under review

இர. திருச்செல்வம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page)
(Corrected Category:தமிழியல் ஆய்வாளர்கள் to Category:தமிழியல் ஆய்வாளர்)
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 61: Line 61:




[[Category:தமிழியல் ஆய்வாளர்கள்]]
[[Category:தமிழியல் ஆய்வாளர்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:மலேசியா]]
 
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 11:54, 17 November 2024

திருச்செல்வம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருச்செல்வம் (பெயர் பட்டியல்)
இர. திருச்செல்வம்

இர. திருச்செல்வம் (ஜூலை 4, 1962) மலேசியாவில் வாழும் தமிழியல் ஆய்வாளர். வேர்ச்சொல் ஆய்வியலில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். வேர்ச்சொல்லாய்வு தொடர்பான நான்கு நூல்களை எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

இர. திருச்செல்வம் ஜூலை 4, 1962-ல் பேராக் மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தாரில் பிறந்தார். இவரின் பெற்றோர் இரத்தினர் - தேவகி. இர. திருச்செல்வம் இரு தம்பிகள் ஒரு தங்கை கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளை. இர. திருச்செல்வம் ஆரம்பக் கல்வியை ஆல் செயின்ட் தேசிய வகை ஆரம்பப் பள்ளியிலும் மாத்தாங் பூலோ தேசியப் பள்ளியிலும் ஆங்கில - மலாய்வழி கற்றார். பாகான் செராய் இடைநிலைப்பள்ளிக்குப் பின் 1982லிருந்து 1984 வரை ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லுரியில் பயிற்சி பெற்றார். 1993-ல் ராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சிறப்பாசிரியப் பட்டய படிப்பை மேற்கொண்டார். 2011-ல் வட மலேசியா பல்கலைக்கழகத்தில் கல்வி மேலாண்மை அறிவியல் துறையில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இர. திருச்செல்வம் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, பின்னர் தலைமையாசிரியராகப் பணியாற்றி 2018-ல் விருப்ப ஓய்வுபெற்றார்.

இவரின் மனைவியின் பெயர் சுப. வெற்றிச்செல்வி.

இலக்கிய வாழ்க்கை

இர. திருச்செல்வம் தன் பதினான்காம் வயதிலேயே மு. வரதராசன் அவர்களின் மொழி வரலாறு, மொழி நூல் வழியே தன் ஆய்வுக்கான திறப்பைக் கண்டடைந்தார். திரு.வி. கல்யாணசுந்தரனார், மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் மறைந்து போன தமிழ்நூல்கள் இவரின் இலக்கிய இலக்கணக் கல்வியை வளம்பெறச் செய்தன. தொல்காப்பியர், திருவள்ளுவர், வள்ளலார், பதினெண் சித்தர்கள், நாயன்மார், ஆழ்வார்கள், தாயுமானவர் எழுதியவற்றையும் கற்றுத் தெளியும் முயற்சிகளை மேற்கொண்டார்.

மறைமலையடிகளாரின் மகள் நீலாம்பிகையின் வடசொற்றமிழ் அகரவரிசை எனும் நூல்வழி இர. திருச்செல்வம் தனித்தமிழ் குறித்த விழிப்புணர்வு பெற்றார். தமிழ்மொழி - தமிழினம்- தமிழ்நெறி எனும் வாழ்வியல் வழிமுறை குறித்த ஈடுபாட்டில் அ.பு. திருமாலனாரின் மாணவராகத் தன் பதினேழாம் வயதில் இர. திருச்செல்வம் இணைந்து கொண்டார். சொற்பிறப்பியல் ஒப்பாய்வு, இலக்கண, மொழியியல் ஒப்பாய்வு மேற்கொண்டுவரும் இர. திருச்செல்வம் பன்மொழிகளைக் கற்றுத் தேர்ந்துள்ளார். மலாய்மொழி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், லத்தீன், கிரேக்கம், ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளோடு உருது, சீனம், ஜப்பானிய மொழிகளையும் கற்றுவருகிறார்.

ஆய்வுச் செயல்பாடுகள்

தமிழ் - தமிழர்வரலாறு
  • தமிழ் - தமிழர் வரலாற்றை உடன் - எதிர் எனும் இரு நிலையிலும் ஆராய்ந்து கூறும் பணி.
வடமொழி ஆய்வியற் கல்விவளம்
  • வடசொல், தென்சொல் வேறுபாட்டை ஆராய்ந்து விளக்கும் பணி.
  • வடமொழிசார் நூல்களைத் தேடிக் கற்று செய்யும் ஆய்வுப்பணி.
அகரமுதலித் தோய்வு
  • அகரமுதலிகளில் உள்ளவற்றைச் செய்யுளிலும் வழக்கிலும் அயலிலும் ஒப்புநோக்கி சான்றும் உறுதியும் தேடும் பணி.
வேர்ச்சொல் ஆராய்ச்சி

இர. திருச்செல்வம் தன் வேர்ச்சொல் ஆராய்ச்சிவழி, மலாய்மொழியில் வெறும் 66 சொற்களே தமிழ்ச் சொற்கள் எனும் கருத்தினைத் தன் ஆய்வின்வழி பொய்ப்பித்திருக்கிறார். வேர்ச்சொல் நிலையில் தமிழுக்கும் மலாய்க்கும் தொடர்பு இருப்பதை நிறுவியுள்ளார்.

