under review

மோ.கோ. கோவைமணி

From Tamil Wiki

To read the article in English: M.K. Kovaimani. ‎


பேராசிரியர், முனைவர் மோ.கோ. கோவை மணி (படம் நன்றி: முனைவர் மு. இளங்கோவன் வலைத்தளம்: https://muelangovan.blogspot.com/)
கோவை மணி

மோ.கோ. கோவைமணி (பிறப்பு: ஜூன் 03, 1963) தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தின் ஓலைச்சுவடியியல் துறையில் இணைப்பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார். கவிதை, ஆய்வு, சுவடியியல் எனப் பல்துறை நூல்களை எழுதினார், பதிப்பித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை மின்பதிவாக்கம் செய்தார். சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது பெற்றார்.

கோவைமணி, மனைவியுடன்

பிறப்பு, கல்வி

மோ.கோ. கோவைமணி ஜூன் 03, 1963 அன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டையில், மோ. கு. கோதண்ட முதலியார் – தெய்வானையம்மாள் இணையருக்குப் பிறந்தார். கோபால் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பள்ளியில் சேர்க்கப்படும்போது கோவைமணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார். பொதட்டூர்ப்பேட்டை அரசினர் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்விகளை பொதட்டூர்ப்பேட்டையில் கற்றார்.

தமிழ் விக்கி தூரன் விருது விழா - 2024

சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதியியல் கற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமுதபாரதியின் கவிதைகள் பற்றி ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ’நாடி மருத்துவம்’ பற்றி ஆய்வு செய்து சுவடியியலில் பட்டயம் பெற்றார். திருவாவடுதுறை ஆதினத்தில் சைவ சித்தாந்தம் பயின்று பட்டயம் பெற்றார். தமிழ்ப் பல்கலைக்கழக கணிப்பொறி அறிவியல் துறையின் மூலம் கணிப்பொறிப் பயன்பாடு பற்றிப் படித்து கணிப்பொறி அறிவியலில் பட்டயம் பெற்றார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ’பருவ இதழ்களில் சுவடிப் பதிப்புகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

கல்விப் பணிகள்

மோ.கோ. கோவைமணி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1989-ம் ஆண்டு திட்ட உதவியாளராகப் பணியைத் தொடங்கினார். ஓராண்டு காலம் திட்ட உதவியாளராகப் பணியாற்றிய பின் 1992 வரை மூன்றாண்டுகள் ஆய்வு உதவியாளராகத் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றினார். 1992-ல் இருந்து 2007 வரை முழு நேர ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார். 2007-2015 ஆண்டுகளில் உதவி பேராசிரியராகவும், 2015-2023 வரை இணை பேராசிரியராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்திற்கு சுவடியியல் சான்றிதழ் மற்றும் பட்டயத்திற்காக ஐந்து பாட நூல்களை எழுதினார். இலங்கை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்காக 'தமிழ் ஓலைச்சுவடியியல் அறிமுகம்' நூலை எழுதினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்கத்திற்காக தமிழ் இளநிலை மற்றும் முதுநிலைக்கு நான்கு பாடத்திட்ட நூல்களை எழுதினார்.

ஆய்வு மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இரண்டு மணி நேரத்தில் தமிழ் ஓலைச்சுவடியை எளிதில் படிக்கவைக்கும் எளிய முறைப் பயிற்சியை அறிமுகம் செய்து நடத்தினார் 70-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் சுவடிப் பயிற்சி அளித்தார். கோவிட் காலத்தில் தமிழ்நாடு அரசு சுவடிகள் பாதுகாப்புக் குழுமத்தின் சார்பில் இணையவழியில் 'வாங்க… சுவடி படிக்கலாம்’ என்ற நிகழ்வின் மூலம் 33 வாரங்கள் சுவடியியல் பயிற்சி அளித்தார்.

முனைவர் கோவைமணியின் வழிகாட்டலில் 43 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றனர். 9 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.

முனைவர் கோவைமணி நூல்கள் (படம் நன்றி: முனைவர் மு. இளங்கோவன் தளம்)

இலக்கிய வாழ்க்கை

மோ.கோ. கோவைமணி சுவடியியல், கணினியியல் உள்ளிட்ட பல துறைகளில் 250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். களப்பணி மேற்கொண்டு சுவடிகளைத் திரட்டினார். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல், பயணக்கட்டுரை எனப் பல்துறைகளில் நூல்களை எழுதினார். 90-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். சுவடியியல் தொடர்பாக மலேசிய வானொலியிலும், சென்னைத் தொலைக்காட்சியிலும் உரையாற்றினார்.

