under review

கனகாபிஷேக மாலை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:


== நூல் தோற்றம் ==
== நூல் தோற்றம் ==
‘மிஃறாஜ் மாலை’ இயற்றிய [[ஆலிப் புலவர்|ஆலிப் புலவரை]] அடுத்து இஸ்லாமியர்கள் பலரும் இலக்கியப் படைப்புகளை இயற்றுவதில் நாட்டம் கொண்டனர். அந்த வகையில் செய்கு நயினார் கான் என்னும் கனகக் கவிராயர் தானும் ஒரு காப்பியத்தைப் படைக்க விரும்பினார். 'கனகாபிஷேக மாலை'  என்னும் காப்பியத்தை எழுதி பொ.யு. 1648-ல் அரங்கேற்றினார்.   
[[மிஃராஜ் மாலை|‘மிஃராஜ் மாலை]]’ இயற்றிய [[ஆலிப் புலவர்|ஆலிப் புலவரை]] அடுத்து இஸ்லாமியர்கள் பலரும் இலக்கியப் படைப்புகளை இயற்றுவதில் நாட்டம் கொண்டனர். அந்த வகையில் செய்கு நயினார் கான் என்னும் கனகக் கவிராயர் தானும் ஒரு காப்பியத்தைப் படைக்க விரும்பினார். 'கனகாபிஷேக மாலை'  என்னும் காப்பியத்தை எழுதி பொ.யு. 1648-ல் அரங்கேற்றினார்.   


== பிரசுரம், வெளியீடு ==
== பிரசுரம், வெளியீடு ==
Line 64: Line 64:
* கனகாபிஷேக மாலை திறனாய்வு: முனைவர் பீ. டாக்டர் நசீம்தீன்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு
* கனகாபிஷேக மாலை திறனாய்வு: முனைவர் பீ. டாக்டர் நசீம்தீன்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு
* [https://www.tamilvu.org/ta/courses-degree-a011-a0113-html-a01135l1-5640 கனகாபிஷேக மாலை: தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்]
* [https://www.tamilvu.org/ta/courses-degree-a011-a0113-html-a01135l1-5640 கனகாபிஷேக மாலை: தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 02:29, 4 November 2023

கனகாபிஷேக மாலை

கனகாபிஷேக மாலை (1648), தமிழில் தோன்றிய முதல் இஸ்லாமியக் காப்பியம். இதனை இயற்றியவர் செய்கு நயினார் கான் என்னும் கனகக் கவிராயர். அரசர்கள் முடிசூட்டப்படும்போது பொன்னால் அபிஷேகம் செய்யப்படுகின்றனர். அப்படி எட்டு அரசர்களின் வரலாற்றை இந்நூல் கூறுகிறது.

நூல் தோற்றம்

‘மிஃராஜ் மாலை’ இயற்றிய ஆலிப் புலவரை அடுத்து இஸ்லாமியர்கள் பலரும் இலக்கியப் படைப்புகளை இயற்றுவதில் நாட்டம் கொண்டனர். அந்த வகையில் செய்கு நயினார் கான் என்னும் கனகக் கவிராயர் தானும் ஒரு காப்பியத்தைப் படைக்க விரும்பினார். 'கனகாபிஷேக மாலை' என்னும் காப்பியத்தை எழுதி பொ.யு. 1648-ல் அரங்கேற்றினார்.

பிரசுரம், வெளியீடு

கனகாபிஷேக மாலை 1862-ல், முதன் முதலில் அச்சிடப்பட்டது. கண்ணகுமது மகுதூ முகம்மதுப் புலவர் இந்நூலைப் பரிசோதித்துப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பையும் அவரே 1891-ல் பதிப்பித்தார்.

ஆசிரியர் குறிப்பு

செய்கு நயினார் கான் என்னும் கனகக்கவிராயர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜகம்பீரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். கவிச்சக்ரவர்த்திகளுக்கு எல்லாம் பொன் போன்றவர் எனப் பொருள்படும் கனகக் கவிராயர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். இவர், குணங்குடி மஸ்தான் சாஹிபின் முன்னோர்களுள் ஒருவர். தேவிப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அறிஞர் முல்லா ஹுஸைனின் வழி வந்தவர்.

நூல் அமைப்பு

கனகம் + அபிஷேக மாலை என்பற்கு பொன்னைக் கொண்டு புனிதமாக்குதல் என்பது பொருள். ஓர் அரசனுக்கு முடிசூட்டும் பொழுது அவனுக்குத் திரு நீராட்டுதலே கனக அபிஷேகம் எனப்படுகிறது. முகம்மது நபி, அபூபக்கர், உமறு, உதுமான், அலி, ஹஸன், ஹுஸைன், செயினுலாபிதீன் ஆகியோருக்கு முடி சூட்டுதலைப் பற்றி, மாலை போன்று பாட்டப்பட்டுள்ளதால் இந்நூல் கனகாபிஷேக மாலை என்று பெயர் பெற்றது. மாலை என்று பெயர் பெற்றிருந்தாலும் இது ஒரு காப்பிய நூல். 35 படலங்களைக் கொண்டது. 2,792 விருத்தப்பாக்களால் ஆனது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் ஆகிய பாவினங்கள் இக்காப்பியத்தில் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. கலிநிலைத்துறை, கொச்சகக் கலிப்பா, சந்தக் கலித்தாழிசை விருத்தம், வஞ்சி விருத்தம், கலிப்பா, வண்ணப்பாடல்கள்  ஆகிய பாடல் வகைகள்  இக்காப்பியத்தில் பயின்று வருகின்றன.

