under review

திருமூல நாயனார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 77: Line 77:
* [https://temple.dinamalar.com/news_detail.php?id=1430 திருமூல நாயனார் : தினமலர் இதழ் கட்டுரை]  
* [https://temple.dinamalar.com/news_detail.php?id=1430 திருமூல நாயனார் : தினமலர் இதழ் கட்டுரை]  
* சேக்கிழாரின் பெரிய புராணம்: பா.சு. ரமணன். தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு  
* சேக்கிழாரின் பெரிய புராணம்: பா.சு. ரமணன். தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு  
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|29-Jun-2023, 20:25:10 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:50, 13 June 2024

திருமூல நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

திருமூல நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

தொன்மம்

சிவபெருமான் உறையும் திருக்கயிலையைக் காப்பவர் நந்தி எம்பெருமான். இவருடைய நான்கு சீடர்களுள் ஒருவர் சுந்தரநாதர். இவர் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர். இவர், பொதிய மலையில் வாழ்ந்து வரும் அகத்தியருடன் சில நாட்கள் வசிக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் கயிலையிலிருந்து பொதிகை மலைக்குப் புறப்பட்டார்.

செல்லும் வழியில் காசி உள்ளிட்ட பல தலங்களை தரிசித்துவிட்டுத் தமிழ்நாட்டுக்கு வந்தார். காஞ்சிபுரம், சிதம்பரம் போன்ற தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டார். பின் திருவாவடுதுறைக்குச் சென்றார். அங்கு சிவபெருமானை வழிபட்டார். அதன் அருகிலுள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பினார். அதனால் காவிரி ஆற்றை ஒட்டிய பாதையில் சென்றார்.

பசுக்களின் கதறல்

சுந்தரநாதர் செல்லும் வழியில், பசுக்கூட்டங்கள் சில கதறிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தப் பசுக்களை மேய்த்து வந்தவனான மூலன் என்பவன் நாகம் தீண்டி இறந்ததால்,அது குறித்து வருந்தி பசுக்கள் கண்ணீர் விடுவதை அறிந்தார். அவரது உள்ளத்தில் இப்பசுக்களின் துயரத்தினை நீக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று.

கூடுவிட்டுக் கூடு பாய்தல்

இடையன் மீண்டும் உயிருடன் வருவதால் மட்டுமே பசுக்களின் துயரத்தைப் போக்க முடியும் என்பதால், மலையின் ஓரிடத்தில் பாதுகாப்பாகச் சிவயோகியான சுந்தரநாதர் தனது உடலைக் கிடத்தி விட்டு, இறந்த இடையனின் உடலுக்குள் தனது உயிரைச் செலுத்தினார். கூடு விட்டுக் கூடு பாய்ந்து இடையன் மூலனாக உயிர்பெற்று எழுந்தார். உடனே அங்கிருந்த பசுக் கூட்டங்கள் அனைத்தும் மகிழ்ச்சியால் துள்ளின. அவரைச் சூழ்ந்து தங்கள் அன்பைத் தெரிவித்தன. இடையன் உருவில் இருந்த சிவயோகியும் அவற்றைத் தட்டிக் கொடுத்துத் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

சிவயோகி, பசுக்களை அவை விரும்பும் வகையில் மேய விட்டார். பின் மாலையானதும் வீடு நோக்கி அவை தாமாகப் புறப்பட, மூலன் வடிவில் இருந்த சிவயோகியும் பின் தொடர்ந்து சென்றார். அவை ஒவ்வொன்றாக அவற்றின் வீடுகளை அடைய, சிவயோகி மட்டும் தனி ஒருவராக நின்று கொண்டிருந்தார்.

மூலன் மனைவிக்கு அறிவுரை

இந்நிலையில் பொழுது கடந்த பின்னும் வராத தன் கணவரைக் காணாது தவித்த மூலனின் மனைவி, அவனைத் தேடி வந்தாள். மூலன் ரூபத்தில் இருந்த சிவயோகியைக் கண்டு இல்லத்திற்கு வருமாறு அழைத்தாள். அவரைத் தீண்ட முற்பட, மூலரோ உடனே அஞ்சி விலகினார். அது கண்டு வருந்திய இடையன் மனைவி மீண்டும் அவரை வலியுறுத்தி அழைத்தாள்.

