under review

ஞானி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Internal link name வானம்பாடி to வானம்பாடி;)
(Corrected Category:இதழாளர்கள் to Category:இதழாளர்Corrected Category:இலக்கிய ஆய்வாளர்கள் to Category:இலக்கிய ஆய்வாளர்Corrected Category:இலக்கிய விமர்சகர்கள் to Category:இலக்கிய விமர்சகர்Corrected Category:சிற்றிதழ்கள் to Category:சிற்றிதழ்)
 
Line 132: Line 132:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இலக்கிய ஆய்வாளர்கள்]]
[[Category:இலக்கிய ஆய்வாளர்]]
[[Category:இதழாளர்கள்]]
[[Category:இதழாளர்]]
[[Category:இலக்கிய விமர்சகர்கள்]]
[[Category:இலக்கிய விமர்சகர்]]
[[Category:சிற்றிதழ்கள்]]
[[Category:சிற்றிதழ்]]

Latest revision as of 13:48, 17 November 2024

ஞானி

ஞானி (ஜூலை 1, 1935 -ஜூலை 22, 2020) கோவை ஞானி (கி.பழனிச்சாமி) தமிழில் செயல்பட்ட இலக்கிய ஆய்வாளர், இதழாளர், மார்க்ஸியச் சிந்தனையாளர். வானம்பாடி இயக்கத்தின் கோட்பாட்டாளார். புதிய தலைமுறை, நிகழ் , தமிழ்நேயம் ஆகிய சிற்றிதழ்களை நடத்தியவர். மார்க்ஸியக் கோணத்தில் இலக்கிய விமர்சனங்களை முன்வைத்தவர்.பண்பாட்டை பொருளியல் அடிப்படையில் மட்டுமே ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்சியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர்.

பிறப்பு, கல்வி

கி. பழனிச்சாமி என்னும் இயற்பெயர் கொண்ட ஞானி ஜூலை 1, 1935-ல் கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூரில் கிருஷ்ணசாமி, மாரியம்மாள் ஆகியோருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார். கோவையில் பள்ளி இறுதி முடித்தபின் 1955 முதல் 1958 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழிலக்கியத்தில் பி.ஓ.எல் பட்டம் பெற்றார். லெப.கரு.ராமநாதன் செட்டியார், முத்து சண்முகனார், சோமசுந்தரம் பிள்ளை, முத்துசாமிப் பிள்ளை போன்ற புகழ்பெற்ற தமிழறிஞர்கள் அங்கே அவருக்கு ஆசிரியராக அமைந்தனர்.

ஞானி

தனிவாழ்க்கை

தமிழாசிரியராக கோவையில் 28 ஆண்டு காலம் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக கண்பார்வை இழந்ததால் 1988-ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது துணைவியார் மு. இந்திராணி, உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் 2012-ல் புற்றுநோயால் காலமானார். இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள்.

அரசியல் வாழ்க்கை

ஞானி கல்லூரி நாட்களில் தமிழியக்கத்தின் ஆதரவாளர் ஆனார். திராவிட இயக்கச்சார்பும் பெரியாரியம் சார்ந்த ஈடுபாடும் உருவானது. பின்னர் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளர் ஆனார். மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கிய அமைப்புகளில் பங்கேற்றார். 1960-களில் கோவையில் செயல்பட்ட 'சிந்தனை மன்றம்’ என்னும் அமைப்பு எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என் நாகராஜன் போன்றவர்கள் ஒருங்கிணைந்து விவாதிக்க களம் அமைத்தது. அந்த மன்றத்தில்தான் எஸ்.என்.நாகராஜன் மார்க்ஸின் 'அந்நியமாதல்’ கருத்தாக்கத்தையும் விளக்கிக்கூறி, மார்க்ஸியம் பற்றிய புரிதலில் ஒரு திருப்புமுனையை உருவாக்கினார் என எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகிறார். ஜோசப் நீதாம் (Joseph Needham) எழுதிய Time: the refreshing river[1] (1932-1942) என்னும் நூல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஞானியை மிகவும் கவர்ந்தது என்றும் மார்க்ஸியத்தையும் ஆன்மிகத்தையும் இணைத்துப் பார்ப்பதில் ஞானிக்கு உள்உந்துதல் தந்தவர் நீதாம்தான் என்றும் எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகிறார். அண்டோனியோ கிராம்ஷியின் சிந்தனைகள் எஸ்.என்.நாகராஜன், ஞானி, எஸ்.வி.ராஜதுரை ஆகியோரை பெரிதும் கவர்ந்தன. வழக்கமான மார்க்ஸியப் பார்வை கலையிலக்கியம் பற்றியும் ஆன்மிகம் பற்றியும் கொண்டிருந்த எல்லைகளை கடக்க அவர்களுக்கு கிராம்ஷி உதவினார்.

