ஜெயகாந்தன்: Difference between revisions
Line 1,221: | Line 1,221: | ||
* [https://www.jeyamohan.in/428/ ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல்-2 | ஜெயமோகன்] | * [https://www.jeyamohan.in/428/ ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல்-2 | ஜெயமோகன்] | ||
* [https://www.itstamil.com/jayakanthan.html ஜெயகாந்தன் வாழ்க்கை வரலாறு – Jayakanthan Biography in TamilItsTamil] | * [https://www.itstamil.com/jayakanthan.html ஜெயகாந்தன் வாழ்க்கை வரலாறு – Jayakanthan Biography in TamilItsTamil] | ||
* [https://youtu.be/i5wX16di7iw | * [https://youtu.be/i5wX16di7iw பாரதியின் ஆன்மீகப்பார்வை | ஜெயகாந்தன் | Jayakandhan Speech | Eppo Varuvaro] | ||
* [https://youtu.be/4uN6WOT_Uuw பாரதி பற்றி ஜெயகாந்தன், அம்ஷன் குமார், யுடியுப்] | * [https://youtu.be/4uN6WOT_Uuw பாரதி பற்றி ஜெயகாந்தன், அம்ஷன் குமார், யுடியுப்] | ||
* [https://youtu.be/veSswFDlbTY ஜெயகாந்தன் ஆவணப்படம், ரவி சுப்ரமணியம்] | * [https://youtu.be/veSswFDlbTY ஜெயகாந்தன் ஆவணப்படம், ரவி சுப்ரமணியம்] |
Revision as of 13:39, 17 April 2022
ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்) (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஒத்திசைந்து பணியாற்றியவர். ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் தமிழகத்தின் இடதுசாரி தரப்பின் அறக்குரலாகவும், இடதுசாரிப்பார்வையின் மெய்யியலை தேடியவராகவும் மதிப்பிடப்படுகிறார்.
பிறப்பு, இளமை
ஜெயகாந்தன் ஏப்ரல் 24, 1934 அன்று கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை, மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் முருகேசன். பள்ளிப்படிப்பை முடிக்காமலேயே வீட்டை துறந்து விழுப்புரம் சென்றார். விழுப்புரத்தில் தன் தாய்மாமனின் ஆதரவில் வாழ்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும், பாரதியின் எழுத்துகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.
அரசியல் ஈடுபாடு
ஜெயகாந்தன் தன் 13-ஆவது வயதில் சென்னைக்கு சென்றார். குறைந்தகாலம் ரிக்ஷா இழுப்பவராக வேலைபார்த்தார். இடதுசாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியினரின் கம்யூனில் எஸ்.பாலதண்டாயுதம், வ.கல்யாணசுந்தரம், எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.கே.கண்ணன் ஆகியோருடன் தங்கும் வாய்ப்பு அமைந்தது. ஜெயகாந்தனின் சிந்தனைகளில் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தியவர் ஆர்.கே.கண்ணன். ஜெயகாந்தன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஜனசக்தி அச்சகத்தில் அச்சுகோப்பவராகவும், பிழை திருத்துபவராகவும், டிரெடில் அச்சு இயந்திரத்தை இயக்குபவராகவும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் பிழைநோக்கும் பொருட்டு அவர் வங்காள இலக்கியங்களையும், ரஷ்ய இலக்கியங்களையும் ஆழ்ந்து வாசிக்க நேர்ந்தது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினா க.சந்தானம் மொழிபெயர்ப்பு அவரால் பிழைநோக்கப்பட்டது. அந்நாவலின் பாதிப்பு அவரிடம் நீடித்தது. கம்யூனிஸ்டுக் கட்சியின் மாலைநேர வகுப்புகள் வழியாக அவருடைய ஆங்கில அறிவும் மேம்பட்டது. ஆனால் ஜெயகாந்தன் கம்யூனிஸ்டுக் கட்சியின் சட்டபூர்வ உறுப்பினர் ஆக மாறவில்லை.
1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப்பட்டது. ஆதலால் தஞ்சையில் சென்று காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார்.1956-ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் உருவான பிளவு ஜெயகாந்தனை மனம்சோர்வுறச் செய்தது. கம்யூனிஸ்டுத் தலைவர்கள் மேல் பெருமதிப்பு கொண்டிருந்த அவர் அவர்கள் ஒருவரோடொருவர் பூசலிட்டுக்கொண்டதை ஏற்கமுடியாமல் துன்புற்றார். தீவிரமான கம்யூனிஸ்டுக் கட்சி ஈடுபாட்டில் இருந்து விலகிக்கொண்டார்.
ஜெயகாந்தன் இளமையில் இருந்தே திராவிட இயக்கம் மற்றும் ஈ.வே.ராமசாமி ஆகியோரின் அரசியலில் ஒவ்வாமை கொண்டிருந்தார். அவர்களை தரமற்ற அரசியல் நடத்துபவர்கள் என்றும், பண்பாட்டின் ஆழத்தை அறியாதவர்கள் என்றும் அவர் மதிப்பிட்டார். மேடைகளில் திராவிட இயக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வந்தார். காமராஜரின் அழைப்பால் அவர் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரானார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக ஆகவில்லை.
ஜெயகாந்தனும் கவிஞர் கண்ணதாசனும் இந்திய தேசிய காங்கிரஸின் திராவிட அரசியல் எதிர்ப்பை முன்வைக்கும் பேச்சாளர்களாக அறியப்பட்டனர்.1967-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் தோல்வியும் காமராஜர் தேசிய அரசியலுக்குச் சென்றதும் ஜெயகாந்தனை தீவிர அரசியலில் இருந்து விலக்கியது. இதுவரையிலான தன் அரசியல் வாழ்க்கையை அவர் ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.
கு.காமராஜ் மறைவுக்குப்பின் ஜெயகாந்தன் இந்திரா காந்தி தலைமையை ஏற்று காங்கிரஸ் [இந்திரா பிரிவு] ஆதரவாளராக நீடித்தார். 1977-ல் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது அதை ஆதரித்தார். அதன் இறுதிக்கட்டத்தில் அதில் நிகழ்ந்த அடக்குமுறைகளை புரிந்துகொண்டு கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தார். ஜெயஜெயசங்கர என்னும் நாவல் அவசரநிலையின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆன்மிகமான எதிர்ப்பை பதிவுசெய்வதாகும்.