நூலின் தொடக்கத்தில் நூன் முகம் அமைந்துள்ளது. தொடர்ந்து கடவுள் வாழ்த்துப் படலம் இடம்பெற்றுள்ளது. அதனை அடுத்து நாட்டுப் படலம், நகரப் படலம் ஆகியன இடம் பெற்றுள்ளன. 38 செய்யுட்களைக் கொண்ட பதிகப் படலம் அடுத்துள்ளது.  திருக்குறள் கருத்துகள், கனகாபிஷேக மாலையின் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. பிற இஸ்லாமியக் காப்பியங்களில் இல்லாத நூற்பயன் கூறுவது இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் பிற இஸ்லாமியக் காப்பியங்களில் இல்லாத சுயம்வர நிகழ்ச்சி இக்காப்பியத்தில் பாடப்பட்டுள்ளது.

நூல் கூறும் செய்திகள்

நபிபெருமான், வானவர் தலைவர் ஜிபுறாயிலுடன் உரையாடுவது நூலின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பெருமானாரின் பேரர்களுக்கு (ஹசன், ஹுசைன்) எதிர்காலத்தில் நிகழப்போகும் துன்ப நிகழ்ச்சியை வானவர் தலைவர் தெரிவித்தார். இமாம் ஹுசைனின் (நபி பெருமானின் மகள் வழிப் பேரர்) வரலாறும், கர்பலா என்னுமிடத்தில் நடந்த இமாம் ஹுசைனின் படுகொலையும் கனகாபிஷேக மாலையின் பாடுபொருள்கள். இஸ்லாத்தின் இணையிலாக் கோட்பாடுகளை விவரிக்கும் இந்நூல்,  நபி பெருமானது இறுதிக்காலம், உதுமான் ஹுசைன் ஆகியோர் வஞ்சனையால் கொல்லப்பட்டது ஆகிய செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. குறிப்பாக, நபிகள் நாயகத்தின் மறைவு, அதனால் நாட்டு மக்களுக்கும், வானவர்களுக்கும் ஏற்பட்ட துயரம் ஆகியன இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

நபி பெருமானின் இறுதிக் கால வரலாறு முதல் பிற கலீபாக்களின் வரலாறு, அசன், ஹுசைன் வரலாறு, அசனாரின் மகன் செயினுலாபுதீன் அரசேற்ற வரலாறு வரையான செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஹுசைனின் படுகொலைக்குப்பின் எதிராளிகள் அழிக்கப்பட்டனர். இமாம் ஹுசைனின் மகனான செயினுலாபுதீன் அரசராகப் பதவி ஏற்கிறார். இறுதியில் இன்பியல் காப்பியமாக இந்நூல் நிறைவடைகிறது.

பாடல் சிறப்பு

நபிபெருமானின் வெற்றி

தருவுறை சீன மீழம் ஷாமிலோர் பாகநாடுந்
திருவுறை நனிகூ பாவுஞ் செயிரிகா வபசிநாடு
மருவுறை காகா ஜங்கும் வார்குறா சானிநாடு
மருமறை மிசுறு மற்று மடங்கவோர் குடையிற்கொண்டார்

உமறு மன்னரின் ஆட்சி சிறப்பு

மருந்தெனினும் பகுத்தருந்தி வந்தவர்க்கா
தரம்பெருக்கி வைய மெல்லாம்
பெருந்தலைமை நிலைநிறுத்திப் பீடுபெற
நிற்றலினாற் பகைபெற் றாலும்
பருந்துநிவந் திடுதுகிர்வாய்ப் பசுங்கிளியு
மொருதிருப்பஞ் சரத்தில் வாழும்
பொருந்துகொடு வரிப்புலியும் புல்வாயு
மொருதுறைநீர்ப் புகுந்துண்டாரும்

உமறு மன்னரின் கொடைச் சிறப்பு

இரவலர் துறவல ரில்ல றத்தினோர்
புரவலர் மறைஞர் கணாளும் போர்த் தொழிற்
குரியவர் வனிதைய ருற்ற யாருமே
தருநிக ரலிகர தானம் வாங்கினார்

ஹுசைன் படுகொலை

உசையினார் சிரங்கொய்ய வுவந்த பாதக
னிசைபெறு முசைனது சிரங்கொண் டேகின
னசையொடு மதுகண்டு நலிவுற் றாங்குறு
திசைபுக ழலிமகர் சீர்த்த வாசியே

மதிப்பீடு

கனகாபிஷேக மாலை, தமிழில் தோன்றிய முதல் இஸ்லாமியக் காப்பியம். காப்பிய நெறிகளுக்குட்பட்டு இயற்றப்பட்ட தொன்மையான இஸ்லாமியக் காப்பியம். இந்நூல் பற்றி திறனாய்வு செய்திருக்கும், முனைவர் பீ. டாக்டர் நசீம்தீன், “கனகாபிஷேக மாலை பெருங்காப்பிய இலக்கணங்கள் அனைத்தும் பெற்ற முதல் தமிழ் இசுலாமியக் காப்பியம். இசுலாமியச் சமய மரபும், தமிழ்க் காப்பிய மரபும் பாதிக்கப்படாத நிலையில் காப்பியத்தை யாத்துள்ளார். காப்பியக் கூறுகள் அனைத்தையும் பெற்ற இன்றமிழ்க் காப்பியமாக இது திகழ்கிறது.” என்று மதிப்பிட்டுள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page