தொலைநிலைக் கல்விக்காகப் பல பாட நூல்களை எழுதினார். அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக ஒளி-ஒலிப் பாட நூல்களை அளித்தார். பத்துக்கும் மேற்பட்ட கோவைமணியின் நூல்களை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 75%-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை மின்பதிவாக்கம் செய்தவராக கோவைமணிஅறியப்படுகிறார்.

கோவை மணிக்குப் பாராட்டு

அமைப்புப் பணிகள்

மோ.கோ. கோவைமணி சுவடியியல் தொடர்பாக மாநில, தேசிய மற்றும் உலகளவில் பல மாநாடுகளை, கருத்தரங்குகளை நடத்தினார். சுவடியியல் சார்ந்து இணையத்தில் பல நேரலை நிகழ்வுகளை நடத்தினார். திருக்குறள் பதிப்பின் 200-ம் ஆண்டு ஆய்வுத் தேசியக் கருத்தரங்கம் மற்றும் மாநாட்டின் இயக்குநராகப் பணியாற்றினார். அனைத்துலக முருக இலக்கிய மாநாடு மற்றும் கருத்தரங்கின் இயக்குநராகப் பணிபுரிந்தார். அனைத்துலக பாரதியார் நூற்றாண்டு நினைவு மாநாடு மற்றும் கருத்தரங்கின் இயக்குநராகப் பணியாற்றினார். பல்கலைக்கழக மானியக்குழு, தமிழக அரசு, தமிழ்ப் பல்கலைக்கழக நிதியில் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டார். அப்பச்சிமார் காவியம், கலியுகப் பெருங்காவியம் போன்ற பல சுவடிகளின் ஆய்வுப் பதிப்புப் பணியை ஒருங்கிணைத்தார். தனது வலைத்தளம் மூலம் கோவைக்குறள், கோவைக் கவி, கோவை மனம், கோவைச் சூடி, கோவை ஊற்று, கோவைக் கனி, கோவைப் பூ, கோவைப் பா போன்ற கிளைத் தளங்களை உருவாக்கிப் பல கட்டுரைகளைப் பதிவு செய்தார்.

இதழியல்

தமிழ் விக்கி தூரன் விருது விழா ஏற்புரை, 2024

கோவைமணி மேல்நிலைக் கல்வி பயின்ற காலத்தில் ’ஜோதி’ என்ற கையெழுத்து காலாண்டு இதழை மூன்றாண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தினார்.

பொறுப்பு

  • ஆலோசனைக்குழு உறுப்பினர், நியூபார்ன் யூத் டிரஸ்ட், தஞ்சாவூர்.
  • பொருளாளர், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
  • தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • செயற்குழு உறுப்பினர், ஆசிரியர் பேரவை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  • தலைவர், ஆசிரியர் பேரவை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  • ஆலோசனைக்குழு உறுப்பினர், விங்ஸ் - சிறகுகள், தஞ்சாவூர்.
  • பாடத்திட்டக்குழு உறுப்பினர், நீரகழாய்வு மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • பாடத்திட்டக்குழு உறுப்பினர் மற்றும் கூட்டுநர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • SAP உறுப்பினர் (2015-2020), சுப்பிரமணிய பாரதியார் தமிழியல் துறை, புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி.
  • புறநிலைத் தேர்வாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
  • புறநிலைத் தேர்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
  • புறநிலைத் தேர்வாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
  • புறநிலைத் தேர்வாளர், திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம்.
  • புறநிலைத் தேர்வாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.
  • துறைத்தலைவர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • பதிவாளர் (பொறுப்பு.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (09.07.2021 முதல் 24.12.2021 வரை)
  • தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  • சுவடிகள் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர், புதுதில்லி தேசியச் சுவடிகள் இயக்ககம்
  • Chairperson (Tamil), AIIA, CCIM, New Delhi.
  • EAP Project Co-Ordinator, Digitization, Cataloguing and Preservation of Palm leaf Manuscripts in the Tamil University, Endangered Archives Program (EAP), British Library, London, November 2019 to April 2023.
சிறந்த நூலுக்கான விருது

விருதுகள்

  • மோ.கோ. கோவைமணி எழுதிய ‘ஓலைச்சுசுவடியியல்’ நூலுக்குத் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2013-ம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு கிடைத்தது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ் விக்கி தூரன் விருது.

