பூ. சுப்பிரமணியம்
- சுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பிரமணியம் (பெயர் பட்டியல்)
பூ. சுப்பிரமணியம் (முனைவர் பூ. சுப்பிரமணியம்; பேராசிரியர் பூ. சுப்பிரமணியம்) (பிறப்பு: ஜூலை 02, 1927) எழுத்தாளர்; பதிப்பாசிரியர்; சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் காப்பாட்சியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு அலுவலராகவும், சென்னை ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் சுவடித்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பல்வேறு ஏட்டுச் சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்தார். பல மாணவர்களுக்குச் சுவடியியல் பயிற்சி அளித்தார்.
பிறப்பு, கல்வி
பூ. சுப்பிரமணியம், ஜூலை 02, 1927 அன்று, வடஆற்காடு மாவட்டம், வந்தவாசி வட்டம், ரகுநாத சமுத்திரத்தில் பூங்காவனம் - அங்கம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக்கல்வியை ரகுநாத சமுத்திரத்தில் படித்தார். மேற்கல்வியை சாத்தம்பாடியில் பயின்றார். செங்கல்பட்டில் உள்ள ஆசிரிய மேற்பயிற்சிப் பள்ளியில் ஆரம்ப ஆசிரியருக்கான பயிற்சி பெற்றார். மயிலம் சிவஞான சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார். தொடர்ந்து பயின்று பி.ஏ., பி.லிட்., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். சமஸ்கிருதத்தில் பட்டயம் பெற்றார். 'சுவடியியல் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பூ. சுப்பிரமணியம், மணமானவர். இவருக்கு இளங்கோ, இளவரசு, இளம்வேள் என மூன்று மகன்கள்; கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி என இரு மகள்கள்.
கல்விப் பணிகள்
பூ. சுப்பிரமணியம், 1947 முதல் ரகுநாத சமுத்திரத்திற்கு அருகிலமைந்த ஊர்களில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1953 முதல் மேட்டூர் அணை, கோத்தகிரி அரசினர் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1963-ல், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு அலுவலராகப் பணியாற்றினார். பின்னர் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் காப்பாட்சியராகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றார்.
பணி ஓய்வுக்குப் பின், மீண்டும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து 1992-ம் ஆண்டுவரை பணியாற்றினார். சென்னை ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் 1993 முதல் 2003 வரை சுவடித்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
பூ. சுப்பிரமணியம், சுவடிப்பதிப்பு வரலாறு (1950 வரை) பதிப்பு முன்னோடிகளின் பதிப்புப் பணிகள், மெய்க்கீர்த்தீகள், சுவடிப் பதிப்புகள், கலம்பக இலக்கியம் முதலானவற்றைப் பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகளை ஆய்விதழ்களில் எழுதினார்.
சுவடிப் பதிப்பு
பூ. சுப்பிரமணியம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பணியாற்றிய பொழுது பதிமூன்று சுவடிப்பதிப்புப் பணிகளை மேற்கொண்டார். அவர் பதிப்பித்தளித்த அந்நூல்கள் சில காரணங்களால் வெளிவரவில்லை. அவை தவிர்த்து பருவ இதழ் சுவடிப் பதிப்புகளாக கதிர்காமச்சிந்து, அருங்கலச்செப்பு உள்ளிட்ட ஏழு நூல்களை வெளியிட்டார். இவை, சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் அரையாண்டுப் பருவ இதழ்களில் வெளிவந்தன.
1979 முதல் 1983 வரையும், பின்னர் 1985 முதல் 1992 வரையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு அலுவலராகப் பணியாற்றிய காலகட்டத்தில் சுவடிகள் தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டார். மனை நூல் உள்ளிட்ட பல சுவடி நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்களின் பதிப்பில் பங்குகொண்டார். சென்னை ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியபோது அதுவரை அச்சேறாமல் இருந்த சுவடிகள் பலவற்றைத் தேர்ந்தெடுத்து சுவடிப்பதிப்புகளாக எட்டு நூல்களை வெளிக்கொணர்ந்தார். அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை, வர்ம சூத்திரம், நீலி யட்சகானம், சாரங்கதரன் யட்சகானம் போன்றவை. பூ. சுப்பிரமணியம், பதிப்பித்தளித்த 'அகத்தியர் நாடித்திரட்டு' நூல் இதுவரை வெளியாகவில்லை.
கணிதம் தொடர்பான மூன்று நூல்களின் இணைப் பதிப்பாசிரியராக இருந்து அவற்றைச் சுவடிப் பதிப்பாக வெளிக்கொணர்ந்தார். சுவடிகள் அட்டவணை நூல்கள் சிலவற்றின் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். நிறுவனங்களுக்காகச் சுவடி நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தவர், ஆருட சோதிடம் (1989), மனையடி சாஸ்திரம் (1995) ஆகிய இரு நூல்களைத் தன் சொந்த வெளியீடுகளாகப் பதிப்பித்தார்.
பூ. சுப்பிரமணியம், 1979-92 காலத்தில் அறுபது ஆய்வேடுகள் உருவாக்குவதற்கு நெறியாளராக இருந்து வழிகாட்டினார். அவற்றில் பதினைந்து ஆய்வேடுகள் நூல்களாக வெளிவந்தன.
