under review

சு. வித்தியானந்தன்

From Tamil Wiki
சு. வித்தியானந்தன்

சு. வித்தியானந்தன் (மே 8, 1924 – ஜனவரி 21, 1989) ஈழத்தின் கல்வியாளர், பேராசிரியர், ஆய்வாளர், தமிழறிஞர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். ஈழ நாட்டுக் கூத்து கலையை மீட்டுருவாக்கம் செய்தவர். நாட்டுக்கூத்து நூல்களின் பிரதிகளை திருத்தி அச்சேற்றினார். புதிய நாட்டுக்கூத்து நடைமுறைகளை கற்பித்து அரங்காற்றுகை செய்து பிரேதச நாடகக் கலைஞர்களை ஊக்கமூட்டினார். பல்கலைக் கழகங்களில் மாணவர்களிடம் நாட்டுக்கூத்தை பிரபலப்படுத்தினார். அண்ணாவியார்கள், கலைஞர்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார்.

சு. வித்தியானந்தன்

பிறப்பு, கல்வி

யாழ்ப்பாண மாவட்டத்தின் தெல்லிப்பழையில் வழக்கறிஞரான சுப்பிரமணியம், முத்தம்மா இணையருக்கு மே 8, 1924 அன்று வித்தியானந்தன் பிறந்தார். அவரது குடும்ப முன்னோர்கள் ஆறுமுக நாவலரின் செல்வாக்குக்குட்பட்டு கல்விக் கூடங்களை நிறுவினர். தந்தை நிர்வகித்த வீமன்காமம் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். தெல்லிப்பழை ஆங்கிலக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். உயர் கல்வியை யாழ்ப்பாணம் பரி.யோவான் கல்லூரியிலும் இந்துக் கல்லூரியிலும் பயின்று முடித்தார். கொழும்புப் பல்கலைக் கழக மாணவராக 1941-ம் ஆண்டு தேர்ச்சியடைந்தார். தமிழ், ஆங்கிலம், லத்தீன், வரலாறு ஆகிய பாடங்களைக் கற்று, லண்டன் இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தமிழைச் சிறப்புப் பாடமாகத் தேர்ந்தெடுத்து, வரலாற்றைத் துணைப்பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டப்படிப்பை 1944 -ம் ஆண்டு முடித்தார். தொடர்ந்து பயின்று தமிழில் 1946 -ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று கலைமாணி, முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்ற முதலாமவர் வித்தியானந்தன். இருபத்தியாறாவது வயதில் லண்டனில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆசிரியர்கள்

தனி வாழ்க்கை

சு. வித்தியானந்தன்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வித்தியானந்தன் தனது மாணவியான நுணாவிலைச் சேர்ந்த கமலாதேவி நாகலிங்கத்தை காதலித்து 1957-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருள்நம்பி, இன்பச்செல்வன், சிவமைந்தன் என மூன்று மகன்களும், மகிழ்நங்கை, அன்புச்செல்வி, என இரு மகள்களும் பிறந்தனர். மனைவி கமலாதேவி நோயுற்று 1977-ல் காலமானார்.

ஆசிரியப்பணி

1946-ல் இலங்கை பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். விரிவுரையாளர், பேராசிரியர், தமிழ்த்துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் என ஆசிரியப் பணி ஆற்றினார். ஆகஸ்ட் 1977-ல் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவரானார். ஜனவரி 1979-ல் அவ்வளாகம் பல்கலைக்கழகமான போது அதன் முதலாவது துணைவேந்தரானார். யாழ்ப்பாண வளாகமாக இருந்ததை முழுமையான பல்கலைக்கழகம் ஆக்குவதற்கு உழைத்தார். பல்கலைக்கழக மாணவர்களுக்காக எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு 1953-ல் 'இலக்கியத் தென்றல்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியபோது, தமிழ்த்துறை மாணவர்களுக்கு தொல்காப்பியம், சொல்லதிகாரம், சிலப்பதிகாரம், நாச்சியார் திருமொழி, திருக்கோவையார், பாரதி பாடல்கள், தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியனவற்றைக் கற்பித்தார். யாழ்ப்பாண வளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயலாற்றினார். நான்காம் முறையும் துணைவேந்தராக இருந்தபோது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தோடு முரண்பாடு ஏற்பட்டதால் கொழும்பில் தங்கினார்.