ஞானி

ஞானியின் அரசியல் பார்வையை மூன்று காலகட்டங்களாக பிரித்துப் பார்க்கலாம்

நேரடிப்போராட்டப் பார்வைக் காலகட்டம் (1968- 1982)

சீனாவில் மாவோ 1966-ல் கலாச்சாரப் புரட்சியைத் தொடங்கினார். உலகமெங்கும் பலவகையான மார்க்ஸிய கிளர்ச்சிகள் தோன்றின. சே குவேரா 1967-ல் கொல்லப்பட்டார். வியத்நாம் அமெரிக்காவுக்கு எதிராக போராட ,அமெரிக்காவில் போர் எதிர்ப்பு மாணவர் கிளர்ச்சிகள் உருவாயின. பிரான்ஸில் தொழிலாளர்- மாணவர் கிளர்ச்சிகள் தோன்றின. 1967-ல் நக்ஸலைட் இயக்கம் உருவானது. இவையனைத்தும் ஞானி உட்பட அன்றிருந்த மார்க்ஸியர்களிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தின. கலையிலக்கியம் யாவும் மக்கள் விடுதலைக்கே என்னும்கோஷம் ஞானியின் சிந்தனையை ஆட்கொண்டது. நேரடி போராட்டத்தை முன்வைக்கும் எழுத்துக்களை முன்வைத்தார். அதன்பொருட்டு புதிய தலைமுறை என்னும் கோட்பாட்டு இதழை எஸ்.என்.நாகராஜனுடன் இணைந்து நடத்தினார். கருத்துவேறுபாடுகளால் புதிய தலைமுறை நின்றபின் பரிமாணம், வேள்வி ஆகிய மார்க்ஸிய இதழ்களில் அதையே தன் இலக்கிய கொள்கையாக முன்வைத்தார். வானம்பாடி இயக்கத்தை அந்நோக்கிலேயே வழிநடத்தினார்.

"சோவியத் இரஷ்யாவிலிருந்தும் மாவோவின் சீனத்திலிருந்தும் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமான மார்க்சியத்தோடு மேலை உலகில் அல்தூசர் முதலியவர் மூலம் மார்க்சியத்திற்குள் வந்த புதிய பரிமாணங்களையும் கற்றுக்கொள்ளும் முறையிலும், தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தும் முறையிலும் 1979-1980-களில் `பரிமாணம்’ என்ற இதழை நடத்தினோம்". என அக்காலகட்டம் பற்றி ஞானி சொல்கிறார் (தீராநதி பேட்டி)

பண்பாட்டுமையப் பார்வை காலகட்டம் (1982- 1996)

நக்ஸலைட் இயக்கத்தின் வீழ்ச்சியும், நெருக்கடி நிலைக்காலமும் ஞானியை அவருடைய மரபார்ந்த மார்க்ஸியப் பார்வையை மறுபரிசீலனை செய்யச் செய்தது. மக்களிடம் அகமாற்றம் நிகழாத நிலையில் இலக்கியம் வெறும் அறைகூவல்களையும் பிரச்சாரங்களையும் வெளிப்படுத்துவதில் பயனில்லை என்னும் என்று கண்டடைந்தார். சமூக மாற்றம் என்பது பண்பாட்டு அடிப்படைகளில் உருவாகும் வளர்ச்சிமாற்றம் வழியாகவே நிகழமுடியும் என்னும் எண்ணத்தை அடைந்தார். அதற்கு தத்துவக் கல்வியும், கலையிலக்கியங்களில் மாற்றுச்சிந்தனையும் உருவாகவேண்டும் என எண்ணினார். ஞானி நடத்திய நிகழ் கலையிலக்கிய இதழ் அந்தப்பார்வையை முன்வைத்த இதழ்.

