under review

தேவன்

From Tamil Wiki
Devan
தேவன்

தேவன் (ஆர். மகாதேவன்) (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) எழுத்தாளர், இதழாளர். ஆனந்த விகடனில் ஆசிரியராகப் பணியாற்றினார். குடும்பம், சமூகம், நகைச்சுவை, பயணக்கட்டுரை எனப் பல்வேறு வகைமைகளில் எழுதினார். நகைச்சுவை எழுத்தின் முன்னோடிகளுள் ஒருவராக அறியப்படுகிறார். தேவன் படைத்த ‘துப்பறியும் சாம்பு’ கதாபாத்திரம் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

பிறப்பு, கல்வி

ஆர். மகாதேவன் என்னும் இயற்பெயர்கொண்ட தேவன், செப்டம்பர் 8, 1913 அன்று, கும்பகோணத்தை அடுத்துள்ள திருவிடைமருதூரில் பிறந்தார். திருவிடைமருதூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சேர்ந்து பி. ஏ. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தேவன் சில மாதங்கள் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இதழாளராகச் செயல்பட்டார். மணமானவர். இவருக்கு வாரிசுகள் இல்லை.

தேவன் நூல்கள் - அல்லயன்ஸ் வெளியீடு (படம் நன்றி: பசுபதிவுகள்)

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

தேவன், கல்லூரியில் படிக்கும்போது ஆனந்த விகடனுக்கு ‘மிஸ்டர் ராஜாமணி’ என்ற கதையை எழுதி அனுப்பினார். அது பிரசுரமானது. தொடர்ந்து விகடனில் ஆன்மீகம், நகைச்சுவை, சமூகம், குடும்பம் எனப் பல வகைமைகளில் எழுதினார். சிறுகதை, நாவல், பயணக் கட்டுரை, செய்தி விமர்சனம் என்று பலவற்றை எழுதினார். ஆன்மீகம், வரலாறு சார்ந்த தேவனின் கட்டுரைகளும், சில்பி, கோபுலு ஆகியோரின் அதற்கான ஓவியங்களும் குறிப்பித்தகுந்தவை.

தேவனின் துப்பறியும் சாம்பு
தொடர்கள்

தேவன் எழுதிய ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ குறிப்பிடத்தகுந்த தொடர். தேவன், இறுதிவரை அத்தொடரில் தனது பெயரைக் குறிப்பிடாமல் எழுதினார். அத்தொடரில் வெளியான சில்பியின் ஓவியங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. வயதான பாட்டிகளும் மாமிகளும் அப்பளம் இட்டுக்கொண்டே பேசும் ஊர் வம்பை மையமாக வைத்துத் தேவன் எழுதிய ‘அப்பளக் கச்சேரி’ தொடர் வாசக வரவேற்பைப் பெற்றது. ’விச்சுவுக்குக் கடிதங்கள்’ தேவனின் முக்கியமான ஒரு படைப்பு. தேவன் எழுதிய ’ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்’ நூல் குறிப்பிடத்தகுந்த பயண இலக்கிய நூல்களுள் ஒன்று.

கதைகள்

தேவன், தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டு பல நகைச்சுவைப் படைப்புகளை எழுதினார். தேவன் எழுதிய ’துப்பறியும் சாம்பு’ கதைகள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. தேவனின் ’சீனுப்பயல்' என்ற சிறுகதைத் தொகுப்பு, சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைப்பது. ’மல்லாரி ராவ் கதைகள்’ தேவன் திருவிடைமருதூரில் குடியிருந்தபோது வீட்டின் உரிமையாளர்களாக இருந்த மராத்திய சகோதரர்கள் கூறிய அனுபவ, வாய்மொழிக் கதைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் நாவல், 1974-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

நாடக, திரை முயற்சிகள்

அம்பி, விச்சு, காயத்ரி, மயூரம், கேட்டை, ஆர்.எம், சிம்மம், சின்னக்கண்ணன் போன்ற புனை பெயர்களில் தேவன் எழுதினார். தேவன் எழுதிய கோமதியின் காதலன், மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய படைப்புகள் மேடை நாடகங்களாக நடிக்கப்பட்டன. ‘கோமதியின் காதலன்’ திரைப்படமாக வெளியானது.

துப்பறியும் சாம்பு கதாபாத்திரத்தை ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நாகேஷ் ஏற்று நடித்தார். காத்தாடி ராமமூர்த்தி சாம்பு வேடமேற்றுச் சில நாடகங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். இயக்குநர் ஸ்ரீதர் மிஸ்டர் வேதாந்தம் போன்ற புதினங்களைத் தொலைக்காட்சித் தொடராக அளித்தார்.

