under review

தென்மோடிக்கூத்து

From Tamil Wiki
ஈழத்து நாட்டுக்கூத்து

தென்மோடிக்கூத்து ஈழத்து நாட்டுக்கூத்து வடிவங்களில் ஒரு வகை. இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வடமோடி தென்மோடி கூத்துக்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தமிழர்களின் நெறி சார்ந்த ஆட்ட மரபுகளாக வடமோடி, தென்மோடி கூத்து ஆட்டங்கள் பார்க்கப்படுகின்றன. தெற்குப் பகுதியில் ஆடப்படும் ஆட்டங்களை தென்மோடி ஆட்டங்கள் என்றழைத்தனர்.

தென்மோடிக்கூத்து பண்புகள்

பாடல்முறை

தென்மோடிக் கூத்தில் பாட்டுக்களை இழுத்துப்பாடுவர். தென்மோடியில் கடைசிப் பகுதியை மட்டும் பிற்பாட்டுக்காரர் படித்து முடித்துவிட்டு, பாட்டு முழுவதுக்குமுரிய தருவைப் பாடுவர். தரு என்பது கல்பித சங்கீதத்தைச் சேர்ந்தது. பொதுவாக இவை இசை நாட்டியங்கள், நாட்டிய நாடகங்கள் போன்றவற்றில் இடம் பெறுகின்றன. இவ் உருப்படியை கதைப்பாட்டு எனவும் அழைப்பர். வடமோடித் தென்மோடிக் கூத்துக்களில் முதற்கண் காப்பு என்றொரு பாடல் பாடப்படுகின்றது. தென்மோடிக் கூத்துகளில் இவை விருத்தப்பாவாகவும் பாடப்படுகின்றது.

தாளக்கட்டு முறை

இக்கூத்துகளில் ஒவ்வொரு பாத்திரத்தின் வரவு நடைபெறும் போதும் வெவ்வேறு வகையான தாளங்களை இசைக்கின்றனர். அத்தாளங்கள் வாயால் சொல்லப்படும்போது 'பதவரிசை தாளக்கட்டு' என்று சொல்லப்படுகின்றது. தாளக்கட்டு என்பது ஆட்டத்திற்குரிய தாளங்களை சொற்கோர்ப்பினாலேயே தொடுத்துப் பாடுதல். இத்தாளக்கட்டானது கூத்துப் பாத்திரங்களின் வரவின்போது அண்ணாவியாரால் தொடர்ந்து பாடப்படுகின்றது. இந்த தாளக்கட்டுகள் அண்ணாவியாரின் மன நிலைக்கேற்ப எட்டுமுறை, பன்னிரெண்டுமுறை என்ற எண்ணிக்கையில் அமையும். இவை ஆண்கள்,பெண்கள் இருபாலருக்கும் வெவ்வேறு வகைகளாக இருப்பதோடு பாத்திர வேறுபாட்டையும் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.

தாளக்கட்டு வகைகள்

இக்கூத்துகளில் ஆண்களுக்குரிய தாளக்கட்டுக்களாக உலா, பொடியடி, வீசாணம், எட்டு, நாலடி, குத்துமிதி,பாச்சல் என்பன அமைந்திருக்கும். பெண்களுக்குரிய தாளக்கட்டுக்களாக ஒய்யாரம், பொடியடி, வீசாணம், எட்டு, தட்டடி, அடந்தை, குத்துநிலை ஆகியவை அமைந்திருக்கும். இத்தாளக்கட்டுக்களே வடமோடி தென்மோடிக் கூத்துகளின் உயிர்த்தன்மையாகும்.

நடன முறை

தென்மோடிக் கூத்து நுணுக்கங்கள் அதிகம் நிறைந்த ஆட்டமாக காணப்படும்.