மாணவர்கள்
  • கா. சிவத்தம்பி
  • க. கைலாசபதி
  • பொ. பூலோகசிங்கம்
  • ஆ. வேலுப்பிள்ளை
  • வந்தாறுமுலை க. செல்லையா
சு. வித்தியானந்தன்

ஆய்வாளர்

வித்தியானந்தன் 1948-ல் லண்டன் சென்று கீழைத்தேயக் கல்விக் கல்லூரியில் (School of Briental studies) தமிழறிஞர் அல்பிரட் மாஸ்டர் வழிகாட்டுதலில் 'பத்துப்பாட்டு’ வரலாற்று, சமூக, மொழியியல் நோக்கு’ ("A Historical Social and Linguistic Study of Pattuppattu") என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார். அதனை ஆங்கில வடிவிலிருந்து ’தமிழர் சால்பு' எனும் தமிழ் நூலாக மறுவரைவு செய்தார். இந்நூல், தமிழர் வரலாற்றின் தொடக்ககாலப் பண்பாட்டைத் ஆய்வு செய்து வெளிப்படுத்தியது. பல்கலைக்கழக மலர்களின் இதழ்களில் தமிழ் இலக்கியப் படிப்பு, சோழர் காலத் தமிழிலக்கியம், விஜயநகர நாயக்கர் தமிழ் இலக்கியம், பாரதி சபதம், பண்தேய்ந்த மொழியினர் கண்டேத்தும் கோவலன், இஸ்லாமியர் தமிழில் பாடிய புதிய பிரபந்த வகைகள் முதலிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

1970 -ம் ஆண்டில் பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசில் மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தினார். இம்மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து பேராசிரியர் வித்தியானந்தன் கலந்து கொண்டார். 1972-ம் ஆண்டில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கு உழைத்தவர்களில் பேராசிரியர் வித்தியானந்தனும் ஒருவர்.

நாட்டுக்கூத்துக் கலை மீட்டுருவாக்கம்

சு. வித்தியானந்தனின் அஞ்சல் தலை

நாட்டுக்கூத்துக் கலையே ஈழத்து பண்பாட்டின் நாடக வடிவம் என்பதை பல்கலைக்கழக மட்டத்தில் நிலை நிறுத்தியவர் வித்தியானந்தன். ஈழத்தமிழ்த் தேசியத்தின் அடியாதாரமாக அமையத்தக்க நாட்டார் இலக்கியத்தையும் நாட்டுப்புறக் கலையையும் தேடி தொகுத்துத் தேசியப் பண்பு சார்ந்து வடிவப்படுத்தினார். 1960-களில் வித்தியானந்தனின் நாடக முயற்சி தனது குருவான பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களைத் தயாரித்து இயக்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவரின் வழிகாட்டுதலில் நாட்டுக் கூத்துகளை நவீன முறைக்கு உகந்த வகையில் நவீனப் படுத்தினார். க.கணபதிப்பிளையின் நாடகங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்திலும், கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மேடையேற்றினார். இவர் தயாரித்த நாடகங்களில் பேராசிரியர்களான கைலாசபதி, சிவத்தம்பி, சண்முகதாஸ், மெளனகுரு, தினகரன் பிரதம ஆசிரியர் இ. சிவகுருநாதன், தமிழர் கூட்டணித்தலைவர் அ. அமிர்தலிங்கம் போன்றோர் நடித்தனர். வடமோடி தென்மோடி கூத்துக்களாக கர்ணன் போர், இராவணேசன், வாலி வதை போன்றவைகள் தயாரித்து மேடையேற்றியுள்ளார்.

