அ. மார்க்ஸ்: Difference between revisions
No edit summary |
(; Added info on Finalised date) |
||
| (One intermediate revision by one other user not shown) | |||
| Line 131: | Line 131: | ||
*[https://www.jeyamohan.in/214408/ அ. மார்க்ஸின் குரல் - ஜெயமோகன்] | *[https://www.jeyamohan.in/214408/ அ. மார்க்ஸின் குரல் - ஜெயமோகன்] | ||
*[https://www.jeyamohan.in/80072/ குறைத்துரைத்தலின் அழகியல் - ஜெயமோகன்] | *[https://www.jeyamohan.in/80072/ குறைத்துரைத்தலின் அழகியல் - ஜெயமோகன்] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|23-Feb-2026, 10:50:20 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 24 February 2026
அ.மார்க்ஸ் (பிறப்பு: 1949) எழுத்தாளர், ஆய்வாளர், பேராசிரியர், களச்செயல்பாட்டாளர். மார்க்சியம், பின்நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தி மறுவாசிப்பு எனத் தொடர்ச்சியாக உரையாடல்களை முன்வைத்தவர். புதிய மார்க்ஸியப் பார்வை கொண்டவர். அதன் வழியாக புதிய இடதுசாரிப் பார்வை உருவாகி வருவதற்கான களத்தை கட்டுரைகள் வழியாக முன்னெடுத்தார். தலித் இலக்கியம், பெண்ணெழுத்து ஆகியவை தமிழில் உருவாவதற்கான வெளியை ஏற்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான மனித உரிமைக் களப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
பிறப்பு, கல்வி
அ.மார்க்ஸ் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அந்தோணிசாமி, அமலோற்பவ மேரி இணையருக்கு 1949-ல் மூத்த மகனாகப் பிறந்தார். தந்தை 'ராமதாஸ்' எனும் பெயரில் மலேசியாவில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களுள் ஒருவராக இருந்து, பின்னர் நாடுகடத்தப்பட்டவர். அ.மார்க்ஸ் 1969-1970 காலகட்டத்தில் சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
அ. மார்க்ஸ் நிர்மலாவை மணந்தார். மகன் சித்தார்த்தன், மகள் யாழினி.
ஆசிரியப் பணி
அ.மார்க்ஸ் முப்பதியேழு ஆண்டுகள் அரசுக்கல்லூரிகளில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் சங்கத்தின் வழியாக பல்வேறு ஆசிரியப் போராட்டங்களை நடத்தியதால் 1986-96 காலகட்டத்தில் பத்து ஆண்டுகளில் ஆறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மூன்று முறை இதன்பொருட்டு சிறை சென்றார். அரசு ஊழியர் விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஊதிய உயர்வு வெட்டுத் தண்டனையும் அளிக்கப்பட்டது.
அரசியல் வாழ்க்கை
அ.மார்க்ஸ் தந்தையின் வழியாக இடதுசாரி அரசியலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். சி.பி.ஐ கட்சி எமெர்ஜென்சியை (1975) ஆதரித்ததால் அதனுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சி.பி.எம்) கட்சியில் இணைந்தார். பின்னர் 'மக்கள் யுத்தக் குழு' என்னும் நக்சல்பாரி அமைப்பில் இணைந்து செயல்பட்டார். கட்சிகளின் இறுக்கமான நடைமுறைகள், புதியனவற்றிற்கு முகம் கொடுக்க இயலாத கொள்கைவாதங்கள் ஆகியவற்றுக்குள் பயணிக்க முடியாமல் அவற்றைவிட்டு விலகித் தனித்து இயங்கத் தொடங்கினார். அ. மார்க்ஸ் நியோ மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். கட்சிக்குள் இல்லாவிட்டாலும் இடதுசாரி அமைப்புகள், தலித்துகள், சிறுபான்மையோர் முதலான ஒடுக்கப்படும் மக்களுக்கான இயக்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
அமைப்புப் பணிகள்
அ. மார்க்ஸ் கோ.சுகுமாரன், ரஜினி ஆகியோருடன் இணைந்து மனித உரிமைப் பணிகளில் ஈடுபட்டார். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி ஏற்பட்ட தலித் எழுச்சியினூடாக தலித் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 'மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்' (People's Union for Human Rights) என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார். சாதிக்கலவரங்கள், சிறுபான்மையினர், தலித்கள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட முக்கிய பிரச்சினைகளில் தமிழகத்திலும் இந்திய அளவிலும் குழுக்களை அமைத்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். 2000-ல் மாநிலக் கல்லூரிக்கு பணிமாறிய பிறகு சென்னையை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கினார்.
