under review

வீரமாமுனிவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 107: Line 107:
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM1lupy.TVA_BOK_0008702 தேம்பாவணி மின்னூல்]
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM1lupy.TVA_BOK_0008702 தேம்பாவணி மின்னூல்]
* [https://archive.org/details/Sathurakarathi2005/page/n23/mode/2up?view=theater சதுரகராதி மின்னூல்]
* [https://archive.org/details/Sathurakarathi2005/page/n23/mode/2up?view=theater சதுரகராதி மின்னூல்]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:கிறிஸ்தவ மதபோதகர்கள்]]
[[Category:கிறிஸ்தவ மதபோதகர்கள்]]

Revision as of 09:42, 5 November 2023

வீரமாமுனிவர்
வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் (தைரியநாதர்) (கான்ஸ்டண்டைன் ஜோசஃப் பெஸ்கி, Constantine Joseph Beschi) ( (நவம்பர் 8, 1680 – பிப்ரவரி 4, 1742) ஒரு ஐரோப்பியத் தமிழறிஞர். தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் இருந்து இந்தியா வந்து, தமிழ் கற்று, இலக்கண இலக்கிய நூல்களும் அகராதிகளும் இயற்றி, தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய கிறிஸ்தவப் பாதிரியார்களில் ஒருவர். தமிழ்த்தன்மை கொண்ட கிறிஸ்தவ மரபை உருவாக்கியவர்களில் முன்னோடி. தனித்தமிழுக்கான முதல் விதைகளை ஊன்றியவர். வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி என்னும் செய்யுள் நூலும், சதுரகராதி என்னும் தமிழ் அகராதியும் முக்கியமான படைப்புகள்.

பிறப்பு, கல்வி

வீரமாமுனிவர் சிலை,சென்னை

கான்ஸ்டண்டியஸ் ஜோசஃப் பெஸ்கி Constantine Joseph Beschi என்னும் இயற்பெயர் கொண்ட வீரமாமுனிவர் வடக்கு இத்தாலியின் லம்பார்டி பகுதியில் உள்ள மண்டுவா மாகாணத்தில் காஸ்டில்யோனே டெல்லெ ஸ்டிவியரி( Castiglione delle Stiviere) என்னும் ஊரில் 1680-ல் பிறந்தார். தந்தை கொண்டால்ஃபோ பெஸ்கி, தாய் எலிசபெத். ஜோசஃப் பெஸ்கி பொலொன்யாவிலும் ரவென்னாவிலும் இறைஊழியத்துக்கான கல்வி பயின்றார்.

இத்தாலிய மொழி தவிர கிரேக்கம், எபிரேயம் (ஹீப்ரு), லத்தீன், பிரெஞ்சு மொழிகள் கற்றிருந்தார்.

இறையியல் வாழ்க்கை

பெஸ்கி அவருடைய பதினெட்டாவது வயதில் 1698-ல் இயேசு திருச்சபை(ஜெசுவிட்) ஊழியராக ’மதுரை மிஷன்’ என்றழைக்கப்பட்ட கிறிஸ்தவ சமயப் பணிக்காக இந்தியா வந்தார். லிஸ்பன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு 1710 அக்டோபரில் கோவா வந்து சேர்ந்தார். பின்னர் கொச்சி அம்பலக்காடு வழியாக மதுரை வந்து சேர்ந்தார்.

’மதுரை மிஷன்’ ராபர்டோ டி நொபிலி என்னும் இத்தாலிய பாதிரியாரால் துவங்கப்பட்டது. அந்நிய மண்ணில் மதபோதனை செய்வதன் முன் அங்குள்ள மொழியையும் பண்பாட்டையும் கற்றறிந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மிக முக்கியம் என்ற கருத்தை செயல்படுத்திய முன்னோடி. 1600-களில் இந்தியா வந்த நொபிலி சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்று கிறிஸ்தவ மத உரைகளில் கோவில், அருள், பிரசாதம், குரு, வேதம், பூசை போன்ற இன்றும் புழக்கத்தில் உள்ள சொற்களைக் கொண்டு வந்தவர்.

