under review

பெண் கல்வி (இதழ்)

From Tamil Wiki
பெண் கல்வி இதழ் (Image Copyright - The Center for Research Libraries)

பெண் கல்வி (1911) பெண்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தோன்றிய மாத இதழ். ‘அபேதைக்கியானந்த சங்கம்’ இந்த இதழை வெளியிட்டது. பெண்கல்வி, கைம்பெண் மண ஆதரவு, பால்ய விவாக எதிர்ப்பு போன்ற செய்திகள் இவ்விதழில் இடம் பெற்றன. இதன் ஆசிரியர் ரேவு தாயாரம்மாள். பிரிட்டிஷ் ஆதரவு இதழாக இவ்விதழ் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

பெண்களின் கல்வி குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக கா. மீனாட்சி அம்மாள் மற்றும் அவரது தோழிகளால், மார்ச் 1910-ல் ‘அபேதைக்கியானந்த சங்கம்’ என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சங்கத்தின் மூலம் பெண் கல்வி குறித்த பிரசங்கங்கள், கூட்டங்கள் வாரம்தோறும் நடத்தப்பட்டன. இரவுப் பள்ளி ஒன்றும் நடத்தப்பட்டது. பெண்கள் அனைவருக்கும் கல்வி குறித்த செய்திகள் போய்ச் சேர வேண்டுமென விரும்பிய அச்சங்கத்தினர், ஜூன் 1911-ல் ’பெண் கல்வி’ என்ற மாத இதழைத் தொடங்கினர். ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டிக் கொண்ட நாளில் தொடங்கப்பட்ட இவ்விதழ், பிரிட்டிஷார் ஆதரவு இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியர் ரேவு தாயாரம்மாள்.

பெண்கல்வி , பெண்கல்வியின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி வெளிவந்த இவ்விதழின் தனிப்பிரதி விலை நான்கணா. வருட சந்தா, இரண்டு ரூபாய், எட்டு அணா. படங்களும், ஓவியங்களும் இவ்விதழில் இடம் பெற்றன. பக்கங்கள்: 24. பிற்காலத்தில் 48 பக்கங்களுடன் வெளியானது. விளம்பரங்களும் பிற்காலத்து இதழ்களில் வெளியாகின.

நோக்கம்

முதல் இதழில் ’நமது பத்திரிகை’ என்ற தலைப்பில் இதழின் நோக்கமாகப் பின்வரும் செய்தி இடம் பெற்றுள்ளது. “இதில் ஸ்திரீகள், தாய், மனைவி, சகோதரி, புத்திரி முதலிய பல நிலைகளில் செய்ய வேண்டிய கடமைகளும், நடந்துகொள்ள வேண்டிய விஷயங்களும், ஜடசாஸ்திரம், வானசாஸ்திரம், தர்க்க சாஸ்திரம், பொருளாதாரம் முதலிய பல சாஸ்திர சாரங்களும் நம்நாட்டிலும் புறநாடுகளிலும் கல்வி, நாகரீகம் - இவைகளில் மேம்பாடடைந்த தற்கால முற்கால ஸ்திரீகளின் ஜீவிய சரிதங்களும் மற்றும் ஸ்திரீகள் அறிவபிவிர்த்திக்கவசியமான பல விஷயங்களும் மிகவும் எளிய தமிழ் நடையில் வெளிவரும்.”

பெண் எழுத்துக்கு முக்கியத்துவம் பற்றிய அறிவிப்பு

உள்ளடக்கம்

இதழின் முகப்பில், ‘பெண் கல்வி’ தலைப்பின் கீழ், ’சித்திர சகிதமான ஒரு மாதாந்த சஞ்சிகை’ என்ற குறிப்பு இடம் பெற்றது. இதழ் தோறும்,

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

என்ற குறள் இடம் பெற்றது.

