under review

எம்.கோவிந்தன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:இதழாளர்கள் to Category:இதழாளர்Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:கவிஞர்கள் to Category:கவிஞர்Corrected Category:சிறுகதையாசிரியர்கள் to Category:சிறுகதையாசிரியர்)
 
Line 111: Line 111:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:கவிஞர்]]
[[Category:இதழாளர்கள்]]
[[Category:இதழாளர்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 11:59, 17 November 2024

கோவிந்த என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோவிந்த (பெயர் பட்டியல்)
எம்.கோவிந்தன்
எம்.கோவிந்தன்
எம்.கோவிந்தன் வாழ்க்கை வரலாறு, எம்.கே.ஸானு
எம். கோவிந்தன் வாழ்க்கை, எம்.டி.உண்ணிக்கிருஷ்ணன்

எம்.கோவிந்தன் (செப்டெம்பர் 18, 1919 - ஜனவரி 23, 1989 ) (மாஞ்சேரத்து தாழத்து கோவிந்தன் நாயர்) கேரளச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் இதழாளர். கேரளச் சிற்றிதழ் இயக்கத்தின் தொடக்கப்புள்ளி என்று கருதப்படுகிறார். தொடக்கத்தில் மார்க்ஸியராக இருந்த எம்.கோவிந்தன் பின்னர் எம்.என்.ராய் தொடங்கிய ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் ஆனார். மலையாளத்தில் நவீனக் கவிதை, நவீன சிறுகதை, நவீன நாவல் உருவாக முன்முயற்சிகள் எடுத்தார்.

பிறப்பு, கல்வி.

எம்.கோவிந்தன் செப்டெம்பர் 18, 1919-ல் கேரளமாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பொன்னானி வட்டத்தில் குற்றிப்புறம் என்னும் ஊரிலுள்ள திருக்கண்ணபுரம் என்னும் பகுதியில் மாஞ்சேரத்து தாழேத்து என்னும் நாயர் இல்லத்தில் தேவகியம்மாவுக்கும் கோயத்துமனைக்கல் சித்ரன் நம்பூதிரிக்கும் பிறந்தார். கோவிந்தனின் அம்மா தேவகி கருணாகரன் நாயர் என்னும் காவல்துறை அதிகாரியை மணந்து சென்னைக்குக் குடியேறியபோது கோவிந்தனும் சென்னைக்குக் குடியேறினார்.

எம்.கோவிந்தன் குற்றிப்புறம் நடுநிலைப்பள்ளியிலும் பின்னர் குற்றிப்புறம் ஏ.வி.உயர்நிலைப் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். சென்னைக்குச் சென்றபின் படிப்பைத் தொடரவில்லை.

தனிவாழ்க்கை

எம்.கோவிந்தன் 1944-ல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் செய்தித் தொடர்புத்துறையில் ஊழியராகச் சேர்ந்தார். சென்னையிலிருந்து சண்டே அப்சர்வர் என்னும் இதழை நடத்திவந்த ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகரான பி.பாலசுப்ரமணிய முதலியார் அப்பதவியை அவருக்கு வாங்கித்தந்தார். தமிழ்நாடு தனி மாநிலமாக ஆனபின்னரும் அப்பதவியில் தொடர்ந்தார். 1958-ல் பதவியை உதறினார்.

எம்.கோவிந்தனின் மனைவி கே.சி. பத்மாவதியம்மா ஒரு மருத்துவர். புகழ்பெற்ற ஓவியரான கே.சி.எஸ்.பணிக்கரின் மருமகள். பத்மாவதியம்மா இலக்கிய ஆர்வம் கொண்டவர். வில்லியம் சரோயனின் The Human Comedy நாவலையும், ஐசக் பாஷவிஸ் சிங்கர் கதைகளையும் மொழியாக்கம் செய்தவர். அரசியல் போராளியும்கூட. கல்விநாட்களில் குருவாயூர் ஆலயநுழைவுப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

எம்.கோவிந்தனின் மகன் ஜி. மானவேந்திரநாத் நாடக நடிகர். ந. முத்துசாமியின் கூத்துப்பட்டறை நாடகமன்றத்துடன் தொடர்புகொண்டு நடித்திருக்கிறார். எம்.கோவிந்தன் அவருடைய மகளின் திருமணம் முடிந்த மறுநாள் மறைந்தார்.

