under review

தி. வே. கோபாலையர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 109: Line 109:
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6901 தமிழ்நூற்கடல் பண்டித கோபாலையர், தென்றல் இதழ், ஜனவரி 2011]
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6901 தமிழ்நூற்கடல் பண்டித கோபாலையர், தென்றல் இதழ், ஜனவரி 2011]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:38, 23 November 2023

தி.வே.கோபாலையர்

தி. வே. கோபாலையர் (ஜனவரி 22, 1929 - ஏப்ரல் 1, 2007) தமிழறிஞர், உரையாசிரியர், தமிழாசிரியர், பதிப்பாசிரியர், சொற்பொழிவாளர், பன்மொழி அறிஞர். இலக்கண,இலக்கிய நூல்களை ஆய்ந்து, புத்துரைகளுடன் செம்பதிப்பாகக் கொண்டு வந்தார்.

பிறப்பு, கல்வி

தி.வே. கோபாலையர் ஜனவரி 22, 1929 அன்று தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் வேங்கடசாமி ஐயர்-லட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு முதல் மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 4 தம்பியர், 2 தங்கைகள்.

கோபாலையர் மன்னார்குடியில் சரஸ்வதி அம்மாள் பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார். 1940-ல் சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்தார். 1945-ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்துவான் தேர்வில் தேறி முதல் இடம் பெற்று ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார். மு. இராகவையங்கார் கோபாலையரைத் தன்னுடன் திருவனந்தபுரத்தில் ஆய்வில் ஈடுபட அழைத்தும், குடும்ப சூழலால் போக முடியவில்லை. 1951-ல் பி.ஓ.எல். பட்டம் பெற்று . 1953-ல் பண்டிதர் தேர்வில் முதலிடத்தில் தேறினார். 1958-ல் பி.ஓ.எல். பட்டப்படிப்பை முதல் இடம் முடித்தார்.

தனிவாழ்க்கை

தி.வே. கோபாலையர் 15 ஆண்டுகள் தஞ்சை செயிண்ட் பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் கோபாலையரின் மாணவராக இருந்தார்.

1946-ல் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்றார். 15 ஆண்டுகள் தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணிபுரிந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் க.வெள்ளை வாரணர், முனைவர் கு. சுந்தரமூர்த்தி போன்றவர்கள் அவரது மாணவர்களாக இருந்தனர். சேலம், திருக்காட்டுப்பள்ளி ஆகிய ஊர்களில் கல்லூரிகளில் பணியாற்றினார். 1965-ல் திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வராகப் பணியேற்றார். 1979 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரான்சிய கீழைத்திசை கல்விக்கூடத்தில் (Ecole française d'Extrême-Orient) ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், பதிப்பாளராகவும் பணியைத் தொடங்கி தன் இறுதிக் காலம் வரை அப்பணியைச் செய்தார். உலகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் பலர் வந்து இவரிடம் தமிழ் கற்றனர். அவ்வாறு கற்ற மாணவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்தபோது தி.வே. கோபாலையர் அவர்களுக்கு அப்பணியில் உதவி புரிந்தார்.

கோபாலையர் தமிழ் தவிர சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.

தி.வே. கோபாலையர் 1949-இல் ருக்மணி அம்மாளை மணந்தார். மகன் ராமச்சந்திரன், மகள் புஷ்கலா.

இலக்கிய வாழ்க்கை

பதிப்பியல்

கோபாலையர் பல இலக்கண இலக்கியங்களைப் பதிப்பித்தார், அவற்றுக்குப் புத்துரைகள் எழுதினார். தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்துக்காக அவர் ஒப்புநோக்கி பதிப்பித்த இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், வண்ணத்திரட்டு போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 'இலக்கண விளக்கம்' நூலுக்கு முழு உரை எழுதிப் பதிப்பித்தார். 'வீரசோழிய ஆய்வு', 'கம்பராமாயணத்தில் தம்பிமார்கள்', 'கம்பராமாயணத்தில் தலைமைப் பாத்திரங்கள்' போன்ற நூல்களும் முக்கியமானவை.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக மணிமேகலை காப்பியச் செம்பதிப்புப் பணியை முடித்தார். தொல்காப்பியம்-செம்பதிப்பின் 14 பகுதிகளையும் பதிப்பித்தார்.

