under review

ஔவைக் குறள்

From Tamil Wiki

ஔவைக் குறள் (பொ.யு. பதினான்காம் நூற்றாண்டு) சைவ சமயத்தின் அடிப்படைத் தத்துவங்களான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு கருத்துக்களில் யோகத்தை வலியுறுத்திக் கூறும் ஞான மார்க்க நூல். மூன்று பாகங்கள் கொண்ட ஔவைக் குறளில் 310 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஔவைக்குறளை இயற்றியவர் ஔவையார்.

தோற்றம்

ஔவைக் குறள், விநாயகர் அகவல் என்னும் பக்திப் பனுவலை இயற்றிய ஔவையார் இயற்றிய நூலாகக் கருதப்படுகிறது. இதன் காலம் பொ.யு. பதினான்காம் நூற்றாண்டு.

நூல் அமைப்பு

ஔவைக் குறள் மூன்று பாகங்களைக் கொண்டது. அவை,

  • வீட்டுநெறிப்பால்
  • திருவருட்பால்
  • தன்பால்
வீட்டுநெறிப்பால்

வீட்டுநெறிப்பால், பத்து அதிகாரங்களைக் கொண்டது. அவை,

  • பிறப்பினிலைமை
  • உடம்பின்பயன்
  • உள்ளுடம்பினிலைமை
  • நாடிதாரணை
  • வாயுதாரணை
  • அங்கிதாரணை
  • அமுததாரணை
  • அர்ச்சனை
  • உள்ளுணர்தல்
  • பத்தியுடைமை
திருவருட்பால்

திருவருட்பால், பத்து அதிகாரங்களைக் கொண்டது. அவை,

  • அருள்பெறுதல்
  • நினைப்புறுதல்
  • தெரிந்துதெளிதல்
  • கலைஞானம்
  • உருவொன்றிநிற்றல்
  • முத்திகாண்டல்
  • உருபாதீதம்
  • பிறப்பறுதல்
  • தூயவொளிகாண்டல்
  • சதாசிவம்
தன்பால்

தன்பால் பதினோரு அதிகாரங்களைக் கொண்டது. அவை,

  • குருவழி
  • அங்கியிற்பஞ்சு
  • மெய்யகம்
  • கண்ணாடி
  • சூனியகாலமறிதல்
  • சிவயோகநிலை
  • ஞானநிலை
  • ஞானம்பிரியாமை
  • மெய்ந்நெறி
  • துரியதரிசனம்
  • உயர்ஞானதரிசனம்

அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் ஔவைக் குறள் 310 பாடல்களைக் கொண்டுள்ளது.

உள்ளடக்கம்

ஔவைக் குறள் நூலில் பிறப்பு, இறப்பு, உடலின் தன்மை, பஞ்சபூதச் சேர்க்கையால் எவ்வாறு உடம்பு உருப்பெறுகிறது, அவ்வுடலின் பயன், நல்வினை, தீவினைகள், அவற்றால் விளையும் வினைப்பாடுகள், அவற்றைக் கடந்து மோட்சம் அடைவதற்கான வழிமுறைகள், யோக மார்க்கங்கள், நாடி, வாயு முதலியவற்றின் செயல்பாடுகள், வீடுபேறு அடைவதற்கான வழிமுறைகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

பாடல்கள்

பிறப்பின் நிலைமை

தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
உருவத்தா லாய பயன்.

(உலக உயிர்கள் எதற்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருள் செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு ஈட்டிய பொருளைக் கொண்டு தாமும் பிறரும் மகிழ்வுற்று வாழ்தல், உலகத்தின் மீடிருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கும், மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன்).

உடலின் பயன்

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்
உடம்பினி லுத்தமனைக் காண்.

(மானுட உடல் மனிதனுக்கு இப்பிறவியில் கிடைக்கப்பெற்றதன் பலன் என்ன என்று கேட்டால், அது அந்த உடம்பில் பரம்பொருளின் இருப்பை அறிதலே ஆகும்).

உள் உடம்பின் நிலை

நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு.

(மானுட வாழ்வில் நன்மைகளுக்குக் காரணமாகும் புண்ணியச் செயல்களையும், தீமைகளுக்குக் காரணமாகும் பாவச் செயல்களையும் அனுபவித்துக் கொண்டு, உலகக் காரியங்களில் தீராது ஈடுபட்டுக்கொண்டு, முக்காலத்திலும் செய்யக் கூடிய எல்லா கர்மப் பயன்களுக்கும் மானுட உடம்பே ஆதாரமான கருவியாக உள்ளது).

உசாத்துணை


✅Finalised Page