அவரது வழியில் பெஸ்கியும் தனது பெயரை முதலில் 'தைரியநாதர்' என மாற்றிக்கொண்டார். அது வடமொழி சொல்லாக இருப்பதை பின்னர் அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார். காவி உடை அணிந்து இங்குள்ள சன்னியாசிகளைப் போன்ற தோற்றத்தை ஏற்றுக்கொண்டார். முதல் ஆறு வருடங்கள் காமநாயக்கன்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்), கயத்தாறு, மதுரை, தஞ்சாவூர், அரியலூர் முதலான இடங்களில் தொண்டாற்றினார்.

கோனான்குப்பம் என்னும் ஊரில் தமிழ்ப்பெண் போன்ற தோற்றத்தில் புனித மேரியின் திருவுருவ சிலையை அமைத்து பெரியநாயகி ஆலயம் என்ற பெயரில் நிறுவினார். திருவையாற்றுக்கு அருகே இன்றைய அரியலூர் மாவாட்டத்தில் ஏலாக்குறிச்சி என்னும் ஊரில் இறைப்பணியில் இருந்தபோது அங்கு புனித மேரிக்கு அடைக்கல மாதா என்று பெயரிட்டு தேவாலயம் ஒன்றைக் கட்டினார். பூண்டி மாதா ஆலயமும், தஞ்சாவூர் வியாகூல மாதா ஆலயமும் இவரால் கட்டப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

மத போதனைக்காக சுப்பிரதீபக் கவிராயர் என்பவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று பின்னர் தமிழில் நூல்கள் இயற்றும் அளவு புலமை பெற்றார். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால் 'சுவடி தேடும் சாமியார்' எனவும் அழைக்கப்பட்டார்.

தேம்பாவணி
தேம்பாவணி

தேம்பாவணி என்னும் செய்யுள் நூலை இயற்றினார். மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு 3615 விருத்தப் பாக்கள் கொண்டது இந்நூல். இயேசுநாதரின் தந்தையாகிய சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட செய்யுள். விவிலியத்தில் இருந்து சில பகுதிகளும், ஏசுவின் வாழ்க்கையோடு மரபாக வரும் சில கதைகளுடன், திருச்சபையின் கொள்கைகளும், வழிபாட்டு முறைகளும் கதை வடிவமாகவும், தத்துவ வடிவமாகவும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்க் காப்பிய மரபைப் பின்பற்றி நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவற்றை இந்நூலில் அமைத்துள்ளார். பாலஸ்தீன் நாடும் ஜெருசெலம் நகரும் வர்ணிக்கப்பட்டாலும் தமிழின் ஐந்திணை நிலங்களாக வர்ணிக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களில் திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற இலக்கியங்களின் கருத்துக்களை எடுத்துக் கையாண்டிருக்கிறார்.

இதில் பின்னிணைப்பாக இந்நூலில் பயன்படுத்திய விருத்தங்களையும் சந்தங்களையும் அட்டவணைப்படுத்தியிருக்கிறார். தமிழில் பக்தி இயக்கம் உருவாக்கி புகழ் பெற்றிருந்த அழகியலைத் தேம்பாவணியில் வீரமாமுனிவர் பின்பற்றியிருக்கிறார். பதினேழாம் நுற்றாண்டில் இந்தியா வந்து சேர்ந்த கிறிஸ்தவம் இங்குள்ள மேல்தட்டு மக்களுடனும் மதத்துடனும் உரையாட முயன்றதன் ஒரு உதாரணம் தேம்பாவணி.

வீரமாமுனிவர் கலம்பகம், அந்தாதி போன்ற வகைமையை சேர்ந்த நூல்களையும் இயற்றியிருக்கிறார். இந்திய ராகங்களில் அமைந்த இசைப்பாடல்களும் இயற்றியிருக்கிறார்.

திருக்குறளை ஆழ்ந்து கற்று அவருடைய பல ஆக்கங்களில் அதன் கருத்துக்களைக் கையாண்டுள்ளார். காமத்துப்பாலைத் தவிர்த்து அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீனுக்கு மொழியாக்கம் செய்தார். அம்மொழியிலேயே ஒவ்வொரு குறளுக்கும் விளக்கம், அருஞ்சொற்பொருள் ஆகியவற்றை அளித்தார். இப்படைப்பை ஜி.யு. போப் வெளியிட்டுள்ளார்.