மார்க்சியமும் தமிழும்
தமிழ்த்தேசியப் பார்வை காலகட்டம் (1998-2020)

1992-ல் சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப்பின் ஞானியின் அரசியல் பார்வையில் பெரும் மாற்றம் உருவானது. மார்க்சிய விடுதலை என்பது தேசிய இனங்களின் விடுதலையின் வழியாகவே அடையப்பட முடியும் என்னும் எண்ணத்தை அடைந்தார். ஆகவே தமிழியக்கச் சிந்தனைகளுக்கு அணுக்கமானவரானார். தமிழ்நேயம் என்னும் சிற்றிதழை வெளியிட்டார். தமிழியக்கம், பெரியாரியம், ஆகியவற்றை மார்க்ஸியப்பார்வையுடன் இணைக்கமுயன்றார்

இதழியல்

ஞானி 1968 முதல் தொடர்ச்சியாக அரசியல் மற்றும் இலக்கியச் சிற்றிதழ்களை நடத்தி வந்தார்.ஞானி நடத்திய சிற்றிதழ்கள்

இலக்கிய வாழ்க்கை

ஞானி மனைவியுடன்

ஞானியின் இளமைப்பருவ நண்பர் துரைசாமி ஒரே ஊருக்குள் இருந்தாலும் கருத்துகளைக் கடிதங்களாகப் பறிமாறிக்கொள்வதை விளையாட்டாகச் செய்துவந்தார். அவர் ஞானி என்ற பெயரில் எழுதினார்.ஒருநாள் 'இந்தப் பெயரை நான் விட்டுவிடுகிறேன். நீ எடுத்துக்கொள்’ என்றார். தத்துவங்கள் மீது ஈடுபாடு இருந்ததால் அந்தப் புனைபெயரை ஞானி சூட்டிக்கொண்டார். மணிவாசகன், கதிரவன், கபிலன், இராவணன், தமிழ்மாறன் ஆகிய பெயர்களிலும் ஞானி எழுதியிருக்கிறார்.

ஞானி தொடக்கத்தில் மரபான மார்க்ஸிய நோக்கில் இலக்கியத்தை வர்க்கப்போராட்டத்திற்கான கருத்துக்களை புனைவுகள் வழியாக முன்வைக்கவேண்டிய அறிவுத்துறை என்னும் வரையறையுடனேயே அணுகினார். வர்க்கப்புரட்சிக்கு நேரடியாக உதவாத எழுத்துக்களை எதிர்த்தரப்பின் குரல் என வரையறை செய்தார். 1982-ல் வானம்பாடி இதழின் முடிவுக்காலம் வரை அவருடைய அணுகுமுறை அதுவாகவே இருந்தது. வானம்பாடி குழுவினரில் ஒரு சாரார் பின்னர் சுந்தர ராமசாமி, பிரமிள், க.நா.சுப்ரமணியம் போன்றவர்களிடம் ஓர் உரையாடலுக்கு முயன்றார்கள். ஞானி அந்த உரையாடலில் முன்னின்றார். கலையிலக்கியம் தனக்கான தனிப்போக்கு கொண்டது என்றும், அரசியல் அல்லது பொருளியல் சார்ந்த பார்வையால் அதை அணுகக்கூடாது என்றும் எண்ணனாலானார். எஞ்சிய வாழ்க்கை முழுக்க ஞானியின் இலக்கியப் பணி என்பது தத்துவ நோக்கில் இலக்கியத்தையும் மதத்தையும் ஆன்மிகத்தையும் புரிந்துகொள்வதற்கும் வகுத்துரைப்பதற்குமான முயற்சிதான். ஞானி மார்க்சியப் பார்வையில் நவீனத்தமிழிலக்கியம் சார்ந்து விரிவான விமர்சனத்தை முன்வைத்தார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கொள்கைகள், சித்தர் மரபு, ஈ.வே.ராமசாமி பெரியார் கருத்துக்கள் ஆகியவற்றை மார்க்ஸிய தத்துவ அடிப்படையில் மதிப்பிட்டார். அதன் பொருட்டு கட்டுரைகள் எழுதியும், உரைகள் ஆற்றியும் தொடர்ந்து செயல்பட்டார்.

அறிவியக்க இடம்

ஞானி- தமிழோசை

மார்க்ஸியச் சிந்தனையாளர், இலக்கிய விமர்சகர், இதழாளர் என்னும் வகையில் ஞானியின் பங்களிப்புகள் இவை.