இலக்கிய வாழ்க்கை
1949-ல் ஜெயகாந்தன் டிரெடில் என்னும் முதல் கதையை எழுதினார். ஆனால் முதலில் பிரசுரமானது ஆணும் பெண்ணும் என்னும் சிறுகதை. இக்கதை 1953-ல் சௌபாக்யவதி இதழில் வெளியானது. இடதுசாரி அறிஞர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.கே.கண்ணன் ஆகியோரின் ஊக்குவித்தலால் இடதுசாரி இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.கே.கண்ணன் ஆகியோர் ஏற்கனவே முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கியிருந்தாலும் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் ஆகியோரே அதன் வளர்ச்சிக்குக் காரணமான எழுத்தாளர்களாக கருதப்பட்டனர். தொ.மு.சி.ரகுநாதனின் சாந்தி, வ.விஜயபாஸ்கரனின் சரஸ்வதி, ப. ஜீவானந்தம் தொடங்கிய தாமரை, மற்றும் சமரன் ஆகிய இதழ்களில் ஜெயகாந்தன் தொடர்ச்சியாக எழுதினார்.
பொதுவான இலக்கிய இதழ்களான பிரசண்டவிகடன், கிராம ஊழியன் ஆகிய இதழ்களிலும் ஜெயகாந்தன் அவ்வப்போது எழுதினார். இக்காலகட்டத்தில் அவருடைய அணுக்கமான இலக்கியத்தோழராக கவிஞர் தமிழ்ஒளி இருந்தார். கவிஞர் கே.ஸி.எஸ்.அருணாச்சலத்துடனும் நெருக்கம் இருந்தது. ஆனால் அக்காலத்தில் இருந்த மணிக்கொடி இலக்கியக் குழுவினருடன் அவருக்கு அறிமுகமோ நெருக்கமோ இருக்கவில்லை.
1959-ல் கம்யூனிஸ்டு கட்சியுடன் விலக்கம் கொண்டு காங்கிரஸ் ஆதரவாளராக மாறிய ஜெயகாந்தன் கல்கி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் எழுத ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் கண்ணதாசனுடன் நெருக்கம் உருவாகியது. ஆனந்த விகடனில் வெளிவந்த சிறுகதைகள் வழியாகவே ஜெயகாந்தன் பெரும் வாசகச் செல்வாக்கை அடைந்தார். அவை பொதுச் சமூகத்தின் அறவுணர்வையும் ஒழுக்கவுணர்வையும் சீண்டி மறுபரிசீலனை செய்யவைப்பவையாக இருந்தன. அவருடைய யுகசந்தி, சுயதரிசனம், குருபீடம் போன்ற கதைகள் அவரை சிந்தனையை நிலைகுலையச் செய்யும் எழுத்தாளராக பரவலாக அறிமுகம் செய்தன.
ஜெயகாந்தனின் முதல் நாவல் 1957-ல் வெளிவந்த வாழ்க்கை அழைக்கிறது. ‘வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் எனக்கு எந்த நிறைவையும் அளிக்காத நாவல்’ என ஜெயகாந்தன் அதைக் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தனுக்கு பெரும்புகழை ஈட்டித்தந்த கதை 1968-ல் ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த அக்னிப்பிரவேசம். அக்கதைக்கு உருவான எதிர்ப்பின் விளைவாக அவர் அதை மீண்டும் விரிவாக்கி சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற பேரில் 1973-ல் நாவலாக எழுதினார். அந்நாவல் அவருக்கு கேந்திரிய சாகித்ய அக்காதமி விருதைப் பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக கங்கை எங்கே போகிறாள் என்ற நாவலையும் எழுதினார். ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவலாக 1973-ல் வெளிவந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் கருதப்படுகிறது. ஒரு இலட்சியவாதியான நாடோடியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாவல் இது.
திரைப்பட வாழ்க்கை
ஜெயகாந்தன் இடதுசாரி அமைப்புகள் தொடங்கிய மாற்றுத்திரைப்பட இயக்க அமைப்பிகளில் தொடர்பு கொண்டிருந்தார். எம்.பி.சீனிவாசன், நிமாய் கோஷ், கே.சி.எஸ்.அருணாச்சலம், கெ.விஜயன் ஆகியோர் அவ்வியக்கத்தில் தீவிரமாக இருந்தனர். அவர்கள் பாதை தெரியுது பார் என்னும் திரைப்படத்தை தயாரித்தனர். ஜெயகாந்தன் அதில் ஈடுபட்டார். 1965-ல் ஜெயகாந்தன் தன்னுடைய ‘உன்னைப்போல் ஒருவன்’ என்னும் நாவலை திரைப்படமாக்கினார். இதில் காந்திமதி, ஆகியோர் நடித்திருந்தனர். ஆசிய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த அப்படத்தை ஜெயகாந்தனே இயக்கினார். இத்திரைப்படத்திற்கு 1965-ஆம் ஆண்டு 12-வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டாமிடம் கிடைத்தது. அதன் திரையரங்கு வெளியிடலை எம்.ஜி.ஆரின் அரசியல் நண்பர்கள் எதிர்த்தனர், பார்வையாளர்களை தாக்கினர், அவர்களிடமிருந்து பார்வையாளர்களை பாதுகாக்க ஜெயகாந்தனே தடியுடன் திரையரங்கு வாசலில் நிற்கநேர்ந்தது என ஜெயகாந்தன் திரையுலக அனுபவங்களைப் பற்றி எழுதிய ‘ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார். யாருக்காக அழுதான் என்ற படத்தை 1966-ல் ஜெயகாந்தன் இயக்கினார்.
ஜெயகாந்தனின் ‘கை விலங்கு‘ என்னும் கதையை உரிமை வாங்கி ‘காவல் தெய்வம் ‘ என்னும் பேரில் 1969-ல் எஸ்.வி.சுப்பையா படமாக்கினார். சிவாஜி கணேசன் நடிப்பில் கே. விஜயன் இயக்கிய அந்தப்படம் மூலத்தை சிதைத்துவிட்டது என ஜெயகாந்தன் எண்ணினார். தன் படங்களுக்கான உரிமைகளை கொடுப்பதில் அதன்பின் மிகுந்த கடுமையைக் காட்டினார். ஜெயகாந்தனின் கதைகளை வெற்றிகரமாக படமாக்கியவர் ஏ.பீம்சிங். அவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ வணிகவெற்றி பெற்ற கலைப்படம்.
