under review

சிவப்பிரகாச சுவாமிகள்

From Tamil Wiki
சிவப்பிரகாச சுவாமிகள் (நன்றி: tamilandvedas)

சிவப்பிரகாச சுவாமிகள் (துறைமங்கலம் சிவப்பிரகாசர்) (நன்னெறி சிவப்பிரகாசர்) (நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள்) (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப்புலவர், மொழிபெயர்ப்பாளர். வீரசைவம் வளர்த்தவர்களில் ஒருவர். சைவ நூல்கள் பல எழுதினார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். கன்னடம், சமஸ்கிருததிலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவப்பிரகாச சுவாமிகள் பொ.யு. 17-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வசித்த சங்கமக் குருக்களாகிய குமாரசுவாமிப் பண்டாரத்திற்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் கருணைப்பிரகாச தேசிகர், வேலப்ப தேசிகர். பொம்மைய பாளையத்தில் இருந்த சிவஞான பாலைய சுவாமிகள் இவரின் ஞானசாரியர். சிறுவயதில் வித்தியாரம்பம் செய்து கல்வி கற்றார். தந்தை காலமானபின்பு குடும்பத்துடன் திருவண்ணாமலைக்குச் சென்று இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

ஒரு முறை திருநெல்வேலிக்குப் போகும் வழியில் துறைமங்கலத்தில் அண்ணாமலை ரெட்டி என்னும் கிராமாதிபதி இவரைத் தடுத்துத் தான் கட்டிய மடத்தில் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்கு சிலகாலம் இருந்தார்.

பின்னர் தன் உடன்பிறந்தவர்களுடன் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வசித்த வெள்ளியம்பலத் தம்பிரானின் மடத்தில் தங்கினார். அங்கு அவர் தம்பியருடன் பாடம் பயின்றார். அண்ணாமலை ரெட்டி கொடுத்த முந்நூறு பொன்னை வெள்ளியம்பலத் தம்பிரானிடம் காணிக்கையாகக் கொடுத்தபோது அவர் மறுத்தார். திருச்செந்தூரில் இருக்கும் தன் பகைவனைப் தோற்கடித்து வர வேண்டும் என்பதை குரு காணிக்கையாகக் கேட்டார். பகைவன் இவரை முப்பது யமகம் பாடச்சொல்லி கேட்டார். சிவப்பிரகாச சுவாமிகள் திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி எனும் முப்பது கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடி அவனை அடிமையாக்கித் தன் குருவிடம் ஒப்படைத்தார். அதன்பின் சிதம்பரத்தில் சில காலம் இருந்துவிட்டு துறைமங்கலம் மீண்டார்.

சிவப்பிரகாச சுவாமிகள்

இலக்கிய வாழ்க்கை

சிவப்பிரகாச சுவாமிகள் இருபத்தியொரு சைவ நூல்களை இயற்றினர். 'பிரபுலிங்க லீலை', 'திருக்கூவப்புராணம்' ஆகிய இரண்டு காப்பியங்களை இயற்றினார். 'பிரபுலிங்கலீலை' அல்லமாபிரபு என்னும் சங்கமத் தலைவரைப்பற்றியது. 'திருக்கூவப்புராணம்' திருக்கூவை என்னும் சிவஸ்தலம் பற்றியது. 'சித்தாந்த சிகாமணி', 'வேதாந்த சூடாமணி', 'சிவப்பிரகாசவிலாசம்', 'சிவநாம மகிமை', 'தர்க்கபாஷை' ஆகிய நான்கும் பதிசாஸ்திரங்கள். 'தர்க்கபரிபாஷை' ,'தர்க்க சூடாமணி' என்றும் அழைக்கப்படும். சிவகேசவமிசிரர் என்பவர் சம்ஸ்கிருதத்தில் இயற்றியதை இவர் தமிழில் மொழிபெயர்த்தார். இதனை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிபதியும் உடுப்பிட்டியிலிருந்த குமாரசாமி முதலியார் மகன் ரா. கதிரவேற்பிள்ளையும் பல பிரதிகளைக் கொண்டு பிழை தீரப் பரிசோதித்து அச்சிட்டனர்.