பொறுப்புகள்
- தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்திலும் தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்றத்திலும் முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்தார்.
- 2013 முதல் "மனித உரிமை அமைப்புகளின் தேசியக்கூட்டமைப்பு" (National Confideration of Human Rights Organisation) என்ற அமைப்பின் தேசியத் தலைவராக உள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
அ. மார்க்ஸ் கல்லூரி மலரில் பாரதி பற்றித் தான் எழுதிய ஒரு கட்டுரை அச்சில் வந்த தன் முதல் படைப்பு எனக் குறிப்பிடுகிறார். ஆனந்த விகடனில் வெளிவந்துகொண்டிருந்த ஜெயகாந்தனின் எழுத்துகள் வழியாக இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். ருஷ்ய இலக்கியங்கள், சரத் சந்திரர் படைப்புகள் முதலான இந்திய மொழிபெயர்ப்புகளையும் தந்தை வழியாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
1990-ல் நிறப்பிரிகை தொடங்கப்பட்டபோது அதில் விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். சி.பி.எம் கட்சியின் 'தீக்கதிர்', 'செம்மலர்' இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். இவரின் கட்டுரைகள், கட்சியின் சிறுபிரசுரங் களாகவும் வெளியிடப்பட்டன. 'அன்னம்', 'முனைவன்' ஆகிய சிற்றிதழ்களிலும் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதினார். 'மணிக்கொடி' இதழ்களை ஆராய்ந்து 'முனைவன்' இதழில் எழுதிய கட்டுரையும் கி.ராஜநாராயணன் மணிவிழா அரங்கில் பேசி பின் மீரா வெளியிட்ட 'ராஜநாராயணியம்' நூலில் வந்த கட்டுரையும் கவனம் பெற்றன.
அ. மார்க்ஸ் மார்க்சியம், பெரியாரியம், காந்தியம், அம்பேத்கரியம், பின்நவீனச் சிந்தனைகள் தொடர்பான கட்டுரைகள் எழுதினார். தமிழில் 'விளிம்பு நிலை ஆய்வுகளை' (subaltern studies) அறிமுகப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சிற்றிலக்கியங்கள், தமிழில் அச்சுப் பண்பாடு, நாட்டுப்புறவியல், பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வி, மருத்துவக் கொள்கைகள் குறித்த கட்டுரைகள் எழுதினார்.
தமிழ் இலக்கியங்களை இயங்கியல் அடிப்படையில் எப்படிப் பார்க்க வேண்டும் என்றும், தமிழ் வரலாறு, பண்பாடு அனைத்தையும் எப்படி வெறும் உயர்வுநவிற்சி மனோபாவமற்று, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன், கே. டானியல், கரிச்சான் குஞ்சு, மௌனி, எம்.வி. வெங்கட்ராம் முதலான எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். யாரைப் பற்றி எழுதினாலும் அவற்றின் ஊடாக சமூகத்தின் புனிதம் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது என்பதைப் போன்ற சமூக நோக்கில் படைப்புகளை அணுகி விமர்சித்தார். மெளனி, புதுமைப்பித்தன் ஆகியோரை விமர்சனம் இன்றிக் கொண்டாடுவதில் உள்ள ஆபத்துகளைப் பற்றி எழுதினார்.
பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனிடம் பயின்ற மார்க்சிய விமர்சகர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி, எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ரா, தி.ஜானகிராமன் ஆகியோரைத் தன் ஆதர்சமாகக் குறிப்பிடுகிறார்.
