under review

வில்லக விரலினார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
 
Line 30: Line 30:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:54, 21 December 2025

வில்லக விரலினார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத் தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வில்லக விரலினார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். வில்லைப் பிடித்திருக்கும் விரல் போல் தலைவன் தலைவியைப் பிடித்துத் தழுவிக்கொண்டிருக்கிறான் என்ற பொருளில் பயின்று வரும் "வில்லக விரல்" என்ற சொற்றொடரை இவர் பாடலில் பயன்படுத்தியிருப்பதால் 'வில்லக விரலினார்' என அறிஞர்கள் அழைத்தனர்.

இலக்கிய வாழ்க்கை

வில்லக விரலினார் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 370-வது பாடலாக உள்ளது. இது மருதத் திணைப்பாடல். தலைவி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டுப் பரத்தை, தோழிக்குச் சொல்லியதாக பாடல் உள்ளது. தலைவன் என்னிடம் வருவதும் வராமல் இருப்பதும் அவன் விருப்பத்தைப் பொறுத்தது" என்று பரத்தை தலைவிக்கு அறிவிக்கிறாள்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மருத நிலம்: நீர்நிலையில் உள்ள ஆம்பலின் அழகிய நிறத்தையுடைய மலரும் பருவத்தில் உள்ள அரும்புகளில் வண்டுகள் மொய்த்து அவற்றின் இதழ்களைத் திறக்கும் குளிர்ந்த நீர்த்துறைகளை உடையது
  • வில்லக விரல்: தலைவன் தலைவியின் மார்பைத் தழுவிக் கொண்டு உறங்குவது வில்லை இறுகப் பிடித்த விரல்களைப் போல் ஒன்றுசேர்ந்து ஓர் உடலாக இருப்பதைப் போல் காட்சியளிக்கும்.
  • உள்ளுறை உவமம்: ஆம்பலின் அரும்புகளின் அழகாலும் செழிப்பாலும் ஈர்க்கப்பட்டு, தக்க சமயத்தில் தானாகவே வந்து மொய்த்து, வண்டுகள் அவ்வரும்புகளை வாய்திறக்கச் செய்வதைப் போல் தலைவன் தன் அழகையும் இயல்பையும் விரும்பித் தன்னிடம் வந்தான் என்று பரத்தை கூறுகிறாள்.
  • பரத்தை ஒழுக்கம் இருப்பதும், பரத்தைக்கும் தலைவிக்கும் இடையேயான போட்டியும் புலப்படுகின்றன.

பாடல் நடை

  • குறுந்தொகை: 370 (திணை - மருதம்)

பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடு
இருப்பி னிருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.

உசாத்துணை

  • புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
  • குறுந்தொகை: 370: nallakurunthokai



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 14:04:36 IST