தேவன் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகளையும், இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதினார்.

இதழியல்

தேவன், கல்கியின் ஊக்குவிப்பால் 1934-ல். தமது 21-ம் வயதில் விகடனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். விகடனிலிருந்து கல்கி விலகிய பின், 1942 முதல் தேவன், விகடன் இதழின் நிர்வாக ஆசிரியராகச் செயல்பட்டார். புதிய பல உத்திகளைக் கையாண்டு விகடனின் விற்பனையை உயர்த்தினார். அதன் வாசகப் பரப்பை விரிவாக்கினார். தான் இறக்கும் வரை அதன் ஆசிரியராக இருந்தார் தேவன்.

பொறுப்புகள்

தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் (இரு முறை)

மறைவு

தேவன், மே 5, 1957 அன்று, தனது 44-ம் வயதில் காலமானார்.

நூல்கள் வெளியீடு

தன் படைப்புகளை நூல்களாக்கிப் பார்க்க வேண்டும் என்ற தேவனின் ஆசை அவர் உயிரோடு இருக்கும் வரை நிறைவேறவில்லை. தேவனின் சிறுகதையான ‘ரோஜாப்பூ மாலை', 1940-ல், அல்லயன்ஸ் வெளியிட்ட கதைக்கோவை தொகுதி-2-ல் இடம்பெற்றது. தேவனின் மறைவுக்குப் பின் 1998-ல் தேவனின் படைப்புகளை அல்லயன்ஸ் வெளியிட்டது. தேவனின் சில நூல்களை கிழக்கு பதிப்பகமும் வெளியிட்டது.

நினைவு

தேவனின் நினைவாக எழுத்தாளர் திவாகர், தேவனின் நூற்றாண்டையொட்டி ‘தேவன்-100’ என்ற நூலை எழுதினார். தேவன் நினைவாக அவரது நண்பர்கள், வாசகர்கள் இணைந்து உருவாக்கிய தேவன் அறக்கட்டளை அமைப்பு ஆண்டுதோறும் தேவனின் நினைவு நாளன்று சிறந்த எழுத்தாளர்களை அழைத்து தேவன் விருது வழங்கிச் சிறப்பிக்கிறது.

மதிப்பீடு

தேவன் வாழ்வின் இயல்பான நிகழ்வுகளில் நகைச்சுவை கலந்து எழுதினார். தேவன் பற்றி சுஜாதா, ”எதிர்பாராத வரிகளை தொடர்கதை அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருக்கும் அற்புதமும், அவரை விட்டால் தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. தேவனை இப்போதைய வாசகர் உலகு சரிவர அறிந்திருக்காதது துர்பாக்கியமே. என்போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார் தேவன்” என்று குறிப்பிட்டார்.

தேவன், தமிழில் அதிகம் நகைச்சுவை எழுதியவராகவும், நகைச்சுவை எழுத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • மிஸ்டர் ராஜாமணி
  • அப்பளக் கச்சேரி
  • சின்னஞ்சிறு கதைகள்
  • கோமதியின் காதலன்
  • ஜாங்கிரி சுந்தரம்
  • மாலதி
  • மல்லாரி ராவ் கதைகள்
  • மனித சுபாவம்
  • மிஸ் ஜானகி
  • மைதிலி
  • பல்லிசாமியின் துப்பு
  • போக்கிரி மாமா
  • ராஜத்தின் மனோரதம்
  • ரங்கூன் பெரியப்பா
  • சீனுப் பயல்
  • ஸ்ரீமான் சுதர்ஸனம்
  • ஏன் இந்த அசட்டுத்தனம்!
  • ராஜியின் பிள்ளை
  • நடந்தது நடந்தபடியே!
  • பார்வதியின் சங்கல்பம்
  • விச்சுவுக்குக் கடிதங்கள்
  • பெயர் போன புளுகுகள்
  • சொன்னபடி கேளுங்கள்
  • கமலம் சொல்கிறாள்
  • ராஜாமணியைக் காணோமே
  • துப்பறியும் சாம்பு - பாகங்கள் 1 & 2
  • ஸி.ஐ.டி. சந்துரு - பாகங்கள் 1 & 2
  • மிஸ்டர் வேதாந்தம் - பாகங்கள் 1 & 2
  • ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - பாகங்கள் 1 & 2
  • லக்ஷ்மி கடாக்ஷம் - பாகங்கள் 1, 2, 3
  • ஐந்து நாடுகளில் அறுபது நாள் - 3 பாகங்கள்

மற்றும் பல.

உசாத்துணை


✅Finalised Page