under review

வித்தகம் (இதழ்)

From Tamil Wiki
வித்தகம் இதழ்

வித்தகம் (1933-1936) புதுச்சேரியிலிருந்து வெளிவந்த சைவ சமயம் சார்ந்த இதழ். யாழ்ப்பாணம் தென்கோவை பண்டிதர் ச. கந்தையா பிள்ளை இவ்விதழின் ஆசிரியர். இரா. நாகரத்தினம் பதிப்பாசிரியர்.

பிரசுரம், வெளியீடு

புதுச்சேரியிலிருந்து வெளிவந்த சைவ சமயம் சார்ந்த இதழ்களுள் ஒன்று வித்தகம். யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வியாளர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய தென்கோவை பண்டிதர் ச . கந்தையா பிள்ளை வித்தகம் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இரா. நாகரத்தினம் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். புதுச்சேரி அம்பலத்தாடு ஐயர் மடத்து வீதி, எண் 4-ல் அமைந்திருந்த நந்தி வெளியீட்டு மன்றத்தின் மூலம் இந்நூல் வெளியானது. இவ்விதழைச் சந்தானம் அச்சகத்தினர் அச்சிட்டனர்.

வியாழன்தோறும் வெளியான வித்தகம் இதழ் இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, ஃபிரான்ஸ் முதலிய நாடுகளிலும் விற்பனையானது. சுத்தானந்த பாரதியார், பேரறிஞர் சி. வேலுப் பிள்ளை ஆகியோர் வித்தகம் இதழ் குறித்து மதிப்புரை வழங்கிச் சிறப்பித்தனர். தனிப்பிரதி இதழின் விலை: 1 அணா.

உள்ளடக்கம்

ஃபிரெஞ்சு குடியரசின் உரிமை முழக்கமான 'Liberté, égalité, fraternité' (சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம்) இதழின் முகப்பில் இடம்பெற்றது. வித்தகம் என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. முகப்பின் கீழ்

நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது.

- என்ற குறள் இடம்பெற்றது. திருவாசகம், ஒளவைக்குறள், சுத்தசாதகம் போன்ற இலக்கியங்களிலிருந்து பாடல்கள் முகப்பில் இடம்பெற்றன. இதழின் கட்டுரைகள் செந்தமிழ் நடையில் அமைந்திருந்தன. இலங்கை அறிஞர்களான கணேசய்யர், க.பொ. இரத்தினம் போன்றோரின் படைப்புகள் வித்தகம் இதழில் இடம்பெற்றன. 'தலையாய அறம்', 'ஆரியமும் தமிழும்', 'பெண்பாற் புலவர்கள்', 'உயிர் வருக்கம்', 'தமிழ் நெடுங்கணக்குத் திருத்தத் தீர்மானம்' போன்ற கட்டுரைகள் வெளியாகின. பல்வேறு நூல்கள் பற்றிய அறிமுகங்கள், மதிப்புரைகள், சமகால இதழ்கள் குறித்த விமர்சனங்கள் வித்தகம் இதழில் இடம்பெற்றன. விளம்பரங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது.

இதழ் நிறுத்தம்

1933-ம் ஆண்டு முதல் வெளிவந்த வித்தகம் இதழ், 1936-ல் நின்றுபோனது.

ஆவணம்

வித்தகம் இதழின் பிரதிகள் சில தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

சைவம், சமயம், தத்துவம், இலக்கியம் சார்ந்து புதுச்சேரியில் இருந்து வெளிவந்த இதழ்களுள் வித்தகம் இதழ் குறிப்பிடத்தகுந்த ஓர் இதழாக அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 23:15:33 IST