பின் நவீனத்துவம்
பின் நவீனத்துவம் எப்படி தத்துவ வரலாற்றில் நவீனத்துவத்தைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக வருகிறது என்பது குறித்தும், பின் நவீன உலகில் அரசியல் வடிவங்களில் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் குறித்தும் எழுதினார். 'மொத்தத்துவ' நோக்கும் 'ஒற்றை மையம்' சார்ந்த அணுகல்முறையும் சாத்தியம் இல்லை என்பது குறித்தும், தலித்துகள், இஸ்லாமியர்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களின் அடையாள அரசியலின் தேவைகள் குறித்தும் எழுதினார். பின்நவீனத்துவத்தை மெய்யியல் வரலாற்றினூடாக தொட்டுக்காட்டினார்.
விருது
- ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் (2018)
- வாழ்நாள் சாதனையாளர் விருது - தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது - ஜீரோடிகிரி பப்ளிஷிங் - 2021
மதிப்பீடு
"என்னுடைய பின் நவீனத்துவம் குறித்த நூல் வந்தபோது, இலக்கியம், அரசியல் என இரண்டு தரப்புமே கடுமையாக எதிர்த்தார்கள். இலக்கியவாதிகள், நான் எல்லாவற்றையும் அரசியலாக்குகிறேன் என்றார்கள். இன்று யாரும் பின்நவீனத்துவம் குறித்து அதிகமாகப் பேசுவதும் சர்ச்சையிடுவதும் இல்லை. ஆனால், 'விளிம்புநிலை', 'கட்டுடைத்தல்', 'சொல்லாடல்' போன்ற சொற்களை எல்லோருமே இயல்பாகப் பாவிக்கிறார்கள். இன்று எழுதிக்கொண்டிருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட, அனைவரின் எழுத்து வடிவங்களிலும் பின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இருக்கிறது. யதார்த்தவாதத்துக்கு இனி இங்கு இடம் இல்லை என்று நம்பியது நடக்கவில்லை என்றாலும் யாரும் இப்போது மொண்ணையான யதார்த்த வடிவில் எழுதுவது இல்லை" என அ.மார்க்ஸ் தன் எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.
"அ.மார்க்ஸ் விரிந்து பரந்துசெல்லும் ஒரு கருத்துக்களத்தை உருவாக்கியவர். அதில் உள்ள அரசியல்கள், பூசல்கள் ஆகியவற்றைக் கடந்து அவரை தொகுத்துக் கொள்ள வேண்டும். அ.மார்க்ஸின் உரைநடை மேல் என்றும் பெரும்பற்று உண்டு. அவர் தமிழகத்தின் மாபெரும் களச்செயல்பாட்டாளர், சுதந்திர இடதுசாரிக்குரல், மனித உரிமைக்கான தரப்பு என்பதில் எனக்கு பெரும் மதிப்புதான். அவருடைய அனுபவச் சித்தரிப்புகள் எல்லாமே பெரிய புனைவெழுத்தாளர்களின் நுண்மொழித்திறன் கொண்டவை." என ஜெயமோகன் மதிப்பிட்டார்.
நூல் பட்டியல்
- புத்தம் சரணம் (2004)
- கார்ல் மார்க்ஸ்
- தலித் அரசியல்
- ஆரியக் கூத்து
- ஆளுமைகள்
- பாரதி மறைவு முதல் மகாகவி வரை (கார்திகேசு சிவத்தம்பி, அ.மார்க்ஸ்)
- பாரதி புது யுகத்தை அடையாளம் கண்ட மகாகவி
- மரண தண்டனை: சாவு குலுக்கல் சீட்டு - (நெருக்கடி நிலை உலகம்: தொகுதி - 2)
- ஸ்டான் சாமி: ஒரு நிறுவனப் படுகொலை - (நெருக்கடி நிலை உலகம்: தொகுதி - 4)
- அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் (கருப்புப் பிரதிகள்)
- அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும்
- இது மோடியின் காலம்
- இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986-2016)
- இந்துத்துவத்தின் இருள்வெளிகள்
- இந்துத்துவத்தின் பன்முகங்கள்
- இந்துத்துவமும் சியோனிசமும்
- இராணுவமயமாகும் இலங்கை
- இராமன் கடந்த தொலைவு
- இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்
- உடைபடும் மெளனங்களும் சிதறுண்ட புனிதங்களும்
- உலகமயத்திற்குப் பிந்தைய இந்தியா
- என்ன நடக்குது இலங்கையில்?