1956-ல் இலங்கை கலைக்கழகத்தின் நாடகக் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்னார், யாழ்ப்பாணம், குருநகர், வன்னி, தீவுப்பகுதியில் ஆடப்பட்டு வந்த கூத்துக்களை பார்வையிட்டு அவற்றை செறிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு நாட்டுக்கூத்து கலையைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். கூத்துக்கலையில் தான் ஏற்படுத்த வேண்டுமென்ற சீர்திருத்தங்களை ஊர் ஊராகச் சென்று அண்ணாவிமார்களை சந்தித்து பேராசிரியர் சண்முகதாஸ், பேராசிரியர் மெளனகுரு ஆகியோரின் உதவியுடன் வலியுறுத்தினார். நாடகப்பண்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, கலையுணர்வுடன் ஒரு நாட்டுக்கூத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டுமென உதாரணமாக ஒரு நாட்டுக்கூத்து தயாரித்து மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி அண்ணாவிமார்களுக்கு காண்பித்தார். 1962-ல் "கர்ணன் போர்" நாடகம் பலகலைக்கழக மாணவர்களுக்கு தயாரித்து காண்பிக்கப்பட்டது. படித்த இளைஞர்கள் மத்தியில் நாட்டுக்கூத்தை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சு.வித்தியானந்தன் அறிமுகப்படுத்திய மாற்றங்களை அ. தசீசியஸ், நா. சுந்தரலிங்கம், இளைய பத்மநாபன், க. சிதம்பரம், வி.எம். குகராஜா போன்றோர் பின்பற்றினர்.

மன்னார், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அண்ணாவிமார்களுக்கான மாநாடுகளை நடத்தினார். ஒவ்வொரு அண்ணாவிமார்களையும் அடையாளப்படுத்துவது, பாராட்டுவது என தொடர்ந்து செய்து ஊக்கமூட்டினார். நல்ல கலைஞர்களின் வெற்றியைக் கொண்டாடுவதும் அவர்களுக்கான அங்கீகாரத்தை வாங்கித் தருவதிலும் பங்காற்றினார்.

அறிமுகப்படுத்திய கலைஞர்கள்
கஞ்சன் அம்மானை
பதிப்பித்தல்

பல நாட்டுக் கூத்துப் பிரதிகளை அச்சேற்றினார். அண்ணாவிமார்களிடமிருந்து நாட்டுக்கூத்துக்களைப் பெற்று அவற்றை ஆராய்ந்து திருத்தியமைத்து கலைக்கழகம், பிரதேச உள்ளூராட்சி மன்றங்களின் உதவியோடு நூலாக்கினார். 1962-ல் மட்டக்களப்பு நாட்டுக்கூத்தான "அலங்காரரூபன் நாடகம்" பதிப்பிக்கப்பட்டது. 1964-ல் மன்னார் கீதாம்பிள்ளைபாடிய "என்டிறிக்கு எம்பிரதோர் நாடகம்" அச்சிடப்பட்டது. இதன் மூலம் ஒரு மன்னார் புலவரின் நூல் முதன்முதலாக அச்சிடப்பட்டது. மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவுடன் "மூவிராசாக்கள்" 1966-லும், "ஞான செளந்தரி 1967-லும் பதிப்பிக்கப்பட்டது. தமிழக நாடக நூல்களை எழுதுவோர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் நாடக எழுத்துப் போட்டிகளைக் கலைக்கழகம் மூலம் நடத்தினார்.

