under review

மருதன் இளநாகனார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
 
Line 149: Line 149:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:55, 21 December 2025

மருதன் இளநாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 79 உள்ளன. மருதத்திணை பாடுவதில் வல்லவர். இவர் கலித்தொகையில் பாடிய பாடல்கள் மருதக்கலி என்று அழைக்கப்படுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

இவரது இயற்பெயர் 'நாகன்'. மதுரை என்னும் ஊர்க்குறிப்புடன் 'மதுரை மருதன் இளநாகன்', 'மதுரை மருதன் இளநாகனார்' என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார். பாலை பாடுதற்குப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சி பாடுதற்குக் கபிலரும் போல, மருதம் பாடுதற்கு இளநாகனார் சிறந்தவரென்று கொண்டு 'மருதன் இளநாகனார்' என அழைக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

மருதன் இளநாகனார் அகநானூற்றில் 23 பாடல்களும், குறுந்தொகையில் 4 பாடல்களும், புறநானூற்றில் 5 பாடல்களும், நற்றிணையில் 12 பாடல்களும் கலித்தொகையில் 35 பாடல்களும் பாடியுள்ளார். கலித்தொகையில் மருதத்திணைப்பாடல்கள் 35 உள்ளன. இவை மருதக்கலி என வழங்கப்பட்டது. இவை கலித்தொகை நூலில் 66-100 என்ற எண் கொண்ட பாடல்களாக உள்ளன.

பாடல்கள்

பாடல்வழி அறியவரும் செய்திகள்

புறநானூறு

வரலாற்று நிகழ்வுகள்: கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன் போரிட்டு அழித்த நாட்டு மன்றத்தில் வல்லு விள்ளையாட்டு (52), அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்பதை உணர்ந்துகொள் என்று இவனுக்கு அறிவுரை கூறுகிறார் (55), பாணனை நாஞ்சில் வள்ளுவனிடம் ஆற்றுப்படுத்துகிறார் (138), வள்ளல் நாஞ்சில் வள்ளிவன் வேந்தர் பக்கம் நின்று போரிடுபவன் (139), மகட்பாற் காஞ்சி (மறவன் மகளை வேந்தன் பெண் கேட்டல்) (349)

அகநானூறு
  • வரலாற்று நிகழ்வுகள்: குடவோலை முறையில் தேர்தல் (77), குளிக்கும் மகளிர்க்குக் கண்ணன் சேலை தந்தது, முருகன் சூரபன்மனைக் கொன்றது (59), செல்லூர் கோசர் மகளை மணக்க விலை கேட்டல் (90), கன்றைக் காத்து மாண்டவனுக்கு நடுகல் (131), செல்லூரில் சிவன் கோயில் (220), கழுவுள் காமூரில் பூதச் சிலை (365), கொங்கு நாட்டில் உள்ளி விழா (368)
  • உவமைகள்: புலத்தி துவைத்த ஆடை போல் தூய்மை (34), கரும்புத் தண்டு போல் அவளுக்குப் பல் (193), வழுதி கையில் இருக்கும் வேல் போல் வானம் மின்னுகிறது (312), கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து (343), யானை மேல் கொடி (358), நாவல் பழம் நீர்த்துறையில் விழுவது போல (380), ஒட்டகம் எலும்பு தின்னும் (245)
  • சங்ககால நிகழ்வுகள்: காதலிக்குப் பூ சூட்டல் (104), தலைவிக்கு உதவும் விறலி (206), பொருளீட்டக் கப்பலில் செல்லல் (255), கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் மனைவி பூ சூடிக்கொள்ள மாட்டாள் (269), தலைவியை வழியனுப்பும் தோழி (283), தலைவன் பிரியாவண்ணம் தோழி தடுத்து நிறுத்தல் (387)
குறுந்தொகை
  • செந்தலை அன்றில் (160), வழிப்போக்கர் இட்ட பந்தல் யானைக்கு நிழலாவது (77), எருமை கழுத்தில் மணி (279)
நற்றிணை
  • உவமை: உருகும் நெய்யைப் பதம் பார்க்கப் பாலைத் தெளிக்கும்போது கேட்கும் ஒலி போல் (21), புலியைக் குத்தி விளையாடிய யானைக்கொம்பு போன்ற கண் கொண்டவள் (39), கண்ணில் தூசி விழுந்தால் கை உதவுவது போல (216), நாள் தவறாத ஞாயிறு போல, சொல் தவறாதவன் (283)
  • நிகழ்வுகள்: திருமணம் செய்துகொள்ள அவன் குதிரையில் வருகிறான் (163), ஆடு புலி விளையாட்டு (341), நீ தம்பலப் பூச்சியைப் பார்த்து விளையாடிக்கொண்டிரு (362), கடலுக்குச் செல்லும் தந்தை தன்னைப் கூட்டிச்செல்லவில்லை எனச் சிறுவன் அழுவான் (392)
  • இயற்கைப் படிமம்: பசு உண்ட மிச்சிலை எருது மேயும் (290), தெறுழ் என்னும் மலர் நரைமுடி நிறத்தில் இருக்கும் (302), பலாப்பழத்துக்குப் பக்கத்தில் கொக்கு மீனை உண்ணும்போது வீசும் முடைநாற்றத்தால் மந்தி தும்மும் (326)
கலித்தொகை