அரசியல்

எம்.கோவிந்தன் தன் உறவினரான இடசேரி கோவிந்தன் நாயர் அளித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய ’சோஷலிசம் எதற்காக?’ என்னும் நூல் வழியாக சோஷலிச இயக்கம் மீது ஆர்வம் கொண்டார். சென்னையில் அவர் முறையான கல்வி கற்கவில்லை என்றாலும் அரசியல் நூல்களை தொடர்ந்து படித்துவந்தார். இந்திய தேசியகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி இதழ்களான ராஜ்யாபிமானி, தொழிலாளி இதழ்களில் அவருடைய கட்டுரைகள் வந்தன

எம்.என்.ராய்

எம். கோவிந்தன் 1939-ல் எம்.என். ராய் நடத்திவந்த இண்டிபெண்டண்ட் இந்தியா (Independent India) இதழில் எம்.கோவிந்தனின் கட்டுரை தென்னிந்தியாவில் சாதியும் வர்க்கமும் (Caste and Class in South India) பிரசுரமாகியது. அக்கட்டுரையில் கோவிந்தன் காந்தியின் தேசிய இயக்கத்தை நிராகரித்து, தென்னகத்திற்கு உடனடித் தேவை சாதியக்கட்டமைப்புகளை தகர்க்கும் அரசியலே என வாதிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து எம்.என்.ராயுடன் அணுக்கமான உறவு உருவானது.

1940-ல் எம்.என்.ராய் ராடிக்கல் டெமாகிராட்டிக் பார்ட்டி (Radical Democratic Party (India) ) வை தொடங்கியபோது அதன் ஆதரவாளரானார். நீதிபதி வி.எம்.தார்குண்டே போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.

எம்.என்.ராய் 1948-ல் ராடிக்கல் டெமாகிராட்டிக் பார்ட்டியை கலைத்துவிட்டு ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் இயக்கம் (Radical Humanist movement) எனும் பண்பாட்டு அமைப்பை உருவாக்கியபோது எம்.கோவிந்தன் அதன் தென்மாநிலங்களின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். தென்னகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட வெவ்வேறு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்லாத இயக்கங்களை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

1954-ல் எம்.என்.ராய் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைந்தபின் எம்.கோவிந்தன் ராடிக்கல் ஹியூமனிஸ்ட் அமைப்பை தனியாகவே தொடர்ச்சியாகந் நடத்திவந்தார்.

சி.ஜே.தாமஸ்

எம்.கோவிந்தனும் மலையாள நாடக ஆசிரியர் சி. ஜே. தாமஸும் இரட்டையர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அணுக்கமான நட்புடன் இருந்தனர். 1949-ல் அவர்கள் இருவரும் சந்தித்தனர். சி.ஜே.தாமஸ் சென்னை பல்கலையில் எம்.லிட் படிக்கச் சென்றபோது அந்த தொடர்பு உருவாகியது. சி.ஜே.தாமஸ் இடதுசாரி இயக்கங்களுடன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்து பின்னர் அவற்றிலிருந்து விலகினார். கம்யூனிஸ்டுக் கொள்கைகள் ருஷ்யச்சார்பாக அமைந்துள்ளன என்று குற்றம்சாட்டிய எம்.கோவிந்தனும் சி.ஜே.தாமஸும் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு தலைமையில் கேரளத்தில் அமைந்த முதல் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டனர்.

1958-ல் எம்.கோவிந்தன் அரசியலிலிருந்து விலகி முழுமையாகவே இலக்கியச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

இதழியல்

எம்.கோவிந்தன் நவசாகிதி, கோபுரம், சமீக்ஷா ஆகிய சிற்றிதழ்களை நடத்தினார். சமீக்ஷா கேரளத்தில் நவீன இலக்கியத்தின் அடித்தளத்தை அமைத்த சிற்றிதழாகக் கருதப்படுகிறது. மலையாளத்தின் நவீனக் கவிதைகள் எம்.கோவிந்தனின் சமீக்ஷா இதழில்தான் வெளிவந்தன.

