under review

திவாகர்

From Tamil Wiki
எழுத்தாளர் திவாகர்
எழுத்தாளர் திவாகர்

திவாகர் (திவாகர் வெங்கட்ராமன்; வி. திவாகர்) (பிறப்பு: மார்ச் 28, 1956) தமிழ் எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், வரலாற்றாய்வாளர். வரலாற்றுப் புதினங்களை எழுதுவதில் ஆர்வமுடையவர்.

பிறப்பு, கல்வி

திவாகர், மார்ச் 28, 1956-ல், சென்னையில் பிறந்தார். தந்தை வெங்கடராமன் பள்ளி ஆசிரியர். திவாகர் சென்னையிலும், சீர்காழியை அடுத்த திருநகரிலும் கல்வி கற்றார்.

தனி வாழ்க்கை

திவாகர், விசாகப்பட்டினத்தில் சரக்குப் போக்குவரத்து மற்றும் இடப்பெயர்வுத் துறையில் (shipping and logistics) வணிக தகவல் தொடர்பாளராகப்(business correspondent) பணியாற்றினார். மனைவி சஷிகலா எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார் சஷிகலா. மகன் சிவகுமார், மகள் சியாமளி இருவரும் மென்பொருள் பொறியாளர்கள். எழுத்தார்வம் உள்ளவர்கள்.

இலக்கிய வாழ்க்கை

திவாகர் இளம் வயது முதலே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். இவரது முதல் கட்டுரை ஆங்கிலத்தில் இருந்து தெலுங்குக்கு மொழிபெயர்க்கப்பட்டு ‘ஆந்திர பத்திரிகா’ என்னும் இதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதினார். கையெழுத்துப் பத்திரிகை ஒன்றைச் சில காலம் நடத்தினார். இவரது சிறுகதைகள், கட்டுரைகள் குமுதம், கல்கி போன்ற இதழ்களில் வெளியாகின. கட்டுரைகள் பல தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல செய்தி இதழ்களில் வெளியாகின.

திவாகரின் நூல்கள்
வம்சதாரா நூல் வெளியீடு
இந்திரா பார்த்தசாரதி மற்றும் நரசய்யா உடன் திவாகர்
வரலாற்று நூல்கள்

விசாகப்பட்டினம் சிம்ஹாத்ரி வராகநரசிம்மர் ஆலயத்தில் கிடைத்த இரண்டு தமிழ்க் கல்வெட்டுக்கள் திவாகருக்கு ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டின. ஆய்வின் முடிவில் விசாகப்பட்டினத்தின் அக்காலப் பெயர் ‘குலோத்துங்க சோழப்பட்டினம்’ என்பதை அறிந்தார், ராஜமுந்திரி (ராஜமகேந்திரபுரம்), திராட்சாராமம் (இடர்க்கரம்பை) போன்ற பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் என்பதும் தெரிய வந்தது. நான்கு ஆண்டுகள் ஆய்வுக்குப் பின் தான் அறிந்த உண்மையோடு புனைவு கலந்து ‘வம்சதாரா’வை எழுதினார். அந்நூல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அணிந்துரை எழுதியிருந்த பிரேமா நந்தகுமார் நூலை வியந்து பாராட்டியிருந்தார். சுஜாதா அந்நூலைப் பாராட்டி எழுதியதுடன், ‘இந்த புதினத்தை திவாகர் தெலுங்கிலும் கொண்டுவரவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்[1]. திவாகரின் மனைவி சஷிகலா அந்நூலைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார்.

‘திருமலையில் கோயில் கொண்டுள்ள திருவேங்கடத்தான் சிவனா, திருமாலா?’ என்ற சர்ச்சையை மையமாக வைத்து திவாகர் எழுதிய நூல் ‘திருமலைத் திருடன்'. மகேந்திரவர்மனின் வாழ்க்கையைக் கூறும் நாவல் ‘விசித்திர சித்தன்'. முதலாம் உலகப் போரின் ஆரம்பத்தில் சென்னை மீது எம்டன் எனும் ஜெர்மன் போர்க்கப்பல் குண்டு போட்டுவிட்டுச் சென்றதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது ’S.M.S. எம்டன் 22-09-1914’. திவாகர் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு தொடர்ந்து பல வரலாற்று நாவல்களை எழுதினார்.

இதழியல்

‘ஷிப்பிங் டைம்ஸ்’ இதழின் இணையாசிரியராக 2015 வரை பணிபுரிந்தார்.

