under review

விக்கிரம சோழன் உலா

From Tamil Wiki

விக்கிரம சோழன் உலா (12-ம் நூற்றாண்டு) உலா இலக்கிய நூல்களுள் ஒன்று. 342 கண்ணிகளைக் கொண்டது. இந்நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.

நூல் தோற்றம்

ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட சோழ மன்னர்கள் மீதான உலா நூல்களில் முதலில் இயற்றப்பட்டது விக்கிரம சோழன் உலா. இந்நூல் சோழர்களின் வரலாற்றைக் கூறுவதுடன் விக்கிரம சோழ மன்னனின் வீரத்தையும், கொடைச் சிறப்பையும், புலவரைப் புரக்கும் அம்மன்னனின் பண்பையும் எடுத்துரைக்கிறது. இந்த உலா நூலைத் தொடர்ந்து குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா ஆகிய நூல்களையும் ஒட்டக்கூத்தர் இயற்றினார்.

ஆசிரியர் குறிப்பு

சோழ நாட்டில் 'மலரி' என்ற ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர் ஒட்டக்கூத்தர். இவர் விக்கிரம சோழ மன்னனின் அவைக்களப் புலவர். விக்கிரம சோழனுக்குப் பின் அவன் மைந்தன் குலோத்துங்கனுக்குத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்த குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தார். பின்னர் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராசராசனுக்கும் அவைக்களப் புலவராக இருந்தார். அவர்கள் மூவர் மீதும் ஒட்டக்கூத்தர் பாடிய உலா நூல்கள் 'மூவருலா' என்று அழைக்கப்படுகின்றன. சோழன் அவைக்களப் புலவர்களுள் சிறப்பு வாய்ந்த தலைமைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தர், கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, கௌடப் புலவர் போன்ற பட்டங்களைப் பெற்றார். தக்கயாகப் பரணி, ஈட்டியெழுபது, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல நூல்களை இயற்றினார். தனது புலமைக்காக சோழ மன்னனிடமிருந்து ஒட்டக்கூத்தர் பரிசாகப் பெற்ற ஊர், அவர் பெயரில் 'கூத்தனூர்' என்று அழைக்கப்பட்டது.

நூல் அமைப்பு

விக்கிரம சோழன் உலாவில் 342 கண்ணிகள் இடம்பெற்றுள்ளன. பாடல்கள், கலிவெண்பா யாப்பில், வெண்டளை பெற்று, இரண்டாமடியில் தனிச்சொல் பெற்று அமைந்துள்ளன. முதல் 23 கண்ணிகள், சோழர் குலம் தோன்றிய காலம் முதல் வழிவழியாக ஆண்ட மன்னர்களில் சிறந்தவர்களைப் பற்றிக் கூறுகின்றன. 24 முதல் 27 வரை உள்ள கண்ணிகள் முதற்குலோத்துங்கனின் சிறப்பையும், செயல்களையும் காட்டுகின்றன. 28 முதல் 35 வரை உள்ள கண்ணிகளில் விக்கிரம சோழனின் பிறப்பு, சிறப்பு, ஆட்சி புரியும் திறன் ஆகியன கூறப்பட்டுள்ளன. பின்னர், பள்ளியெழுச்சி, நீராடல், தெய்வ வணக்கம், கொடை, அணி புனைதல், உலாவிற்குப் புறப்படல் போன்ற செய்திகள் 52 கண்ணிகள் வரை இடம்பெற்றுள்ளன. 64 கண்ணிகள் வரை பட்டத்து யானையின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. யானை மீதமர்ந்து பவனி வருவதும் உடன் வருவோர் தொகையும் 90 கண்ணிகள் வரை கூறப்பட்டுள்ளன.

இவற்றைத் தொடர்ந்து பேதை (113-133), பெதும்பை (134-162), மங்கை (163-192), மடந்தை (193-227), அரிவை (228-262), தெரிவை (263-305), பேரிளம்பெண் (305-327) என எழு வகை பருவப் பெண்களின் வனப்பும், பண்பும், செயல்களும், காதலும், மயக்கமும் கூறப்பட்டுள்ளன. தோழியர் விக்கிரம சோழ மன்னனைப் புகழ்ந்து தங்களது தலைவியரை ஏற்குமாறு வேண்டுவதோடு நூல் நிறைவடைகிறது.

உள்ளடக்கம்

விக்கிரம சோழன் உலாவின் பாட்டுடைத்தலைவன் விக்கிரம சோழன். இவன் இராசகேசரி முதற்குலோத்துங்க சோழனுக்கும் மதுராந்தகிக்கும் பிறந்த எழுவரில் ஒருவன். இவனுடன் பிறந்த ஆண்மக்கள் இரண்டாம் இராசராசன், வீரசோழன், சோழகங்கன் ஆகிய மூவர். பிற மூவர் பெண்கள். விக்கிரம சோழன் பொயு 1118-ல் முடிசூடினான். பொயு 1122 வரை ஆட்சி புரிந்தான்.