இலக்கியவாழ்க்கை

இலக்கியச் செயல்பாட்டாளர்

எம்.கோவிந்தன் முதன்மையாக இலக்கியச் செயல்பாட்டாளராகவே இருந்தார். அவர் மேடைப்பேச்சாளர் அல்ல. உரையாடலே அவருடைய வடிவம். சென்னையிலிருந்து கிளம்பி கேரளம் வழியாக நாகர்கோயில் வரை வந்து திரும்புவது அவர் வழக்கம். வழியில் வெவ்வேறு நகர்களில் விடுதிகளிலும் நண்பர்களின் இல்லங்களிலும் தங்கி அவர் தன்னை தேடிவரும் இளைஞர்களுடன் உரையாற்றுவார். அவ்வாறு வந்த இளைஞர்கள் வழியாக அவர் ஓர் இலக்கிய அலையை உருவாக்கினார்.

மலையாள மொழியின் நவீனத்துவ இலக்கிய மரபே எம்.கோவிந்தன் உருவாக்கியது என்று சொல்லப்படுகிறது. சி.ஜே.தாமஸ், எம்.கே.சானு, பி.கே.பாலகிருஷ்ணன், ஐயப்பப் பணிக்கர் போன்றவர்கள் எம்.கோவிந்தனின் நண்பர்கள். ஆற்றூர் ரவிவர்மா, கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் போன்ற கவிஞர்களும்; எம்.கங்காதரன், துண்டத்தில் கிருஷ்ண பிரசாத் போன்ற அரசியல் சிந்தனையாளர்களும்; எம்.வி.தேவன், நம்பூதிரி, போன்ற ஓவியர்களும்; என்.ஆர்.எஸ். பாபு, எஸ்.ஜெயச்சந்திரன் நாயர் போன்ற இதழாளர்களும், அடூர் கோபாலகிருஷ்ணன், மங்கட ரவிவர்மா, ஜி. அரவிந்தன் போன்ற திரைக்கலைஞர்களும்; ஓ.வி.விஜயன், ஆனந்த், காக்கநாடன் என ஏராளமான எழுத்தாளர்களும் எம்.கோவிந்தனை ஆசிரியராகக் கொண்டு உருவாகி வந்தவர்கள். அவர்கள் கேரளப்பண்பாட்டின் முகத்தையே மாற்றியமைத்தனர்.

கவிஞர்

எம்.கோவிந்தன் மலையாளத்தில் யாப்பற்ற கவிதைகளை உருவாக்க முன்முயற்சி எடுத்தவர். அவர் எழுதிய வசனகவிதைகள் பின்னாளில் மலையாள நவீனக்கவிதை உருவாக வழிவகுத்தன. அவர் முயற்சியால் மலையாளத்தின் முதல் நவீனக்கவிதை தொகுதியான புதுமுளகள் வெளிவந்தது.

சிறுகதையாசிரியர்

எம்.கோவிந்தன் குறைவாகவே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய சர்ப்பம் என்னும் சிறுகதை மலையாளச் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

தத்துவப் பார்வை

தனிமனிதவாதம்

எம்.கோவிந்தன் மலையாளத்தில் ‘தனிமனிதவாத’ பார்வையை முன்வைத்தவர். அன்றைய அரசியலியக்கங்கள் மனிதனை சமூக இயக்கங்களின் துளியாக மட்டுமே பார்த்த சூழலில் தனிமனித சிந்தனைச் சுதந்திரம், தனிமனிதனின் அகத்தேடல் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக முன்வைத்தார். ’நாக்குதான் அடிப்படை. அதுவே சுவை, அதுவே பேச்சு’ என்னும் அவருடைய புகழ்பெற்ற கூற்று அவருடைய பார்வையை வெளிப்படுத்துவது. முற்றிலும் அகச்சுதந்திரம் கொண்ட தனிமனிதர்களின் இயல்பான திரளாகவே ஓர் உதாரணச் சமூகம் அமையமுடியும் என்றும், மேலிருந்து எந்த அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்பட்டாலும் அது அடிமைச்சமூகமே என்றும் கோவிந்தன் வாதிட்டார். ஆகவே சோவியத் ருஷ்யாவில் ஸ்டாலினும், சீனாவில் மாவோ சே துங்கும் முன்வைத்த கம்யூனிஸ்டு அரசுகளுக்கும், அவற்றை முன்வைத்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கும் கடுமையான எதிரியாக கோவிந்தன் திகழ்ந்தார்.