ஈழத்து நாட்டுக்கூத்து வாத்தியங்கள்
பிற
  • இசை: பாரம்பரிய பழைய இசையை அடியொற்றிக் காணப்படும்.
  • தமிழ்க்கூத்தின் சாயலைக் கொண்டிருக்கும்
  • காதல், வீரம், சோகம் ஆகிய சுவைகளைக் கொண்டிருக்கும்
  • கூத்துக்கள் ஆடப்படும் மேடையான கூத்துக்களரியில் நான்கு பக்கமும் தோரணம் கட்டுவது முக்கிய மரபு.
  • அண்ணாவியாரே பாத்திரங்களின் வரவுப்பாட்டைப் பாடுவார்.
  • தென்மோடி ஆட்டங்கள் வடமோடியை விட நுணுக்கம் வாய்ந்தது.
  • தென்மோடிக்கூத்தர் வருகின்றபோது பக்கப்பாட்டுக்காரரே வரவுப்பாட்டைப்படிப்பார். இது தென்மோடிக்கூத்தர் விரைவாகவும், நுணுக்கமாகவும் ஆட உதவும்.
  • உடல் வருத்த வளைந்து நெளிந்து கூத்தர்கள் ஆடுவர்
  • கூத்தர்கள் அணியும் ஆடை கரப்புடுப்பு எனப்படும். உடைகள் வடமோடிக்கூத்துக்காரர்களை விட பாரம் குறைவானதாக இருக்கும்.
  • வாள் ஆயுதம் தென்மோடிக்கூத்துக்குறியது.
  • பாட்டுக்களின் இசை நீளமானதாகவும், மென்மையாகவும் இருக்கும்.
  • பாட்டுக்களின் விருத்தங்கள் நீண்ட ஓசையுடையதாக அமையும்.
  • கூத்தாடுபவர்கள் பாடல் படிக்க கடைசிப்பகுதியை மட்டும் பிற்பாட்டுக்காரகள் படிப்பர். பாட்டின் கடைசிப்பகுதியைப் படுவதோடு பாட்டு முழுவதற்கும் உரிய தருவைப்பக்கப்பாட்டுக்காரர் பாடுவர். (தரு என்பது கர்நாடக சங்கீதத்தில் கரவரிசை போன்று கூத்துப்பாடல் சுருதிக்குள்ள ஒரு அமைப்பு.
  • பாடல்களுக்கு தருப்பாடும் வழக்கு தென்மோடிக்கு மட்டுமே உரியது.
  • கையெழுத்துப்பிரதியில் வடமோடிக்கூத்தைக்காட்டிலும் தென்மோடிக்கூத்தில் முத்திரைப்பல்லவித்தரு பரவிவிரவி காணப்படுகிறது.

பயின்று வரும் இடங்கள்

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பின்பற்றப்பட்டு வரும் வடமோடி தென்மோடி கூத்துக்களை. இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தமிழர்களின் நெறி சார்ந்த ஆட்ட மரபுகளாக வடமோடி, தென்மோடி கூத்து ஆட்டங்கள் பார்க்கப்படுகின்றன. தெற்குப் பகுதியில் ஆடப்படும் தென்மோடி ஆட்டங்கள் வடக்குப் பகுதியில் ஆடப்படும் வடமோடி ஆட்டங்களை விட பல நுணுக்கமான அம்சங்களைக் கொண்டுள்ளது. நாட்டுக்கூத்தின் மோடிகளுள் தென்மோடிக் கூத்தே பழைவாய்ந்ததாக காணப்படுகின்றது. அலங்காரரூபன் நாடகம், அநுருத்திரன் நாடகம் என்பன தொன்மை வாய்ந்த தென்மோடிக்கூத்துகள் ஆகும். தென்மோடி கூத்தில் அலங்காரங்கள் அதிகமாகப் செய்யப்பட்டு ஆடப்படுகின்றது.

கூத்து கையெழுத்துப் பிரதிகள்

மட்டக்களப்பு வடமோடிக் கூத்துப் பிரதிகள்

அருச்சுணன் தவநிலை, அனுவுருத்திரன், அலங்காரரூபன், அங்கசுந்தரி, அல்லிநாடகம், அதிரூப சோழேந்திரன், ஆதிநாடகம், இரணியசம்காரம், இந்திரகுமாரன், உருத்திரசேனன், கந்தன் கருணை, கமலாவதி, கண்டிராசன், காஞ்சி நாடகம், சத்தியவான் சாவித்திரி, சுவேதனன் சண்டை, சூரசம்காரம், சித்திரசேனன், செட்டி வர்த்தகன், தக்கன் யாகம், தமிழறியும் பெருமான், தளுக்குச் சுந்தரி, திமிலைதீவு திருமணம், திரௌபதை திருமணம், பிரஸ்தூமன் நாடகம், புரூருவச் சக்கரவர்த்தி, புவனேந்திரன், பூலோக ரம்பை, பெருவேளாளன், மன்மத தகனம், மதுரவாசன், மதனரூபன் , மதனதுரந்திரன், மயில் இராவணண், மங்கியூர் மகிமை, மார்க்கண்டேயர், மாமாங்கேஸ்வரர், மூசிகாசூரன் வதை, வயந்தபூவன், வாளவீமன், நளமகாராஜன், நளாயினி, நரேந்திரபூவன், நந்தனார் நாகம் ஆகிய 50 கூத்துக்கள் மட்டக்களப்பு வடமோடிக் கூத்துப் பிரதிகளாக உள்ளன.

அச்சு

1962-ல் கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்களால் முதன்முதலாக அலங்காரரூபன் நாடகம் தென்மோடிக் கூத்தும், 1969-ல் வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்களால் அனுவுருத்திரன் நாடகம் தென்மோடிக் கூத்தும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

கையெழுத்துப் பிரதி அமைப்பு
  • காப்பு விருத்தம்
  • சபைக்கட்டு
  • சபை விருத்தம்
  • விருத்தம்
  • தரு
  • வண்ணத்தரு
  • கொச்சகத்தரு
  • தர்க்கத்தரு
  • உலாத்தரு
  • முத்திரைப்பல்லவித்தரு
  • கவி
  • கலிப்பா
  • வெண்பா
  • ஆசிரியம்
  • தாழிசை
  • இன்னிசை
  • மங்களம்

உசாத்துணை


✅Finalised Page