ஜெயகாந்தனின் கதைகளை ஒட்டிய திரைப்படங்கள்
- உன்னைப்போல் ஒருவன் (1965), ஜெயகாந்தன்
- யாருக்காக அழுதான் ஜெயகாந்தன் (1966), ஜெயகாந்தன்
- காவல்தெய்வம் (1969), சி.விஜயன்
- சில நேரங்களில் சில மனிதர்கள் (1976), ஏ.பீம்சிங்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978), ஏ.பீம்சிங்
- கருணை உள்ளம் (1978), ஏ.பீம்சிங்
- எத்தனை கோணம் எத்தனை பார்வை. பி.லெனின்
- புதுசெருப்பு கடிக்கும், அன்பழகன்
- ஊருக்கு நூறு பேர், பி.லெனின்
ருஷ்ய ஈடுபாடு
ஜெயகாந்தன் 1948-ல் டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலின் க.சந்தானத்தின் மொழியாக்கத்தை பிழை திருத்தினார். அவ்வாறு அவருக்கு ரஷ்ய இலக்கியங்கள் மேல் ஈடுபாடு உருவானது. தொடர்ச்சியாக ரஷ்ய ஆதரவாளராக செயல்பட்டார். இந்திய சோவியத் நட்புறவுக்கழகமான இஸ்கஸ் அமைப்பின் தலைவராக இருந்தார். காந்திய ஈடுபாடால் லூயி பிஷர் எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ஜெயகாந்தன் மொழியாக்கம் செய்திருக்கிறார். அதை தொடர்ந்து காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். இந்தியாவில் மார்க்சியம் காந்திய சிந்தனைகளுடன் இணைந்து புதியவடிவம் எடுக்கவேண்டும் என்றும், காந்தியே இந்தியாவின் சாமானியர்களைப் புரிந்துகொண்டவர் என்றும் கருதினார். [சொல்புதிது பேட்டி-2000] ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் நூலில் எந்த அரசியலியக்கமும் தலைமறைவியக்கமாக நிகழக்கூடாது என்றும் அது பலவகையான ஒழுக்கமீறல்களையும் அறப்பிறழ்வுகளையுமே உருவாக்கும் என்றும், மக்களை நம்பியே அரசியலியக்கம் நிகழவேண்டும் என்பதை காந்தி காட்டினார் என்றும் ஜெயகாந்தன் சொல்கிறார்.
ஆன்மிகம்
ஜெயகாந்தன் தன்னை நாத்திகனாகவும் இடதுசாரிச் சிந்தனையாளராகவும் முன்வைத்துக்கொண்டவர். இந்தியாவின் நீண்ட மரபில் நாத்திகத்தன்மையுள்ள ஆன்மிகம் ஒன்று உண்டு என்றும் அதை இடதுசாரிச் சிந்தனைகள் உள்வாங்கி வளர்த்தெடுக்கவேண்டும் என்றும் கருதினார். சுவாமி விவேகானந்தர் எழுந்து வரும் உலகம் உழைப்பாளிகளுக்குரியது என்று சொன்னதை மேற்கோள் காட்டுவதுண்டு.
தமிழ் மரபில் சித்தர்கள், தாயுமானவர், வள்ளலார், பாரதி ஆகியோரின் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவர். வேதம் என்பது ஒரு நூல் அல்ல, அழியாத அடிப்படை உண்மைகளின் சொல்வடிவமே என வேதம் புதிது செய்வோம் என்னும் உரையில் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தனின் ஆன்மிக ஈடுபாடு தொடக்க கால மார்க்ஸிய ஆசிரியர்களால் மறுக்கப்பட்டது. ஆனால் ஜெயகாந்தன் கூறியவற்றையே பின்னாளில் தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய, கே.தாமோதரன், எஸ்.ஆர்.டாங்கே, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு போன்ற மார்க்ஸிய ஆசிரியர்கள் வந்தடைந்தனர்.
ஜெயகாந்தன் தன் ஆன்மிகநாட்டம் பற்றி 2011-ல் ஓம்சக்தி மாத இதழில் ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள் என்னும் கட்டுரைத்தொடரை எழுதினார்.
இறப்பு
ஜெயகாந்தன் ஏப்ரல் 8, 2015 அன்று சென்னையில் மறைந்தார்.
நண்பர்கள்
ஜெயகாந்தன் நண்பர்கள் சூழ இருப்பவராக புகழ்பெற்றவர். அவருடைய அலுவலகம் மடம் என பெயர் பெற்றது. ஜெயகாந்தனின் இளமைக்கால நண்பர்கள் கண்ணதாசன், தமிழ் ஒளி. பின்னர் அறந்தை நாராயணன் அவருக்கு அணுக்கமானவராக இருந்தார். அவருடைய அணுக்கமான நண்பராகிய கே.எஸ்.சுப்ரமணியம் அவருடைய நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். அவருடைய இன்னொரு நண்பரான பி.எஸ்.குப்புசாமி ‘ஜெயகாந்தனுடன் பல்லாண்டு’ என்னும் நூலை எழுதினார்.
இதழியல் பணி
ஜெயகாந்தன் ஞானரதம் என்னும் சிற்றிதழை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தினார். வத்ராயிருப்பு ஊரைச்சேர்ந்த ஞானபாரதி என்பவர் அவ்விதழின் பொறுப்பாசிரியராக இருந்தார்
விவாதங்கள்
ஜெயகாந்தன் எழுத வந்த காலம் முதலே கடுமையான விவாதங்களை உருவாக்குபவராகவே இருந்துள்ளார். இவ்விவாதங்களுக்கான பதில்களை ஜெயகாந்தன் தன் நூல்களின் முன்னுரைகளில் அளித்திருக்கிறார்
- 1965-ல் வெளிவந்த சுயதரிசனம் என்னும் சிறுகதை பிராமணர்கள் அர்த்தம் தெரியாமல் மந்திரங்களைச் சொல்வதை இழிவு என விமர்சனம் செய்தது. அதையொட்டி ஆனந்தவிகடனில் கண்டனங்கள் வெளியாயின.