இந்து எதிர்ப்பு வாதம்

கோவிந்தன் ஈ.வெ.ராமசாமிப் பெரியாருக்கும் பின்னர் சி.என்.அண்ணாத்துரைக்கும் அணுக்கமானவர். இந்து சிந்தனைமரபு, இந்து மதம் ஆகியவற்றுக்கு மிகக்கடுமையான எதிர்நிலைபாடு கொண்டிருந்தார். மரபான பார்வை என்பது புதிய சிந்தனைகளுக்கு எதிரான சக்தி என வாதிட்ட கோவிந்தன் வைதிகமரபின் சாயல் கொண்ட அனைத்தையும் தவிர்த்துவிட்டு அவற்றால் அடிமைப்படுத்தப்பட்டு பண்பாட்டின் அடியில் உறையும் நாட்டாரியல் கூறுகளையும், பழங்குடிப் பண்பாட்டையும் மீட்டெடுத்து அவற்றை நவீனத்துவத்துடன் இணைக்கவேண்டும் என்று வாதிட்டார்

சம்ஸ்கிருத எதிர்ப்பு

எம்.கோவிந்தன் சம்ஸ்கிருதப் பண்பாடு ஆயிரமாண்டுகளாக இந்தியாவின் துணைத்தேசியப் பண்பாடுகளையும் வட்டார மொழிகளையும் வளர்ச்சிகுன்றச் செய்தது என்று எண்ணினார். ஆகவே எல்லா மொழிகளிலும் கூடுமானவரை சம்ஸ்கிருதநீக்கம் செய்யப்படவேண்டும் எனக் கருதினார். மலையாளத்தில் சம்ஸ்கிருதச் சொற்களைத் தவிர்த்து, வட்டாரச் சொற்களையும் தமிழ்ச்சொற்களையும் கூடுமானவரை பயன்படுத்தி எழுதவேண்டும் என வாதிட்ட அவர் அதை ‘நாட்டுமலையாளம்’ என அழைத்தார். நாட்டுமலையாள இயக்கம் அவரால் தொடங்கப்பட்டது.

திரைப்படம்

எம்.கோவிந்தனின் 'நோக்குகுத்தி' என்னும் நீள்கவிதை மங்கட ரவிவர்மாவால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கி 1973-ல் வெளிவந்த 'சுயம்வரம்' என்னும் திரைப்படமே மலையாள கலைப்பட இயக்கத்தின் தொடக்கம். அந்தப்படம் எம்.கோவிந்தனின் முதல்முயற்சியால் உருவானது. மலையாளக் கலைப்பட இயக்கத்தில் முதன்மைநிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜி.அரவிந்தனின் 'காஞ்சனசீதா' எம்.கோவிந்தனின் முன்னெடுப்பில் எஸ்.ஜெயச்சந்திரன் நாயர் தயாரிப்பில் உருவானது.

மறைவு

எம்.கோவிந்தன் ஜனவரி 23, 1989-ல் குருவாயூரில் மறைந்தார்.

நினைவுகள், இலக்கியப் பதிவுகள்

தமிழ்
  • எம்.கோவிந்தன் பற்றி தமிழில் சுந்தர ராமசாமி நினைவுப்பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். கி.ஆ.சச்சிதானந்தமும் ஒரு நினைவுக்குறிப்பு எழுதியிருக்கிறார்.
  • சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் சி.ஜே.தாமஸ் ஜே.ஜே என்னும் கதைநாயகனாகவும் அவர் நண்பரான எம்.கே.ஐயப்பன் என்னும் கதாபாத்திரமாக எம்.கோவிந்தனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்
மலையாளம்
  • எம்.கோவிந்தன் ஸ்மரணிக (1993) ஐ.வி.ஸ்ரீதரன்
  • எம்.கோவிந்தன் (வாழ்க்கை வரலாறு) (2002) எம்.கே.ஸானு
  • எம்.கோவிந்தன் ஜீவிதமும் ஆசயமும் (2008 )- இ.ராதாகிருஷ்ணன்
  • அனாதம் ஈ அக்னி வீண. (2017). எம்.டி.உண்ணிக்கிருஷ்ணன் (கோவிந்தன் வாழ்க்கை சார்ந்த நாவல்)

பண்பாட்டுப் பங்களிப்பு

அரசியல் சிந்தனை

எம்.கோவிந்தன் கேரளச் சிந்தனையில் மார்க்ஸியப்பார்வை, மரபான பார்வை ஆகியவற்றுக்கு எதிராக நவீனத்துவச் சிந்தனை உருவாக முதற்புள்ளியாக அமைந்தார். தனிமனிதனை அலகாகக்கொண்ட சுதந்திர சிந்தனைக்காக வாதிட்டார்.

