under review

வாசவன்

From Tamil Wiki
எழுத்தாளர் வாசவன்

வாசவன் (1927-2018) தமிழ் எழுத்தாளர். சிறார் படைப்புகளையும், பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளையும் தந்தவர் வாசவன் . சிறார் இதழான ‘பாலமித்ரா’வின் ஆசிரியராக 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். ’நாராயணீயம்' பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

வாசவன் அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் இலுப்பைக்குடியில், செப்டம்பர் 19, 1927-ல் பிறந்தார். சிறு வயது முதலே எழுத்தார்வம் மிக்கவராக விளங்கினார். உயர் கல்வியை முடித்ததும் பணி வாய்ப்புக்காகச் சென்னை வந்தார். நாராயணீயம்' குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வாசவனின் மகன்களின் பெயர் செந்தில்குமார், யோகானந்த். ஒரே மகள் வள்ளி.

இதழியல்

சிறு வயது முதலே எழுத்தார்வம் கொண்டிருந்த வாசவனுக்கு பாலமித்ரா இதழில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. சிறந்த சிறார் இதழாக பாலமித்ராவை வளர்த்தெடுத்தார். பாலமித்ரா இதழ் சிறார்களுக்கான கதைகளோடு கூடவே ஆன்மீகம், குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டிய சமூகக் கடமைகள், சிந்தனைகள், நீதிக் கருத்துக்கள் ஆகியவற்றைத் தாங்கி வண்ண இதழாக வெளி வந்தது. அதில் வெளியான ‘நாராயணீயம்’ தொடர் வாசவனுக்கு மிகுந்த புகழைத் தேடித் தந்தது. அந்தத் தொடரை அடிப்படையாக வைத்து, ‘ நாராயணீயம்' குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்

இலக்கிய வாழ்க்கை

வாசன் சிறார்களுக்கு மட்டுமல்லாமல் பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளையும் தந்திருக்கிறார். காதல் கதைகள், துப்பறியும் கதைகள், குடும்பக் கதைகள், இலக்கியக் கட்டுரைகள், சிந்தனைக் கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள் என பல களங்களில் அவை அமைந்துள்ளன. முன்னூறுக்கும் மேற்பட்ட நாவல்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் வாசவன் எழுதியுள்ளார். நூற்றுக்கணக்கில் நாடகங்கள் எழுதியுள்ளார். அவற்றில் சில அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. 750-க்கும் மேற்பட்ட நூல் அணிந்துரைகளையும் வாசவன் தந்துள்ளார். இலக்கியங்கள் மீதும், திருக்குறள் மீதும் ஆர்வம் கொண்டவர். திருக்குறளுக்குத் தெளிவுரை ஒன்றை எழுதியுள்ளார்.

தன் எழுத்து பற்றி வாசவன், ““நான் எழுத்துலகில் வந்து சிக்கிக்கொண்டவன். இந்த உலகத்தின் சௌக்கியங்கள் என் பிறப்பின் காரணமாக என் காலடியில் கொட்டிக் கிடந்தபோது அவற்றை எட்டி உதைத்துவிட்டு, தீக்குளிப்பதற்காகவே நஞ்சு நிறைந்த எழுத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு இலக்கிய உலகத்துக்கு வந்தவன். 'சிக்கிக்கொண்டேன்' என்று நான் குறிப்பிட்டதற்கு, இதைவிட்டு ஓடிவிட நினைக்கிறேன் என்று பொருள் அல்ல. நான் மீள்வதற்காகச் சிக்கிக் கொள்ளவில்லை. உயிரின் பந்தத்தால் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த எழுத்தில் கிடைக்கும் ஊதியத்தைத் தவிர வேறு எந்த ஊதியத்தையும் நான் பிச்சையாகக் கருதுகிறேன். இந்த நேர்மையில் பாதிநாள் சோறு வேகும். மீதிநாள் நெஞ்சு வேகும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமைப்புப்பணி

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகப் பணி புரிந்தவர். உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். எழுத்தாளர் சங்க மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடத்தியவர்.

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் விருது மற்றும் தமிழன்னை பொற்கிழி
  • சங்கராச்சாரியார் வழங்கிய வியாச நாயகன் விருது
  • நற்கதை நம்பி விருது
  • சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு (நெல்லுச் சோறு நாவலுக்காக)
  • தமிழ் வளர்ச்சித்துறை விருது

மறைவு

வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவான் வாசவன், ஜனவரி 17, 2018-ல் காலமானார்.

இலக்கிய இடம்

குழந்தைக் கவிஞர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா, டாக்டர் பூவண்ணன், கே. ஆர். வாசுதேவன், ரேவதி என்று நீளும் மூத்த குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் டாக்டர் வாசவன். சிறார்களுக்கான படைப்புகளோடு, பொது வாசிப்புக்குரிய படைப்புகளையும் தந்தவர்.

வாசவன் நூல்கள்

நூல்கள்

நாவல்கள்
  • கனவுகள் மெய்ப்பட வேண்டும்
  • அக்னி குஞ்சு
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
  • கோபுர தீபம்
  • சங்கே முழங்கு
  • தாய்ப் புயல்
  • திரிசூலம்
  • நிலாக்காலம்
  • நெல்லுச் சோறு
  • பாரண்ட பாவலன்
  • மழையில் நனையாத கோலங்கள்
  • எனக்கென்றே நீ
  • நந்தவன மலர்கள்
  • இன்னும் ஒரு பெண்
  • திலகவதியின் திருமணம்
  • சிவப்பு இதயங்கள்
  • கற்பூரக் காடுகள்
  • வெட்டி வேர் வாசம்
  • பொதிகை சந்தனம்
  • விடியலைத் தேடிய விழிகள்
  • வாழ்வின் ராகங்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
  • வாசவன் சிறுகதைக் களஞ்சியம் (இரண்டு பாகங்கள்)
  • முப்பால்
  • வேலியோரத்துப் பூக்கள்
கட்டுரை நூல்கள்
  • வெளிச்ச விதைகள்
  • நமக்கு நாமே (இரண்டு பாகங்கள்)
  • முப்பால் கட்டுரைகள்
  • சிகரம் தொடும் சிறப்பான வாழ்க்கை
  • தொட்டு விடும் தூரம் தான்
  • வண்ணத்தமிழ் வாசல்கள்
  • புதிய பூபாளங்கள்
  • வெற்றி பாதைகள்
  • புதிய யுகம் பிறக்கிறது
சிறார் நூல்கள்
  • மாயாவி மனோகரன்
  • புலிப்பாண்டியன் மகன்
  • மண்னின் மணம்

உசாத்துணை


✅Finalised Page