மொழியாக்கங்கள்

மணிமேகலை ஆங்கில மொழியாக்கமும், சேனாவரையத்தின் பிரெஞ்சு மொழியாக்கமும், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய 'சோழர் கால கலைப்பணி' நூலின் தமிழாக்கமும் இவரது முயற்சியால் உருப்பெற்றன.

2005-ல் கலிபோர்னியாவில் வெளியிடப்பட்ட 'சீவக சிந்தாமணி' யின் 1165 பாடல்களின் ஆங்கில மொழியாக்கத்தில் கோபாலையர் பெரிதும் உதவியதாக மொழியாக்கம் செய்த ஜேம்ஸ்.டி. ரயன் குறிப்பிட்டார். இணை ஆசிரியராக கோபாலையரின் பெயரை ரயன் குறிப்பிட விரும்பியதாகவும் கோபாலையர் அதை மறுத்ததாகவும் ரயன் குறிப்பிட்டார்.

ஆய்வுகள்

சைவ, வைணவ இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார் கோபாலையர். வைணவ இலக்கியங்களில் பல ஆய்வுகள் புரிந்தார். திருப்பதிக் கோவை பற்றி ஆய்வு செய்தார். வைணவத் தமிழ் அகராதியைத் தயாரித்தார்.

தி.வே. கோபாலையர் சிறந்த சொற்பொழிவாளர். பல ஊர்களில் சொற்பொழிவுகள் மூலம் தமிழ் நூல்களை மக்களுக்கு அறிமுகம் செய்தார். பல இதழ்களில், மலர்களில் ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தார். பல கருத்தரங்குகளில் உரையாற்றினார்.

தேவாரத்தை எண்மமயமாக்கும்(digitize) செய்யும் பணியில், பண் முறைப்படியும், ராகங்களின் அடிப்படையிலும் தேவாரத்தை இசை வடிவில் பதிப்பிப்பதில் ழான் லூக் ஷெவியடுக்கு ( Jean -Luc-Chevillard) உதவியாகவும் உறுதுனையாகவும் இருந்தார்.

விருதுகள், பரிசுகள்

  • தருமையாதீனத் திருமடம் 'செந்தமிழ்க் கலாநிதி' - 1994
  • திருப்பனந்தாள் காசித் திருமடம் 'சைவ நன்மணி' - 1997
  • புதுச்சேரித் தமிழ்ச் சங்கம் - ""நூற்கடல் - 1982
  • புதுச்சேரி அரசு - 'கலைமாமணி' - 2002
  • சென்னை - வடமொழிச் சங்கம் 'சாகித்திய வல்லப - 2002
  • பொங்கு தமிழ் விருது - 2003
  • தமிழக அரசு - திரு. வி. க. விருது - 2005
  • சடையப்ப வள்ளல் விருது - 2006
  • கபிலர் விருது - 2006

மதிப்பீடு

தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆய்ந்து, புத்துரையுடன் செம்பதிப்பாகப் பதிப்பித்தது தி.வே, கோபாலையரின் முக்கியமான பங்களிப்பாகக் கருதப்படுகிறது. இலக்க விளக்கம் நூலை முழு விரிவுரையுடன் பதிப்பித்தது குறிப்பிடத்தக்க பணி. அச்சில் உள்ள நூல்களை அப்படியே பதிப்பிக்காமல் அவற்றில் பிழைகள் உள்ளதா என நோக்கி, ஓலைசுவடிகளுடன் ஒப்பிட்டு, தேவைப்படும் இடங்களில் குறிப்புகளை இணைத்து கவனமாகப் பதிப்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். அவரது வடமொழிப் புலமை தமிழ் இலக்கணத்தில் இடம்பெறும் வடமொழிக் கூறுகளுக்கு தெளிவான உரை எழுத உதவியது. பிரெஞ்ச், ஆங்கில மொழிகளில் அவருக்கிருந்த புலமையால் பல தமிழ் இலக்கியங்களின் மொழியாக்கங்களில் உதவி புரிந்து பெரும் பங்காற்றினார்.