- 1965-ல் தினமணிக் கதிரில் வெளிவந்த ரிஷிமூலம் என்னும் சிறுகதை ஈடிபஸ் காம்ப்ளெக்ஸை பேசுவது. இக்கதை கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இக்கதையின் பெரும்பகுதியை தினமணி ஆசிரியர் சாவி வெட்டிச்சுருக்கிவிட்டார் என்று சொல்லப்பட்டது. ஜெயகாந்தன் அதற்கு வருத்தம் தெரிவித்து எழுதினார். இம்மாதிரி கதைகள் இனிமேல் வெளியிடப்படாது என சாவி அறிவித்தார். வெங்கட் சாமிநாதன் ‘போலிமுகங்கள்’ என்றபேரில் வணிக இதழ்களை கண்டித்து எழுத அதற்கு ’அழவேண்டாம் வாயைமூடிக் கொண்டிருந்தால் போதும்’ என அசோகமித்திரன் கண்டனக் கட்டுரை எழுதினார். பிரமிள் இவ்விவாதத்தில் கலந்துகொண்டு கட்டுரை எழுதினார். வணிக இதழில் இலக்கியப்படைப்புகளை எழுத முடியுமா என்னும் கேள்வி சார்ந்த விவாதமாக இது மாறியது 1971ல் அவசரநிலைக் காலத்தை ஜெயகாந்தன் ஆதரித்தார். அதை இடதுசாரிகள் கண்டித்தனர்.
- 1968-ல் வெளிவந்த அக்கினிப்பிரவேசம் என்னும் சிறுகதை ஒழுக்கவியலாளர்களால் கண்டிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக அந்தச் சிறுகதையை விரிவாக்கி சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் நாவலாக ஆக்கினார்.
- 1969-ல் திராவிட முன்னேற்றக்கழக தலைவரான சி.என்.அண்ணாத்துரை மறைந்தபோது அஞ்சலிக்கூட்டத்திலேயே அவரை மூடர்கள் அறிஞர் என்கிறர்கள், பெருமூடர் பேரறிஞர் என்கிறர்கள்’ என கண்டித்துப் பேசினார். அது திராவிட இயக்கத்தவர் நடுவே கடுமையான விவாதத்தை உருவாக்கியது.
- 1970-ல் வெளிவந்த குருபீடம் என்னும் சிறுகதை இந்து ஞானிகளை இழிவுசெய்கிறது என்னும் விவாதம் உருவானது.
- 1972-ல் கண்ணதாசன் இதழில் வெளிவந்த ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ என்னும் சிறுகதை எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சனம் செய்தது. அதை எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் கண்டித்தனர். ஜெயகாந்தன் மிரட்டப்பட்டார்.
- 1990-ல் இ.பி.ஆர்.எல்.ஃப் இயக்கத்தின் தலைவரான பத்மநாபா கொலையை ஒட்டி விடுதலைப்புலிகளை மிகக்கடுமையாக தாக்கிப்பேசினார். அதை தமிழியக்கத்தவர் கண்டித்தனர். கடைசிவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தை கண்டித்தவராகவே இருந்தார்.
- 1977-ல் வெளிவந்த ஜெயஜெய சங்கர நாவலும் அதன் தொடர்ச்சியான ஹரஹர சங்கர நாவலும் (2005) காஞ்சி சங்கராச்சாரியாரை புகழ்பவை என்றும், ஜெயகாந்தன் பிராமண சாதியவாதத்தை ஆதரிக்கிறார் என்றும் விமர்சனங்கள் உருவாயின.
- 2000-ல் அமெரிக்கா சென்று வந்தபின் அமெரிக்காவில் முதலாளித்துவம் ஒருவகையான நலம்நாடும் அரசை அமைத்துள்ளது, அது ஏறத்தாழ சோஷலிசம் போன்றது என்னும் கருத்தை முன்வைத்தார். அதைச்சார்ந்த விவாதங்கள் நடைபெற்றன. இடதுசாரிகளால் கண்டிக்கப்பட்டார்
- ஏப்ரல் 23, 2005-ல் சென்னை சம்ஸ்கிருத சேவா சமிதி நிகழ்வில் சம்ஸ்கிருதத்தை போற்றியும் தமிழை பழித்தும் பேசினார் என்று தமிழியக்கத்தவர் குற்றம் சாட்டினர். மொழிப்பற்றி என்பது நாய் தன்னைத்தானே நக்கிக்கொள்வது போன்றது என்றும் எல்லா மொழிகளின் அழகையும் அறியும் உள்ளம் வேண்டும் என்றும் ஜெயகாந்தன் பேசியிருந்தார். பின்னர் நாய் என்னும் சொல் தமிழறிஞர்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாக அறிவித்தார்.
- 2014-ல் ஜெயகாந்தன் நோயுற்றபோது அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி நிதியுதவியும் பிற உதவிகளும் அளித்தார். நன்றி தெரிவிக்கும் முகமாக ஜெயகாந்தன் மு.கருணாநிதியைச் சந்தித்தார். அரசியலில் அவர் மிகக்கடுமையாக எதிர்த்த மு.கருணாநிதியை அவர் சந்தித்தது விவாதப்பொருளாக ஆகியது.
இலக்கிய விமர்சன மதிப்பீடு
ஜெயகாந்தனை தமிழிலக்கியத்தின் முதன்மையான படைப்பாளி என்றும், புதுமைப்பித்தனுக்குப் பின் தமிழில் எழுதிய மிகச்சிறந்த சிறுகதையாசிரியர் என்றும் கல்வியாளர்கள் மதிப்பிடுகிறார்கள். முற்போக்கு விமர்சகர்களான க. கைலாசபதி, கா._சிவத்தம்பி, நா. வானமாமலை ஆகியோரும் ஜெயகாந்தன் தமிழிலக்கியத்தில் முதன்மையான செல்வாக்கு செலுத்திய படைப்பாளி என்று மதிப்பிடுகிறார்கள். முற்போக்கு இலக்கியத்தை விமர்சித்த ஈழப்படைப்பாளிகளான மு. தளையசிங்கம், எஸ். பொன்னுத்துரை ஆகியோரும் ஜெயகாந்தனின் இலக்கிய முதன்மையை வலியுறுத்துகின்றனர்.
