under review

தென்கச்சி கோ. சுவாமிநாதன்

From Tamil Wiki
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
தென்கச்சி சுவாமிநாதன்

தென்கச்சி கோ. சுவாமிநாதன் (கோ. சுவாமிநாதன்; தென்கச்சி சுவாமிநாதன்; தென்கச்சி) (ஜூன் 27, 1942 - செப்டம்பர் 16, 2009) தமிழக எழுத்தாளர். கவிஞர். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். வானொலியின் ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் பரவலாக அறியபட்டார். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். பல நூல்களை எழுதினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

தென்கச்சி கோ. சுவாமிநாதன், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்காஞ்சிபுரம் என்னும் தென்கச்சியில், கோவிந்தசாமி-கோவிந்த அம்மாள் இணையருக்கு ஜூன் 27, 1942 அன்று பிறந்தார். தென்கச்சியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் படித்தார். கோயமுத்தூர் விவசாயக் கல்லூரியில், விவசாயத்தில் இளவர் பட்டம் (பி.எஸ்.ஸி. அக்ரிகல்சர்) பெற்றார்.

தனி வாழ்க்கை

தென்கச்சி கோ. சுவாமிநாதன், சில ஆண்டுகள் விவசாய வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றினார். பின் சொந்த ஊரில் விவசாயப் பணி செய்தார். தென்கச்சி கிராம ஊராட்சி மன்றத் தலைவராகப் பணிபுரிந்தார். திருநெல்வேலி மற்றும் சென்னை வானொலியில் 24 ஆண்டுகள் பணியாற்றினார். மனைவி: மகாலட்சுமி. மகள்: செந்தமிழ்ச்செல்வி.

தென்கச்சி சுவாமிநாதன் புத்தகங்கள்

இலக்கிய வாழ்க்கை

தென்கச்சி கோ. சுவாமிநாதன் இளம் வயதிலேயே நூலகங்களில் வாசித்து தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். முதல் கவிதை பாரதிதாசனின் குயில் இதழில், 1959-ல் வெளிவந்தது. வானொலியில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து ‘இன்று ஒரு தகவல்’ என்ற தலைப்பில் எழுதினார். சக்தி விகடன், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். பல நூல்களை எழுதினார்.

Tenkatchi Swaminathan

வானொலி வாழ்க்கை

தென்கச்சி கோ. சுவாமிநாதன், திருநெல்வேலி வானொலியின் விவசாய ஒலிபரப்புப் பிரிவில் பிரதி எழுத்தாளராகப் (Script writer) பணியாற்றினார். சென்னை வானொலியின் தமிழ்ப்பிரிவில் ஆசிரியர் ஆகப் பணியாற்றினார். பெண்கள் நிகழ்ச்சி, குழந்தைகள் நிகழ்ச்சி, விவசாய ஒலிபரப்பு, உரைச் சித்திரங்கள், நாடகத்துறை, தமிழ் இலக்கியத்துறை நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளராகச் செயல்பட்டார். வானொலிக்காக ஜெயகாந்தன், லா.ச. ராமாமிர்தம், கோவி. மணிசேகரன் உள்ளிட்ட எழுத்தாளர்களை நேர்காணல் செய்தார். ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து 14 ஆண்டுகள் நடத்தினார். சென்னை வானொலி நிலையத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி 2002-ல், பணி ஓய்வு பெற்றார்.

வேதாத்ரி மகரிஷியுடன்

ஊடகம்

தென்கச்சி கோ. சுவாமிநாதன், சன் தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியைச் சில ஆண்டுகள் வழங்கினார்.

திரைப்படம்

தென்கச்சி கோ. சுவாமிநாதன், ’பெரியமருது' திரைப்படத்தில் நடிகர் தங்கவேலுவிற்காகப் பின்னணிக் குரல் கொடுத்தார். ’காதலே நிம்மதி’, ‘இலக்கணம்’ போன்ற படங்களில் நடித்தார்.

கலைஞர் மு. கருணாநிதியுடன்
கிருபானந்த வாரியாரிடமிருந்து ஆசி

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • காஞ்சி மடத்தின் பல்கலை மாமணி விருது
  • காஞ்சி மடத்தின் நடமாடும் தகவல் களஞ்சியம் விருது
  • பாரதியார் பல்கலைக் கழகத்தின் மகாகவி பாரதி விருது
  • பாரதிதாசன் விருது

தென்கச்சி கோ. சுவாமிநாதன் காணொளிகள்

மறைவு

தென்கச்சி கோ. சுவாமிநாதன், உடல்நலக்குறைவால், செப்டம்பர் 16, 2009 அன்று சென்னையில் காலமானார்.

தென்கச்சி சுவாமிநாதன் வாழ்க்கை வரலாறு - கோமல் அன்பரசன்

ஆவணம்

’தென்கச்சி - கதை ராஜாவின் கதை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் கோமல் அன்பரசன், தென்கச்சி கோ. சுவாமிநாதனின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார். சூரியன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.

இலக்கிய இடம்

தென்கச்சி கோ. சுவாமிநாதன், சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் உரிய பல கட்டுரைகளை எழுதினார். அவரது ‘இன்று ஒரு தகவல்’ நூலாக வெளியாகி உலக அளவில் உள்ள தமிழர்களிடையே வாசக வரவேற்பைப் பெற்றது. அடுக்கு மொழிகள், அலங்கார வார்த்தைகள் இல்லாமல், எளிமையான மொழியில், இயல்பாகப் பேசி மக்களது மனம் கவர்ந்த பேச்சாளராகத் தென்கச்சி சுவாமிநாதன் மதிப்பிடப்படுகிறார்.

தென்கச்சி சுவாமிநாதன் நூல்கள்
நூல் வெளியீடு

நூல்கள்

  • இன்று ஒரு தகவல் - 23 பாகங்கள்
  • தகவல்கள் (பல பாகங்கள்)
  • வாரம் ஒரு தகவல்
  • தகவல் சுரங்கம் (பல பாகங்கள்)
  • தகவல் கேளுங்கள்
  • தகவல் களஞ்சியம்
  • வானொலித் தகவல்கள் (பல பாகங்கள்)
  • கடவுளைத் தேடாதீர்கள்
  • மனசுக்குள் வெளிச்சம்
  • இந்த நாள் இனிய நாள்
  • தெம்புக்குப் படிங்க
  • சிந்தனை விருந்து
  • தென்கச்சி வழங்கும் நீதிக் கதைகள் (பல பாகங்கள்)
  • நினைத்தால் நிம்மதி
  • வாழ்க்கையைக் கொண்டாடுவோம்
  • புதையலைப் புரிந்து கொள்
  • அய்யாசாமியின் அனுபவங்கள்
  • உள்ளமே உலகம்
  • தென்கச்சியின் நகைச்சுவை விருந்து
  • தென்கச்சி பதில்கள் (பாகம்-1&2)
  • தென்கச்சி சுவாமிநாதன் கவிதைகள்
  • தென்கச்சியின் 100 சுவையான தகவல்கள்
  • சிரிப்போம் சிந்திப்போம்
  • வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு
  • அருள்தந்தையின் நகைச்சுவையுணர்வு
  • சிறகை விரிப்போம்
  • நல்ல குடும்பம் நல்ல தலைமை
  • அனுபவங்கள் அர்த்தமுள்ளவை
  • எல்லோருக்கும் அன்னை ஸ்ரீ சாரதாதேவி
  • சிரிக்க சிந்திக்க விவேகானந்தரின் கதைகள்
  • பார்த்திபன் கனவு
  • மனமும் யோகமும்

மற்றும் பல

உசாத்துணை


✅Finalised Page