மூலன் உருவில் இருந்த சிவயோகி, “அம்மா... உனக்கும் எனக்கும் எவ்வித உறவுமில்லை. அதனால் உன் வீட்டிற்கு நான் வருதல் சாத்தியமில்லை. நீ ஆலயம் சென்று சிவபெருமானை வணங்கித் துதிப்பாயாக” என்று சொல்லி விட்டு, அவ்வூரில் உள்ள சிவமடம் ஒன்றிற்குச் சென்று சிவயோகத்தில் ஆழ்ந்தார்.

உண்மை உணர்த்துதல்

கணவரது மாறுபட்ட செய்கைக்குக் காரணம் புரியாது தவித்த மனைவி ஊர்க்காரர்களிடம் அது குறித்து முறையிட்டாள். ஊர்க்காரர்கள் அவரைத் தேடி, சிவமடத்தில் அவர் இருப்பதைக் கண்டறிந்தனர். அங்கு அவரது தியான நிலையைக் கண்டவர்கள், அப்பெண்ணிடம், “அம்மா. இவர் இருப்பது மிக உயரிய நிலை. யாவராலும் அடைவதற்கரிய நிலை. இவரை உங்களுள் ஒருவராக இனியும் கருதி, இல்வாழ்க்கையில் ஈடுபடுவாரென நம்பிக் காத்துக் கொண்டிருக்க வேண்டாம்.” என்று அறிவுறுத்தினர். அதுகேட்டு மயங்கிய மூலனின் மனைவியை மற்றவர்கள் அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றனர்.

தியானத்திலிருந்து விழித்த சிவயோகி தான் உடலைக் கிடத்திய இடத்திற்குச் சென்று பார்த்தபோது அது அங்கு காணப்படாததால் திகைத்தார். இறைவனது திருவிளையாடலே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தார். தன்னைப் பின் தொடர்ந்து வந்த மூலனின் உறவினர்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்தினார். பின் திருவாவடுதுறை தலத்தை அடைந்தார்.

திருமந்திரம்

இறைவனைத் தொழுது, ஆலயத்தின் அருகே இருக்கும் அரச மரத்தின்கீழ்ச் சென்று சிவயோகத்தில் அமர்ந்தார்.

இறைவனின் அருள் பெற்று, உயிர்களின் மாயை நீங்கி அவை ஞானம் பெற்று உய்யும் பொருட்டு சரியை, கிரியை, ஞானம், யோகம் போன்ற தலைப்புகளில் பாடல்கள் இயற்றத் தொடங்கினார். “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்” என்று தொடங்கி மூவாயிரம் பாடல்களை, ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற அளவில் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பாடி முடித்தார். அப்பாடல்கள் திருமந்திரம் என்ற நூலில் இடம்பெறுகின்றன. திருமந்திரம் சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

சிவபதம்

‘திருமந்திரம்’ என்னும் ஒப்புயர்வற்ற நூலை உலகுக்கு வழங்கிய திருமூலர், இறுதியில் சிவபெருமானது திருவருளினால் திருக்கயிலையை அடைந்து அவரை என்றும் பிரியாதபடி வாழும் வரம் பெற்றார்.

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் – சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

சிவயோகி, அகத்தியரைத் தரிசிக்க விரும்பியது

மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார்
கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால்
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார்

பசுக்களின் கதறலைக் கண்டது

அந்நிலைமைத் தானத்தை அகலாதது ஒரு கருத்து
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப்
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள்
பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார்

கூடுவிட்டுக் கூடு பாய்தல்

இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று
அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும்
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற
பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார்

மூலனின் மனைவிக்கு மறுப்பு

அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள்
தங்கி வெரு உற மயங்கி 'என் செய்தீர்' எனத் தளர
இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்துப்
பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொது மடத்தின் உள்புகுந்தார்

திருமூலர், திருமந்திரம் இயற்றியது

ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய
ஞானம் முதல் நான்கும் அலர் நல் திரு மந்திர மாலை
பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்று ஆகப் பரம் பொருள் ஆம்
ஏன எயிறு அணிந்தாரை 'ஒன்று அவன்தான்' என எடுத்து

திருமூலர் சிவபதம் பெற்றது

முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து
சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை
தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார்.

குரு பூஜை

திருமூல நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஐப்பசி மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jun-2023, 20:25:10 IST