சிற்றிதழ்கள் சார்ந்து செயல்பட்ட நவீனத் தமிழிலக்கியச் சூழலில் க.நா.சுப்ரமணியம் ஜெயகாந்தனின் படைப்புகள் கருத்துப்பிரச்சார நோக்கம் கொண்டவை, உரத்த குரலில் நேரடியாகப் பேசுவதனால் அழகியல் நேர்த்தி அற்றவை, சிந்தனைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட செயற்கையான கதாபாத்திரங்கள் கொண்டவை என வரையறை செய்து நிராகரித்தார். அக்கருத்தையே அழகியல் விமர்சகர்களான வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி ஆகியோரும் முன்வைத்தனர். ”ஊஞ்சலில் அமர்ந்து வாசனைப் பாக்குத் தூள் போட்டுக்கொண்டிருந்த சிறுகதையைத் தெருவில் இறக்கினார் புதுமைப்பித்தன். ஜெயகாந்தன் அதை வாழ்வின் அடிமட்டம் வரை விரட்டினார். ஜெயகாந்தனின் கதைகள் முன் முடிவுகள் கொண்டவை. எனினும் அனுபவச் செழுமையும் வர்ணங்களும் கற்பனை ஆற்றலும் மனித இயல்புகளை ஒரு எல்லை வரையிலும் அனுசரித்துச் செல்வதும் கதைகளாக இவரது எழுத்துகள் வெற்றி பெறக் காரணங்களாக அமைகின்றன. கதை மரபைச் சார்ந்த இவரிடம் தொனி, சிக்கனம், சிறுகதைக்குரிய தனித் தன்மைகள் எவையும் இல்லை. எழுத்துப் பாங்கின் கூறுகளைவிட, மேடையில் குரலெடுத்துத் தம் கதைகளைக் கூறும் தன்மையையே இவரது கதைகள் கொண்டிருக்கின்றன” என்கிறார் சுந்தர ராமசாமி[1]. கல்வியாளரும் அழகியல் விமர்சன மரபைச் சேர்ந்தவருமான எம்.வேதசகாயகுமார் அவருடைய ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பீடு’ என்னும் நூலில் ஜெயகாந்தன் புதுமைப்பித்தனின் கதைகளில் உள்ள அழகியல் ஒருமையை அடையாத பிரச்சார எழுத்தாளர், பரப்பியல் எழுத்தாளர் என நிராகரிக்கிறார்.
அழகியல் மரபைச் சேர்ந்த விமர்சகரான ஜெயமோகன் ஜெயகாந்தன் முற்போக்கு இலக்கிய மரபின் முதன்மை முகம் என்றும், முற்போக்கு எழுத்துக்கான அழகியலை அவர் முன்வைத்தார். அது நவீனத்துவ அழகியலில் இருந்து வேறுபட்டது என்றும், அவருடைய படைப்புக்கள் அவர் வாழ்ந்த காலத்தின் கருத்தியல் நெருக்கடிகளை வேறெந்த எழுத்தாளரை விடவும் ஆழமாக முன்வைத்தன என்றும் கூறுகிறார் [இலக்கிய முன்னோடிகள் வரிசை] நூல்கள். “ஜெயகாந்தனை மதிப்பிடுகையில் முக்கியமாக கவனத்துக்கு வரவேண்டிய விஷயம் அவரது, உண்மையான சத்திய வேட்கையே. தான் வாழ்ந்த காலகட்டத்தின் பிரச்சினைகளை உள்ளே சென்று ஆராய தனக்குத்தானே வகுத்துக்கொள்ள பிறருக்கு விளக்க அவர் கொண்ட முயற்சிகள் எந்தவிதமான பாவனைகளும் சமரசங்களும் இல்லாத நேர்மையான யத்தனங்கள்”[2].
விருதுகள்
- ஞானபீடம் விருது - 2002
- இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது - 2009
- இந்திய சோவியத் ரஷிய நடுபுறவு விருது - 1978
- சாகித்திய அகாடமி விருது - 1972 (சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக)
ஆவணப்படங்கள்
- எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்’ - ரவி சுப்ரமணியன்
- ஜெயகாந்தன் ஆவணப்படம் - சா.கந்தசாமி (சாகித்ய அகாதமிக்காக)
ஆய்வுகள்
- எம். வேதசகாயகுமார் ’ புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு’
- ஜெயகாந்தன் இலக்கியத்தடம், ப.கிருஷ்ணசாமி,
- ஜெயகாந்தன் ஒரு பார்வை எஸ்.சுப்ரமணியன்
படைப்புகள்
சிறுகதைப் பட்டியல்
வ.எண் | கதையின் பெயர் | வெளியான காலம் | இதழின்பெயர் | தொகுப்பின் பெயர் | வெளியீட்டாளர் பெயர் |
---|---|---|---|---|---|
1 | ஆணும் பெண்ணும் | -/-/1953 | - | ஆணும் பெண்னும் | எட்டு பிரசுரம், 1953 |
2 | பட்டணத்து வீதியிலே | -/-/1953 | - | ஆணும் பெண்னும் | எட்டு பிரசுரம், 1953 |
3 | பேசும் புழுக்கள் | 15/9/1953 | பிரசண்ட விகடன் | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | - |
4 | காலம் தோற்றது | -/12/1953 | காவேரி | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | எட்டு பிரசுரம், 1953 |
5 | சாந்தி பூமி | - | - | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
6 | சுமை பேதம் | - | - | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
7 | கண்ணன் பிறந்தான் | - | - | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
8 | உதயம் | - | - | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
9 | பிழைப்பு | - | - | உதயம் | - |
10 | மீனாட்சி ராஜ்யம் | - | - | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
11 | காந்தி ராஜ்யம் | - | - | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
12 | சொக்குப்பொடி | 16/05/1954 | சமரன் | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
13 | சட்டம் வந்த நள்ளிரவில் | 23/05/1954 | சமரன் | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
14 | மரணவாயில் | 30/05/1954 | சமரன் | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
15 | சாந்தி சாகரம் | 13/06/1954 | சமரன் | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
16 | எச்சரிக்கை | 20,27/06/1954 | சமரன் | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
17 | தத்துவச் சொறி | 04/07/1954 | சமரன் | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
18 | இவர்களும் இருக்கிறார்கள் | 11,18/07/1954 | சமரன் | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
19 | இலட்சியச் சிலுவை | -/-/1954 | சமரன் | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
20 | யாசனம் | -/05/1955 | சரஸ்வதி | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
21 | தேரைப்பழி | -/06/1955 | சரஸ்வதி | உதயம் | விஜயா பிரசுரம், 1954 |
22 | ஆலமரம் | ---- | - | மாலை மயக்கம் | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
23 | பித்துக்குளி | -/07/1955 | சரஸ்வதி | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
24 | பேதைப்பருவம் | -/08/1955 | சரஸ்வதி | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
25 | தனிமனிதன் | -/-/1955 | - | ஒரு பிடி சோறு | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
26 | பொறுக்கி | -/-/1955 | - | ஒரு பிடி சோறு | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
