under review

யசோதர காவியம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 44: Line 44:
* [https://www.chennailibrary.com/iynchirukappiangal/yasodarakaviyam.html யசோதர காவியம்: சென்னை நூலகம்]
* [https://www.chennailibrary.com/iynchirukappiangal/yasodarakaviyam.html யசோதர காவியம்: சென்னை நூலகம்]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-204473665/16359-2011-08-30-02-05-45 யசோதர காவியம் பதிப்புப் பற்றிய சில குறிப்புகள்: கீற்று இணையதளம்]<br />
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-204473665/16359-2011-08-30-02-05-45 யசோதர காவியம் பதிப்புப் பற்றிய சில குறிப்புகள்: கீற்று இணையதளம்]<br />


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|17-Aug-2023, 10:21:13 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:48, 13 June 2024

யசோதர காவியம், ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக குமார காவியம் ஆகிய மூன்று மட்டுமே ஐஞ்சிறு காப்பியங்களில் 'காவியம்’ என்ற பெயரால் குறிக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள சூளாமணி, நீலகேசி இரண்டும் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. இந்நூல் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. ஜைன புராணமான வடமொழி உத்தர புராணத்தில் 'யசோதரன் சரிதம்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மன்னன் பற்றித் தமிழில் வெளியாகியிருக்கும் ஒரே நூல் இதுதான். அபயருசி என்பவன், ஔதய நாட்டு மன்னன் மாரி தத்தனுக்கு, தனது முற்பிறவியை வாழ்க்கையைப் பற்றிக் கூறி, சமணத்தின் சிறப்பை எடுத்துரைத்து, நற்கதி பெறச் செய்வதே இக்காப்பியத்தின் கதை.

பதிப்பு, வெளியீடு

யசோதர காவியத்தை, 1887-ல், காஞ்சிபுரம் பாகுபலி நயினார் என்பவர் முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்டார். இதன் மறுபதிப்பு தில்லையம்பூர் வேங்கடராம ஐயங்காரால் 1908-ல் அச்சிடப்பட்டது. பிற்காலத்தில் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் இதனை ஔவை துரைசாமிப் பிள்ளை உரையுடன் அச்சிட்டு வெளியிட்டது. 1951-ல், வீடூர் பூரணச் சந்திரன், விரிவான உரை எழுதி இந்நூலைப் பதிப்பித்துள்ளார்.

நூல் ஆசிரியர்

’யசோதர காவியம்’ நூலை இயற்றியவர் யாரென்று அறியப்படவில்லை. யசோதரன் சரிதத்தை வடமொழியில் சோமதேவ சூரி , வாதிராஜ சூரி, அரிபத்திரர் புட்பதந்தர் ஆகியோர் எழுதியுள்ளனர். வாதிராஜ சூரியின் காவியத்தைத் தழுவியே தமிழில் 'யசோதர காவியம்’ படைக்கப் பட்டுள்ளது. வடமொழியில் 'யசோதர சரிதம்’ படைத்த வாதிராஜ சூரியே தமிழிலும் இக்காவியம் படைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை, இந்த நூலைப் பதிப்பித்த வேங்கடராம ஐயங்கார் முன்வைத்துள்ளார்.

புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத்
திட்பமாய்ச் செந்தமிழில் செப்பினான் - நட்புடையார்
நண்ணார் இவர்என்ன நாடாக் கொடைக்கையர்
வெண்ணாவல் ஊருடைய வேள்

- என்ற ஏட்டுப் பிரதிப் பாடலின் மூலம், இந்நூலாசிரியர் வெண்ணாவல் என்ற ஊரில் வாழ்ந்த வள்ளல் வேள் என்பதும், புட்பதந்தரின் 'யசோதர சரிதம்’ என்ற நூலைத் தழுவியே இக்காப்பியத்தைப் படைத்துள்ளார் என்ற கருத்தும் காணப்படுகிறது.