’சாகர் சந்தேஷ்' இதழின் பிராந்திய ஆசிரியராகப் (Regional editor) பணியாற்றினார்.

நாடகம்

திவாகரின் முதல் நாடகம் ’சாமியாருக்குக் கல்யாணம்' 1978-ல் மேடையேறியது. நண்பர் தேவாவுடன் இணைந்து திவா-தேவா என்ற பெயரில் சில நாடகங்களை அரங்கேற்றினார். ‘சிங்கப்பூர் சிங்காரி’, ‘காதல் கடிதம், ‘மாப்பிள்ளையே உன் விலை என்ன?’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘மலேசியா மாப்பிள்ளை’, ‘டாக்டர் டாக்டர்’ போன்ற நாடகங்களை மேடையேற்றினார்.

திவாகருக்குப் பாராட்டு
பன்னிரு திருமுறைகள் மொழிபெயர்ப்புக்குழுவினர் மற்றும் மறவன்புலவு க. சச்சிதானந்தம் அவர்களுடன் திவாகர்
கலைஞர் மு. கருணாநிதியுடன் திவாகர்

இலக்கியச் செயல்பாடுகள்

விஜயவாடாவில் உள்ள தமிழ் இளைஞர்களை ஒன்றுபடுத்தி ‘நண்பர்கள் மன்றம்’ ஒன்றை உருவாக்கி இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார்.

விசாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தில் 16 வருடங்கள் செயலாளராகப் பணி புரிந்தார். மறவன்புலவு க. சச்சிதானந்தம் தலைமையில் தேவாரம், திருவாசகத் தமிழ்த் திருமுறைகளை தெலுங்கில் மொழிபெயர்க்கும் திருமலை-திருப்பதி தேவஸ்தான திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். சிங்கப்பூர், வாஷிங்டன், பிலிடல்பியா, லண்டன் தமிழ்ச் சங்கக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு ‘தமிழ்ச்சங்கங்கள் மூலம் தமிழ் வளர்ப்பு’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார்.

விருதுகள்

  • தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கிய ’மரபுச் செல்வர்’ விருது.
  • கோவைத் தமிழ்ச் சங்கமும், இந்துஸ்தான் கலை இலக்கிய அறிவியல் கல்லூரியும் இணைந்து வழங்கிய ‘புதின இலக்கியப் புதுமையாளர்’ விருது.
  • புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம் வழங்கிய ’வரலாற்றுத் திலகம்’ விருது

இலக்கிய இடம்

திவாகரின் புதினங்கள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. தனக்குக் கிடைத்த வரலாற்றுத் தகவல்களையும், ஆய்வில் கிடைத்த செய்திகளையும் புனைவு கலந்து கொடுப்பது திவாகரின் பாணி. திவாகரின் வரலாற்று நாவல்கள் அனைத்தும் இவ்வாறு எழுதப்பட்டவையே. பொது வாசிப்புக்குரியவை என்றாலும் இலக்கியச் செறிவுடன் எளிய நடையில் இப்படைப்புகள் அமைந்துள்ளன. தேவையற்ற வர்ணனைகள், வாசகனைக் குழப்பும் நடை அம்சம் இல்லாமல் நேரடியாகக் கதைகூறுவது இவரது படைப்புகளின் சிறப்பம்சம்.

தமிழ் வரலாற்றெழுத்தில் கல்கி, சாண்டில்யன் தொடங்கி ஜெகசிற்பியன், கோவி. மணிசேகரன், கௌதம நீலாம்பரன் என்று நீண்ட ஒரு வரிசை உண்டு. அதில் திவாகரும் இடம் பெறுகிறார்.

நம்ம ஆழ்வார் நம்மாழ்வார்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு
  • நான் என்றால் அது நானல்ல
  • அந்திவானம்
புதினம்
  • வம்சதாரா - (இரண்டு பாகங்கள்)
  • திருமலைத் திருடன்
  • விசித்திரச் சித்தன்
  • எஸ் எம் எஸ் எம்டன் 22-09-1914
  • அம்ருதா
  • இமாலயன்
  • ஹரிதாசன் என்னும் நான்
  • திரவதேசம்
கட்டுரை நூல்கள்
  • நம்மாழ்வார் நம்ம ஆழ்வார்
  • தேவன் - நூறு (மின்னூல்)
மொழிபெயர்ப்பு
  • ஆனந்த விநாயகர் (தெலுங்கிலிருந்து தமிழுக்கு)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page