- ஒரு தலித் போராளி: வாழ்வும் - காட்டிய வழியும்
- ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும்
- கடமை அறியோம் தொழிலறியோம்
- கரையும் நினைவுகள்
- காந்தி ஒரு புதிர்?
- காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும்
- காஷ்மீர் பிரச்சினையும் அரசியல் தீர்வுகளும்
- காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?
- குணா: பாசிசத்தின் தமிழ் வடிவம் (கோ.கேசவனுடன் இணைந்து எழுதியது)
- குற்றம் தண்டனை மரண தண்டனை
- சச்சார் குழு அறிக்கை
- சபால்டர்ன் ஆய்வுகள் குறித்த ஒரு மீள் மதிப்பீடு
- சோவியத்துக்குப் பிந்தைய உலகம்
- சச்சார் குழு அறிக்கை: அறிமுகம், சுருக்கம், விமர்சனம்
- தமிழில் அச்சுப் பண்பாடு: சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்
- தமிழகச் சிறைகளில் முஸ்லிம் கைதிகள்
- தலித் அரசியல் (நாற்பது ஆண்டுகால நோக்கும் போக்கும்)
- தேவையா இந்த அணு உலைகள்?
- நவதாராளவாதம்
- பின் நவீன நிலை
- நமது மருத்துவ நலப் பிரச்சினைகள்
- நான் புரிந்துகொண்ட நபிகள்
- நெருக்கடி நிலை உலகம்
- பாஜக: ஆட்சியில் தோல்வி தேர்தலில் வெற்றி
- பாபர் மசூதி ராமஜென்ம பூமி தீர்வும் தீர்ப்பும்
- புதிய கல்விக் கொள்கை: அபத்தங்களும் ஆபத்துகளும்
- பெரியார்: கல்விச் சிந்தனைகள்
- பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள்
- பெரியார்:தலித்துகள் முஸ்லிம்கள்
- பெரியார்?
- பொது சிவில் சட்டம்
- பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்
- மணிமேகலை (பாகம் 1)
- மதங்கள்: இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்
- மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன?
- முஸ்லிம்கள்
- மேன்மைப்படுவாய் மனமே கேள்
- விடுதலையின் பாதைகள்
- ஸ்ரீ அரவிந்தரும் மகாத்மா காந்தியும்
- பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்: நெருக்கடி நிலை உலகம் - 3
- அ.மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 1) (எழுத்து பிரசுரம்)
- அ.மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 2) (எழுத்து பிரசுரம்)
- அ.மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 3) (எழுத்து பிரசுரம்)
நேர்காணல்கள்
- "மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!" - விகடன் தடம் நேர்காணல் - சுகுணா திவாகர், வெய்யில், இளங்கோ கிருஷ்ணன்
- "திராவிட இயக்கங்கள், தலித் இயக்கங்கள், பொது உடைமை இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்" - அ.மார்க்ஸ்
- "போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" - அ.மார்க்ஸ்
- "இந்துமதத்தை நீங்கள் எதிராகப் பார்க்கிறீர்கள் எனச் சொல்லலாமா?" - மாதவம் நேர்காணல்
- "ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது" - அ.மார்க்ஸ்
- அ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)
- "காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை"
- தமிழ்த் தேசியத்தின் இன்றைய வெளிப்பாடு
இணைப்புகள்
- அ.மார்க்ஸ் - வலைதளம்
- அ. மார்க்ஸ் உரை| அ.மார்க்ஸ் 75
- அ.மார்க்ஸ் 75 விழா ஒரு தொகுப்பு !
- பகுத்தறிவின் வன்முறை | அ. மார்க்ஸ் Speech| Missed Movies
- அ. மார்க்ஸ் மையக்கருத்துரை
- புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம் - அ. மார்க்ஸ் - keetru
- அ. மார்க்ஸின் குரல் - ஜெயமோகன்
- குறைத்துரைத்தலின் அழகியல் - ஜெயமோகன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2026, 10:50:20 IST