மறைவு

புதுவையில் வாழ்ந்த தி. வே. கோபாலையர் ஏப்ரல் 1, 2007-ல் ஸ்ரீரங்கத்தில் உள்ள தமது மகளின் வீட்டில் காலமானார்.

நூல் பட்டியல்

  • இலக்கண விளக்கம்: எழுத்ததிகாரம் 1970
  • இலக்கண விளக்கம்: சொல்லதிகாரம் 1971
  • இலக்கண விளக்கம்: பொருளதிகாரம்
  • அகத்திணையியல் - 2 தொகுதி 1972
  • புறத்திணையியல் 1972
  • அணியியல் 1973
  • செய்யுளியல் 1974
  • பாட்டியல் 1974
  • இலக்கணக் கொத்து உரை 1973
  • பிரயோக விவேக உரை 1973
  • திருஞானசம்பந்தர் தேவாரம் சொற்பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன், 1984
  • திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் சொற் பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன் செம்பதிப்பு 1985
  • தேவார ஆய்வுத் துணை - தேவாரம் பற்றிய விரிவான செய்திகளுடன் 1991
  • வீரசோழிய உரை - விரிவான விளக்கங்களுடன் 2005
  • தமிழ் இலக்கணத்தின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐம் பகுப்புக்களிலுள்ள இலக்கண மரபுச் சொற்களுக்குத் தொல்காப்பியம் முதல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட விருத்தப்பாவியல் இறுதியான வழக்கத்தில் உள்ள இலக்கண நூல்களையும் அவற்றின் உரைகள் பலவற்றையும் உட்கொண்டு விரிவான மேற்கோள் எடுத்துக்காட்டுக்களுடன் தொகுக்கப்பட்ட தமிழ் இலக்கண மரபுச் சொல் அகர வரிசை 2006
  • திருமங்கை மன்னனுடைய ஆறு பிரபந்தங்களுக்கும் மணிப்பிரவாள நடையில் வரையப்பட்ட பெரிய வாச்சான் பிள்ளை அவர்களின் உரைக்குத் தெளிவான தமிழாக்கம் - 2006
  • மாறன் அலங்காரம் - பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் 2006
  • மாறன் அகப்பொருளும் திருப்பதிக் கோவையும் - புதிதாக எழுதப்பட்ட விளக்கங்களுடன் 2006
  • இலைமறை கனிகள் - இலக்கணக் கட்டுரைகள் - தெளி தமிழில் வெளிவந்தவை 2006
சிறு நூல்கள்
  • தொல்காப்பியச் சேனாவரையம் - வினா விடை விளக்கம்
  • கம்பராமாயணத்தில் முனிவர்கள் - 1994
  • கம்பராமாயணத்தில் தம்பிமார்கள் - 2 தொகுதி 1995, 1996
  • கம்பராமாயத்தில் தலைமைப் பாத்திரங்கள் - 1998
  • சீவக சிந்தாமணி - காப்பிய நலன் - 1999 கம்ப ராமாயணப் படலச் சுருக்கம்
  • பால காண்டம் - 1999
  • அயோத்தியா காண்டம் - 1999
  • சுந்தர காண்டம் - 1999
  • உயுத்த காண்டம் - 2000
  • சீவக சிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் - 2002
மொழியாக்கத்தில் உதவி
  • எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனின் ஆங்கில நூலின் சோழர் காலப் கலைப்பணி - தமிழ் ஆக்கம்.
  • ஆலன் டேனியலுவின் "மணிமேகலை' ஆங்கில மொழிபெயர்ப்பு
  • சேனாவரையத்தின் பிரெஞ்சு மொழி ஆக்கம்.
  • சித்தாந்த வகுப்புகள்
  • உண்மை விளக்கம்
  • திருவருட் பயன்.
தொடர் சொற்பொழிவுகள்
  • பெரிய புராணம்
  • கம்ப ராமாயணம்
  • சீவக சிந்தாமணி
  • திங்கள்தோறும் சதயத் திருநாளில் திருவாமூரில் திருமுறை விளக்கவுரை

உசாத்துணை


✅Finalised Page