கித்தேரியம்மாள் அம்மானை
- அம்மானை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அம்மானை (பெயர் பட்டியல்)
கித்தேரியம்மாள் அம்மானை வீரமாமுனிவர் இயற்றிய நூல். கிறிஸ்தவ அம்மானை நூல்களில் முதல் நூலாகக் கருதப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டில் போர்த்துகல் நகரில் வாழ்ந்த கிறிஸ்தவப் பெண் துறவியான குவித்தேரியாவின் வாழ்க்கையை கித்தேரியம்மாள் அம்மானை என்ற பெயரில் வீரமாமுனிவர் இயற்றினார். இந்நூலின் காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
நூல் தோற்றம்
வீரமாமுனிவர், பொயு 1716-ல், கொள்ளிடத்தை அடுத்துள்ள ஏலாக்குறிச்சி என்னும் ஊருக்கு வந்து தங்கினார். அக்காலகட்டத்தில் பல்வேறு இலக்கண, இலக்கிய நூல்களை இயற்றினார். அவற்றுள் ஒன்று கித்தேரியம்மாள் அம்மானை. தஞ்சாவூரை அரசாண்ட மராட்டிய மன்னர் சரபோஜி, கிறித்தவர்களைத் துன்புறுத்தியதால் அம்மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் நிலைத்திருக்கவும் புனிதர் கித்தேரியம்மாளின் வரலாற்றை அம்மானை நூலாக இயற்றினார் என்பது தொன்மம். கித்தேரியம்மாளின் பெருமையையும், சமயப்பற்றையும், இறைவனின் அருளாற்றலைக் காட்சிப்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்நூலை வீரமாமுனிவர் இயற்றினார்.
நூல் அமைப்பு
கித்தேரியம்மாள் அம்மானையில் பிறப்புக் காதை, பாலமாட்சிக் காதை, சிறைப்படுத்திய காதை, பிரிவின் காதை, மணமறுத்த காதை, மலையடை காதை, தேவருள் ஆசைக் காதை, கொய்சிரத்து எழுச்சிக் காதை, எண்மர் காதை, புதுமைக் காதை எனப் பத்து காதைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் பாயிரம் சேர்த்து 1105 கண்ணிகளும் 132 விருத்தங்களும் அமைந்துள்ளன.
பிறப்புக் காதையில் காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் என்னும் பத்துப் பிள்ளைப்பருவங்களும் இடம் பெற்றுள்ளன.
கித்தேரியம்மாள் வரலாறு
போர்த்துக்கல் நாட்டின் இலுசித்தானியாவில் காயுஸ் அட்டிபிசியுசு என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு ஒன்பது குழந்தைகள். அவர்களில் மூத்த குழந்தை கித்தேரி. இவர்களில் எட்டு பேர் பல்வேறு நாடுகளுக்குப் பரவிச் சென்றனர். 'கித்தேரி' மட்டும் இலுசித்தானியா நாட்டிலேயே தங்கி இறைப் பணி செய்து வந்தாள். தன் தோழியர்களான முப்பது கன்னியர்களுடன் அங்குள்ள பொம்பேர் மலையுச்சியில் தங்கி தவம் செய்தாள்.
அவர்களது தவநெறியை எதிர்த்த 'புரோசன்' என்பவன் மலையை நெருங்கிய போது குருடனும், முடவனுமானான். கித்தேரிக்கு மணம் பேசப்பட்ட 'பரிபாலன்' என்பவன், கித்தேரியையும், முப்பது தோழியரையும் கொன்றுவிட, 'கித்தேரி' மட்டும் தன் தலையைக் கையில் ஏந்தி, தன்னுயிரைக் கொன்றவனுக்கு மனமாற்றம் ஏற்படக் காரணமானாள். பின் விண்ணுலகம் அடைந்தாள். வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பவளானாள். அவளை எதிர்த்தவர்கள் அனைவரும் அவளது தெய்வீக ஆற்றலை உணர்ந்து கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினர்.
பதினேழாம் நூற்றாண்டில் திருச்சபை கித்தேரிக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கியது.
இக்கதையையே அம்மானை நூலாக வீரமாமுனிவர் இயற்றினார்.
கித்தேரியம்மாள் ஆலயம்
திருநெல்வேலியில் உள்ள கூத்தன் குழியில் புனித கித்தேரியம்மாள் ஆலயம் அமைந்துள்ளது.
உசாத்துணை
- கித்தேரியம்மாள் அம்மானை நூல் விளக்கம்
- புனித கித்தேரியம்மாள் வாழ்க்கை வரலாறு - 1
- புனித கித்தேரியம்மாள் வாழ்க்கை வரலாறு - 2
- கித்தேரியம்மாள் அம்மானை நூல்: மெரீனா புக்ஸ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Jun-2023, 21:07:17 IST