்கலைகலைக் கழக விருது போன்றவை பெற்றவர் இரா.முருகன்.

அரசூர் வம்சம் நாவலின் ஆங்கிலப் பதிப்பான தி கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர், இந்திய புக்கர் விருது என்று சிறப்பிக்கப்படும் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது.

2019-ஆம் ஆண்டில் ‘பீரங்கிப் பாடல்கள்’ நூலுக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (மலையாளத்திலிருந்து தமிழ்) கனடா நாட்டின் ‘இலக்கியத் தோட்டம்’ அமைப்பால் இவருக்கு வழங்கப்பட்டது.

2019-இல், மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவுப் பரிசு, மலையாளம் – தமிழ் இலக்கியப் பரிமாற்றத்துக்காக இவருக்கு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தால்   வழங்கப்பட்டது.

படைப்புகள்

நாவல்கள்
  • மூன்று விரல் (நாவல் - கணினித் துறை பற்றிய முதல் தமிழ் நாவல்) இரண்டு வெளியீடுகள்
  • அரசூர் வம்சம்
  • விஸ்வரூபம்
  • அச்சுதம் கேசவம்
  • வாழ்ந்து போதீரே
  • நெம்பர் 40, ரெட்டைத் தெரு (தன் வரலாற்றுப் புனைவு)
  • தியூப்ளே வீதி (தன் வரலாற்றுப் புனைவு)
  • 1975
  • ராமோஜியம்
  • மிளகு
சிறுகதைத் தொகுப்புகள்
  • தேர்
  • ஆதம்பூர்க்காரர்கள்
  • சிலிக்கன் வாசல்
  • முதல் ஆட்டம்
  • ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர்
  • மந்திரவாதியும் தபால் அட்டைகளும்
  • சைக்கிள் முனி
  • இரா.முருகன் சிறுகதைகள் (செம்பதிப்பு - 108 சிறுகதைகள் அடங்கியது)
  • நண்டு மரம்
குறுநாவல்கள்
  • தகவல்காரர்
  • பகல் பத்து ராப்பத்து
  • இரா.முருகன் குறுநாவல்கள்
கட்டுரைத் தொகுப்புகள்
  • கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ் (அறிவியல் கட்டுரைத் தொகுதி - இந்திய அரசின் என்.சி.ஈ.ஆர்.டி பரிசு பெற்றது)
  • ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் (கவிதைத் தொகுதி - வாசுதேவன் நினைவுப் பரிசு)
  • கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம் (அறிவியல் கட்டுரைத் தொகுதி - ராஜாராமனுடன் சேர்ந்து எழுதியது - வரதாச்சாரி விருது)
  • ராயர் காப்பி கிளப்
  • லண்டன் டயரி
  • ப்ராஜக்ட் எம் (பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய முதல் தமிழ் நூல்)
  • வேம்பநாட்டுக் காயல்
  • ஏதோ ஒரு பக்கம்: 23 கட்டுரைகளும் 3 நேர் காணல்களும்
  • சற்றே நகுக - கட்டுரைகள்
  • டிஜிட்டல் கேண்டீன் - கட்டுரைகள்
  • வங்கி மைனஸ் வட்டி: இஸ்லாமிய வங்கியியல் – கட்டுரைகள்
பிற வகைகள்
  • சாவடி – நாடகம்
  • இரா.முருகன் வெண்பாக்கள் – இரு தொகுதிகள்
  • புதுக் கவிதைகள்
  • இரா.முருகன் சிறுகதைகள் (ஒலிப் புத்தகம் - ஆடீயோ புக்)
மொழிபெயர்ப்புகள்
  • பீரங்கிப் பாடல்கள் (நாவல் - மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

  • Ghosts of Arasur (novel - translation of 'Arasur vamsam')

திரைத்துறை பங்களிப்புகள்

இரா.முருகன் திரைப்படங்களில்  திரைக்கதை மற்றும் உரையாடல் ஆக்கம் ஆகியவற்றில் பங்காற்றியுள்ளார்.

  • உன்னைப் போல் ஒருவன் ( 2009 ம் ஆண்டு வெளியானது )
  • பில்லா – 2 ( 2012 ம் ஆண்டு வெளியானது )

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.