கலைச்சொற்கள்

இர. திருச்செல்வம் தமிழில் புதிய கலைச்சொற்கள் உருவாக்கத்திலும் பங்காற்றி வருகின்றார்.

இயக்கச் செயல்பாடுகள்

  • இர. திருச்செல்வம் தமிழியல் ஆய்வுக் களம் எனும் ஆய்வியல் அமைப்பின் தலைவராக உள்ளார்.
  • இர. திருச்செல்வம் தமிழ்த்திருக்கூட்ட மரபுப் பணிமன்றம் எனும் ஆன்மநெறி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

இந்த இயக்கங்கள் வழி, மொழி, இனம், சமயம் என்ற கோட்பாட்டினை முன்னோர்கள் வகுத்த வழிமுறையில் தமிழ்வாழ்வியல் என்னும் பெயரில் மக்களுக்கு எடுத்தியம்பும் பணிகளையும் செய்து வருகின்றார். மேலும், தமிழர் மரபு வழியில் திருமணம், பெயர்சூட்டுவிழா, புதுமனை புகுவிழா, நல்லடக்கம், எழுத்தறிவு விழா, கூட்டு வழிபாடு போன்ற வாழ்வியல் பண்பாட்டு நிகழ்வுகளை நடத்தி வருகின்றார். அதோடு, திருக்குறள், திருவருட்பாவழி ஆன்மிக உரைகளும் மூலப் பெருந்தமிழ் மரபுநெறி உரைகளும் நிகழ்த்தி வருகிறார். இர. திருச்செல்வம் தமிழிசைப்பாடல்களும் இயற்றியுள்ளார்.

நூலாக்கம்

ஆன்மிகத் தூயதமிழ் நோக்கியலை முன்னிறுத்தி இர. திருச்செல்வத்தின் 'ஒளி நெறியே தமிழ்ச்சமயம்', 'தமிழ்ச்சான்றோர் கண்ட கடவுள்நெறி' எனும் நூல்களை எழுதியுள்ளார். சொல் அறிவியல் (10 தொகுதிகள்) எனும் வேர்ச்சொல் ஆய்வுத்தொகுதியை எழுதியுள்ளார். இர. திருச்செல்வம் எழுதிய 'வடசொல் - தமிழ் அகரமுதலி', 'ஆயிரமாயிரம் அழகுத் தமிழ்ப் பெயர்கள்' எனும் நூல்களும் கவனம் பெற்றவை. மேலும், தமிழ்க் கால மரபியல் பற்றி விளக்கும் 'தமிழாண்டு' எனும் நூலை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தின் மூலத்தமிழ் மரபினை எளிய முறையில் அறிந்துகொள்ளும் வகையில் இர. திருச்செல்வத்தால் 'தொல்காப்பியப் பெருநெறி' எனும் நூல் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் நாள்காட்டி

இர. திருச்செல்வம் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மூலப் பெருந்தமிழ் மரபு தமிழ் நாள்காட்டியை 2007 முதல் வெளியிட்டு வருகின்றார்.

பங்களிப்பு

தமிழகத்துக்கு வெளியே வேர்ச்சொல் ஆய்வுத்துறையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் இர.திருச்செல்வம். தமிழ் மரபியல் ஆய்வாளராகவும் இவர் பங்களிப்பு செய்து வருகிறார்.

நூல்கள்

  • இவற்றை இப்படித்தான் எழுதவேண்டும், 2000, தமிழியல் ஆய்வுக் களம்
  • ஏன் ஒரே சொல்லில் இத்தனை கருத்துகள் உள்ளன?, 2000, ஐந்திணை முனைவம்
  • தமிழ்ச் சான்றோர் கண்ட கடவுள் நெறி, தமிழியல் ஆய்வுக் களம்
  • சொல் அறிவியல் 1, 2004, தமிழியல் ஆய்வுக் களம்
  • சொல் அறிவியல் 2, 2005, தமிழியல் ஆய்வுக் களம்
  • ஆயிரமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள், தமிழியல் ஆய்வுக் களம்
  • வடசொல் - தமிழ் அகரமுதலி, தமிழியல் ஆய்வுக் களம்
  • தமிழ் ஆண்டு ஓர் அறிவியல் விளக்கம், 2008, தமிழியல் ஆய்வுக் களம்
  • தொல்காப்பியப் பெருநெறி, தமிழியல் ஆய்வுக் களம்
  • பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம், 2016, தமிழியல் ஆய்வுக் களம்
  • தமிழ்ப் புத்தாண்டு, 2016, தமிழியல் ஆய்வுக் களம்
  • யார் தமிழர், 2016, தமிழியல் ஆய்வுக் களம்
  • தமிழர் வரலாறு, 2016, தமிழியல் ஆய்வுக் களம்
  • மூலத்தமிழ் வானியல் அறிவறிதல், 2020, தமிழியல் ஆய்வுக் களம்
  • ஒளிநெறியே தமிழ்ச் சமயம், 2021, தமிழியல் ஆய்வுக் களம்
  • பொங்கல், 2021, தமிழியல் ஆய்வுக் களம்
  • மூலப்பெருந்தமிழ் மரபு, 2021, தமிழியல் ஆய்வுக் களம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Dec-2022, 17:54:54 IST