நாட்டுக்கூத்தில் வலியுறுத்திய சீர்திருத்தங்கள்
  • நாடகப்பண்பினை முக்கியமாகக் கொண்டு ஆடல், பாடல், உடை, ஒளி ஆகியவற்றை கலை உணர்வுடன் இணைக்காத தன்மையை சரி செய்தார்.
  • நாடக உணர்வினை விடுத்து ஆடல், பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் குறைத்து நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  • நடிகர்களின் குரல், வாத்தியங்கள் பாவித்தல், ஒப்பனை, உடை, அலங்காரம், ஒளியினைக் கையாளுதல் ஆகியவற்றில் புதுமையைக் கையாளும் முயற்சியை மேற்கொண்டார்
  • கூத்து நடைபெறும் நேரத்தையும் குறைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
  • கூத்து ஆடுபவர்கள் பாமரர்கள் என்பதால் பட்டிக்காட்டான் ஆட்டம் என்று மக்கள் கருதிய நிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்து பல்கலைக் கழக மாணவர்களிடையே அவற்றை அறிமுகப்படுத்தினார்.
  • அனாவசியமான பாத்திரங்கள், கதையோட்டத்திற்கு அவசியமான பாடல்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பு விருத்தங்கள் ஆகியவற்றை நீக்கி பழைய பிரதியை ஒன்றரை மணி நேரத்திற்குள் ஆடிய கூத்தாக மாற்றி அமைத்தர்.
  • குணாதிசயத்தினை அடிப்படையாகக் கொண்டு பாத்திரம் உருவாக்கப்பட்டது.
  • பாரம்பரியக்கூத்து மரபில் பாத்திரம் தன் வரவினைக்கூறும் வரவு விருத்தம் முடிந்ததும் பிற்பாட்டுக்காரர்கள் தன் மூச்சின் வீச்சுக்கு ஏற்ப ஓசை முடிவை இழுத்து ஆலாபனை செய்வது போன்ற நாடகத்தை இழுப்புகளை நீக்கினார்.
  • பாரம்பரியக்கூத்தில் ஒவ்வொரு பாத்திரமும் மேடைக்கு வரும்போது திரைபிடித்து, காப்பு விருத்தம், வரவு விருத்தம் பாடி மேடைக்கு அறிமுகப்படுத்தப்படும் முறையை நீக்கினார்.
  • பாத்திரம் வரவு விருத்தம் கூறிய பின்னர் வரவு தாளக்கட்டுக்கு நீண்ட நேரம் ஆடும் நிற்றல், திரும்பல், சுழலல், வீசாணம், பொடியடி, நாலடி, எட்டடி, ஒய்யாரம், பாய்ச்சல் போன்ற ஆட்டமுறைகள் ஆடிய பின்னரே தன் வரவுத்தருவை பாடி கதைக்குள் நுழையும். அரைமணி நேரத்திற்கும் மேலாக நேரமெடுக்கும் இந்த வரவுத்தாளக்கட்டை நீக்கி மூன்று நிமிடமாகச் சுருக்கினார்.
  • படச்சட்ட மேடைக்குள் கூத்தினைக் கொணர்ந்ததால் நான்கு பக்கமும் பார்வையாளர்களைப் பார்த்து ஆடும் முறைக்கு பதிலாக ஒரு முகமாக மட்டும் ஆடும் முறையைப் பழக்கினார்.
  • மேடையில் பாத்திரங்கள் நிற்கும் முறையில் மாற்றம் கொணர்ந்தார்.
சு. வித்தியானந்தன்

விருதுகள்

  • வித்தியானந்தன் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகம் "பேராசிரியர் சு.வித்தியானந்தன் நூலகம்' என்று பெயரிடப்பட்டது.
  • இலங்கை அஞ்சல் திணைக்களம் நவம்பர் 11, 1997 அன்று வித்தியானந்தனின் அஞ்சல் தலையை வெளியிட்டது.
  • கலாநிதி பட்டம் பெற்றார்.

மறைவு

இறுதிக் காலத்தில் கொழும்பில் தங்கிய சு. வித்தியானந்தன் ஜனவரி 21, 1989-ல் காலமானார்.

அரங்கேற்றிய கூத்துக்கள்

  • வடமோடிக்கூத்து
தமிழர் சால்பு
  • பொருளோ பொருள் 1948
  • முருகன் திருகுதாளம் 1950
  • சங்கிலி 1951
  • உடையார் மிடுக்கு 1953
  • தவறான எண்ணம் 1954
  • சுந்தரம் எங்கே 1955
  • துரோகிகள் 1956
  • கர்ணன் போர் 1962
  • ராவணசேனன் 1965
  • வாலி வதை 1968
தென்மோடிக்கூத்து
  • நொண்டி நாடகம் 1964

நூல்கள் பட்டியல்

  • இலக்கியத்தென்றல்
  • தமிழர் சால்பு
  • கலையும் பண்பும்
  • மன்னார் நாட்டுப் பாடல்கள்
  • மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள்
  • தமிழியல் சிந்தனைகள்

உசாத்துணை


✅Finalised Page