under review

வேலூர் ம. நாராயணன்

From Tamil Wiki
வேலூர் ம. நாராயணன்

வேலூர் ம. நாராயணன் (வேலூர் எம். நாராயணன்) (பிறப்பு: ஜனவரி 1, 1950) கவிஞர், எழுத்தாளர். வங்கி அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழக அரசு வழங்கிய தமிழ்ச் செம்மல் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

வேலூர் ம. நாராயணன், ஜனவரி 1, 1950 அன்று, வேலூரில், எம்.கே. மதுரை - வள்ளியம்மாள் இணையருக்குப் பிறந்தார். வேலூர் சார்க்கார் மண்டி பள்ளியில் ஆரம்பக்கல்வி படித்தார். கோடையிடி ஏ.குப்புசாமி முதலியார் உயார்நிலைப் பள்ளியில் மேல் நிலைக் கல்வி கற்றார். வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியில் பயின்று, இயற்பியல் துறையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில், ’பெரியாரும் மனிதநேயமும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வேலூர் ம. நாராயணன், ஓராண்டு காலம் சென்னை கெளரிவாக்கத்தில் உள்ள எஸ்.ஐ.வி.ஈ.டி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து வேலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தராகப் பணியாற்றினார். 33 ஆண்டுகள் ஒரே கிளையில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: கௌரி. மகன்: நா. பூங்குன்றன். மகள்கள் நா.முல்லை, நா.மருதம்.

வேலூர் எம். நாராயணன்

இலக்கிய வாழ்க்கை

வேலூர் ம. நாராயணன், தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி, ராணி, மாலைமுரசு, கவிதை உறவு, செந்தமிழ்ச் செல்வி, அமுதசுரபி, தும்பை, முல்லைச்சரம் போன்ற இதழ்களில் கவிதை, கட்டுரைகளை எழுதினார். ’நிலா முற்றம்’ என்பது வேலூர் நாராயணனின் முதல் கவிதைத் தொகுப்பு. வேலூர் ம.நாராயணன் கவிதை, கட்டுரை, உரைநடை என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். வேலூர் ம. நாராயணன் படைப்புகளை ஆய்வு செய்து சில மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற்றனர். வேலூர் ம. நாராயணன் பல்வேறு கவியரங்குகள், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்குகொண்டார்.

அமைப்புப் பணிகள்

வேலூர் ம. நாராயணன், வேலூரில் ‘இலக்கிய அன்பர்கள் வட்டம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பல இலக்கிய விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தினார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி சிறந்த தமிழறிஞர்களை வரவழைத்து இலக்கியக் கலந்துரையாடல், சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தினார். சுரதா, சிலம்பொலி சு.செல்லப்பன், மு. தமிழ்க்குடிமகன், மன்னர்மன்னன், தென்கச்சி கோ.சுவாமிநாதன், மா.செங்குட்டுவன், விக்கிரமன், கா. வேழவேந்தன், ஈரோடு தமிழன்பன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் ஆற்றிய உரைகளைத் தொகுத்து ‘சிகரங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

பொறுப்பு

  • வேலூர் இலக்கிய அன்பர்கள் வட்ட அமைப்பாளர், நிறுவனர்
  • செந்தமிழ்ச் செல்வி ஆசிரியர் குழு உறுப்பினர்
மு.வ. விருது

விருதுகள்

  • கிருஷ்ணகிரி உலகத் தமிழ் கவிஞர் பேரவை வழங்கிய கவிமாமணி விருது - 1991
  • பெரியாரியல் சிந்தனையாளர் விருது - 2004
  • அறவாணர் சாதனை விருது - 2017
  • சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை விருது - 2017
  • மு.வ. அறக்க்கட்டளை வழங்கிய மு.வ. நினைவு விருது - 2018
  • தமிழக அரசு வழங்கிய தமிழ்ச் செம்மல் விருது - 2021

மதிப்பீடு

வேலூர் ம. நாராயணன் சமூகம் சார்ந்த விழிப்புணர்ச்சிக் கருத்துக்களைதனது கவிதைகளில் எழுதினார். தமிழ் இன உணர்வுகளை மீட்கும் பல கருத்துக்களைக் கொண்ட கவிதைகளைப் படைத்தார். வேலூர் இலக்கிய அன்பர்கள் வட்டம் மூலம் நாராயணன் முன்னெடுத்த இலக்கியப் பணிகள் தமிழறிஞர்களின் நன் மதிப்பைப் பெற்றன. வேலூர் பகுதித் தமிழ்க் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவராகவும், வங்கியில் பணியாற்றிவர்களில் முதன் முதலில் தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவராகவும் வேலூர் ம. நாராயணன் அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • நிலாமுற்றம்
  • பொற்காலம்
  • செவ்வானம்
  • கற்பூரப்பெட்டகம்
  • பெருமிதம்
  • அமிழ்தம்
  • கிழக்குதிசை
  • நிலாமுகம்
  • இன்பமும் நாமும்
  • ஞாயிறு போற்றுதும்
  • பொன்னுலகம்
சொற்பொழிவு நூல்கள்
  • அமுத வெள்ளம்
  • கருவூலம்
  • எழுநிலை மாடம்
  • விருந்தும் மருந்தும்
  • சிரிப்பும் சிந்தனையும்
  • மானிட சமுத்திரம்
  • வானமுதம்
கட்டுரை நூல்கள்
  • அறிமுகம்
  • அறிவுத்தாகம்
  • கண்ணோட்டம்
  • இனியவை இருநூறு
  • பொன் மலர்கள்
  • மலரும் மணமும்
  • அமுதமொழிகள் ஆயிரம்
  • சிகரங்கள்
  • பெரியாரும் மனிதநேயமும் (முனைவர் பட்ட ஆய்வேடு)
  • தமிழ் ஞாலம்
  • நெஞ்சோடு நெஞ்சம்
  • திசை கண்டேன் வான் கண்டேன்
  • முத்துப்பந்தல்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 18:42:59 IST