அரசியல்
  • மாவோ சே துங் சிந்தனைகளை அடியொற்றி ஞானி விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடமிருந்து உருவாகி வரும் ஒரு மார்க்ஸிய எழுச்சியை முன்வைத்தார். நகர்சார்ந்த உழைப்பாளிகளிடமிருந்து உருவாகி வரும் மார்க்ஸியத்தை முன்வைத்த கட்சிசார்ந்த மார்க்ஸியர்களுடன் ஓர் உரையாடலை நடத்தினார்
  • மாவோ சே துங் சிந்தனைகளில் இருந்து முன்னகர்ந்து மேலைமார்க்ஸியம் (அல்லது ஐரோப்பிய மார்க்ஸியம்) சார்ந்த சிந்தனையாளர்களான அந்தோனியோ கிராம்ஷி, லூயி அல்தூஸர் போன்றவர்களின் பார்வைகளை தமிழுக்கு கொண்டுவந்தார். மார்க்ஸியர்கள் வழக்கமாகச் சொல்வதுபோல பண்பாட்டுச் செயல்பாடுகள் பொருளியல் அடிப்படைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவை அல்ல என்றும், அவற்றுக்கான தனிச்செயல்முறையும் போக்கும் உண்டு என்றும், பண்பாடு ஒரு சமூகத்தின் கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்களிப்பாற்றுகிறது என்றும் ஞானி வாதிட்டார். பண்பாட்டை அரசியல்நோக்கில் மட்டுமே அணுகும் பார்வையை மறுத்தார்.
  • தொழிலாளி உழைப்ப்பு அளிக்கும் நிறைவு, மகிழ்ச்சி ஆகியவற்றில் பிரிக்கப்பட்டு வெறும் உழைப்பாளியாக ஆக்கப்படும்போது அவனுள் ஓர் அன்னியமாதல் நிகழ்கிறது. அதன் விளைவாக அவனுடைய அகம் கொள்ளும் திரிபு அவனை மதம் முதலியவற்றை நோக்கிச் செல்ல வைக்கிறது. இதைப் பற்றி கார்ல் மார்க்ஸ் தன் இளமைக் காலத்தில் எழுதியவை பின்னர் அவராலேயே நிராகரிக்கப்பட்டன. ஆனால் லூயி அல்தூஸர் போன்றவர்கள் அவை முக்கியமான சிந்தனைகள் என பின்னாளில் முன்வைத்தனர். தமிழில் எஸ்.என்.நாகராஜனுடன் இணைந்து இளம் மார்க்ஸின் அன்னியமாதல் கோட்பாட்டை மார்க்ஸிய சிந்தனையின் அடிப்படையாக முன்வைத்தவர் ஞானி. அன்னியமாதல் என்னும் கருத்தில் இருந்தே இலக்கியச்செயல்பாடுகள், ஆன்மிகத்தேடல்கள் ஆகியவற்றை புரிந்துகொள்ள முடியும் என வாதிட்டார்.
ஞானியின் சமதர்ம படைப்பாளுமை
இலக்கியம்
  • இலக்கியப் படைப்புகள் வர்க்கப்புரட்சியின் அரசியலுக்கு உதவுகின்றனவா இல்லையா என்னும் கேள்வியை மட்டுமே வைத்து இலக்கியத்தை மதிப்பிடக்கூடாது என்ற நிலைபாடு கொண்ட மார்க்சிய விமர்சகர் ஞானி. இலக்கியத்தில் உள்ள தனிநபர் பார்வை, அகவயநோக்கு, ஆன்மிகத்தேடல் ஆகியவற்றை மார்க்ஸியர் வழக்கமான ஆய்வுமுறைகளைக் கொண்டு அணுகக்கூடாது என்றார். இலக்கியவாதியை சமூகத்தின் ஒரு மாதிரி அலகாக எடுத்துக்கொண்டு அவனுடைய படைப்பை சமூகத்தின் வெளிப்பாடாகவே கொள்ளவேண்டும். அவன் வழியாக அச்சமூகத்தின் பண்பாட்டின் ஆழமும், வரலாற்றின் ஒட்டுமொத்தமும் வெளிப்படுகிறது.. சமகாலத்தின் பதற்றங்களும் ஒவ்வாமைகளும் வெளிப்படுகின்றன. அவை மார்க்சிய ஆய்வுக்கு உட்படவேண்டும் ஆகியவை அவருடைய கருத்துக்கள்.
  • முற்போக்கு இலக்கியம் என்பதை விரிந்த பார்வையில் அணுகவேண்டும் என ஞானி வாதிட்டார். இடதுசாரிக் கொள்கை கொண்ட படைப்புகள் மட்டும் முற்போக்கானவை அல்ல. மானுட விடுதலைக்கான கனவும், அதைச்சார்ந்த ஆதங்கமும் கொண்ட எல்லா படைப்புகளும் முற்போக்கானவையே. அவ்வகையில் அவர் தமிழில் இடதுசாரிகளை எதிர்த்த பல படைப்பாளிகளின் எழுத்துக்களை முற்போக்கானவை என மதிப்பிட்டார்
இதழியல்
  • ஞானி நடத்திய கோட்பாட்டுச் சிற்றிதழ்களில் எஸ்.என்.நாகராஜன், புலவர் ஆதி, எஸ்.வி.ராஜதுரை போன்றவர்களின் ஆய்வுகள் வெளிவந்தன. அவர் வானம்பாடி இதழின் இடதுசாரிப் பார்வையை வடிவமைப்பவராக திகழ்ந்தார்.
  • ஞானி நடத்திய நிகழ் தமிழில் முக்கியமான படைப்புகளை வெளியிட்டது. ஜெயமோகன் உட்பட பல புதிய படைப்பாளிகளுக்கு களம் அமைத்துத் தந்தது. தலித் இலக்கியம் தமிழில் உருவாவதற்கான தொடக்ககால உரையாடல்களை உருவாக்கியது.