நூல் அமைப்பு

யசோதர காவியம், ஐந்து சருக்கங்களைக் கொண்டுள்ளது. சில பதிப்புகளில் 330 பாடல்களும், சில பதிப்புகளில் 320 பாடல்களும் காணப்படுகின்றன. முற்பிறவி-மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை இக்காப்பியம் விவரிக்கிறது.

கதைச்சுருக்கம்

ஒளதய நாட்டின் தலைநகர் இராசமாபுரம். அதன் மன்னனான மாரி தத்தன், 'சண்டமாரிதேவி’க்குப் பலியிட அபயருசி, அபயமதி என்ற இரு சிறார்களை அழைத்துவரச் செய்கிறான். அவன்பலி கொடுக்க முனையும்போது அபயருசி, மன்னனை வாழ்த்துகிறான். சிறார்களது மன உறுதி கண்டு வியந்த மன்னன், தண்டனையை நிறுத்துகிறான். மன்னனுக்கு அபயருசி தன்னுடைய முற்பிறவி பற்றி எடுத்துரைக்கிறான். அவனே முற்பிறவியில் அவந்தி நாட்டு இளவரசன் யசோதரன். மாக்கோழி ஒன்றை அவனுடைய அன்னையின் தூண்டுதலால் பலியிடுகிறான். அந்த மாவினால் ஆன கோழிக்குள் புகுந்திருந்த ஒரு தெய்வம் துடிதுடித்து இறந்து போகிறது. அதனால் அவனையும் அவனது தாயையும் கர்மவினை சூழ்கிறது. யசோதரன் மயில், முள்ளம்பன்றி, மீன், ஆட்டுக்குட்டி, எருமை, கோழி என்று பல்வேறு பிறவிகள் எடுக்க, அவனது தாய் சந்திரமதியும் நாய், பாம்பு, முதலை, ஆடு என்று பல்வேறு பிறவிகள் எடுத்து இறுதியில் கோழியாகப் பிறக்கிறார். கோழிகள் இரண்டும் சமண முனிவர் ஒருவர் ஓதும் அறங்களைக் கேட்கின்றன. பிறப்பின் தன்மையை, வாழ்க்கையின் உண்மையை உணர்கின்றன. பின் மறுபிறவியில் அவர்களே அபயருசியும், அபயமதியுமாய்ப் பிறக்கின்றனர். இந்த உண்மையையே அபயருசி மன்னனிடம் தெரிவித்தான். மன்னன் அதைக் கேட்டு, வாழ்வின் உண்மை உணர்ந்து சமணம் சார்ந்து துறவு பூணுகிறான்.

பாடல் நடை

சொற்சுவையும் இனிமையும் கொண்டதாக இக்காப்பியத்தின் பாடல்கள் அமைந்துள்ளன.

ஆக்குவது ஏதுஎனில் வெகுளி ஆக்குக
போக்குவது ஏதுஎனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏது எனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏது எனில் விரதம் காக்கவே
இணையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின்
இனையதுவினைகள்பின்னா ளிடர்செய்த முறைமைதானும்
இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின்
இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான்

- போன்ற பாடல்கள் எளிமையும், இனிமையும் கொண்டதாக அமைந்துள்ளன.

காப்பியம் கூறும் அறங்கள்

  • உயிர்க் கொலை புரிதல் பெரும் பாவம்.
  • அது மனிதப் பிறவியிலிருந்து கீழான பிறவி நிலைகளுக்கு ஒருவரை இட்டுச் செல்லும் தன்மை மிக்கது.
  • கொலை புரிதலும், உயிர்ப்பலிகளும் நரக வாழ்க்கையையே அளிக்கும்.
  • புலால் உண்ணுதல் கொடிய பாவமாகும்.
  • கூடா ஒழுக்கம் பஞ்சமா பாதகத்தைச் செய்யத் தூண்டும்.
  • அறவோர் அறவுரைyஏ ஒருவரை நல்வழிப்படுத்தி பாவங்களிலிருந்து விலக்கும்.

- போன்ற அறச் செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2023, 10:21:13 IST