27 | தமிழச்சி | -/-/1955 | - | ஒரு பிடி சோறு | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
28 | சலிப்பு | -/03/1956 | சாந்தி | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
29 | வேலைகொடுத்தவன் | -/08/1956 | சரஸ்வதி | ஒரு பிடி சோறு | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
30 | பூ வாங்கலியோ பூ | -/09/1956 | சரஸ்வதி | ஒரு பிடி சோறு | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
31 | தீபம் | -/11/1956 | சரஸ்வதி | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
32 | தாம்பத்தியம் | -/2/1957 | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1960 |
33 | திரஸ்காரம் | -/3/1957 | சரஸ்வதி | புதிய வார்ப்புகள் | மீனாட்சி புத்தக நிலையம் 1965 |
34 | ரிக் ஷாகாரன் பாஷை | -/4/1957 | சரஸ்வதி | ஒரு பிடி சோறு | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
35 | பெளருஷம் | -/5/1957 | சரஸ்வதி | சுமை தாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
36 | சினம் எனும் தீ | 6/6/1957 | சரஸ்வதி | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
37 | பால் பேதம் | -/8/1957 | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
38 | எது, எப்போது | -/09/1957 | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
39 | ஒருபிடி சோறு | -/10/1957 | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
40 | ராசா வந்துட்டாரு | -/11/1957 | சரஸ்வதி | ஒரு பிடி சோறு | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
41 | ஒரு பிரமுகர் | -/12/1957 | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1960 |
42 | முச்சந்தி | -/01/1958 | சரஸ்வதி | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
43 | தாலாட்டு | -/03/1958 | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
44 | டிரெடில் | -/04/1958 | சரஸ்வதி | ஒரு பிடி சோறு | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
45 | சாளரம் | -/06/1958 | சரஸ்வதி | புதிய வார்ப்புகள் | மீனாட்சி புத்தக நிலையம் 1965 |
46 | கண்ணம்மா | -/08/1958 | சரஸ்வதி | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
47 | நந்தவனத்தில் ஒரு ஆண்டி | -/09/1958 | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1960 |
48 | பிணக்கு | -/10/1958 | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1960 |
49 | போர்வை | -/12/1958 | சரஸ்வதி | புதிய வார்ப்புகள் | மீனாட்சி புத்தக நிலையம் 1965 |
50 | யந்திரம் | -/12/1958 | தாமரை | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
51 | பட்டணம் சிரிக்கிறது | -/-/1958 | - | ஒருபிடி சோறு | மீனாட்சி புத்தக நிலையம் 1958 |
52 | அபாயம் | -/-/1959 | - | புதிய வார்ப்புகள் | மீனாட்சி புத்தக நிலையம் 1965 |
53 | ஓவர்டைம் | -/02/1959 | ஆனந்த விகடன் | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1960 |
54 | பற்றுகோல் | -/03/1959 | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1960 |
55 | தர்க்கம் | -/04/1959 | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1960 |
56 | செக்சன் நம்பர் 54 | -/07/1959 | கல்கி | சுமைதாங்கி | மீனாட்சி புத்தக நிலையம், 1962 |
57 | புகைச்சல் | -/07/1959 | ஆனந்த விகடன் | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1960 |
58 | இனிப்பும் கரிப்பும் | -/07/1959 | கங்கை | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1960 |
59 | நிந்தாஸ்துதி | -/09/1959 | கல்கி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் 1960 |
60 | போன வருசம் பொங்கலப்போ | -/10/1959 | கல்கி | சுமை தாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
61 | சர்வர் சீனு | -/10/1959 | கல்கி | சுமை தாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
62 | ராஜா | -/10/1959 | கல்கி | சுமை தாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
63 | கேவலம் ஓரு நாய் | -/10/1959 | கல்கி | சுமை தாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
64 | உண்ணாவிரதம் | -/11/1959 | - | மாலை மயக்கம் | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
65 | துறவு | -/-/1959 | சரஸ்வதி | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
66 | நீ இன்னா சார் சொல்றே | -/-/1959 | - | மாலை மயக்கம் | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
67 | இரண்டு குழந்தைகள் | -/-/1959 | புதுமை | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம், 1962 |
68 | குறைப்பிறவி | -/-/1959 | ஆனந்த விகடன் | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
69 | தேவன் வருவாரா | -/-/1959 | அமுத சுரபி | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
70 | அன்புக்கு நன்றி | 14/01/1960 | தாமரை | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
71 | சுய ரூபம் | -/01/1960 | ஆனந்த விகடன் | மாலை மயக்கம் | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
72 | வெளிச்சம் | 07/04/1960 | தாமரை | சுமைதாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
73 | துர்க்கை | 27/03/1960 | ஆனந்த விகடன் | சுமை தாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
74 | சிலுவை | -/05/1960 | தாமரை | சுமை தாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
75 | இதோ, ஒரு காதல் கதை | 08/05/1960 | ஆனந்த விகடன் | மாலை மயக்கம் | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
76 | சீட்டாட்டம் | 17/07/1960 | ஆனந்த விகடன் | சுமை தாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
77 | புதிய கதை | -/-/1960 | தாமரை | புதிய வார்ப்புகள் | மீனாட்சி புத்தக நிலையம் 1965 |