இவர் இயற்றிய பரமார்த்த குரு கதைகள் குழந்தை இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கம். பரமார்த்த குருவின் கதையை வீரமாமுனிவரே இலத்தீனிலும் மொழிபெயர்த்தார். அக்கதையை ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பாதி தமிழும் மறு பாதி அதன் மொழிபெயர்ப்பாக இலத்தீனும் என்று அமைத்தார். அக்கதையைத் தமிழ்-இலத்தீன் அகராதியின் பின்னிணைப்பாகவும் பதித்தார்.

1742-ல் ஓய்வு பெற்று, அகராதிகளையும் இலக்கண நூல்களையும் எழுதினார்.

தமிழ்ப் பணி

தனித்தமிழ்

அன்றைய காலகட்டத்தில் தமிழில் உரைநடை நூல்களில் கூட எதுகை மோனையோடு கூடிய வாக்கிய அமைப்புகளும், வடமொழிக்கலப்போடு அமைந்த மணிப்பிரவாள நடையும் பரவலாக இருந்தது. வீரமாமுனிவர் எளிய தமிழ் சொற்களைத் தெளிவான தொடராக்கி உரைநடை வகுத்தார். இவ்வகையில் தனித்தமிழ் இயக்கத்துக்கான முதல் முன்னோடியாக இருந்திருக்கிறார்.

அகராதிகள்
சதுரகராதி
சதுரகராதி

சொற்களுக்கு பொருள் விளக்கும் நூல்கள் அக்காலத்தில் தமிழில் நிகண்டுகள் என்னும் மனப்பாடம் செய்வதற்குரிய வகையில் செய்யுள்களாக இருந்தன. அகரவரிசைப்படுத்தப்பட்ட சொற்களுக்கான விளக்கம் தரும் அகராதி என்னும் முறை உருவாகி வந்தது. ஐரோப்பாவில் பதினேழாம் நூற்றாண்டில் உலக மொழிகள் பலவற்றிலும் சொற்பொருள் விளக்கும் அகராதிகள் எழுதப்பட்டன. இந்த அகராதித்துறை மறுமலர்ச்சி நிகழ்ந்த காலத்தில் தமிழகம் வந்த வீராமாமுனிவர் 1732-ல் சதுரகராதி என்னும் தமிழ்-தமிழ் அகராதியை தொகுத்து எழுதினார். ஆங்கிலத்தில் வெகுகாலம் புகழ்பெற்றிருந்த சாமுவெல் ஜான்சன் அகராதி (1755) வெளிவருவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னரே சதுராகராதி எழுதப்பட்டுவிட்டது. சதுராகராதி என்றால் நான்கு வகைப்பட்ட அகராதிகள் எனப் பொருள். அவை:

  • பெயரகராதி – ஒரு சொல்லுக்குரிய பல பொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கும்,
  • பொருளகராதி – ஒரு பொருளுக்குரிய பல பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் தொகையகராதி – இருசுடர், முக்குணம், நாற்படை என்பது போன்ற தொகையைக் குறிக்கும் சொற்களுக்கான விளக்கத்தைக் காணலாம்
  • தொடையகராதி – செய்யுள்களில் புழங்கும் எதுகை மோனை சொற்கள் வரிசையாக தொகுக்கப்பட்டிருக்கும்.

திவாகர நிகண்டு போன்ற நிகண்டுகளில் இருந்து முக்கியமான சொற்களைத் திரட்டி சதுரகராதி எழுதப்பட்டிருக்கிறது. இதனைப் பின் தொடர்ந்தே பல தமிழகராதிகள் பின்னர் எழுதப்பட்டன.

வீரமாமுனிவர் ஐரோப்பாவில் இருந்து வந்து தமிழ் கற்பவர்களுக்கு வசதியாக தமிழ்–லத்தீன் அகராதியை 1744-ல் உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் இடம்பெற்றது. கொடைக்கானல் மலைமீது அமைந்த செம்பகனூர்ப் பழஞ்சுவடி நூலகத்தில் வீரமாமுனிவர் இயற்றிய தமிழ்-லத்தீன் அகராதிப் பிரதி ஒன்று உள்ளது. பழங்கால ஏடு வடிவில் அமைந்த அந்த அகராதியில் பின்னிணைப்பாக வீரமாமுனிவர் பரமார்த்த குருவின் கதை என்னும் புனைவை இணைத்துள்ளார். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்–போர்த்துகீசிய அகராதியை உருவாக்கினார்.