மதிப்பீடு

மோ.கோ. கோவைமணி, சுவடியியல் சார்ந்த பயிற்சிகளை எளியமுறையில் வடிவமைத்துப் பயிற்சியளித்தவர். இந்தியா மட்டுமல்லாது மலேசியா, இலங்கை போன்ற பல வெளிநாடுகளுக்குச் சென்று நூற்றுக்கணக்கானவர்களுக்கு சுவடியியல் பதிப்புப் பயிற்சிகளை அளித்தார். தமிழகமெங்கும் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி மின்பதிவாக்கம் செய்தார். கள ஆய்வுகள் மூலம் அரிய பல சுவடிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாது சம்ஸ்கிருதம் சார்ந்த சுவடிகளையும் சேகரித்தார். கதைப் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், சமய, ஆன்மிக நூல்கள் எனப் பலவற்றை ஓலைச்சுவடியிலிருந்து நூல்களாகப் பதிப்பித்தார். தமிழின் முதன்மைச் சுவடியியல் துறை ஆய்வாளராகவும், பதிப்பாளராகவும், பயிற்சியாளராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • இந்திய காலக்கணிதம்
  • சித்த மருத்துவத்தில் நாடி
  • தமிழும் விசைப்பலகையும்
  • பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு
  • பருவ இதழ்களில் சுவடிப் பதிப்புகள்
  • செவ்வியல் தமிழ்ச்சுவடிகள்
  • தமிழில் கதைப்பாடல் சுவடிகள்
  • உதயத்தூர் புலைமாடத்தி வரத்து
  • கதைப்பாடல்கள் மூன்று
  • இதழ்ப் பதிப்பு நூல்கள்
  • ஓலைச்சுவடியியல்
  • பதிப்புலகத் தூண்கள்
  • இதழ்ப் பதிப்பு வரலாற்றில் இதழ்கள்
  • புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை
  • நாடி மருத்துவம்
  • தமிழும் விசைப்பலகையும்
  • ஆத்திசூடித் திறவுகோல்
  • எட்டுத்தொகை நூல்களில் பாடவேறுபாடுகள்
  • நாச்சியாரம்மன் கதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும்
  • தமிழ் நாவலர் சரிதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும்
  • முத்துமாலையம்மன் கதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும்
  • பதிப்புலகத் தூண்கள்
  • எண்ணும் எழுத்தும்
  • தமிழ்ச் சுவடிகளில் எழுத்தமைதி
  • புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை
  • தமிழ்ச் சுவடிப்பதிப்பு வரலாற்றில் இதழ்களின் பங்கு
  • தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை
  • தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணைகள் - தொகுதி 6 முதல் 10 வரை
  • வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி ஆய்வு மாலை - இரண்டு தொகுதிகள்
  • குமரகுருபரர் ஆய்வு மாலை - மூன்று தொகுதிகள்
  • தமிழ்க்கடவுள் முருகன் ஆய்வு மாலை - இரண்டு தொகுதிகள்
  • திருக்குறள் ஆய்வுமாலை
  • இந்தியக் காலவியல்
  • திரிகடும் மூலமும் நாட்டார் உரையும்
  • மகாகவி பாரதியார் ஆய்வுக்கோவை
  • முருகன் இலக்கிய ஆய்வுக்கோவை - இரண்டு தொகுதிகள்
  • செவ்வியல் தமிழ்ச் சுவடிகள்
  • உயர்வுள்ளல் - தமிழியல் கட்டுரைகள்
  • சுவடியியல்
  • ஐக்கூ ஐநூறு
  • செம்புலப் பெயல்நீர் (கவிதைகள்)
  • கனா நூல்
  • கனவு நூல்
  • குமாரபுரி முருகன் மும்மணிக்கோவை
  • குருபரம்பரை அகவல்
  • திருத்தொண்டர் மாலை
  • திருப்புல்லாணித் திருவனந்தல்
  • பழனிமலை வடிவேலர் பதிகம்
  • அணிமுருகாற்றுப்படை - 1
  • அணிமுருகாற்றுப்படை - 2
  • அருள் முருகாற்றுப்படை - 1
  • அருள் முருகாற்றுப்படை - 2
  • வருமுருகாற்றுப்படை - 1
  • வருமுருகாற்றுப்படை - 2
  • வருமுருகாற்றுப்படை - 3
  • பொருண் முருகாற்றுப்படை.
  • பொருள் முருகாற்றுப்படை.
  • இயல் முருகாற்றுப்படை
  • ஒரு முருகாற்றுப்படை
  • சேய் முருகாற்றுப்படை
  • வேல் முருகாற்றுப்படை

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Jul-2024, 03:53:38 IST