78 | வாய்ச்சொற்கள் | 14/08/1960 | ஆனந்த விகடன் | மாலை மயக்கம் | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
79 | இது என்ன பெரிய விஷயம் | 11/09/1960 | ஆனந்த விகடன் | மாலை மயக்கம் | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
80 | பொம்மை | 30/10/1960 | ஆனந்த விகடன் | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
81 | தொத்தோ | -/-/1960 | ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
82 | உடன்கட்டை | 11/12/1960 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
83 | பத்தினிப் பரம்பரை | -/12/1960 | தாமரை | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
84 | நிறங்கள் | -/-/1960 | அமுத சுரபி | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
85 | உறங்குவது போலும் | -/-/1960 | - | மாலை மயக்கம் | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
86 | மே--20 | -/-/1960 | - | சுமை தாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
87 | மூக்கோணம் | 09/01/1961 | ஆனந்த விகடன் | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
88 | மூங்கில் | 26/05/1961 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
89 | கற்பு நிலை | 21/05/1961 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
90 | நான் இருக்கிறேன் | 30/07/1961 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
91 | என்னை நம்பாதே | -/-/1961 | ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
92 | தர்க்கத்திற்கு அப்பால் | 5/11/1961 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
93 | லவ் பண்ணூங்கோ ஸார் | 17/12/1961 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
94 | சோற்றுச்சுமை | -/-/1961 | கல்கி | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் 1961 |
95 | மாலை மயக்கம் | -/-/1962 | - | மாலை மயக்கம் | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
96 | சுமைதாங்கி | -/-/1962 | - | சுமைதாங்கி | மீனாட்சி புத்தக நிலையம் 1962 |
97 | கருங்காலி | 3/2/1962 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
98 | அடல்ட்ஸ் ஒன்லி | -/4/1962 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
99 | மெளனம் ஒரு பாஷை | -/5/1962 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
100 | ஒரெ நண்பன் | 10/06/1962 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
101 | பிம்பம் | -/07/1962 | கல்கி | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
102 | முன்நிலவும் பின்பனியும் | 26/08/1962 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
103 | இல்லாதது எது | 07/10/1962 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
104 | பூ உதிரும் | 16/12/1962 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
105 | கிழக்கும் மேற்கும் | 21/07/1963 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
106 | தரக்குறைவு | 16/06/1963 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
107 | யுகசந்தி | 21/07/1963 | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் 1963 |
108 | உண்மை சுடும் | 22/09/1963 | ஆனந்த விகடன் | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
109 | ஆளுகை | 00/00/1963 | ஆனந்த விகடன்(தீபாவளி மலர்) | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
110 | பொய் வெல்லும் | 10/11/1963 | ஆனந்த விகடன் | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
111 | சாத்தானும் வேதம் ஓதட்டும் | 29/12/1963 | ஆனந்த விகடன் | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
112 | இருளைத் தேடி | 08/03/1964 | ஆனந்த விகடன் | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
113 | ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் | 12/04/1964 | ஆனந்த விகடன் | உண்மை சுடும் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
114 | எத்தனை கோணம் எத்தனை பார்வை | 21/06/1964 | ஆனந்த விகடன் | புதிய வார்ப்புகள் | மீனாட்சி புத்தக நிலையம் 1964 |
115 | ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் | 28/08/1964 | ஆனந்த விகடன் | புதிய வார்ப்புகள் | மீனாட்சி புத்தக நிலையம் 1965 |
116 | விளக்கு எரிகிறது | 09/11/1964 | ஆனந்த விகடன் | புதிய வார்ப்புகள் | மீனாட்சி புத்தக நிலையம் 1965 |
117 | புதிய வார்ப்புகள் | 14/03/1965 | ஆனந்த விகடன் | புதிய வார்ப்புகள் | மீனாட்சி புத்தக நிலையம் 1965 |
118 | அந்தக் கோழைகள் | 16/05/1965 | ஆனந்த விகடன் | சுயதரிசனம் | மீனாட்சி புத்தக நிலையம் 1967 |
119 | சட்டை | 03/10/1965 | ஆனந்த விகடன் | சுயதரிசனம் | மீனாட்சி புத்தக நிலையம் 1967 |
120 | சுயதரிசனம் | -/-/1965 | ஆனந்த விகடன் | சுயதரிசனம் | மீனாட்சி புத்தக நிலையம் 1967 |
121 | முற்றுகை | -/-/1965 | ஆனந்த விகடன் | சுயதரிசனம் | மீனாட்சி புத்தக நிலையம் 1967 |
122 | இருளில் ஒரு துணை | 14/08/1966 | ஆனந்த விகடன் | சுயதரிசனம் | மீனாட்சி புத்தக நிலையம் 1967 |
123 | லட்சாதிபதிகள் | -/-/1966 | ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) | சுயதரிசனம் | மீனாட்சி புத்தக நிலையம் 1967 |
124 | அக்கினிப் பிரவேசம் | 20/11/1968 | ஆனந்த விகடன் | சுயதரிசனம் | மீனாட்சி புத்தக நிலையம் 1969 |
125 | பாவம் பக்தர்தானே! | 03/05/1967 | ஆனந்த விகடன் | இறந்த காலங்கள் | மீனாட்சி புத்தக நிலையம் 1969 |
126 | நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன் | 17/03/1968 | ஆனந்த விகடன் | இறந்த காலங்கள் | மீனாட்சி புத்தக நிலையம் 1969 |
127 | அக்ரஹாரத்துப் பூனை | 09/11/1968 | ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) | இறந்த காலங்கள் | மீனாட்சி புத்தக நிலையம் 1969 |
128 | நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ | 19/01/1969 | ஆனந்த விகடன் | இறந்த காலங்கள் | மீனாட்சி புத்தக நிலையம் 1969 |