தமிழ் இலக்கணம்

வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத்தமிழுக்குமான வேறுபாடுகளை ஆராய்ந்து தனித்தனியே செந்தமிழ் இலக்கணமும் கொடுந்தமிழ் இலக்கணமும் எழுதினார். கொடுந்தமிழ் இலக்கணம் வழியாக தமிழில் முதல் முதலாகப் பேச்சுத் தமிழை விவரிக்க முனைந்தவர். இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்காத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது ஒரு முன்னோடி முயற்சி.

எழுத்துச் சீர்திருத்தம்

வீரமாமுனிவர் காலத்தில் ஆகாரத்தை எழுதும் பொழுது அகரத்தின் மேல் புள்ளியிட்டு எழுதியதை விடுத்து அகரத்திற்கு சுழியிட்டு ஆகாரத்தை எழுதினார் [அ் => ஆ]. "எ" என்னும் எழுத்து குறிலாகவும் நெடிலாகவும் உபயோகிக்கப் பட்டது. வீரமாமுனிவர் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடு காண்பிக்க எகரத்தில் வருகின்ற மேல் கோடு நீட்டிச் சுழித்தால் அதை நெடிலாக ஒலிக்கலாம் என்று சீர்திருத்தம் கொணர்ந்தார். ஆனால் அச்சீர்திருத்தம் தற்போது வழக்கத்தில் இல்லை. அவர் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதி (1744) முழுவதிலும் "ஏ" என்னும் எழுத்தை "எு" என்றே எழுதியுள்ளார். [எ் => எு]

ஒகரத்தையும் ஓகாராத்தையும் வேறுபடுத்த வீரமாமுனிவர் ஒகரத்தின் கீழே சுழி சேர்த்து அதை நெடிலாக்கினார். [ஒ் => ஓ]. உயிர்மெய் எழுத்துக்களிலும் இதே போன்ற மாற்றங்களைக் கொண்டுவந்தார். [தெ்ன் => தேன், தெ்ால் => தோல்]

உயிரெழுத்திலும் உயிர்மெய்யெழுத்திலும் வீரமாமுனிவர் கொணர்ந்த எகர ஒகர சீர்திருத்தத்தை ஆட்சியாளரும், அச்சுத்துறையினரும் ஏற்று நடைமுறைக்குக் கொண்டு வந்ததால் அச்சீர்திருத்தம் நிலைபெற்று, அனைவரும் மேற்கொள்ளும் வழக்கமாக வந்துவிட்டது. தாம் செய்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வீரமாமுனிவரே தமது தமிழ்-லத்தீன் அகராதியின் முன்னுரையில் 15-ஆம் பத்தியில் விளக்கியுள்ளார்.

வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் சிறப்பை ஆய்வாளர் ச. ராஜமாணிக்கம் கீழ்வருமாறு விவரிக்கிறார்:

"தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழ் எழுத்துக்களை எவராலும் மாற்ற முடியவில்லை. வெளிநாட்டில் பிறந்து, ஏலாக்குறிச்சி என்ற சிற்றூரில் பாமர மக்களிடையே பணிபுரிந்த வீரமாமுனிவர், இத்தகைய சீர்திருத்தத்தைச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது, செயற்கரிய செயலாகும். வேறொன்றும் செய்யாமல், இஃது ஒன்றை மட்டும் செய்திருந்தாலே, அவருக்குத் தமிழில் சிறந்த இடம் கிடைத்திருக்கும்."[1]

மறைவு

வீரமாமுனிவர் பிப்ரவரி 4, 1747 அன்று இறந்தார். ஆனால் அவரது கல்லறை இருக்கும் இடம் தெரியவில்லை. அது குறித்த சான்றாதாரங்கள் கிடைக்காததால் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