விருதுகள்

  • தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறை விருது 2006 (மார்க்சியம் பெரியாரியம்)புதுமைப்பித்தன் 'விளக்கு விருது’ (1998)
  • கனடா–தமிழிலக்கியத் தோட்ட 'இயல்’ விருது (2010)
  • எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய 'பரிதிமாற் கலைஞர்’ விருது (2013)
  • இந்து தமிழ் திசை வழங்கிய சாதனையாளர் விருது (2019)

மறைவு

கோவை ஞானி ஜூலை 22, 2020 அன்று தனது 86-வது வயதில் கோவை, துடியலூர் வி. ஆர். வி நகரில் காலமானார்.

நூல்கள் நினைவகங்கள்

ஞானி
  • கோவை ஞானியின் சிந்தனைகளையும் அவர் பற்றிய நினைவுகளையும் தொகுத்து ஜெயமோகன் ஞானி என்னும் நூலை எழுதியிருக்கிறார்[2].
  • தமிழோசை பதிப்பக சார்பில் ஞானிக்கு 79-ம் ஆண்டு நிறைவை ஒட்டி ஞானி 79 என ஒரு தொகைநூல் வெளியிடப்பட்டுள்ளது
  • இரா அறவேந்தன் எழுதிய ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை என்னும் நூல் நியூசெஞ்சுரி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

நூல்கள்

இலக்கிய விமர்சனம்
  • மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988
  • தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் - 1994
  • எண்பதுகளில் தமிழ் நாவல்கள் - 1994
  • படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் -
  • தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் - 1997
  • நானும் என் தமிழும் - 1999
  • தமிழன் வாழ்வும் வரலாறும் - 1999
  • தமிழில் படைப்பியக்கம் - 1999
  • மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் - 2001
  • எதிர் எதிர் கோணங்களில் - 2002
  • மார்க்சிய அழகியல் - 2002
  • கவிதையிலிருந்து மெய்யியலுக்கு - 2002
  • தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் - 2003
  • தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் - 2004
  • வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் - 2004
  • தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் - 2005
  • தமிழன்பன் படைப்பும் பார்வையும் - 2005
  • வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - 2007
  • தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் - 2008
  • நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் - 2009
  • செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - 2010
  • தமிழிலக்கியம் இன்றும் இனியும் - 2010
  • வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - 2011
  • ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் - 2012
  • அகமும் புறமும் புதுப்புனல் - 2012
  • அகமும் புறமும் தமிழ்நேயம் - 2012
  • ஞானியின் எழுத்துலகம் - 2005
  • ஞானியோடு நேர்காணல் - 2012
ஞானி இயல்விருது (உடன் விருதுபெறுபவர் ஐராவதம் மகாதேவன், அளிப்பவர் செல்வ கனகநாயகம்)
மெய்யியல்
  • மார்க்சியத்திற்கு அழிவில்லை - 2001
  • மார்க்சியமும் மனித விடுதலையும் - 2012
  • இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் - 1975
  • மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு - 1976
  • கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை - 1996
  • நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் - 2006
கவிதை
  • கல்லிகை - 1995
  • தொலைவிலிருந்து - 1989
  • கல்லும் முள்ளும் கவிதைகளும் - 2012
தொகுப்பு நூல்கள்
  • தமிழ்த் தேசியம் பேருரைகள் - 1997
  • அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் - 1997
  • மார்க்சியத்தின் எதிர்காலம் - 1998
  • படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் - 1999
  • மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் - 1999
  • விடுதலை இறையியல் - 1999
  • இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் - 2000
  • மார்க்சியம் தேடலும் திறனாய்வும் - 2000
  • நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - 2001
  • பெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:42 IST