சிவப்பிரகாச சுவாமிகள் பதின்மூன்று சிவஸ்துதிகளை இயற்றினார். நீதிநூற்றிரட்டில் நாற்பது பாக்கள் உள்ளன. தனது ஞான ஆசிரியரான பாலையானந்த சுவாமிகள் மேல் பிள்ளைத்தமிழ் முதலான புகழ்ப்பாக்கள் பாடினார். தனது சகோதரராகிய கருணைப்பிரகாச தேசிகர் இயற்றத் தொடங்கி மரணம் காரணமாக முடியாமல் விட்ட காளத்தி புராணத்தை முடிக்க நினைத்து, கண்ணப்பசருக்கம், நக்கீரர்சருக்கம் என்னும் இரண்டு சருக்கங்களைப் பாடினார். சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருச்செந்திலந்தாதி அல்லது திருச்செந்தினிரோட்டயமக அந்தாதி முப்பது பாடல்களுக்கும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் உரை இயற்றினார்.

சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய 'நால்வர் நான்மணிமாலை' சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் நால்வர் பேரிலும் முறையே வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் எனும் நான்குவகைப் பாக்களிலும் பாடப்பட்டது. 'பெரியநாயகி விருத்தம்', 'பெரியநாயகி கலித்துறை', 'பிக்ஷாடன நவமணிமாலை' எனும் வேறு மூன்று பாடல்களும் இயற்றினர். இம்மூன்றையும் ஆறுமுகநாவலர் அச்சிட்டார். 'துறைசை வெண்பா'வையும் இவர் பாடினர். வீரமாமுனிவர் வாதுசெய்ய சிவப்பிரகாச சுவாமிகளை அழைத்தபோது அவர் கொள்கைகளை மறுத்து 'ஏசுமத நிராகரணம்' என்னும் நூலை எழுதினார். சிவஞான பாலய சுவாமிகள் மீது சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

பாடல் நடை

  • வெள்ளியம்பலத்தம்பிரான் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாடிய பாடல்

குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழன்
முடக்கோடு முன்னமணி வார்க்கு-வடக்கோடு,
தேருடையான் றெள்வுக்குத் தில்லைத்தோன் மேற்கொள்ளல்
ஊருடையா னென்னு முலகு

  • நிரோட்டகயமகம்

தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே
தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினையத்
தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந்
தனத்தலங் காரனே யாணய னேத்திடத் தங்கினனே.

மறைவு

சிவப்பிரகாச சுவாமிகள் தன் இறுதிக்காலத்தில் நல்லாற்றூரை அடைந்தார். சில நூல்கள் எழுதினார். தன் முப்பத்தியிரண்டாம் வயதில் காலமானார்.

நூல் பட்டியல்

  • பிரபுலிங்கலீலை
  • திருக்கூவப்புராணம்
  • சித்தாந்த சிகாமணி
  • வேதாந்த சூடாமணி
  • சிவப்பிரகாசவிகாசம்
  • சிவநாம மகிமை
  • தர்க்கபாஷை
  • சோணசைலமாலை
  • திருவெங்கையுலா
  • திருவெங்கை யலங்காரம்
  • திருச்செந்திலந்தாதி
  • திருவெங்கைக் கலம்பகம்
  • திருவெங்கைக்கோவை
  • சதமணிமாலை
  • நால்வர் நான்மணிமாலை
  • நிரஞ்சனமாலை
  • கைத்தலமாலை
  • அபிஷேகமாலை
  • வெங்கைக்கோவை
  • வெங்கைக்கலம்பகம்
  • நன்னெறி
  • கொச்சகக்கலிப்பா
  • இயேசுமத நிராகரணம்
  • தலவெண்பா
  • பிக்ஷாடன நவமணிமாலை
  • பழமலை அந்தாதி
  • சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம்
  • சிவஞான பாலய சுவாமிகள் திருப்பள்ளியெழச்சி
  • சிவஞான பாலய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
  • சிவஞான பாலய சுவாமிகள் தாலாட்டு
  • சிவஞான பாலய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது
  • இஷ்டலிங்கப் பெருங்கழிநெடில் விருத்தம்
  • இஷ்டலிங்கக் குறுங்கழிநெடில் விருத்தம்
  • இஷ்டலிங்க அபிஷேகமாலை
  • திருச்செந்தினிரோட்ட யமகவந்தாதி
  • பெரியநாயகியம்மை ஆசிரியவிருத்தம்
  • பெரியநாயகியம்மை கட்டளைக்களித்துறை

உசாத்துணை


✅Finalised Page