வீரமாமுனிவரது வாழ்வையும் பணியையும் ஆய்வு செய்த முனைவர் ச. ராஜமாணிக்கம் அவரது இறப்பு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"1742-ல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-1747 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747-ஆம் ஆண்டு ஃபெப்ரவரி நான்காம் நாளில் தமது 67-ஆம் வயதில் உயிர் துறந்தார். திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின. வீரமாமுனிவரது கல்லறைக்கும் அந்தக் கதி நேர்ந்திருக்கிறது. தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த பெரியார், தமிழ் நாட்டை விட்டுக் கேரள நாடு சென்று செத்ததும், அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பதும், தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்திகள். நிற்க, சிலர் இவர் மணப்பாட்டில் இறந்தார் என்றும், வேறு சிலர் மணப்பாறையில் உயிர் துறந்தார் என்றும் கூறுவது வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பானது. 1746-1747 ஆண்டுகளில் கேரள நாட்டு அம்பலக்காட்டில் முனிவர் வாழ்ந்தார் என்பதையும், அங்கே மரித்தார் என்பதையும் அக்கால அதிகாரபூர்வமான அறிக்கையின் வாயிலாக உறுதியாக அறியலாம்"

வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதையை 1822-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெஞ்சமின் பாபிங்டன் என்பவர் "வீரமாமுனிவர் திருச்சியில் சந்தாசாகிப் என்பவரின் அரசில் திவானாகப் பணியாற்றினார் என்றும், பின்னர் மராட்டியர்களின் படையெடுப்பை அடுத்து, வீரமாமுனிவர் டச்சு ஆட்சியில் இருந்த காயல்பட்டினத்தில் வாழ்ந்து நோயால் தாக்கப்பட்டு இறந்தார்" எனக் குறிப்பிடுகிறார்.[2]

மார்த்தாண்டவர்மா காலத்தில் நாயக்கர் அரசு சந்தாசாகிபால் சூறையாடப்பட்டது. திருக்கணங்குடியில் இருந்து ராணி மீனாட்சிக்கு உதவச் சென்ற கஸ்தூரிரங்கய்யாவின் படையை சந்தாசாகிப் தோற்கடித்தார். சந்தாசாகிப்பின் அந்தப் படையில் அப்போது வீரமாமுனிவர் என பின்னர் அறியப்பட்ட ஜோசப் கான்ஸ்டண்டைன் பெஸ்கியும் இருந்தார் எனப்படுகிறது.

வாழ்க்கை வரலாறு

  • வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாறு - முத்துசாமிப் பிள்ளை (1822) அதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் வீரமாமுனிவரின் வரலாற்றை 1798-ல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளை தம் வரலாற்றில் கூறியுள்ளார். இந்த நூலில் வீரமாமுனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை "வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்" என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார். முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் ’தத்துவ போதகர்’ என்று சிறப்புப்பெயர் பெற்ற ராபர்டோ டி நோபிலி பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று ஆய்வின் அடிப்படையில் குறிப்பிடுகிறார்.
  • வீரமாமுனிவர் தொண்டும் புலமையும் (ஆய்வு நூல்) - ச. இராசமாணிக்கம்

படைப்புகள்

வீரமாமுனிவர் எழுதிய நூல்களில் சில:

காப்பியம்
  • தேம்பாவணி - காப்பிய நூல்
அகராதி நூல்கள்
  • சதுரகராதி
  • தமிழ்-லத்தீன் அகராதி
  • தமிழ்-போர்த்துகீசிய அகராதி
உரைநடை நூல்கள்
  • பரமார்த்த குருவின் கதை – நகைச்சுவைக் கதைகள்
  • வாமன் கதை
இலக்கண நூல்கள்
  • கிளாவிஸ் லத்தீன் இலக்கணம்
  • தொன்னூல் விளக்கம்
  • செந்தமிழ்
  • கொடுந்தமிழ்
சமய நூல்கள்
  • வேதியர் ஒழுக்கம் – சமயத் தொண்டர்களுக்காக எழுதப்பட்ட உரைநடை நூல் (கன்னடத்திலும் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது)
  • ஞானக் கண்ணாடி (கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது)
  • வேத விளக்கம்
  • பேத மறுத்தல்
பிற இலக்கிய வகைமைகள்

அடிக்குறிப்புகள்

  1. ச. ராசமாணிக்கம், வீரமாமுனிவர் தொண்டும் புலமையும், தே நொபிலி ஆராய்ச்சி நிலையம், லயோலா கல்லூரி, சென்னை, 1996; 1998 (இரண்டாம் பதிப்பு), பக். 344-345
  2. பாபிங்டன், பெஞ்சமின் (1822). Paramār̲atakuruvin̲ Katai. லண்டன்: ஜே. எம். ரிச்சார்ட்சன்

தரவுகள்


✅Finalised Page