பெண்களின் படைப்புகள், அவர்கள் எழுதிய கட்டுரைகள் மட்டுமே இவ்விதழில் வெளியாகின. என்றாலும் ஆண்களின் படைப்புகள் சிலவும் அவ்வப்போது வெளியாகின. கட்டுரைகள், சமாசாரக் குறிப்புகள், உலகச் செய்திகள், சுதேச வர்த்தமானங்கள், வித்யா விஷயக் குறிப்புகள், ஸ்திரீ பிரபஞ்சம், வெளிநாட்டு வர்த்தமானம், விசேஷக் குறிப்புகள், குழந்தைகள் விஷயம் எனப் பல்வேறு தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றன. கட்டுரையின் தலைப்புகள் பிற்காலத்து இதழ்களில் தமிழோடு கூடவே ஆங்கிலத்திலும் இடம் பெற்றன. சிறுகதைக்கும் இவ்விதழ் இடமளித்தது. வி. செல்லம்மாள் என்பவர், ‘கனகாம்புஜம் என்னும் கற்புக் காதலி’ என்ற சிறுகதையை எழுதியுள்ளார். ‘சுந்தர்ராஜன் அல்லது இரண்டு நண்பர்கள்’ என்ற தலைப்பில் தொடர்கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ’மாலதீ ’ என்ற தலைப்பில் நாவல் ஒன்றும் தொடராக வெளியாகியுள்ளது. சிறுவர்களுக்கான பக்கங்களும் இவ்விதழில் வெளியாகின. புத்தக விமர்சனமும், ‘அபிப்ராயங்களும் ஆராய்ச்சிகளும்’ என்ற தலைப்பில் இடம் பெற்றன.

இந்திய சாதனைப் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகள் பற்றிய கட்டுரைகள் இதழ்தோறும் இடம் பெற்றன. ’ஸ்திரீகளுக்குக் கல்வி அவசியம்’, ஸரோஜினி நாயுடுவின் வாழ்க்கைக் குறிப்பு’, ‘மேரி ஸோமர்வில்லி வாழ்க்கைக் குறிப்பு’, ’பெண்மதி போத வினா விடை’, ’திபேத்து ஸ்தீரிகளின் ஆபரணங்கள்’ எனப் பல்வேறு தலைப்பிலான கட்டுரைகளைப் பெண்கள் பலர் எழுதினர். ஆங்காங்கே இதழ்களில் ‘பொன்மொழிகள்’ இடம் பெற்றன. ‘பிழைக்கும் வழி’, ’பிரஜானுகூலன்’, ‘அமிர்தவசனி’ போன்ற பிற இதழ்களில் வெளியான கட்டுரைகள் சிலவும் மறுபதிப்பாக இவ்விதழில் வெளியாகின.

பங்களிப்பாளர்கள்

  • அசலாம்பிகை
  • பி. காமாக்ஷி
  • இ.வே. சாரதாம்பாள்
  • இ.வே. அபிராமி
  • எஸ். சின்னம்மாள்
  • ஏ. நாஞ்சாரம்மா
  • சுந்தரம்மாள்
  • நன்னுகனதல்லி அம்மாள்
  • ஆர். ஜெயலக்ஷ்மி அம்மாள்
  • ச. பாகீரதி அம்மாள்
  • வி. பார்வதி அம்மாள்
  • சூ. பாகீரதி
  • அன்னபூரணி அம்மாள்
  • ஆர். ராஜம்மாள்
  • அகிலாண்ட நாயகி அம்மாள்
  • மங்களாம்பிகா பாய்
  • மிஸஸ் தியாகராச முதலியார்
  • கே. விசாலாக்ஷி
  • எஸ்.எம். பாய்
  • சண்பக லக்ஷ்மி அம்மாள்
  • ஜானகி அம்மாள்
  • ஸ்ரீமதி பங்காரம்மாள்
  • ஏ.கே. சஞ்சீவி அம்மாள்
  • எம். லக்ஷ்மி அம்மாள்
  • ஆதிலக்ஷ்மி
  • ப. விசாலாக்ஷி அம்மாள்

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

1918 வரை ’பெண் கல்வி’ இதழ் வெளிவந்துள்ளது. அதன் பிறகு எப்போது நிறுத்தப்பட்டது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

ஆவணம்

ரோஜா முத்தையா நூலகத்தில் இவ்விதழின் பிரதிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ’The Center for Research Libraries' தளத்தில் இவ்விதழின் பிரதிகள் சில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்

பெண் கல்வியின் தேவையை, பெண்களைக் கொண்டே எழுத வைத்த இதழ் பெண் கல்வி. அமிர்தவசனி, பெண்மதி போதினி, சுகுணபோதினி, மாதர் மித்திரி போன்ற பெண் இதழ்களின் வரலாற்றில் ’பெண் கல்வி’ இதழுக்கு முக்கிய இடமுண்டு. பெண் கல்விக்கென்று முதன் முதலில் வெளிவந்த தனி இதழாக ‘பெண் கல்வி’ மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

பெண் கல்வி இதழ்கள்


✅Finalised Page