129 | ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது | 13/04/1969 | ஆனந்த விகடன் | குரு பீடம் | மீனாட்சி புத்தக நிலையம் 1971 |
130 | தவறுகள் குற்றங்களல்ல | 05/10/1969 | ஆனந்த விகடன் | குரு பீடம் | மீனாட்சி புத்தக நிலையம் 1971 |
131 | டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும் | 07/11/1969 | ஆனந்த விகடன் | குரு பீடம் | மீனாட்சி புத்தக நிலையம் 1971 |
132 | கண்ணாமூச்சி | -/-/1969 | தினமணிக் கதிர் (திபாவளி மலர்) | இறந்த காலங்கள் | மீனாட்சி புத்தக நிலையம் 1969 |
133 | அந்த உயிரின் மரணம் | -/-/1969 | தினமணிக் கதிர் (திபாவளி மலர்) | குரு பீடம் | மீனாட்சி புத்தக நிலையம் 1971 |
134 | அந்தரங்கம் புனிதமானது | -/-/1969 | ஆனந்த விகடன் | இறந்த காலங்கள் | மீனாட்சி புத்தக நிலையம் 1969 |
135 | இறந்த காலங்கள் | -/-/1969 | ஆனந்த விகடன் | இறந்த காலங்கள் | மீனாட்சி புத்தக நிலையம் 1969 |
136 | விதியும் விபத்தும் | -/-/1969 | ஆனந்த விகடன் | குரு பீடம் | மீனாட்சி புத்தக நிலையம் 1971 |
137 | எங்கோ, யாரோ, யாருக்காகவோ | 2,3/04/1970 | ஞானரதம் | குரு பீடம் | மீனாட்சி புத்தக நிலையம் 1971 |
138 | குரு பீடம் | -/-/1970 | ஞானரதம் | குரு பீடம் | மீனாட்சி புத்தக நிலையம் 1971 |
139 | நிக்கி | -/-/1970 | ஞானரதம் | குரு பீடம் | மீனாட்சி புத்தக நிலையம் 1971 |
140 | புதுச் செருப்பு கடிக்கும் | 02/05/1970 | ஆனந்த விகடன் | குரு பீடம் | மீனாட்சி புத்தக நிலையம் 1971 |
141 | சீசர் | 16/09/1971 | ஆனந்த விகடன் | சக்கரம் நிற்பதில்லை | மீனாட்சி புத்தக நிலையம் 1975 |
142 | அரைகுறைகள் | -/-/1971 | ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) | சக்கரம் நிற்பதில்லை | மீனாட்சி புத்தக நிலையம் 1975 |
143 | சக்கரம் நிற்பதில்லை | 15/11/1974 | தினமணி கதிர் | சக்கரம் நிற்பதில்லை | மீனாட்சி புத்தக நிலையம் 1975 |
144 | இந்த இடத்திலிருந்து | -/-/1975 | ஆனந்த விகடன் | சக்கரம் நிற்பதில்லை | மீனாட்சி புத்தக நிலையம் 1975 |
145 | குருக்கள் ஆத்து பையன் | -/-/1975 | ஆனந்த விகடன் | தினமணி கதிர் |
நாவல்கள்
- வாழ்க்கை அழைக்கிறது - 1957
- உன்னைப் போல் ஒருவன்
- பாரீசுக்குப்போ - டிசம்பர் 1966
- சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜூன் 1970
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜனவரி 1971
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஏப்ரல் 1973
- ஜெய ஜெய சங்கர... - செப்டம்பர் 1977
- கங்கை எங்கே போகிறாள் - டிசம்பர் 1
- சுந்தர காண்டம் - செப்டம்பர் 1982
- காற்று வெளியினிலே... - ஏப்ரல் 1984
- ஹர ஹர சங்கர - 2005
குறுநாவல்கள்
- கைவிலங்கு - ஜனவரி 1961
- யாருக்காக அழுதான்? - பிப்ரவரி 1962
- எனக்காக அழு
- விழுதுகள்
- பிரம்ம உபதேசம் - மே 1963
- பிரியாலயம் - ஆகஸ்ட் 1965
- கருணையினால் அல்ல - நவம்பர் 1965
- கோகிலா என்ன செய்துவிட்டாள்? - நவம்பர் 1967
- ஒரு குடும்பத்தில் நடக்கிறது... - ஜனவரி 1979
- பாவம், இவள் ஒரு பாப்பாத்தி! - மார்ச் 1979
- எங்கெங்கு காணினும்... - மே 1979
- ஊருக்கு நூறு பேர் - ஜூன் 1979
- கரிக்கோடுகள் - ஜூலை 1979
- மூங்கில் காட்டினுள்ளே - செப்டம்பர் 1979
- ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் - டிசம்பர் 1979
- ஒவ்வொரு கூரைக்கும் கீழே... - ஜனவரி 1980
- பாட்டிமார்களும் பேத்திமார்களும் - ஏப்ரல் 1980
- அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் - ஆகஸ்ட் 1980
- இந்த நேரத்தில் இவள்... - 1980
- காத்திருக்க ஒருத்தி - செப்டம்பர் 1980
- காரு - ஏப்ரல் 1981
- ஆயுத பூசை - மார்ச் 1982
- ஈஸ்வர அல்லா தேரே நாம் - ஜனவரி 1983
- ஓ, அமெரிக்கா! - பிப்ரவரி 1983
- இல்லாதவர்கள் - பிப்ரவரி 1983
- இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் - ஜூலை 1983
- கழுத்தில் விழுந்த மாலை - செப்டம்பர் 1984
- அந்த அக்காவினைத்தேடி... - அக்டோபர் 1985
- இன்னும் ஒரு பெண்ணின் கதை - ஜூலை 1986
- ரிஷிமூலம் - செப்டம்பர் 1965
- சினிமாவுக்குப் போன சித்தாளு - செப்டம்பர் 1972
- கண்ணன் - 2011
- இலக்கணம் மீறிய கவிதை
தன் வரலாறு
- ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் - அக்டோபர் 1974
- ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் - செப்டம்பர் 1980
- ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் - டிசம்பர் 2009
- ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள் - 2011
மொழியாக்கப் படைப்புக்கள்
- வாழ்விக்க வந்த காந்தி - 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம்)
- ஒரு கதாசிரியனின் கதை - மே 1989 (முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
மொழியாக்கங்கள்
- Of Men and Moments - 2014, Tr KS SUBRAMANIAN
- Love and Loss - 2007
- A Man, A Home and A World - 2003
- Once an Actress, 2008
- Go back to Paris - 2010, Tr KS SUBRAMANIAN
- The Heroine and Other Stories - Tr Deepalakshmi J
- Jaya Jaya Shankara - Tr KS SUBRAMANIAN
- Dissonance And Other Stories - Tr KS SUBRAMANIAN
- A Literary Man's Political Experiences - Tr KS SUBRAMANIAN
- Edgwara Allah Tere Naam - Tr KS SUBRAMANIAN
- Love and Loss
- Beneath the Banyan Tree - Tr Gopalakrishnan Veeraswamy
உசாத்துணை
- கலைகள் கதைகள் சிறுகதைகள் சுந்தர ராமசாமி
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல்-1 | ஜெயமோகன்
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல்-2 | ஜெயமோகன்
- ஜெயகாந்தன் வாழ்க்கை வரலாறு – Jayakanthan Biography in TamilItsTamil
- பாரதியின் ஆன்மீகப்பார்வை | ஜெயகாந்தன் | Jayakandhan Speech | Eppo Varuvaro
- பாரதி பற்றி ஜெயகாந்தன், அம்ஷன் குமார், யுடியுப்
- ஜெயகாந்தன் ஆவணப்படம், ரவி சுப்ரமணியம்
இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.