சுவடிப் பயிற்சி
பூ. சுப்பிரமணியம், சுவடியியல் மாணவர்களுக்குச் சுவடியியல் பாடத்தை நடத்தி சுவடிகளைப் படிக்கவும் படியெடுக்கவும் பயிற்சியளித்தார். அந்த வகையில் 60 மாணவர்களுக்கு அவர் பயிற்சியளித்தார். அவர்களில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் துறை முன்னாள் தலைவர் முனைவர் வே. இரா. மாதவன், அதே பல்கலையில், அதே துறையில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் மோ. கோ. கோவைமணி, கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபற்ற முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி, சென்னை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகத்தில் சுவடிகள் பிரிவில் பணியாற்றிய த. அழகப்பராசு, அ.பிரசன்னா, சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் கா. சத்தியபாமா உள்ளிட்ட பலர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
பூ. சுப்பிரமணியம், பேரூர்த் தமிழ்க் கல்லூரி, தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் முதலான நிறுவனங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். சென்னைக் கல்லூரிகளிலும், தமிழ்க் கல்லூரி போன்றவற்றிலும் புலவர், பி.லிட்., எம்.ஏ. முதலான வகுப்புகளுக்கு இலக்கணம், இலக்கியம், கல்வெட்டுகள் தொடர்பான பாடங்களை நடத்தினார். சுவடியியல் சார்ந்து குறுகிய காலப் பயிற்சி வகுப்புகளையும், கருத்தரங்குகளையும் நடத்தினார்.
ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில், 1999-ல் நிகழ்ந்த, 'சித்த மருத்துவச் சுவடிகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். 'பொது மருத்துவச் சுவடிகள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார். அக்கருத்தரங்கில் அளிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்தார்.
விருதுகள்
- சென்னை கே.கே.நகர் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் 'சுவடிச்சுடர்' விருது (2008)
- கும்பகோணத்தில் நடைபெற்ற உ.வே.சா. ஆண்டுவிழாவில் 'உ.வே.சா.வின் வழித்தோன்றல்' விருது
- சென்னை அன்னை வேளாங்கண்ணி பள்ளியின் சார்பில் சாதனையாளர் விருது
மதிப்பீடு
சுவடிப் பதிப்பாசிரியர்கள் பலரும் இலக்கண, இலக்கண நூல்களையும் சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்து வந்த நிலையில், முனைவர் பூ. சுப்பிரமணியம், அதற்கு மாறாக இலக்கியம், சிற்றிலக்கியம், யட்சகான நாடகம் போன்ற நூல்களோடு கணிதம், கட்டடக்கலை, சோதிடம் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த நூல்களையும் சுவடிப் பதிப்பாகக் கொண்டு வந்தார். பல சுவடியியல் துறை ஆய்வு மாணவர்களை உருவாக்கினார். கல்விப் பணியுடன் சுவடிப் பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொண்ட முன்னோடித் தமிழாய்வாளராகவும், சுவடியியல் துறை அறிஞராகவும் மதிப்பிடப்படுகிறார்.
ஆவணம்
பூ. சுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் சத்தியபாமா காமேஸ்வரன் எழுதினார். அந்நூலை கலைஞன் பதிப்பகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலேயாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நூலாக வெளியிட்டது.
நூல்கள்
பதிப்பாசிரியர்
பருவ இதழ் சுவடிப் பதிப்புகள் (அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்)
- கதிர்காமச் சிந்து
- நல்லைக் குமரன் துதி
- பரிபூரணச் சித்தி
- வருகைப்பத்து
- இரிஷிவிந்தக் குறவஞ்சி
- திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ்
- அருங்கலச் செப்பு
சுவடிகள் விளக்க அட்டவணை
- அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடிகள் விவர அட்டவணை (1-6)
பதிப்பு மற்றும் ஆய்வு (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
- மனை நூல்
- மனையடி சாத்திரம்
- மெய்க்கீர்த்திகள்
- சுவடியியல்
- சுவடிப் பதிப்பு (ஆசியவியல் ஆய்வு நிறுவனம்)
- வர்ம சூத்திரம்
- நீலியட்சகானம்
- சாரங்கதர யட்சகானம்
- தேரூர்ந்த சோழன் யட்சகானம்
- கணித நூல்: பகுதி-1
- கோலவரைத் துயிலரங்கன் சரிதம்
- கணிதநூல்: பகுதி-2
- கணக்கதிகாரம்
- அகத்தியர் நாடித்திரட்டு (அச்சாகவில்லை)
- சுவடிகள் விளக்க விவர அட்டவணை (ஆசியவியல் ஆய்வு நிறுவனம்)
- நான்காம் தொகுதி - முதல் பகுதி
- நான்காம் தொகுதி - இரண்டாம் பகுதி
- ஐந்தாம் தொகுதி - முதல் பகுதி
- ஐந்தாம் தொகுதி - இரண்டாம் பகுதி
உசாத்துணை
- பூ. சுப்பிரமணியம் வாழ்க்கை வரலாறு, எழுத்தாக்கம்: முனைவர் சத்தியபாமா காமேஸ்வரன், கலைஞன் பதிப்பக வெளியீடு
- சுவடியியல், டாக்டர் பூ. சுப்பிரமணியம், தமிழ் இணைய மின்னூலகம்
- சுவடிப் பதிப்புக்கலை வழிகாட்டி-டாக்டர் உ. வே. சா: டாக்டர் பூ. சுப்பிரமணியம்; தமிழ் இணைய மின்னூலகம்
- சித்த மருத்துவச் சுவடிகள், டாக்டர் பூ. சுப்பிரமணியம், பனுவல் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2024, 19:30:51 IST