இதிலுள்ள பாடல்கள் தலைவன் தலைவிக்கு இடையேயான ஊடல் பாங்கினை பல்வேறு கோணங்களில் காட்டுகின்றன.

ஊடலும் ஊடல் தீர்க்கும் உரையாடல்களும், தலைவியின் ஊடல், காமக்கிழத்தியின் ஊடல், ஊடல் தீர்கின்றாள் தோழிக்குக் கூறியது, மகன் வாயில் ஆதல், தலைவன் வாயைக் கிண்டி அவன் பரத்தமையை வாங்கல், இழிந்தோர் ஊடல், உருவகப்படுத்தி ஊடல், பரத்தையைக் கடவுளாக்கி ஊடியது, பரத்தையைக் காடைச்சண்டை, குதிரையேற்றம், யானையேற்றம், புனலாடல் ஆகிய விளையாட்டுகளோடு ஒப்பிட்டு ஊடியது, ஆண்மகன் ஊடி விலகிய பெருந்திணை, தலைவி தன் மகனிடம் கூறி ஊடியது, மகன் வாயிலாக ஊடல் தீர்ந்தது, தோழியோடு கோயிலுக்கு அனுப்பிய மகன் பரத்தையர் பூட்டிய அணிகளுடன் வந்ததைக் கூறி ஊடியது, விளையாடச் சென்ற மகன் அணிகலன்களுடன் வந்ததைக் கூறி ஊடியது, குழந்தையைப் பாராட்டிக்கொண்டே தலைவனோடு ஊடியது, குழந்தையைச் சொல்லி ஊடல் தீர்ந்தது என பாடல்கள் அமைந்துள்ளன.

பாடல் நடை

புறநானூறு (52)
  • திணை: வாகை
  • துறை: அரச வாகை
  • பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை மருதன் இளநாகனார் பாடியது.

அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல்,
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து,
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு,
வட புல மன்னர் வாட, அடல் குறித்து,
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி!
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலி கண் மாறிய பாழ்படு பொதியில்,
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக்
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே!

அகநானூறு (34)
  • திணை: முல்லை
  • வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல்
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்

பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
செல்க, தேரே நல் வலம் பெறுந!

பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
"இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து" என,
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.

குறுந்தொகை (160)
  • திணை: குறிஞ்சி.
  • கூற்று: வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கித் தோழி, வரைவரென ஆற்றுவிப்புழித் தலைமகள் கூறியது.

நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரவே.

நற்றிணை (21)
  • திணை: முல்லை
  • வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!

தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்

உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி,
நாள் இரை கவர மாட்டித் தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!

கலித்தொகை

"பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்
செறியக் கட்டி ஈரிடைத் தாழ்ந்த
பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின்
மையற விளங்கிய ஆனேற்றுஅவிர் பூண். (கலி 85)

"பொலஞ்செய் மழுவொடு வாளணி கொண்ட
நலங்கிள ரொண்பூண் நனைத்தரும் அவ்வாய். (கலி 86)

"தொடக்கத்துத் தாயுழை புக்காற்கு அவளும்
மருப்புப்பூண் கையுறை யாக அணிந்து. (கலி 82)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Sep-2025, 12:32:05 IST