இலக்கியம்

எம்.கோவிந்தன் மலையாளத்தில் நவீன இலக்கியம் உருவாக வழியமைத்த முன்னோடி. இலக்கியம் என்பது சமூகசீர்திருத்தக் கருவி என்ற அளவிலேயே இந்திய தேசிய இயக்கத்தாலும், பின்னர் கம்யூனிஸ்டு இயக்கத்தாலும் முன்வைக்கப்பட்டது. அதை எதிர்த்து இலக்கியம் என்பது ஆசிரியனின் அகவெளிப்பாடு என்றும், ஒரு சமூகத்தின் கூட்டுநனவிலியின் வெளிப்பாடு என்றும் வாதிட்டவர் எம்.கோவிந்தன். மரபான இலக்கிய வெளிப்பாடுகளுக்கு எதிராக நவீன வடிவங்களை முன்வைத்தவர்.

கலை

கலையில் செவ்வியல் கலை மற்றும் ஆலயம் சார்ந்த கலைகளை தவிர்த்து நாட்டார்கலைகளை முன்னிறுத்தவும் அவற்றுக்கும் நவீனக்கலைவடிவங்களுக்கும் இடையே ஓர் ஆக்கபூர்வமான உரையாடல் உருவாகவும் எம்.கோவிந்தன் தொடர்ச்சியாக முயன்றார். அவருடைய ' நோக்குகுத்தி; போன்ற படங்களும் அம்முயற்சியின் பகுதிகளே.

தமிழ்ச் செல்வாக்கு

எம்.கோவிந்தன் நீண்டநாள் சென்னையில் வாழ்ந்தார். சென்னை ஹாரீஸ் சாலையில் இருந்த அவருடைய இல்லம் தமிழ் இலக்கியவாதிகள் பலருக்கு அணுக்கமான இடமாக இருந்தது. சுந்தர ராமசாமி, கி.ஆ.சச்சிதானந்தம், சா.கந்தசாமி, ஞானக்கூத்தன், ந. முத்துசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் போன்ற பலர் அவருக்கு அணுக்கமானவர்களாக இருந்தனர். க.நா.சுப்ரமணியம் கோவிந்தனை அறிந்திருந்தார். அவருடனான உரையாடல்கள் தமிழிலும் நவீனத்துவ சிந்தனைகள் உருவாக அடிப்படையாக அமைத்தன.

நூல்கள்

கவிதைகள்
  • ஒரு பொன்னானிக்காரன்றே மனோராஜ்யம்
  • நாட்டுவெளிச்சம்
  • கோவிந்தன் கவித
  • அரங்கேற்றம்
  • மேனகா
  • நோக்குகுத்தி
  • மாமாங்கம்
  • ஞானஸ்நானம்
  • ஒரு கூடியாட்டத்தின்றே கத
  • தொடர்க்கணி
நாடகம்
  • நீ மனுஷ்யனே கொல்லருது
  • செகுத்தானும் மனுஷ்யரும்
  • ஓஸ்யத்து
கதைகள்
  • மணியார்டரும் பிற கதைகளும்
  • சர்ப்பம்
  • ராணியுடே பட்டி
  • பஷீரின்றே புன்னார மூஷிகன்
மொழியாக்கம்
  • விவேகமில்லெங்கில் விநாசம்
  • இனி இவிடேநிந்நு எங்ஙோட்டு?
கட்டுரைகள்
  • பூணூலிட்ட டெமாக்ரஸி
  • ஜனாதிபத்யம் நம்முடே நாட்டில்
  • புதிய மனுஷ்யன் புதிய லோகம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Oct-2022, 07:59:45 IST