விக்கிரம சோழன் ஆட்சி புரியும் காலத்தில் வடஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில் வெள்ளம் வந்தது. அதனால், ஊர்ப்பொது நிலங்களை விற்று அரசாங்கவரி செலுத்தப்பட்ட செய்தி இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இவன் ஆட்சியில் உணவுப்பஞ்சம் மிகுந்திருந்தது. இவன் ஆட்சிக்காலம் முழுவதும் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராய் அமைந்திருந்தது என்பதையும், தில்லைக்கோயில் திருப்பணிகள் உள்ளிட்ட பல கோயில் திருப்பணிகள் விக்கிரம சோழன் செய்த விவரங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.

விக்கிரமச் சோழனின் ஆட்சிச் சிறப்பு, படைபலம், அவன் பகைவர்களை எதிர்கொண்டு வென்ற வீரம், ஈகை, கொடை, புலவர்களைப் போற்றியது போன்ற செய்திகள் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தொண்டைமான், வாணன், காடவன், வேணாடர் வேந்தன், அனந்தபாலன், அதிகன், நுளம்பன், திகத்தன், மாளுவ நாட்டு மன்னன், மகத நாட்டு மன்னன், சேரன், பாண்டியன், பல்லவன், மற்றைய மண்டலத்து மன்னர்கள் ஆகியோரும், மற்ற அமைச்சர்களும், படைத் தலைவர்களும் முன்புறத்திலும், வலப்புறம், இடப்புறம் ஆகிய இரு பக்கங்களிலும் சூழ்ந்து நெருங்கி வர, விக்கிரம சோழன் உலா வந்த சிறப்பு நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

தோழியர் பலர் ஏங்கி நின்று தம் தலைவியரைப் புரக்குமாறு வேண்ட, விக்கிரம சோழன் உலா வந்த செய்திகளுடன் விக்கிரம சோழன் உலா நிறைவு பெறுகிறது.

பாடல்

விக்கிரம சோழன் சிறப்பு

மாடப் புகாருக்கும் வஞ்சிக்கும் காஞ்சிக்கும்
கூடற்கும் கோழிக்குங் கோமானே - பாடலர்

சாருந் திகிரி தனையுருட்டி ஓரேழு
பாரும் புரக்கும் பகலவனே - சோர்வின்றிக்

காத்துக் குடையொன்றால் எட்டுத் திசைகவித்த
வேத்துக் குலகிரியின் மேருவே - போர்த்தொழிலால்

ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க்கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே

பெதும்பைப் பெண் கூற்று - கனாக் கூறுதல்

தாயரும் போற்றாமே தானே துயிலெழுந்து
பாயல் புடைபெயர்ந்து பையச்சென் - றியாயே

தளரு மிடையொதுங்கத் தாழுங் குழைத்தாய்
வளரு மொருகுமரி வல்லி - கிளரும்

கொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி
எழுந்து கிளைகலிப்ப வேறித் - தொழுந்தகைய

கொங்குடைய பொன்னடருஞ் சென்னிக் கொழுங்கோங்கின்
பங்குடைய மூரிப் பணையணைந்து - தங்குடைய

வண்டு முரல மணநாற வைகுவது
கண்டு மகிழ்ந்தேன் கனவிலெனக் - கொண்டு

வருக வருக மடக்கிள்ளை முத்தம்
தருக தருகவெனத் தாயர் - பெருக

விரும்பினர் புல்லி விரைய முலைவந்
தரும்பின வாகத் தணங்கே - பெரும்புயங்கள்

புல்லி விடாத புதுவதுவை சென்னியுடன்
வல்லி பெறுதி யெனவழுத்தும் - எல்லை

அரச னபய னகளங்க னெங்கோன்
புரசை மதவரைமேற் போத - முரசம்

தழங்கு மறுகிற் றமரோடு மோடி
முழங்கு முகின்மாட முன்றிற் - கொழுங்கயற்கட்

பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு
மின்னென வந்து வெளிப்பட்டு - மன்னருயிர்

உண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கைச்
செண்டாற் கிரிதிரித்த சேவகனைத் - தண்டாத

வேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளைச்
சோகங் கெடுதணைத்த தோளானை - ஆகத்துக்

கொங்கை பிரியாத வீறோடுங் கோகனக
மங்கை பிரியாத மார்பானை - அங்கமலக்

கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
செய்ய கரிய திருமாலைத் - தையலும்

கண்டகண் வாங்காள் தொழமுகிழ்த்த கைவிடாள்
மண்டு மனமீட்கு மாறறியாள் - பண்டறியாக்

காமங் கலக்கக் கலங்கிக் குழல்சரியத்
தாமஞ் சரியத் தனிநின்றாள் - நாமவேற்

சேரனு மீனவனுஞ் சேவிப்பச் செம்பியரில்
வீரனு மவ்வெல்லை விட்டகன்றான் - மாரனும்

தக்குத் தகாதாளை யெய்து தரைப்படுத்தப்
புக்குத் தொடைமடக்கிப் போயினான்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 18:30:52 IST