under review

திருவெல்லை மாலை

From Tamil Wiki

திருவெல்லை மாலை ((1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் சூ. தாமஸ்.

வெளியீடு

திருவெல்லை மாலை, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ், ஆகஸ்ட் 04, 1910 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாரப்பட்டி என்னும் கோட்டூரில், சூசை உடையார் - சூசையம்மாள் என்னும் பாப்பு இணையருக்குப் பிறந்தார். திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தொடர்ந்து இல்லத்திலிருந்தே தமிழ் படித்தார். 1932-ல், மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேசப் பண்டிதத் தேர்வில் வெற்றிபெற்றார். 1936-ல் திருவையாறு தமிழ்க் கல்லூரியில் பயின்று தமிழில் வித்துவான் பட்டம் பெற்றார். தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

நூல் அமைப்பு

திருவெல்லை மாலை விண்ணுலகில் வாழும் இறைவனைப் பற்றியும், புவியுலகில் வாழும் தன் நிலைப் பற்றியும் புலவர் சூ. தாமஸ் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்நூலில் 52 பாடல்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

திருவெல்லை மாலை விண்ணில் வாழும் இறைவனிடம் புலவர் கூறும் விண்ணப்பமாக அமைந்துள்ளது. இலக்கியச் சுவையுடன் படைக்கப்பட்ட இந்நூலில் திருக்குறள், திருவாசக வரிகளையொத்த வரிகளும், நீதிக் கருத்துக்களும் இடம்பெற்றன.

பாடல் நடை

இறைவனிடம் வேண்டுதல்

அறவாழி யந்தணன்‌ தாள்சேர்ந்‌
திடாதிந்த அம்புவியோர்‌
பிறவாழி நீந்துகில்‌ லாரெனக்‌
கேட்டும்‌ பிழைபுரிந்தேன்‌
மறவாம லந்தகன்‌ தான்வரும்‌
போதென்‌ மனத்திறங்கி
இறவாத வீடளிப்‌ பாய்‌
வெல்லை வாழும்‌ இறையவனே

பாழாகும்‌ என்னுடல்‌ கூனித்‌
துவண்டுகண்‌ பஞ்சடைந்து
தாழாமுன்‌ நாடி தளராமுன்‌
அந்தகன்‌ தான்வளைந்து
சூழாமுன்‌ மாதொடு மைந்தர்‌ வந்தே
அயழச் சொல்தளர்ந்து
வீழாமுன்‌ ஆண்டுகொள்‌ வாய்‌
வெல்லை வாழும்‌ இறையவனே

பரவாம லுன்னையல்‌ லாதொரு
பேதையைப்‌ பாடஎன்வாய்‌
திறவாமல்‌ அம்மைஅப்‌ பாவென்று
போற்றித்‌ தினம்செபிக்க
மறவாமல்‌ உன்றனற்‌ கருணை
உண்‌ டென்வினை மாற்றும்முன்னே
இறவாமல்‌ ஆண்டுகொள்
வாய்‌ வெல்லை வாழும்‌ இறையவனே!

மானம்‌ குலம்கல்வி
நல்லறி வாண்மை மறுவிகந்த
ஞானம்‌ தவம்கொடையே
முத லாகிய நற்குணங்கள்‌
தான்நந்த வந்திடும்‌
பொல்லாத காமச்‌ சழக்கெனும்‌ பேர்‌
ஈனம்‌ தவிர்த்தென்னை
யாள்‌ வெல்லை வாழும்‌ இறையவனே!
.
இப்பொழுதோ பின்னையோ
இன்னமும்‌ சற்று நேரத்திலோ
முற்பொழுதோ பகலோ
இரவோ துயர்‌ மூண்டு நிற்கும்‌
அப்பொழுதோ நடுப்பாதியிலோ
கடை அந்தத்திலோ
எப்பொழுதோ அழைப்பாய்‌
வெல்லை வாழும்‌ இறையவனே

மதிப்பீடு

திருவெல்லை மாலை இறைவனிடம் தன்னைக் காத்திட வேண்டுகோள் விடுக்கும் துயருற்ற மானுடனின் குரலாய் வெளிப்படுகிறது. நீதி நூற்க் கருத்துக்கள் பல இந்நூலில் இடம்பெற்றன. கிறித்தவ மாலை நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக திருவெல்லை மாலை நூல் அமைந்துள்ளது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2024, 08:20:44 IST